பரவும் வைரஸ் காய்ச்சல்...என்ன செய்ய வேண்டும்?



சமீபமாக தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு ‘இன்ஃப்ளூன்சா ஏ’ என்ற வைரஸ் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் 25 முதல் 50 சதவீதம் வரை கேஸ்கள் அதிகரித்துள்ளதாகவும், உள்நோயாளிகள் பிரிவில் 10 சதவீத கேஸ்கள் வரை கூடியுள்ளதாகவும் கூறுகின்றனர். 
இதனால் தமிழக பொது சுகாதாரத் துறை முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் ஆகியோரை கூட்டமான இடங்களில் முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த வைரஸ் பரவல் குறித்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல பேராசிரியரும், இந்திய குழந்தைகள் நல குழுமத்தின் தமிழ்நாடு பிரிவு பொருளாளருமான டாக்டர் ராஜ்குமாரிடம் பேசினோம்.  ‘‘தமிழ்நாடு மட்டுமல்ல... இந்தியா முழுவதுமே இப்போது இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் நிறைய கேஸ்கள் வந்தன.

முக்கியமாக தில்லி, குர்கான், சண்டிகர் இங்கெல்லாம் காய்ச்சல், உடல் வலி, இருமல் என நிறைய கேஸ்கள் இருந்தன. பரிசோதனை செய்ததில் எல்லாமே H3N2 எனும் இன்ஃப்ளூயன்சா A வைரஸ் தாக்கம் எனத் தெரிய வந்தது.

பிறகு மும்பை, புனே, சென்னை, மதுரை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்த வைரஸ் பரவியது. இப்போது இந்தியா முழுவதும் அனைத்து நகரங்களிலும் கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் பரவலாக மழை பெய்தது. வடஇந்தியாவிலும் பயங்கர மழை. இந்த வைரஸ் காய்ச்சல் ஆரம்பித்து பரவுவதற்கு இது ஒரு காரணம். 

அதேபோல, எங்கேயாவது ஒரு இடத்தில் ஆரம்பித்தாலும் அது ஏர் டிராவல் மூலம் நாடு முழுவதும் ஒருசில நாட்களில் பரவிவிடுகிறது. இப்போது பஸ், ரயில், கடை, தியேட்டர் என எல்லா இடங்களிலும் மக்கள்கூட்டம் அதிகமிருக்கிறது. அதனால் இந்த வைரஸ் எளிதாகப் பரவுகிறது. 

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது?

நமக்கு சளி பிடித்து இருமல், தும்மலின்போது இந்த வைரஸ் சிறிய சளித்துகள்களோடு மூச்சுக்காற்றுடன் வெளியேறும். அதை அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது அவர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும்.

ஒருவர் இருமும் போதும், தும்மும்போதும் அவருக்கு அருகே 2 மீட்டர் சுற்றளவில் யார் இருந்தாலும் இந்த சளித்துகள்கள் அவர் மூச்சுக்காற்றில் நுழைந்து வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படி பரவுவதை டிராப்லெட் இன்ஃபெக்‌ஷன் என்போம். அப்படியாகவே தமிழகம் முழுவதும் இந்த ஹெச்3என்2 வைரஸ் பரவி இருக்கிறது.  

ஹெச்3என்2... 

ஹெச்3என்2 என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸைச் சேர்ந்தது. அதாவது இன்ஃப்ளூயன்சா வைரஸில் ஏ, பி, சி, டி என நான்கு வகைகள் உள்ளன. இதில் ஏ, பி வகைகள்தான் நமக்கு பொதுவாக வரக்கூடிய வைரஸ். சி, டி என்பது ரொம்பவே அரிது. இந்த ஏ அண்ட் பி வகை ஒவ்வொன்றிலும் இரண்டு வைரஸ்கள் உள்ளன. 

அதாவது ஏ வகையில் ஹெச்1என்1, ஹெச்3என்2 என்ற வைரஸ்களும், பி வகையில் யமகாட்டா, விக்டோரியா என்ற வைரஸ்களும் உள்ளன. இதில் பி வகையும் இப்போது அரிதாகவே வருகிறது.  

நமக்கு பொதுவாக இன்ஃப்ளூயன்சா ஏ பிரிவில் ெஹச்1என்1, ஹெச்3என்2 ஆகிய இரண்டு வைரஸ்களே உருமாறி, உருமாறி ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. அதாவது கொஞ்சம் மாற்றங்களுடன் அந்த வைரஸ் வரும்.  இப்போது ஹெச்3என்2 வைரஸ் பரவி உள்ளது. அதுவும் இந்தஆண்டு கொஞ்சம் வீரியமாகவே இந்த வைரஸின் தாக்கம் இருக்கிறது. ஆனால், இந்த வீரியம் பயப்படும்படியானது கிடையாது. 

இந்த ஹெச்3என்2 வைரஸ் பலருக்கும் சிறிய அறிகுறிகளுடன் வந்துபோயிருக்கும். சிலருக்கு அதிக காய்ச்சல், சளி, இருமல் என வந்திருக்கும். இது முதலில் உடல் வலியுடன் ஆரம்பிக்கும். அடுத்து மூன்று நான்கு நாட்களுக்கு காய்ச்சல், இருமல் கடுமையாக இருக்கும். 

சிறிய அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு சிகிச்சையே எடுக்காமல் தானாக சரியாகிவிடும். அதிக காய்ச்சல் மற்றும் இருமல், சளியோடு வந்தால் அவர்கள் மருந்து மாத்திரை உட்கொண்டு சரிப்படுத்த வேண்டும். 

எல்லாமே அவரவரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது.இந்த வைரஸில் ரொம்ப அரிதாக நோயாளிகள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஒசல்டாமிவிர் என்னும் ஆன்டி வைரஸ் மருந்துகள் கொடுத்து மருத்துவர்கள் எளிதாகக் குணப்படுத்துவார்கள். 

இந்த வைரஸ் குறிப்பாக 65 வயதுக்கு மேலுள்ள முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், இதயநோய், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், எடைகுறைவாக உள்ள குழந்தைகள், இதயநோய் உள்ள குழந்தைகள், ஆஸ்துமா உள்ளிட்டவை இருக்கும் குழந்தைகள் ஆகியோர்களுக்கு கொஞ்சம் வீரியமாகவே இருக்கும்.

இந்த ஆண்டு இந்த ஹெச்3என்2 வைரஸ் வீரியம் மிக்கது என்று எப்படி சொல்கிறோம்? 

கடந்த ஆண்டும் இதே வைரஸ் வந்தது. ஆனால், அது ஓரிரு நாளில் போய்விட்டது. மூன்றாவது நாளில் பலரும் நார்மலாக இருந்தனர். ஆனால், இப்போது அப்படியில்லை. காய்ச்சல் வந்தால் 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கிறது.

காய்ச்சலின் தன்மையும் 103, 104 பாரன்ஹீட் என மிக அதிகமாகப் போகிறது. அதோடு தாங்கமுடியாத உடல் வலியும், கை, கால் வலியும், தொடர் இருமலும் இருக்கின்றது. குழந்தைகள் என்றால் முதலிரண்டு நாட்களில் வாந்தி, பேதியுடன் காய்ச்சல் இருக்கிறது.   

வடஇந்தியாவில் இந்த வைரஸுக்கு சிகிச்சை அளித்து உடல் வலி, காய்ச்சல் எல்லாம் போனபிறகும் பத்து நாட்களுக்கு சோர்வும், இருமலும் இருப்பதாகச் சொல்கின்றனர். இதனைக் கொண்டே நாங்கள் இந்த வருட ஹெச்3என்2 வைரஸ் வீரியம் அதிகம் என்பதை கண்டறிகிறோம். 

இதனாலேயே கடந்த வாரம் தமிழ்நாடு நோய் தடுப்புத் துறை, இந்த ஆண்டு தமிழகத்தில் காய்ச்சல் கேஸ்கள் அதிகமாகி இருப்பதாகவும், வழக்கமாக அக்டோபரில் ஆரம்பிக்க வேண்டிய காய்ச்சல் இந்தமுறை ஜூலை கடைசியிலேயே ஆரம்பித்துவிட்டது என்றும் தெரிவித்தது. 

ஆய்வகத்தில் பரிசோதனை செய்து பார்த்ததில் 30 சதவீதம் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் பாசிட்டிவ்வாக கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் பெரும்பாலானவை ஹெச்3என்2 வைரஸ்தான். நான் மதுரையில் பார்த்த கேஸ்களும் பரிசோதனையில் ஹெச்3என்2 வைரஸாகவே இருந்தது.  

இதை எப்படி தடுக்க வேண்டும் மழைக் காலம் தொடங்கும் முன்பு மே மாதம் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி போட வேண்டும். இது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்  இலவசமாகவே போடப்படுகிறது. தவிர, தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. இதனை மேற்சொன்ன வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என எல்லோரும் போட்டுக் கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது. 

இதுதவிர காய்ச்சல் வந்தவர்கள் முதலில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். நீராகாரங்கள் நிறைய பருக வேண்டும். காய்கறி சூப் உள்ளிட்ட சத்தானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் ஹைரிஸ்க் உள்ளவர்கள் நிச்சயம் மருத்துவரை அணுகவேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு வந்தது என்றால் கட்டாயம் குழந்தை நல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது நல்லது. ஏனெனில், சிலர் கை வைத்தியம் எல்லாம் முதலில் செய்து பார்ப்பார்கள். அப்படியான ரிஸ்க் எடுக்க வேண்டாம். அது மேலும் சிக்கலுக்கே வழிவகுக்கும். 

அடுத்ததாக குழந்தைகளுக்கு வந்தது என்றால் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. இருமும்போது கைக்குட்டையைப் பயன்படுத்தச் சொல்ல வேண்டும். முதியவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொது இடங்களுக்கும், கூட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கும் செல்லும்போது முகக் கவசம் அணிவது நல்லது...’’ என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.

பேராச்சி கண்ணன்