மைலேஜ் ஏன் இப்பொழுது குறைகிறது..?



சமீபமாக இ20 எனும் எத்தனால் கலப்புப் பெட்ரோலினால் கார்களில் மைலேஜ் குறைவதாக வாடிக்கையாளர்கள் பலரும் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. அதுமட்டுமில்லாமல், இ20 பெட்ரோல் வண்டிகளில் சிக்கல்களை உருவாக்கிச் செலவு வைப்பதாகவும் சொல்கின்றனர். 
இந்நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பெட்ரோலில் 27 சதவீதம் எத்தனால் கலப்பதற்கான, அதாவது இ27 பெட்ரோலுக்கான வழிகாட்டுதல்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இ20 பெட்ரோலினால் வண்டிகளில் மைலேஜ் பிரச்னைகளும், சிக்கல்களும் இருக்கும்நிலையில் அதனை சரிசெய்யாமல் இ27 பெட்ரோலுக்குள் போவது வாடிக்கையாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அதென்ன எத்தனால் கலப்பு பெட்ரோல்?

எத்தில் ஆல்கஹால் அல்லது எத்தனால் என்பது ஓர் உயிரி எரிபொருள். ஆங்கிலத்தில் இதனை பயோஃப்யூவல் என்பார்கள். எரிதன்மை கொண்ட இந்த எத்தனால் இயற்கையாகவே கரும்பு, சோளம் மற்றும் சில உணவு தானியங்களிலிருந்து கிடைக்கின்றது. 

இதனை பெட்ரோலுடன் கலப்பதே எத்தனால் கலப்பு பெட்ரோல்.பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதுடன் சுற்றுச்சூழலுக்கும் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. தவிர, கச்சா எண்ணெயின் ஆதாரங்கள் குறைந்து வருவதாலும், சர்வதேச சந்தை நிலவரமும் பெட்ரோல், டீசல் விலையின் உயர்வுக்குக் காரணமாக உள்ளன.

இந்நிலையில்தான் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் செலவினத்தைக் குறைக்க முடியும் என நினைத்தது ஒன்றிய அரசு. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாய்க்கும் மேலிருக்கிறது. இதுவே எத்தனால் பெட்ரோல் என்றால் விலை குறையும் என்றும் சொல்லப்பட்டது.  இதுதவிர, வாகனங்களினால் ஏற்படும் அதிகப்படியான கார்பன் உமிழ்வைக் குறைக்கும் பொருட்டும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தை இந்தியா கையிலெடுத்தது.

அப்படியாக கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் அரசு எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அப்போது 5 சதவீத எத்தனால் கலப்பு கொண்டு வரப்பட்டது. இந்தக் கலப்பு சதவீதத்தைப் பொறுத்து எத்தனால் 5 என்பதை குறிக்கும்விதமாக இதை இ5 பெட்ரோல் என அழைத்தனர். பின்னர் 2019ம் ஆண்டு 10 சதவீத எத்தனால் கலப்பு என்றாகி 2022ம் ஆண்டு அந்த இலக்கை அடைந்தது.

பின்னர் 2023ம் ஆண்டு 20 சதவீத எத்தனால் பெட்ரோல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2030ம் ஆண்டு இந்த இலக்கை எட்டும்படி முடிவெடுத்தது. ஆனால், இந்த 2025ம் ஆண்டே அதனை எட்டிவிட்டது. இதனால், 27 சதவீத கலப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. கூடவே, நூறு சதவீதம் எத்தனால் எரிபொருள் என்பதை இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறது அரசு. 

இதற்குக் காரணம் எத்தனால் குறைந்தளவு மாசு கொண்ட ஒரு எரிபொருள். 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும்போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடின் அளவு இருசக்கர வாகனங்களில் 50% குறைவாகவும், நான்கு சக்கர வாகனங்களில் 30% குறைவாகவும் காணப்படும் என்பதே.

மேலும் குறைந்த செலவில் பெட்ரோலுக்கு சமமான செயல்திறனையும் வழங்குகிறது. இதனாலும் எத்தனாலை நோக்கி நகர்கிறது ஒன்றிய அரசு. ஆனால், வாகனங்களில் மைலேஜைக் குறைக்கிறது என வேதனை தெரிவிக்கின்றனர் வாடிக்கையாளர்கள். 

சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர், தன்னுடைய காரில் முன்பு இ10 பெட்ரோல் ஆயிரம் ரூபாய்க்கு நிரப்பினால் 145 முதல் 148 கிமீ வரை மைலேஜ் கொடுத்தது என்றும், இப்போது இதே பணத்திற்கு இ20 பெட்ரோல் நிரப்பும்போது 118 கிமீ வரையே மைலேஜ் கிடைக்கிறது என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கூடுதலாக 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினால்தான் 148 கிமீ தூரத்தை அடையமுடிகிறது. தற்போது தனக்கு 200 ரூபாய் பெட்ரோல் செலவு கூடுவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் என்றில்லை, பலரும் இந்தக் காரணத்தை முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து பேசும் சென்னையைச் சேர்ந்த கார் டீலர் முனிவேல், மைலேஜ் குறைவது உண்மைதான் என்கிறார்.

‘‘இப்போது எல்லா வண்டிகளுக்கும் இ20 பெட்ரோல் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், இது நம்மூர் பழைய வண்டிகளின் எஞ்சின்களுக்கு செட்டாகவில்லை. அதாவது இ20 பெட்ரோலை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எஞ்சினுக்கு கெப்பாசிட்டி கொடுக்கப்படவில்லை.

முன்பு இ5, இ10 வரை ஓகேவாக இருந்தது. இப்போது அப்படியில்லை. அதனால், டூவீலருக்கும் சரி, ஃபோர் வீலருக்கும் சரி மைலேஜ் குறைவாகத்தான் கிடைக்கிறது. இதனை கம்பெனிக்காரர்களிடம் சொன்னால் அவர்கள், நல்ல பங்க்கில் பெட்ரோல் போடும்படி சொல்கின்றனர்.ஆனால் இதற்கும் பெட்ரோல் பங்க்கிற்கும் என்ன சம்பந்தம்? இதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெட்ரோலுக்கு ஏற்றமாதிரி எஞ்சினை மாற்றினால்தான் மைலேஜ் கிடைக்கும்.

அதனால், இதில் மாற்றம் தேவை. இந்தப் பிரச்னையை வாடிக்கையாளர்கள்தான் நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டு போக வேண்டும்...’’ என்கிறார் முனிவேல்.
இந்த இ20 பெட்ரோலால் நிறைய பாதிப்புகளைச் சந்தித்துள்ள தூத்துக்குடியைச்சேர்ந்த கார் பிரியரான ஜெயசிங் சத்யராஜிடம் பேசினோம். அவர் தன்னுடைய காரில் குறுகிய ஆண்டுகளில் இரண்டு முறை கேஸ்கட்டை மாற்றியிருப்பதாகச் சொல்கிறார்.

‘‘நான் 1998ம் மாடல் மாருதி 800 வைத்திருக்கிறேன். அப்புறம் 2012 மாடல் ஆக்டிவா டூவீலரும் வைத்திருந்தேன். இந்த இரண்டிலும் சமீபமாக சில புகார்கள் வந்தன. இதனால் கடந்த இரண்டுஆண்டுகளில் இதில் இரண்டு முறை உள்ளிருக்கும் கேஸ்கட்டை மாற்றியிருக்கிறேன். இந்தப் பிரச்னையால் என்னுடைய ஆக்டிவாவை விற்றேவிட்டேன்.

இதற்குக் காரணம் இ20 பெட்ரோல்தான் என்பதை பல்வேறு செய்திகளைப் படித்துத் தெரிந்துகொண்டேன். எத்தனால் என்பது பயோ ஃபியூவல். இதனை கரும்பில் இருந்து எடுக்கின்றனர். இதற்கு அதிகமாக நீர் உறிஞ்சும் தன்மை இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், இது ஈரப்பதத்தை உறிஞ்சி அரிப்புக்கு வழிவகுக்கின்றது.

அதாவது பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை அப்படியே கரைத்துவிடும் அல்லது பலவீனப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. பழைய பெட்ரோல் டேங்க் எல்லாமே மெட்டல். இதனை இ20 பெட்ரோல் சீக்கிரமாக துருப்பிடிக்கச் செய்கிறது.அதேபோல், பெட்ரோல் போகும்வழி பெரும்பாலும் கார்களில் மெட்டல் பைப்பாக இருக்கும். சிலவற்றில் ரப்பர் வைத்து கனெக்ட் செய்திருப்பார்கள்.

இந்த மெத்தனாலுக்கு இயற்கையிலேயே அரிக்கும் தன்மை இருப்பதால் மெட்டல் பைப்பை துருப்பிடிக்க வைத்து அடைக்கச் செய்துவிடுகிறது. ரப்பர் பைப்பை அப்படியே அரித்துவிடுகிறது. எஞ்சினில் கேஸ்கட் ரப்பர்தான். அதனை சீக்கிரமே அரித்துவிடுவதால் என் வண்டியில் இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை கேஸ்கட் மாற்ற வேண்டியதானது.

இந்த இ20 பெட்ரோல் இப்போது எல்லா பெட்ரோல் பங்குகளிலும் வந்துவிட்டது. ஆனால், 2023ம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்ட வண்டிகளுக்கு இதனை ஏற்றுக் கொள்ளும் திறனில்லை. அதனால் ஒன்றிய அரசும், உற்பத்தி நிறுவனங்களும் இதுகுறித்து யோசிக்க வேண்டும்.தற்போது எந்த ஒரு வாகனத்திற்கும் தகுதிச் சான்றிதழ் (எஃப்சி) என்பது அது வாங்கப்பட்டதிலிருந்து 15 ஆண்டுகள் வரை தரப்படுகிறது. அதன்பிறகு எஃப்சிக்குக் காட்ட வேண்டும். அப்போ, 15 ஆண்டுகள் வரை எரிபொருளில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது.  

ஆனால், ஒன்றிய அரசு 2015ல் இருந்து 2025க்குள் இ10, இ15, இ20 என மூன்றுவிதமான எத்தனால் கலப்பு பெட்ரோலைக் கொண்டு வந்துவிட்டது. இதனால், கடந்த பத்தாண்டுகளுக்குள் கார் வாங்கியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த மாதத்தில் இ27 பெட்ரோலாக மாற்றப்போகிறோம் எனச் சொல்லியிருக்கின்றனர். 

இப்போதுதான் பலரும் இ20 பெட்ரோல் கார்களையும், பைக்குகளையும் வாங்கியுள்ளனர். ஆக, இதுவும் அடுத்து பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதுக்காக ஒவ்வொருவரும் வண்டியை விற்றுக் கொண்டும், புதியதாக வாங்கிக் கொண்டும் இருக்கமுடியாது.

இந்த எத்தனால் பெட்ரோலுக்கு கார்பன் மாசு ரொம்பக் குறைவுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இது பழைய வண்டிகளுக்கு பொருந்துவதில்லை. மைலேஜ் என்று பார்க்கும்போதும் கொஞ்சம் குறைவாகவே தருகிறது. 

சரி, பழைய வண்டியில் ஏதாவது மாற்றம் செய்து அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்றால் அதற்கு கூடுதல் செலவாகும். அதை செய்யவும் முடியாது. ஆக, இந்தப் பிரச்னையை வாகன உற்பத்தியாளர்கள்தான் சரி செய்ய வேண்டும். அல்லது ஒன்றிய அரசு குறைந்தபட்சம் எரிெபாருளை அடிக்கடி மாற்றாமலாவது இருக்கவேண்டும்...’’ என்கிறார் ஜெயசிங் சத்யராஜ்.

பேராச்சி கண்ணன்