பெண்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ஆண்கள் ஏன் பறிக்கிறார்கள்..?



“தில்லியில் இரவு 11 மணிக்கு மெட்ரோ ரயிலில் ஏறிய பெண்ணுக்கு அதிர்ச்சி. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஆண்கள் பலர் எந்தச் சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருக்க, அந்தப் பெண் இது ‘வுமன் காம்பார்ட்மெண்ட், அந்தப்பக்கம் போங்க’ என்கிறார். ஆனால், யாரிடமும் எந்த உணர்ச்சியும் இல்லை. மீண்டும் அவரவர் வேலையைப் பார்க்கத் துவங்குகிறார்கள்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது...”இப்படி நிறைய சம்பவங்கள். ஏன்... கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடம் கொடுக்காமல் பேருந்தில் இருந்து கீழே விழுந்த கேரளாவைச் சேர்ந்த நஷிதாவை - 2018ம் ஆண்டுச் சம்பவம் - அவ்வளவு சுலபமாக நாம் மறக்க முடியாது. 
அலுவலக பார்க்கிங், மால்களில் சிறப்பு பார்க்கிங் வசதிகள், டிக்கெட் பெறுமிடங்களில் பெண்களுக்கு தனி வரிசை என அரசாங்கமும், சமூகமும் இப்படிபெண்களுக்கான சிறப்பு சலுகைகள் கொடுப்பதே அவர்கள் எவ்வித பயமும், தயக்கமும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், கல்வி, வேலை என தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால், இந்தக் காலத்திலும் இன்னமும் பெண்களின் இடத்தை பகிரங்கமாகவே பறிக்கும் அல்லது அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சலுகைகளை, வசதிகளை சேதாரம் செய்யும் வழக்கம் தொடர்ந்து நடப்பது மாறவில்லை. அதே பேருந்தில், அதே பாதையில்தானே இவர்களின் அம்மா, சகோதரி, மனைவி, மகள் பயணிப்பார்கள்... அவர்களுக்கான இடமும் கேள்விக்குறியாகும் என்கிற மனநிலையும், பதற்றமும் ஏன் இவர்களிடம் இல்லை?

இதன் சமூகப் பார்வையும், உளவியல் பிரச்னையும் என்ன? இதற்குத் தீர்வு எது?

‘‘ஆணாதிக்கத்தின் இன்னொரு வெளிப்பாடுதான் இது...’’ என்றபடி ஆரம்பித்தார் சமூக மேம்பாட்டு ஆலோசகரும் ஆய்வாளருமான கீதா நாராயணன்.
‘‘காலம் காலமா ஆண்கள் ஒரு கோடு போட்டு வைத்து அதற்குள் நம்மை வாழ வைத்திருந்தார்கள். அதை எல்லாம் தொடர்ந்து உடைத்துக் கொண்டே வருகிறோம்.
நாம் உடைப்பதற்கு பக்க பலமாக அரசும், சமூகமும் ஒரு சில சலுகைகள், வசதிகள் செய்து கொடுத்தால் நாம் இன்னும் கொஞ்சம் வேகமாக முன்னேறிச் செல்வோமே...

அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இட ஒதுக்கீடு என்றதும் நாம் இங்கே அரசியல் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ஆண் - பெண் சரிசமம்... எல்லா பதவியும் எல்லோருக்கும் சமம், யாரும் எங்கும், எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம்... என்றால் ஒரு பெண்ணையாவது இவர்கள் பொறுப்பில் உட்கார விட்டிருப்பார்களா?

பகிரங்கமாக 30%, 50% எனக் கொடுத்து, இந்தத் தொகுதி பெண்கள் தொகுதி என கட்டாய சூழலை உருவாக்கியபின்னர்தான் பெண்கள் பதவிக்கு வருவது சாத்தியமானது.
ஏன், இப்போதும் கூட பல பஞ்சாயத்துக் கூட்டங்களில் பெண்களே பதவியில் இருந்தால் கூட அவர்களது கணவர்கள்தான் நாட்டாமை செய்வார் அல்லது கூட்டத்தில் பேசுவார். மனைவி பொதுவாக வருவதே இல்லை அல்லது வர விடுவதில்லை.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவர் வேலை முடிந்துவிடும். பிறகு எல்லாம் கணவர் ஆட்சிதான். மற்றொரு உண்மை-பல தொகுதிகளில் பெண் கவுன்சிலரின் கணவர், பஞ்சாயத்துத் தலைவியின் கணவர் என்கிற பெயரே சில ஆண்களுக்கு அவமரியாதையாகத் தோன்றும். நாமாக முன்வந்து இது என் உரிமை என தைரியமாகச் சொல்லி எடுத்துக்கொள்வதில்தான் மாற்றம் நிகழும். முதலில் ஆண் - பெண் சமம்... எந்த ஒரு விஷயத்திலும், நிகழ்விலும் அங்கே ஆண்களைப் பாதுகாவலர்களாக வைப்பதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து அவர்களை பாதுகாவலர்களாக பார்க்கப் பார்க்க, நமக்கான சமமான இடம் கிடைப்பது கடினம்.

ஏன்... ஓர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு நாம் பில் கட்டலாமே? ஒரு பயணம் என்றால் இருவரும் பகிர்ந்து செலவிடலாமே? இதெல்லாம் சரியாகப் பகிர்ந்து செய்ய ஆரம்பிக்கும் பொழுது ஆணும் தன்னுடைய சுமை இறங்குவதை உணர்ந்து தாமாகவே முன்வந்து பெண்களுக்கான சலுகைகள் மற்றும் வசதிகளில் ஆதரவுக்கரம் நீட்ட த் துவங்குவார்கள்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் கீதா நாராயணன்.

‘‘ஆண்கள்தான் வேட்டையாடுபவர்கள்(Hunters), பெண்கள் பராமரிப்பவர்கள் (Nurturers)... இதை ஆதிகால வாழ்க்கை முறையில் இருந்து நமக்கு பழக்கப்படுத்தி விட்டனர்...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் மருத்துவ உளவியலாளரான எஸ்.வந்தனா. ‘‘எனவே பொது இடம் என்றால் அது ஆண்களுக்கானது என சமூகம் அக்காலம் தொட்டு பழக்கப்பட்டிருக்கிறது. இதுவரை உருவான தலைமுறை அவர்களாக பார்த்துத் திருந்தினால்தான் உண்டு.

ஆனால், கையில் இருக்கும் அடுத்த தலைமுறைகளை நாம் மாற்றலாம். அடிப்படைக் கல்வி அவசியம். கல்வி என்றால் வெறும் புத்தகக் கல்வி இல்லை. ஏனெனில் நன்கு படித்தவர்கள் கூட ஆதிக்க மனநிலையில் இருப்பதை நாம் பார்க்கலாம். சுய வாழ்வியல் மேம்பாடு (Personality Enhancement) அவசியம். பெண்கள்தான் ஆண்களுடைய பணியாளர்கள், ஆண்கள்தான் பெண்களின் பாதுகாவலர்கள் என்கிற பழைய கோட்பாட்டை உடைத்தால்தான் மாற்றம் பிறக்கும்.

பொதுவாகவே, தான்தான் இந்த உலகின் முதன்மையான உயிரி என்கிற உயிரின வெறி (Specism) ஆணிடம் உண்டு. தங்களை மீறி பெண் மட்டுமல்ல, இந்த உலகின் எந்த உயிரினமும் கிடையாது என்கிற மனநிலை... அதைக் கொடுத்ததும் இந்த சமூகம்தான். எனவே, அவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. சிறு வயது முதலே வாழ்வியல் பாடம் புகட்ட வேண்டும். ஆணும், பெண்ணும் சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கைச் சக்கரம் சுழலும் என்னும் அடிப்படை உயிரியல் கோட்பாட்டை ஆண்களிடம் புகுத்த உலகம் தவறிவிட்டது.

அதற்காக ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது அடக்குமுறையைக் கையாளவோ தேவையில்லை. ‘உனக்கு இந்த பூமியில் வாழ என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அத்தனையும் மற்ற உயிர்களுக்கும் உள்ளது...’ஏன்... ஓர் எறும்பு தன் சுழற்சியை நிறுத்தினாலே உலகின் உயிரியல் சுழற்சியில் மிகப்பெரிய சிக்கலை நாம் சந்திப்போம். எனவே, புழு, பூச்சியாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி அத்தனை பேரும் சமம்.

அதேசமயம் உயிரியல் உடற்கூறு மற்றும் ஹார்மோன்கள் அடிப்படையில் ஆணும் பெண்ணும் பல விஷயங்களில் நிச்சயமாக ஒத்துப் போக முடியாது. சமநிலை எல்லா இடங்களிலும் பேச முடியாது. ‘உன் வேலையை நீ செய், உனக்கு எவ்வளவு வாழ்வியல் பொறுப்புகள் இருக்கிறதோ அதேபோல் அவளுக்கும் அவள் வாழ்வில் ஏராளமான பொறுப்புகள் உள்ளன. உன்னையும், உன் குழந்தைகளையும் வளர்ப்பது மட்டும் ஒரு பெண்ணின் வாழ்வியல் கடமை கிடையாது. குழந்தைகள், குடும்பம் என்பது இருவருக்கும் பொது.

இங்கே சமநிலையாகத்தான் செல்ல வேண்டும்...’இந்த அடிப்படைக் கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. நம் சமூகம் பெண்களுக்குப் போதிக்கும் வாழ்வியல் பாடங்களில் 10% கூட ஆண்களுக்கு போதிப்பதில்லை. அவனை முழுக்க முழுக்க பெண்களையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் காவலனாக மாற்றி, அவனது வாழ்க்கையையும் வாழவிடாமல் அவன் மேல் ஒரு பெரும் சுமையை தலையில் ஏற்றி வைத்திருக்கிறது.

மேலும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் முன்னேற்றத்தில் பெரும்பாலும் ஆண்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஆண்களை எதிர்த்துதான் அத்தனை சட்டங்களும் பாதுகாப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கோபமும் அடக்குமுறையாக வெளிப்படுகிறது. அவர்களையும் ஒன்றிணைத்து குடும்பமாக பாதுகாப்பு மற்றும் பெண் வளர்ச்சி குறித்து பேசத் துவங்கி பொறுப்பையும் அவர்கள் கையில் ஒப்படைக்கத் துவங்கினால் நிச்சயம் பெண்கள் மீதான அடக்கு முறையும் கோபமும் ஆண்களுக்கு குறையும்.

இந்த நிலை இப்போது மாறி வருகிறது. இன்னும் பத்து வருடங்களில் இந்தப் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது இல்லாமல்கூடப் போய் நாம் கேட்கும் சமநிலை வரும்.
அதற்கு இப்போதிருந்தே ஆண் - பெண் குழந்தைகளை அடிப்படை வாழ்வியல் அறிவுடன் வளர்க்கத் துவங்குவதுதான் தீர்வு. ‘உனக்குக் குடிக்க தண்ணீர் வேண்டுமானால் நீ எழுந்து போய் குடி...’ என ஆண் பிள்ளைகளிடம் சொல்லத் துவங்குவதிலிருந்து இந்தச் சமூக மாற்றம் ஆரம்பிக்கும்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் உளவியல் மருத்துவரான எஸ்.வந்தனா.

ஷாலினி நியூட்டன்