சிறுமிகள் கடத்தலில் பீகார்தான் நம்பர் ஒன்!
இசை, நடனம் என்னும் பெயரில் அரங்கேறும் அயோக்கியத்தனம்
நாட்டுப்புறக் கூத்து எனும் பெயரில் தென்னிந்திய கிராமங்களில் விடிய விடிய நடக்கும் லூட்டிகளை பலர் யூடியூபில் பார்த்திருக்கலாம்.  ஆபாச வார்த்தைகள், கொச்சை வசனங்கள், வக்கிரமான உடல் அசைவுகள், இரட்டை அர்த்தச் சொற்கள் எல்லாம் இந்த நடனங்களுக்கான அடிப்படை என்பது புரிந்திருக்கும்.தென்னிந்தியாவில் இப்படியென்றால் பீகார் போன்ற வட பிரதேசங்களில் ‘ஆர்கஸ்ட்ரா நடனம்’ பிரபலம். அது என்ன ஆர்கஸ்ட்ரா நடனம்?
வேறொன்றும் இல்லை. சினிமா பாடல்களை ஒலிபெருக்கிகளில் ஒலிக்கவிட்டு நடனம் ஆடுவதைத்தான் இது குறிக்கும். ரெக்கார்ட் டான்ஸ் என நம்ம ஊரில் சொல்வோமே... அதுதான் இது. குத்து டான்ஸ்தான் இதில் சிறப்பு. இதில் என்ன வேடிக்கை என்றால் தென்னிந்திய கொச்சைக் கூத்துக்களில் வயது வந்தவர்கள் மட்டுமே பங்குபெறுவார்கள் - அதாவது நடனமாடுவார்கள்.
ஆனால், பீகார் ஆர்கஸ்ட்ரா நடனங்களில் 14 வயதுக்கும் குறைவான மைனர் பெண்கள்தான் பங்குபெறுவார்கள்.
இதில் பதற வைக்கும் உண்மை என்னவென்றால் ஆர்கஸ்ட்ரா நடனம் எனும் போர்வையில் பீகாரில் சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டுதான். இந்தச் சிறுமிகள் எல்லோரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. பீகாரை ஒட்டிய பிரதேசங்களில் இருந்து அம்மாநிலத்துக்கு கடத்தப்பட்டவர்கள் என்று சொல்கிறது ஆய்வு.
மட்டுமல்ல; சிறுமிகள் கடத்தலில் நம்பர் ஒன் மாநிலமாக பீகார் திகழ்கிறது என்பதுதான் குழந்தைகள் தொடர்பான ஆர்வலர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கிறது.இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பீகாரில் கடத்தப்பட்ட சுமார் 271 சிறுமியரைக் காவல்துறை மீட்டுள்ளது. இதில் 153 பேர் ஆர்கஸ்ட்ரா டான்ஸ் குழுவில் இருந்து மீட்கப்பட்டவர்கள். மீதம் 118 பேர் பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்டவர்கள்.
இது பீகாரின் ஒரு பிரதேசத்தில் நிகழ்ந்தது என்றால் அதே மாநிலத்தின் இன்னொரு பிரதேசத்தில் சுமார் 162 சிறுமிகள் சரன் எனும் பகுதியிலிருந்த ஆர்கஸ்ட்ரா குழுவிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு தன்னார்வக் குழு வேறு ஒரு பகுதியிலிருந்து சுமார் 116 சிறுமியரை இந்தக் கூத்தாடி குழுவிலிருந்து மீட்டது.
சிறுமியர் மட்டுமல்ல... பெண் கடத்தலிலேயே பீகார் மாநிலம்தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது. காரணம்,பீகார் இருக்கும் புவியியல் அமைப்புச் சூழலும் வறுமையும் என்கிறார்கள் இந்தப் பிரச்னையை அலசும் ஆர்வலர்கள். உதாரணமாக பீகாரை ஒட்டித்தான் நேபாள நாடும், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்திஸ்கர், அசாம் மற்றும் உத்திரப்பிரதேசம் என இந்திய மாநிலங்களும் இருக்
கின்றன.மேற்கு வங்காளம் கலைகளுக்கு பிரபலமான ஒரு மாநிலம். அங்கே சிறுவயதிலேயே ஆடல், பாடல், இசை என குழந்தைகள் கற்க ஆரம்பிப்பார்கள்.
இதை சாக்காக வைத்தே ஆர்கஸ்ட்ரா புரோக்கர்கள் மேற்கு வங்காளத்தைக் குறிவைத்து குழந்தைகளின் பெற்றோரை சம்மதிக்க வைத்து குழந்தைகளை பீகாருக்கு ‘கடத்தி’ வருவார்கள். இதற்காக ஒவ்வொரு குழந்தையின் பெற்றோருக்கும் தலா ரூ.10 ஆயிரம் முதல் தருகிறார்களாம்.
இசைக்காக, நடனத்துக்காக என ‘நம்பி’ வரும் குழந்தைகளுக்கு - சிறுமிகளுக்கு - பீகாரில் காலடி எடுத்து வைத்ததுமே அதிர்ச்சி காத்திருக்கிறது. அதன் பின் நடப்பவை அனைத்தும் அவர்களது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இவை எதுவுமே சம்பந்தப்பட்ட குழந்தைகளின் - சிறுமிகளின் - பெற்றோருக்கு தெரிய வராது என்பது முகத்தில் அறையும் நிஜம். ஆம். ஆர்கஸ்ட்ரா நடனம் என்பது வெளித்தோற்றம்தான்.
இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி காசு பார்ப்பதுதான் ‘மாமா’க்களின் முக்கியதொழில். சொல்பேச்சு கேட்காத குழந்தைகளை அரட்டி மிரட்டி தொழிலில் ஈடுபட வைப்பதுதான் புரோக்கர்களின் அன்றாட வேலை. பொதுவாக இந்த சிறுமியரின் வாழ்விடங்கள் மிகக் கொடூரமாக இருப்பதாகவே பீகாரில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.
ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு அறிக்கை ஒன்று இந்தியாவில் சுமார் 2878 சிறார்கள் கடத்தப்பட்டதாகவும், இதில் 1059 பேர் சிறுமிகள் என்றும் பூகம்பத்தை கிளப்பியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் குழந்தை கடத்தல் மிகப் பரவலாக இருப்பதாகவே புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
உதாரணமாக கடந்த ஆண்டு உலகத் தொழிலாளர் அமைப்பும் (ஐ.எல்.ஓ), யுனிசெப்பும் சேர்ந்து ஓர் ஆய்வை வெளியிட்டது. அதில் உலகளவில் சுமார் 14 கோடி குழந்தைகள் கட்டாயத் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக விவரம் சொன்னது.
அதிலும் இந்த 14 கோடிப் பேரில் சுமார் 5 கோடிப் பேர் ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் பிரித்து மேய்ந்தது. இந்தியாவில் சி.லேப் (c lab) எனும் அமைப்பு அண்மையில் இந்தியாவின் 34 மாநிலங்களில் இருந்து சுமார் 53651 குழந்தைகளைக் கடத்தலில் இருந்து மீட்டிருக்கிறது.
இன்னும் எத்தனை பேர் கடத்தல் பேர்வழிகளின் பிடியில் இருக்கிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.குழந்தை கடத்தலைத் தடுக்க இந்தியாவில் போதுமான சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன.
சட்டத்துக்கு புறம்பான கடத்தல் தடுப்புச் சட்டம், சிறார் நீதிச் சட்டம், போக்சோ, கட்டாயத் தொழில் தடுப்புச் சட்டம்... போன்றவை சட்டப் புத்தகத்தில் இருக்கின்றன. ஆனாலும் இவற்றைச் செயலில் கொண்டுவருவதுதான் இந்தப் பிரச்னையை தீர்க்கமுடியாமல் இருக்கிறது. இத்தோடு ஒரு கடத்தலானது, கடத்தல் எனும் பெயரில் புகாராக பதியப்படுவதில்லை.
ஒரு சிறுமி ஆர்கஸ்ட்ரா நடனக் குழுவிலோ அல்லது பாலியல் தொழிலிலோ ஈடுபடுத்தப்படுகிறாள் என புகார் பதியப்படுவதில்லை. மாறாக காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படுவதால் கடத்தல் பேர்வழிகள் இந்த வலைப்பின்னலில் இருந்து இலகுவாக தப்பித்துவிடுகிறார்கள்.
இதனால்தான் தண்டனை என்பது குதிரைக் கொம்பாக இருப்பதாக குழந்தை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பொதுவாக இதுபோன்ற குழந்தை கடத்தலை விதையிலேயே கிள்ளுவதுதான் பயன் தரும் என்றும் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
வரும் முன் காப்போம் மாதிரி கடத்தல்கள் எங்கெல்லாம் நடப்பதற்கான சாத்தியங்கள் உண்டோ அவற்றைக் களைவதுதான் தீர்வைக் கொண்டுவரும் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.
உதாரணமாக, மாநிலம் விட்டு மாநிலம் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது என்றால் ரயில், பஸ் போன்ற போக்குவரத்தை கண்காணிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு, ரயில் காவலர்களுக்கு உண்டு.
இதுபோல ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் தோறும் கடத்தலுக்கு எதிரான அரசுக் குழுக்கள் உண்டு. இவை எல்லாம் எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் செயல்பட வேண்டும். ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவோமாக.
டி.ரஞ்சித்
|