மருத்துவம், எரிசக்திக்கு உதவும் பல்லாயிரம் தாவரங்கள் இன்னும் மனிதனின் கண்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன!



‘கார்டியன்’ பத்திரிகைதான் இந்த உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

என்ன விஷயம்?

உலகில் தாவர வளமிக்க, ஆனால், இன்னும் விஞ்ஞானிகள் கண்டறியாத செழுமை மிகுந்த 33 இருண்ட பகுதிகள் இருக்கின்றதாம்.

அவை என்ன செழுமைமிக்க இருண்ட இடங்கள்?

ஆங்கிலத்தில் இதை Dark Hotspots என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது புவியியல் வகைப்பாட்டு ரீதியாக விவரங்கள் அதிகம் அறியப்படாத பகுதிகள்தான் செழுமை மிக்க இருண்ட இடங்கள்.

இங்குள்ள ஆயிரக்கணக்கான தாவரங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது.போர்னியோவில் தரைக்குக் கீழ் வளர்ந்து பூக்கும் பனைமரம் முதல் தன் வாழ்நாள் முழுவதும் மற்ற தாவரங்களில் வாழும் மலகசி அலங்காரத் தாவரம் வரை ஆய்வாளர்கள் ஆண்டுதோறும் டஜன் கணக்கிலான புதிய இனங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

என்றாலும் இன்னமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை அழியும் ஆபத்திலும் உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சரி... இனம் காணப்பட வேண்டிய தாவரங்கள் எங்குள்ளன?

‘க்யூ’ (Kew) ராயல் தாவரவியல் பூங்கா விஞ்ஞானிகள் உலகின் எப்பகுதிகளில் தங்கள் ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தங்கள் ஆய்வில் பட்டியலிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து மடகாஸ்கர் முதல் பொலிவியா வரை தாவரங்கள் மிகுந்த பகுதிகளில் க்யூ  பூங்கா ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள். இது பற்றிய ஆய்வுக்கட்டுரை ‘New Phytologist’ என்ற இதழில் வெளிவந்துள்ளது. க்யூ விஞ்ஞானிகள் 2023ல் நடத்திய ஆய்வு முடிவுகளின் பகுப்பாய்வுகளில் இருந்து இந்த விவரங்கள் பெறப்பட்டன.

அத்துடன் இன்னும் விவரிக்கப்படாத மொத்த தாவர இனங்களில் மூன்றில் ஒரு பகுதி தாவரங்கள் விரைவில் அழியும் ஆபத்தில் உள்ளன என்கிறது ஆய்வு. வருங்கால மருந்துப் பொருட்கள், எரிபொருட்கள் மற்றும் பிற புதிய கண்டுபிடிப்புகளுக்கான ரகசியங்களை இந்தத் தாவரங்கள் பெற்றுள்ளன என ஆய்வாளர்கள் அடித்துச் சொல்வதாலேயே அவை அழியும் நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுவது உலகில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட சூழல் பாதுகாப்புக்கு உதவுதல், புதிய தாவரங்களைக் கண்டுபிடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தும் நோக்கமாகக் கொண்டே இந்த ஆய்வுகள்
நடந்தன. இப்போதுள்ள வேகத்தில் ஆய்வுகள் தொடர்ந்தால் இதுவரை கண்டறியப்படாத பல புதிய தாவரங்களும் அறிவியலால் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே அழிந்துவிடும்.

பூமியில் மனிதன் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகக் கருதப்படும் பழமையான, தலைகீழாக வளர்வது போல தோற்றமளிக்கும் மடகாஸ்கர் பயபாஃப், கொலம்பியா மலைப்பகுதிகளில் புற்கள், பாறைகள் மிகுந்த இடங்களில் வளரும் எஷ்ஃபிலீசியா பாக்லயானா இனத்தைச் சேர்ந்த, முட்கள் அதிகம் உள்ள அரிய வகை பூக்கும் தாவரம், தண்டில் மணி போன்ற அமைப்பில் பிங்க் கலந்த சிவப்பு நிற பூக்கள் கொத்தாக பூக்கும் சியடண்ட்ர இனத்தைச் சேர்ந்த இதுவரை 112 இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நியூ கினியாவின் அபூர்வ தாவரம் போன்றவை ஒருசில எடுத்துக்காட்டுகள்.

இப்போது நடைமுறையில் இருக்கும் ஐநாவின் பத்தாண்டுக்கான இலக்கின்படி புவிக்கோளின் 30% பகுதிகளை பாதுகாக்க வேண்டும். ஆனால், இதில் எப்பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல் இல்லாமல் அரிய தாவரங்களை நம்மால் காப்பாற்ற முடியாது. இதனால் விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் முன்பு சென்ற இடங்களுக்கே சென்று ஆய்வுகளை நடத்துகின்றனர். 

இதனால் ஏராளமான இனங்கள் உள்ள சில பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன...” என்று க்யூ பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனரும் ஆய்வுக் கட்டுரையின் மூத்த ஆசிரியருமான பேராசிரியர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி கூறுகிறார்.

இந்த இருண்ட பகுதிகளில் பெரும்பாலானவை ஆசியாவிலேயே உள்ளன. இதில் அவசரமாக ஆராயப்பட வேண்டிய பகுதிகள் என்று சுமாத்ரா தீவு, கிழக்கு இமயமலைப் பகுதி, இந்தியாவிலுள்ள அசாம் மாநிலம், வியட்நாம், ஆப்பிரிக்காவில் மடகாஸ்கர், தென்னாப்பிரிக்காவில் கேப் மாகாணம், தென்னமெரிக்காவில் கொலம்பியா, பெரு மற்றும் தென்மேற்கு பிரேசில் உள்ளிட்ட 22 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

“பூமியின் எப்பகுதிகளில் தாவர வளம் அதிகமாக உள்ளது என்று தெரியாமல் நம்மால் அவற்றைக் காப்பாற்ற முடியாது. வளம் மிக்க இந்த இருண்ட இடங்கள் உள்ள நாடுகளில் தாவர இனங்களை அதிகாரபூர்வமாகக் கண்டறிய உதவும் வசதிகள் குறைவாகவே உள்ளன...” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் லண்டன் க்வீன் மேரி பல்கலைக்கழக தாவரவியலாளரும் க்யூ பூங்காவின் கௌரவ ஆய்வாளருமான டாக்டர் சாம்யெல் பயனான் கூறுகிறார்.

இந்த ஆய்வு வருங்காலத்தில் புதிய இனங்களை அடையாளம் காண உலகம் முழுவதும் உள்ள ஆய்வு அமைப்புகளையும் உள்ளூர் மக்களையும் ஒருங்கிணைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அரிய தாவரங்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்ல பன்னாட்டு அளவில் தடை உள்ளது. இந்த இனங்களுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால் பொது மக்கள் இவற்றை அகற்றவோ சேகரிக்கவோ கூடாது.

என்றாலும் பொதுமக்கள் இத்தாவரங்களை புகைப்படம் எடுத்து ஐநேச்சுரலிஸ்ட் போன்ற மக்கள் அறிவியல் இணைய தளங்களில் பதிவிடலாம். இது பொது மக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான உறவை - பிணைப்பை அதிகப்படுத்தும். 

ஏனெனில் இத்தளங்களைச் சார்ந்தும் ஆய்வாளர்கள் செயல்படுகின்றனர். விஞ்ஞானிகள் இத்தகவல்களை புதிய இனங்களை அடையாளம் காண உதவும் முக்கிய விவரமாகக் கருதுகின்றனர். வருங்கால உயிர்ப் பன்முகத் தன்மை உச்சி மாநாடுகளிலும் இந்த ஆய்வின் முடிவுகள் இன்றியமையாத கொள்கைகளை வகுக்க உதவும் என்று நம்புகின்றனர்.

என்.ஆனந்தி