மாற்றுத் திறனாளிகளுக்கான Teacher Learning Books!



‘‘என் கவனம் முழுவதும் டிஎல்எம் எனப்படுகிற மாற்றுத்  திறனாளி குழந்தைகளின் பயிற்சிக்கான, டீச்சர் லேர்னிங் மெட்டீரியல் தயாரிப்பில்தான் இருக்கு...’’ என்கிற பாண்டிச்சேரியைச் சேர்ந்த கீதா ஷ்யாம் சுந்தர், சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களையும் மனத்தில் வைத்து, நான்கு புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
‘‘சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி உபகரணங்கள் விலை அதிகம். எனவே வீட்டில் நாம் பயன்படுத்திவிட்டு, வேண்டாமெனத் தூக்கியெறியும், ஃபுட் பேக்கிங் மெட்டீரியலில் தொடங்கி, அட்டைப் பெட்டிகள் வரை வீணாகும் பொருட்களைச் சேகரித்து பயிற்சி உபகரணங்களை மலிவு விலையில் உருவாக்கித் தருகிறேன்.

பெற்றோர் விரும்பிக் கேட்டால், பயிற்சி உபகரணங்களைச் செய்வதற்கான பயிற்சியும் வழங்குகிறேன்...’’ என்ற கீதாவின் கணவர் ஷ்யாம் சுந்தர், மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணியில் இருக்கிறார். 

இவர்களின் மகள் அனன்யா ஆட்டிசம் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிக் குழந்தை. மட்டுமல்ல, இவர்களின் ஒரே மகன் சந்தோஷ் சிறுவனாக இருந்தபோதே, கேன்சர் நோயால் காலமானவர்.

‘‘சிறப்புக் குழந்தைகளின் அடிப்படைத் தேவையான தண்ணீர் வேண்டும், கழிப்பறைக்குப் போக வேண்டும் போன்ற விஷயங்களை தொடர்பு படுத்துகிற கம்யூனிகேஷன் போர்டு ஒன்றையும் நான் தயாரித்துத் தருகிறேன். இதில் அவர்களின் தேவைகளை, உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவர்களால் தெரிவிக்க, போர்டில் இருக்கும் பட்டன்களை அழுத்தினால் போதும்.

நான் இதுவரை தயாரித்து வைத்துள்ள பயிற்சி உபகரணங்கள் பலவும், சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தெரியாமலே இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை  வெளியில் கொண்டுவர நினைக்கிறேன்...’’ என்றவர், தான் எழுதி வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் குறித்தும் நம்மிடம் விளக்க ஆரம்பித்தார்.

‘‘மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்காக உள்ள 5000க்கும் மேற்பட்ட பயிற்சிகளில் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்தப் பயிற்சியை அனைத்துவிதமான மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளும் செய்வதுபோல் எளிமையான 365  செயல்முறை பயிற்சிகளை செய்வதற்கு என்ன தேவை... அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை வண்ணப் புகைப்படங்களுடன் ‘Infinity possibilities’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தை தலைநகர் தில்லியில் இருந்து பாண்டிச்சேரி வந்த டிசபிளிட்டி கமிஷனர் விகாஷ் திரிவேதி மூலம் வெளியிட்டோம்.டிஎல்எம் எனப்படும் டீச்சர் லேர்னிங் மெட்டீரியல் குறித்த ‘கற்பித்தலில் புதிய யுத்திகள்’ என்கிற முதல் தொகுதி வெளிவந்துள்ளது. இரண்டாவது தொகுதி வெளியிடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து தொகுதி 3 மற்றும் தொகுதி 4 வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறேன்.  

இந்தச் சமூகத்தில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் எந்த மாதிரியான பிரச்னைகளை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை ஆறுவிதமான கதைகளாக உருவாக்கி, ‘நட்புடன் நேசிப்போம்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்றஐஏஎஸ் அதிகாரி இறையன்பு மூலம் வெளியிட்டோம்.

எனது மகள் அனன்யா மாற்றுத்திறனாளி என்பதுடன், அவளுக்கு படங்களை வரைவதிலும், வண்ணம் தீட்டுவதிலும் ஆர்வம் இருந்தது. எனவே, அவள் வரைந்த வண்ண ஓவியங்களுக்குப் பொருத்தமான கதைகளை நானே எழுதி, ‘தூரிகை தீட்டிய வண்ணங்கள்’ என்கிற தலைப்பில், அவள் படிக்கும் சிறப்பு பள்ளியில் புத்தகமாக வெளியிட்டோம்.

அனன்யா வரைந்த ஓவியங்கள் சிலவற்றை இறையன்பு ஐஏஎஸ், புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், டிசபிளிட்டி கமிஷனர் விகாஷ் திரிவேதி போன்ற முக்கிய விஐபிகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்கியுள்ளோம்.

அனன்யா சிறந்த முறையில் வண்ணம் தீட்டுவதற்காக சாதனைக் குழந்தைகள் வரிசையில் தேர்வாகி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கரங்களால் விருது பெற்றாள்...’’ என்கிற கீதா, மகள் அனன்யா படிக்கும் சிறப்புப் பள்ளியில் மகளோடு கூடவே இருந்து அங்குள்ள சிறப்புக் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.

செய்தி: ஆர். முபாரக் ஜான்

படங்கள்: மகேஸ்வரி நாகராஜன்