பிற மொழியில் தமிழ் இயக்குநர்கள் டைரக்ட் செய்வது பலமா, பலவீனமா?



தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குநர் என்று பேர் வாங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் சமீபத்தில் சல்மான்கான் நடித்த ‘சிக்கந்தர்’ இந்திப் படத்தை இயக்கினார். அந்தப் படம் பெரும் தோல்விப் படமாக அமைந்தது. 
அதுகுறித்து படக்குழுவினரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இந்த நிலையில் ‘மொழி தெரியாத நிலையில் வேறு மொழியில் படம் பண்ணுவது மாற்றுத்திறனாளிக்கு சமம்’ என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அவருடைய இந்த அறிக்கை சினிமா உலகில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பான் இந்தியா படங்கள் என்று சொல்லித் தீவிரமான அலை அடிக்கும் இந்தச் சூழ்நிலையில் ‘அது ரொம்ப தப்பானது, ஒரு கலைப் படைப்புக்கு ஆபத்தானது  அல்லது பலவீனமானது’ என்பதை சுட்டிக்காட்டுவதாகவே முருகதாஸ் அறிக்கை உள்ளதாக சிலர் முணுமுணுக்கிறார்கள்.
ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியே பண்பாடு, கலாசாரம், நாகரீகம் இருக்கின்றன. அதைக் கலந்து செய்யும்போது எந்த மொழிக்கான படமாகவும் இல்லாமல் போய்விடுகிறது என்று அவருடைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழில் படம் பண்ணும்போது அந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் ஏதேனும் சாதனை செய்திருப்பார்கள். அதைப் படப்பிடிப்பு நடக்கும்போதே காட்சியாகவோ அல்லது வசனமாகவோ சேர்த்துவிடுவார்கள். அதை ரசிகர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு நெருக்கமாகத் தோன்றும்.தெலுங்கில் படமாக்கும்போது அங்கு நடக்கும் விஷயங்களைச் சேர்க்க முடியும். தமிழ்நாட்டில் நடக்கும் விஷயத்தை தெலுங்கில் சேர்க்கும்போது அது காட்சியாக மட்டுமே இருக்குமே தவிர எந்தவிதத்திலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகாது.

சினிமா என்பது எப்போதும் நிஜத்துக்கு அருகில் இருக்கும்போதுதான் அது பெரும் வெற்றி அடையும். ஒரு படம் பார்க்கும்போது, ‘எனக்கு இந்தக் கஷ்டம் இருந்திருக்கு, நானும் அனுபவித்துள்ளேன்’ என்று ஆடியன்ஸ் ஃபீல் செய்ய வேண்டும் அல்லது கண் முன் பார்த்த விஷயம், கோபமடைந்த விஷயத்தை எதிர்த்து நாயகன் திரையில் செயல்பட வேண்டும்.

உதாரணமாக, தன் வாழ்க்கையில் ரசிகர் ஒரு போலீஸைப் பார்த்து கோபமடைந்திருப்பார். இச்சூழலில் திரையில் நாயகன் போலீஸை அடித்தால் அது ரசிகர்களுக்கு பிடிக்கும்.
இந்த மாதிரி விஷயங்கள் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்பதான் பொருத்தமாக இருக்குமே தவிர, ரொம்ப விரிவாகப் பண்ண முடியாது என்கிறார்கள் திரையுலகில் பழம் தின்று கொட்டை  போட்டவர்கள்.

யூனிக் கதையாக பண்ண சில கதைகள் இருக்கும். அதாவது உலகம் முழுவதுக்குமான கதை. அது எல்லோருக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தும் என்பதால் அந்தப் படம் எல்லா மொழியிலும் பேசப்படும்.இதுவே தொடர்பேயில்லாமல் படம் செய்யும்போது தோல்வியைத்தவிர்க்க முடியாது. 

இயக்குநர் லிங்குசாமி ‘வாரியர்’ என்ற படம் செய்தார். தமிழ், தெலுங்கு என சேர்த்து பண்ணினார். என்ன பிரச்னையென்றால் ஐதராபாத்தில் ஷூட் பண்ணிவிட்டு அதை தமிழில் மதுரை என காட்டியிருந்தார்கள். இது ரசிகர்களுக்கு ஒட்டவில்லை. எனவே தமிழில் இப்படம் தோல்வியடைந்தது.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படியான நிலையில் பிறமொழிகளில் படம் இயக்கி வெற்றி பெற்றுள்ள சில தமிழ்ப் பட இயக்குநர்களிடம் பேசினோம்.
‘‘ஒரு படைப்பாளிக்கு மொழி பிரச்னையாக இருக்க முடியாது. 

புரிதல் இருந்தால் நமக்கு வேண்டியதைப் பண்ணலாம்...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன்.‘‘என்னைப் பொறுத்தவரை கன்னடத்தில் சிவராஜ்குமார் சார் படத்தையும் சேர்த்து 3 படங்கள் பண்ணியிருக்கிறேன். தெலுங்குப் படமும் பண்ணியிருக்கிறேன். ஆனால், எனக்கு மாற்றுத்திறனாளி போன்ற உணர்வு ஏற்படவில்லை.

வசனம் எழுதும்போது நடப்பு செய்திகள், உள்ளூர் காமெடி வழக்கு, அந்த மொழிப் படங்களில் ஹிட்டான விஷயத்தை சுட்டிக்காட்டி சொல்வது மாதிரி சில விஷயங்கள் பயன் தரும். அதைத் தவிர ஸ்கிரிப்ட், டயலாக்கில் தப்பு பண்ண வாய்ப்பில்லை.எனக்கு தெலுங்கு, கன்னடம் சுத்தமாகத் தெரியாது. 

ஆனால், நான் தமிழில் எழுதிக்கொடுத்த டயலாக்கை அவர்கள் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்து பேசும்போது கேமராவில் பார்க்கும்போதே ‘இந்த இடத்துல தப்பா இருக்கு, நாம எழுதிக்கொடுத்த வார்த்தையோட அர்த்தம் சரியா வரல’னு தோணும்.
இதுமாதிரி நேரத்துல இரண்டு மொழியும் தெரிந்தவர்களை வெச்சு சரி செய்வேன். இதை ஒருவித சென்ஸ்னு சொல்லலாம்.

ஷாட்டை மானிட்டர்ல பார்க்கும்போது ‘இந்த இடத்துல அழுத்தமா பேசணும், இந்த இடத்துல மெதுவா பேசணும்’னு தானாகவே தெரியும். எப்படி என்ற விளக்கம் என்னிடம் இல்லை. ஆனால், மொழியை ஒரு குறையாக எங்கேயும் ஃபீல் பண்ணவில்லை.மொழி தெரியாமல் படம் செய்வது பலமா, பலவீனமா என்று கேட்டால் கண்டிப்பாக பலவீனம்தான். 

ஒரு கிரிக்கெட் வீரன் சொந்த மைதானத்தில் விளையாடுவதற்கும், இன்னொரு மைதானத்தில் விளையாடுவதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் சொந்த மைதானத்தில் உள்ளூர் ஆதரவு, எமோஷனல் சப்போர்ட் இருக்கும். வேறு மைதானத்தில் விளையாடும்போது அது இருக்காது, அந்நியமாகத்தான் தோணும், அந்நியமாக உணர்வோம்.

பலமா, பலவீனமா என்று கேட்டால் பலவீனம். ஆனால், பண்ணுவீங்களா, பண்ணமாட்டீங்களா என்று கேட்டால் ஒரு வித்தியாசமும் கிடையாது. எப்படி தமிழ்ப் படம் வந்தால் சந்தோஷமாக பண்ணுவோமோ அதுமாதிரிதான் பிற மொழி படமும். ஏனெனில் சினிமா என்பதே ஒரு மொழிதான். அதன்பிறகுதான் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பார்க்கத்தோணும்...’’ என்கிறார் விஜய் மில்டன்.

இவருடைய கருத்துக்கு சற்று முரணாக பதில் தருகிறார் இயக்குநர் விஷ்ணுவர்த்தன். ‘‘இயக்குநர்களுக்கு எந்தவொரு படமும் சவால்தான். ஓர் இயக்குநர் நினைச்ச மாதிரி படம் பண்ணுவது தாய்மொழியாக இருந்தாலும் சவால்தான். 

ஏனெனில், அதற்கு ஆர்ட்டிஸ்ட், லொகேஷன், பட்ஜெட் என பல சவால்கள் இருக்கும்.எப்போதும் இயக்குநர் நெனைச்ச மாதிரி படம் பண்ணுவது சுலபம் கிடையாது. ஆனால், நினைச்ச மாதிரி எமோஷனலை கொண்டு வந்துவிடலாம். வேறு மொழியில் பண்ணும்போது கலாசரம் உள்ளிட்டவை குறுக்கிடும்.

தமிழ் மொழிக்கு என்று பாரம்பரியம், கலாசாரம், வளர்ந்த விதம் தனித்துவமாக இருக்கும். இது எல்லாமே பிற மொழியில் வேற மாதிரி இருக்கும். எனக்கு இந்தி மொழி தெரியும் என்பதால் கஷ்டம் இல்லை. 

ஆனால், மொழி தெரிந்தாலும் அந்த கலாசாரத்தைப் புரிந்து பண்ணினால்தான் ரசிகர்களை கனெக்ட் பண்ணமுடியும். ‘ஷேர்ஷா’ இந்திப் படம் பண்ணும்போது ப்ரீ புரொடக்‌ஷன் வேலைக்கு எட்டு மாதங்களாச்சு.பஞ்சாப்ல தங்கி அவர்கள் எப்படி யோசிக்கிறாங்க, கலாசாரம் எப்படி என கவனிச்சேன். அப்படி அங்கு வாழ்ந்தாலும் முழுசா புரிஞ்சுக்க முடியவில்லை. என்றாலும் ஒரு ஃப்ளேவர் கொண்டுவர முடிந்தது.

மொழி தெரியாதவர்கள் ஃபோக்கஸில் கவனமாக இருக்கணும். அதற்கு ஆர்ட்டிஸ்ட் சப்போர்ட் தேவைப்படும். டயலாக்கைப் பொறுத்தவரை தமிழில் முன்னாடி வர்ற வார்த்தை இந்தியில் பின்னாடி வரும்.எமோஷனை பிடிச்சுட்டுப்போனால் பிரச்னையில்லை. இந்தி ரைட்டர் இருந்தால்தான் நம்பகத்தன்மையுடன் இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை மொழி மாற்றம் செய்தால் அது நல்லா இருக்காது. 

இரண்டு மூன்று வரிகளில் சொல்வது அங்கு ஒரு வரியில் முடிந்துவிடும். நமக்கு எமோஷன் குறையுதே என்று தோணும். இப்படி நிறைய சிக்கல் இருக்கு.
என்னைப் பொறுத்தவரை நான் ஒரு படம் பண்றேன். எமோஷன் கொண்டு வரணும். எனக்கு மொழி தெரிந்ததால் சமாளிக்க முடிந்தது. என்னுடைய இந்திப் படம் பார்க்கும்போது தமிழ் டைரக்டர் பண்ணின மாதிரி இருக்காது.

ஏனெனில், நான் மும்பையில் சில வருஷம் வேலை பார்த்திருக்கிறேன். அதனால் ஈசியா இருந்தது. என்னோட விஷன், என்னோட எமோஷன் இதை நோக்கி எல்லோரும் வரணும். அவர்களை நோக்கி நான் போனால் என்னுடைய பிராசஸ் சிதறிடும். அது சிதறாமல் இருக்க அவர்களை நம்முடைய விஷனுக்கு கொண்டு வந்து, வேலை செய்யணும்.

அடுத்து ஒரு காட்சியை தமிழில் அப்ரோச் பண்ற மாதிரி இந்தியில் பன்ணமுடியாது. அங்கு கலாசாரம், பார்வை எல்லாம் வேறு. அர்பன் கதை என்றால் தில்லி, மும்பை, கொல்கத்தா என்று எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ரூரல் என்று வரும்போது முழுசா மாறிடும்.

அந்த வகையில் மொழி தெரியவில்லை என்றால் மாற்றுத்திறனாளியாக உணர்வதை தவிர்க்க முடியாது. தாய்மொழியில் படம் செய்வது எப்போதும் பலம்.

நல்ல விஷயம் என்றால், இப்போது வட இந்திய சினிமா, தென் இந்திய சினிமா என்றில்லாமல் இந்திய சினிமாவாக வருது. சொல்ல வேண்டிய விஷயத்தை ஸ்ட்ராங்காக சொன்னால் போதும்...’’ என்கிறார் விஷ்ணுவர்த்தன்.

எஸ்.ராஜா