ராஷ்மிகா எனக்கு கிடைச்ச மிகப்பெரிய ஆசிர்வாதம்!



விஜய் தேவரகொண்டா Open Talk

‘‘நான் நடிச்ச ‘குஷி’ படத்துக்கு தமிழ் நாட்டில் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நிஜமாகவே ரொம்ப நன்றி. ஆந்திராவில் கிடைச்ச ஆதரவைவிட அந்தப்படம் தமிழ் நாட்டில் இன்னும் நல்ல பெயர்

வாங்குச்சு. அடுத்து ‘த ஃபேமிலி ஸ்டார்’ படத்துக்கும் நல்ல விமர்சனம் கொடுத்திருந்தீங்க. 
தேங்க்ஸ் எ லாட்... அப்புறம் எப்படி இருக்கீங்க?’’ முகம் மலர நலம் விசாரிக்கிறார் விஜய் தேவரகொண்டா.கௌதம் தின்னனுரி இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக ‘கிங்டம் பாகம் 1’ திரையரங்கங்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார் விஜய் தேவரகொண்டா.

‘கிங்டம் பாகம் 2’வுக்கு ஒரு Exclusive..?

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னுடைய கேரக்டர் முதல் பாகத்தில் கொஞ்சம் அழுத்தம் இல்லாமதான் இருக்கும். இந்த பாகத்தில் என்னுடைய அண்ணனாக நடிச்ச சத்யதேவ் மற்றும் மலையாள நடிகர் வெங்கடேஷ் ரெண்டு பேருக்கும்தான் ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம் கௌதம் கொடுத்திருப்பார். இதே மாதிரி ஒரு சர்ப்ரைஸ் அடுத்த பாகத்திலும் இருக்கு. அதிலும் இந்த பாகத்தில் நடிச்ச வெங்கடேஷுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, அவருக்கு நடிப்பு அசால்ட்டா வருது.

லவ்வர் பாய் டூ ரக்கெட் பாய்..?

நான் லவ்வர் பாயாக பயணத்தை ஆரம்பிச்சாலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த ‘அர்ஜுன் ரெட்டி’ ஒரு கரடு முரடான ரக்கெட் பாய்தான். அறிமுகமான காலத்துல லவ்வர் பாய், அமைதியான பையன் இப்படி எல்லாம் நடிக்கிறது ஓகே.ஆனால், வயதாக ஆக நமக்கான முதிர்ச்சி அதிகமாகும். அதற்கேற்ற மாதிரி கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கணும். என்னுடைய கதைத் தேர்வுதான் என்னுடைய கேரக்டர்களை முடிவு செய்யுது.

இன்னமும் மரத்தைச் சுற்றி டூயட் பாட முடியாது இல்லையா?! இனி கதைக்கும் அதில் கொஞ்சமாவது சமூகப் பொறுப்பும் பார்த்துதான் தேர்வு செய்யணும். அப்படிதான் செய்யறேன்.
அதற்கிடையிலே ‘குஷி’, ‘த ஃபேமிலி ஸ்டார்’ மாதிரியான படங்கள் செய்தாலும் இளைஞர்கள் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியிலும் ஏதாவது ஒரு நல்ல கருத்தை கடத்தணும். இதையும் அடிப்படையாகக் கொண்டுதான் கதைகள் தேர்வு செய்யறேன்.

உங்களுக்கு எந்த இயக்குநருடன் இணைந்து நடிக்க ஆசை?

வெற்றிமாறன் சாருக்கு நான் மிகப்பெரிய ஃபேன். அவருடைய ஒரு படத்திலாவது நடிக்கணும் என்கிற ஆசை இருக்கு. அடுத்து கெளதம் மேனன் சார். நிச்சயமாக மணிரத்னம் சார். இப்படி லிஸ்ட் நீளம்.ஒவ்வொரு முறை உங்கள் படம் வரும்போதும் துல்கர் சல்மான் படம் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் அவருடைய டீசராவது வெளியாகிறதே?

இன்டர்நெட்டிலும் அடிக்கடி எங்களைப் போட்டியாளர்களா சித்தரிக்கிறாங்க. எங்களுக்குள்ள அப்படி எந்தப் போட்டியும் இல்லை. அவர் அவருடைய வழியில் தனித்துவமாக கதைகள் தேர்வு செய்து நடிக்கிறார். நான் என் வழியில் படங்கள் செய்கிறேன். எங்களுக்குள் அப்படி எந்தப் போட்டியும் இல்லை.

நீங்க பெண்ணியவாதியா அல்லது அர்ஜுன் ரெட்டியா?

அந்தப் படம் நடிக்கும்போது கூட இவ்வளவு ஆணாதிக்க பார்வையில் அந்த படம் பார்க்கப்படும்னு நான் யோசிக்கவே இல்ல. உண்மையாகவே நல்ல கேள்வி!
ஆணோ, பெண்ணோ மனசுதான் முக்கியம், மனிதம்தான் முக்கியம். இந்த உலகம் எல்லாருக்கும் பொதுதான். இதைச் சொன்னால் நான் பெண்ணியவாதின்னா... சரி நான் பெண்ணியவாதிதான்.

15 வருட சினிமா பயணம்... எப்படி இருக்கு?

ஆசீர்வாதம் கிடைச்ச மாதிரி இருக்கு. நடிக்க வந்த காலத்தில் கேரவன் கூட கிடையாது. இன்னைக்கு தனியா ஒரு கேரவன் கிடைத்து நமக்குன்னு அதிலே தனியாக பாத்ரூம் உட்பட இருக்கறது மிகப்பெரிய ஆசீர்வாதம். சொன்னால் நம்ப மாட்டீங்க... இன்னொருத்தர் கூட ஷேர் செய்துக்கற மாதிரி கேரவன் கொடுத்தபோதே அதை ஆச்சர்யமா வீடியோ எல்லாம் எடுத்தேன். இப்போ பான் இந்தியா படங்கள், மாநிலம் தாண்டி ப்ரமோஷன்... இது ஆசீர்வாதம்தானே!

உங்களுடைய ஒவ்வொரு படம் வெளியாகும்பொழுதும் ‘Can’t Wait’ என ராஷ்மிகா பதிவு செய்கிறாரே?

எனக்குக் கிடைத்த இன்னொரு ஆசீர்வாதம். முழுமையான ஆசீர்வாதம். என்மேல அவ்வளவு அக்கறையும், அன்பும் கொண்ட பொண்ணு. கதை, என்னுடைய கேரக்டர் இப்படி எல்லாமே கேட்டு தெரிஞ்சுப்பாங்க. அவங்க படங்கள் பற்றியும் நிறைய பேசுவோம். எங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து இரு படங்கள் வழியா மிகப்பெரிய பிரேக் கிடைத்தது. அந்த எமோஷன் அப்படியே இன்னும் ஆழமான அன்பா மாறிடுச்சு.

நீங்களும் உங்கள் பட இசையமைப்பாளர் அனிருத்தும்தான் இன்னமும் பேச்சுலர் மோடிலேயே இருக்கிறீர்கள்... எப்போது திருமணம்?

அனிருத்துக்கு எப்போ கல்யாணம்னு தெரியலை. ஆனால், நீங்க கேட்டதாக அவரிடம் கேட்கிறேன். நிச்சயமா அடுத்த ‘கிங்டம் பாகம் 2’ படத்துக்காக மீட் பண்ணும்போது சொல்றேன்.
எனக்கு அதிகபட்சமா ரெண்டு வருஷம். அதற்குள் திருமண அறிவிப்பு வந்திடும். ரொம்ப சந்தோஷமா, மகிழ்ச்சியா உங்ககிட்ட சொல்லிட்டுதான் கல்யாணம் பண்ணிப்பேன்!

ஷாலினி நியூட்டன்