சிறுகதை-அந்தகாரம்



கற்பகம்மாள் அவசர அவசரமாகக் கோயிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தாள். கோயில் மணியோசை கேட்கும் தூரத்தில் இருந்த வீட்டின் தொலைவு இன்று கைக்கு எட்டாமல் நீண்டு கொண்டே போனது. 
அடி வயிற்றில் வலி வெட்டித் தெறித்தது. கால்களுக்கு இடையில் உள்ள தசைகளை இறுக்கிப் பிடிக்க முயன்றபடியே அவளது நடை ஓட்டமாக மாறி இருந்தது. மூளையின் கட்டளைக்கு செவி சாய்க்காத காலிடுக்கு தசைகள் செயலற்று தளர்ந்திருந்தன.

மின்சாரமின்றி கண் மூடிக் கிடந்த தெருவோர மின் விளக்குகள் இருளைப் பரப்பி அவளை இந்த உலகின் கண்களில் இருந்து கொஞ்சம் காத்து நின்றன. சீலைக் கொசுவத்தோடு உள்பாவாடையையும் சேர்த்து அழுத்திப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்த அவளது கால்களில் தொடங்கிய நடுக்கம் சிலிர்த்து ஓடி கன்னங்களை முட்டியது.  

வீட்டிற்குள் நுழைந்து கழிவறை வாசலை நெருங்குகையில் சிறு மழை ஒன்று சடசடவென்று அவள் கால்களுக்கிடையில் பொழிந்து முடிந்தது. இந்த மாதத்திலேயே இது இரண்டாவது முறை.

அறுபத்தி நான்கு வயதைக் கடந்துவிட்டபின்பும் கற்பகத்திற்கு தனது பதினெட்டாவது வயதில் முதல் குழந்தையை பிரசவித்த நாளின் கவிச்சி வாடை இன்றும் நாசியில் இருக்கிறது.
ஐப்பசி மாதத்தில் பிரசவ தேதி என்றானபோதே தலைப் பிரசவம் அம்மா வீட்டில் நடக்காது என்று முடிவானது.

கற்பகத்தின் பால்ய காலத்தில் பிள்ளைகள் அனைவரும் தினந்தோறும் காலையில் ஒரு தோளில் சிலேட்டு புத்தகம் அடங்கிய பையும் மறுகையில் தூக்கு போணியில் சூடான
நெல்லஞ்சோறும் புளிச்சைக்கீரை கடைசலுமோ, கம்மஞ்சோறும் எருமைத் தயிருமோ அல்லது சில வேளைகளில் இட்லியும் தேங்காய் துவையலுமாகவோ அவரவர் தோட்டங்காட்டிலிருந்து புறப்பட்டு வந்து ஆற்றைக் கடந்து ஏறி நடந்து சென்று ஊருக்கு வாசல் போல் நிற்கும் அரசு பள்ளிக்கு படிக்கப் போவது வழக்கம்.

வறண்டு கிடக்கும் ஆற்றின் மணலில் விளையாடுவதும், ஆற்றோர மர நிழலில் அமர்ந்து கொண்டு வழுவழுக்கும் கூழாங்கற்களில் அஞ்சாங்கல் ஆடுவதும் அவர்கள் அந்தியின் மாறாத காட்சிகள். அந்த ஆறு அவர்களுக்கு மற்றுமொரு தாய் மடி. ஐப்பசி மாதங்களில் அடை மழை நாட்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 

வெள்ளத்தைக் கரையோரம் நின்றுகொண்டு நாளெல்லாம் வேடிக்கை பார்ப்பதும் தென்னை மட்டைகளையும் பனையோலைகளையும் இழுத்து வந்து ஆற்றில் வீசி அது வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகையில் கூடவே பார்த்தபடி கரையில் ஓடுவதுமாக அந்த மழை நாட்கள் அவர்களுக்கு அத்தனை களிப்பூட்டுவதாக  இருந்தன.

இன்று இடுப்பு வலி கண்டபின் அவசரத்திற்கு ஆற்று வெள்ளத்தைக் கடந்து ஊருக்குள் ஆஸ்பத்திரிக்கு போக முடியாது என்ற காரணத்தால் புருசன் வீட்டிலேயே பிரசவம் என்று முடிவானபோதுதான் முதல் முறையாக அந்த ஆறு அவளைக் கைவிட்டது.

‘‘நீ ஏன்டா மாரப்பா கவலப் படுற... இந்த பொட்டச்சிங்களுக்கு வேற வேல என்னா..? காச கொண்டு போய் ஆஸ்பத்திரில கொட்டுனாதான் பிள்ள பொறக்குமா?! எம்பொண்டாட்டி நாலு பிள்ள பெத்தவ... அவ வந்து பிரசவம் பாப்பாடா உம்பொண்டாட்டிக்கு... நீ பேசாம இரு...’’
நொச்சுப்பட்டியார் சொன்ன நாளிலேயே மனதிற்குள் தீர்மானம் செய்துகொண்டான் கற்பகத்தின் புருசன் மாரப்பன். இடுப்பு வலி கண்டு தவியாய் தவித்தவளை பஸ்ஸுக்கு காத்திருக்கச் சொல்லி திண்ணையில் உட்கார வைத்தான்.

‘‘ஏண்டா... வண்டிக்கு சொல்லியுடுடா... ஆஸ்பத்திரிக்கு போய்டலாம். பாவம் அவ வலியில பறவா பறக்குறாடா...’’ என்று மாமியார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இந்தா அந்தா என்று போக்குக் காட்டினான். கடைசியில் அவன் எண்ணப்படியே வீட்டிலேயே பிள்ளையின் தலை திரும்பத் தொடங்கியது. நொச்சுப்பட்டியார் பொண்டாட்டி தலைமையில் மூத்த பெண்கள் சூழ பிரசவம் நடந்தது. 

பிரசவம் பார்த்தவள் தன் கையை செலுத்தி வலதும் இடதுமாக சுழற்றினாள். உயிர் போகும் வலியில் கற்பகம் கதறிய கதறல் சுவரெங்கும் பட்டுத் தெறித்தது.

மென்மையான அந்த வழித்தடம் முரட்டுக் கைகளில் சிக்கி சிதைந்து கொண்டு இருந்தது. அரிவாளின் கூரிய நுனி கொண்டு கீழ் முனையை அவள் கிழித்து விட்டபோது கற்பகத்தின் உயிர் ஒருமுறை அறுபட்டு வெளியேறி மீண்டது. அவள் உயிர் பிழைத்து வந்ததே பெரும்பாடாகிப் போனது.

பிள்ளை பெற்று, காயம் ஆறி வலி குறைந்து போன பின்பு ஏற்படத்  தொடங்கிவிட்ட மாற்றங்களை அவள் கண்டு உணர நேரம் அற்று வாழ்வு அவளை விரட்டிக் கொண்டு போனது.
வருடங்கள் ஓடியது. சுதாரிப்பாக இரண்டாவது பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குப் போய் விட்ட கற்பகத்திற்கு பிரசவம் ஆஸ்பத்திரியில் நடந்தது. 

பிரசவத்தன்று தாமரை மலர்வது போல அத்தனை உட்தசைகளும் மலர்ந்து கொண்டு வெளியே வர குழந்தை வெளியேற வழியின்றி முட்டி நிற்க வலி தாங்காமல் கற்பகம் பற்கடித்து கண்ணீர் வடித்தபடி மூச்சுத் திணறினாள். நர்சுகள் இருவரும் தாமரை இதழ்களைக் கை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்ட பின்னரே பலம் கொண்டு முக்கி பிள்ளையை அவள் பெற்றெடுத்தாள்.

அன்றிலிருந்து யாரும் அறியாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தை அவள் தினம் கவனித்தாள். கர்ப்பப்பை தளர்ந்து இறங்கத் தொடங்கியிருந்தது. அதிகாலை மலை விளிம்பில் ஏறி வரும் அரைவட்ட சூரியனாக சிவந்து பழுத்த தசை உருண்டை அவள் தொடையிடுக்கில் இருந்து வெளியே மெல்ல உதயமாகியிருந்தது. 

அவள் அன்றாடங்களை தொந்தரவு செய்யாத அந்த சூரியனின் வரவை அவள் பொருட்படுத்தத் தவறியிருந்தாள். கலவி இன்பத்திற்கு பங்கம் வராத வரையில் பெண் உடலின் பிரச்னைகள் ஆணின் கவனத்திற்கு வருவதே இல்லை. ஆகவே தினம் விழுந்து எழுந்த கற்பகத்தின் கணவன் அவளின் சூரிய உதயத்தை கண்ணுற்றதே இல்லை என்பதில் ஆச்சரியம் கொள்ள ஏதும் இல்லை.

அக்கம்பக்கத்து பெண்களோடு காலைக் கடனைக் கழிக்க ஓடைக்குச் செல்லும்போதும் புடவையை பாதம் வரை இழுத்து மறைத்து அமர்வதில் கற்பகம் பேர் பெற்றவளானாள்.
‘‘அப்படி எங்ககிட்ட இல்லாத அதிசயம் என்ன அங்க இருக்குன்னு சீலைல அந்த மறப்பு கட்ற?!!’’ என்று கிண்டல் பண்ணும் விசாலத்தோடு எல்லோரும் சேர்ந்து சிரிக்கையில் சிறு கல்லெடுத்து அவள் பக்கம் வீசி விட்டு ‘‘அதுக்குன்னு தொறந்து காட்டுவாங்களாக்கும்!’’ என்று சொல்லிச் சிரித்து விட்டு எழுந்து தள்ளிப் போய் அமர்ந்து கொள்வாள்.

ஆரம்பத்தில் ஒரு ரகசியம் போல் அதை மறைத்து வைத்தவள் பின்னாளில் அதை மறந்தே போனாள். காலச் சக்கரத்தின் ஓட்டத்தில் சூரியனின் பாரத்தை சுமந்து சுமந்து கால்களுக்கு இடையே தசைகள் தளர்ந்து செயலிழந்து போயின. 

கற்பகம்மாள் கழிவறை வாசலில் சிந்திக் கிடந்த சிறுநீரை ஈரத் துணியால் துடைத்து எடுத்து விட்டு ஃபினாயிலில் ஒரு முறை நனைத்து துடைத்து முடித்து அவசரமாகக் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து வரவேற்பறையில் அமர்ந்து கொண்டாள்.

நல்ல வேளையாக வேலைக்குப் போன மகனும் மருமகளும் இன்னும் வீடு திரும்பவில்லை. பேரனைக் கொண்டுபோய் டியூசனில் விட்டுவிட்டுதான் கோயிலுக்குப் போயிருந்தாள் கற்பகம்மாள்.

யாரும் இல்லாத வீடு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சிறுநீர் வாடை அடிக்கிறதா என்று மூச்சை இழுத்துப் பார்த்துக் கொண்டாள். ஃபினாயில் வாடைதான் வீசியது. அவர்கள் வருவதற்குள் வாசம் போய்விடும்.

கலர் புடவையாக இருந்தால் ‘காலைலதானே குளிச்சீங்க... இப்ப வேற புடவை கட்டியிருக்கீங்க’ என மருமகள் கண்டுபிடித்து கேட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. நல்ல வேளையாக வெள்ளைப் புடவைதான். மனசு கொஞ்சம் சமாதானமானது. தற்காலிகமாக பிரச்னையில் இருந்து தப்பித்தாலும் தன் நிலையை எண்ணி பெரும் கவலை அழுத்தியது. 

கவனிக்கவே மறந்துபோன தனது உடலைக் கற்பகம்மாள் முதன்முறையாக பதற்றத்துடன் கவனித்தாள். லேசான தயக்கத்துடன் கால்களுக்கு இடையில் உள்ள தசைகளைச் சுருக்க முயன்றாள். அது அவள் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறைத்தது.

‘கடவுளே காலம் போன கடசில என்ன ஆஸ்பத்திரில போய் இதெல்லாம் தொறந்து காட்ட வச்சுடாதப்பா... பேரன், பேத்தி எடுத்த வயசுல எனக்கு ஏன் இந்த அவமானமெல்லாம்? புருசனுக்கு கூட சொல்லாம மறச்சு வச்சே காலத்த ஓட்டிட்டேன். இருக்கற கொற காலத்தையும் நான் இப்படியே ஓட்டிடறேன். 

கொஞ்சம் கருண காட்டு சாமி...’அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. எழுந்து போய் சாமி படத்துக்கு முன் நின்று கைகூப்பி வேண்டிக் கொண்டாள். மாமனார், மாமியார் போட்டோ சுவரில் மாட்டப்பட்டு பூ சொருகப் பட்டிருந்தது. கணவன் புகைப்படமும் அருகிலேயே இருந்தது.

பேரனுக்கு என்னவோ அவ்வளவு ஆசை. ‘இது எங்க தாத்தா, இது எங்க அப்பாவோட ஆயா, தாத்தா’ என்று ஆசையாக தினம் தவறாமல் பூ வைக்கிறான். மாமியாரின் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

‘டேய்... ஆஸ்பத்திரிக்கு போய்டலாம்... வண்டிக்கு சொல்லியுடுடா, பாவம் அவ வலியில பறவா பறக்குறா...’ என்று தன் முதல் பிரசவ நாளன்று அவர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தது. அன்று மட்டும் ஆஸ்பத்திரிக்கு கணவன் தன்னை அழைத்துப் போயிருந்தால் இன்று இப்படி காலோடு சிறுநீர் போகும் நிலை ஏற்பட்டிருக்காது.

கழிவிரக்கத்தில் கண்களில் நீர் நிறைந்து வழிந்தது. கணவன் முகத்தை  ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்து இரவு உணவுக்கு ஆயத்தங்களை தொடங்கினாள்.அன்று ஞாயிற்றுக்கிழமை. 

காலை உணவை முடித்துக் கொண்டு அனைவரும் டிவி முன்பு அமர்ந்துவிட கற்பகம்மாள் வாசலில் இருக்கும் செடிகளுக்கு நீர் ஊற்ற வந்தாள். கணவன் இறந்தபின்பு கிராமத்தை விட்டு மகனோடு அவன் வேலை பார்க்கும் நகரத்திற்கு வந்து நான்கு வருடங்களாகின்றன. ஆனாலும் இந்த ஊரோடு ஒட்டமுடியாமல் தவிக்கும் அவளுக்கு வாசல் அடைத்து வளர்ந்திருக்கும் இந்த பூச்செடிகள்தான் ஒரே ஆறுதல்.

கிராமத்தில் காலை வேளைகளில் இப்படி ஒரு நாளும் டிவி முன்பு யாரும் அமர்ந்ததே இல்லை. இந்த நேரத்தில் முதலில் வீட்டில் என்ன வேலை?! ‘இப்படி ஊட்ட சுத்திக்கிட்டு இருந்தா வெள்ளாம தானா ஊடு வந்து சேருமா’ என்பார் மாமனார். இந்நேரத்துக்கெல்லாம் கற்பகம்மாள் ஆட்களோடு சேர்ந்து வயலில் நாற்று நட்டுக்கொண்டிருப்பாள் அல்லது களை பறித்துக் கொண்டிருப்பாள் அல்லது கடலை விதைத்துக் கொண்டிருப்பாள் அல்லது வெங்காயம் ஆய்ந்து கொண்டிருப்பாள்.

எந்த வேலையும் இல்லாத நாட்களில் வரப்பில் புல் அறுத்துக் கொண்டிருப்பாள். பழைய நினைவுகளில் சஞ்சரித்தபடியே குந்தி அமர்ந்து பூச்செடிகள் ஊடே வளர்ந்திருந்த புற்களை கைகளால் பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தாள். வயிறு லேசாகக் கலக்கியது.

‘காலைல ஒருக்க போனேனே?! நேத்து சாப்டது ஏதும் சேரலயா!’ யோசிப்பதற்குள் வயிறு புரட்டிக்கொண்டு வந்தது. அவசரமாக எழுந்து வாசலைக் கடந்து உள்ளே வரவேற்பறை தாண்டி நடக்கையில் மகன் ‘அம்மா என்னம்மா இது ?!’ என்று குரல் கொடுத்தான். அவள் பதறிப்போய் திரும்பிப் பார்த்தாள். உச்சிப் பொழுதின் சூரியன் நிறத்தில் சொட்டுச் சொட்டாக தரையெங்கும் அவள் எதிர்பாராத, ஆனால், பயந்தபடி எதிர்பார்த்தது சிந்திக் கிடந்தது.

சுஜாதா செல்வராஜ்