அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை!
ஷாக் ரிப்போர்ட்
ஒரு தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லை என்றால் உலகம் அந்த மனைவிக்குதான் ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்கும்; மன அழுத்தத்துக்கு ஆளாக்கும்.ஆனால், தரவுகள் இதற்கு நேர்மாறாக இருக்கின்றன.ஆம்.  இந்தியாவில் அண்மையில் மருத்துவர்களால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் பெண்களுக்கு சரிசமமாக ஆண்களும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இது மருத்துவ உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் ஆண்களின் ஈகோவையும் நொறுக்கியுள்ளது. 
பொதுவாக குழந்தைப் பேறு இல்லாமை என்றாலே பெண்களை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவது, செயற்கை கருத்தரிப்புக்கு தயார்படுத்தி அதற்காக லட்சக்கணக்கில் செலவிடுவது என்று பெண்களை மையமாக வைத்துத்தான் உலகம் சுழலும்.
உதாரணமாக செயற்கை கருத்தரிப்புக்கான சந்தை இன்று இந்தியாவில் சுமார் 750 மில்லியன் டாலரைத் தொடுகிறது. இது இன்னும் 10 வருடத்தில் 3.7 பில்லியனாக உயரும் என கணித்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வு சொல்கிறது. இந்தியாவில் மலட்டுத்தன்மை, அதிலும் ஆண் மலட்டுத்தன்மை ஏன் இப்படி அதிகரிக்கிறது என சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் கருத்தரிப்பு மைய மருத்துவ
மனையின் சிறுநீரகவியல் மருத்துவரான நீலகண்டனிடம் கேட்டோம்.‘‘இந்தியாவில் 100 ஜோடிகளில் 30 ஜோடிகளுக்கு குழந்தைப்பேறு பிரச்னையாகவே இருக்கிறது.
இந்த 30 ஜோடிகளில் சராசரியாக 6 பெண்களும், 6 ஆண்களும், 6 இருபாலரும் மலட்டுத்தன்மையால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். மீதம் 12 பேர் என்ன மருத்துவக் காரணம் என்றே சொல்லமுடியாத நிலையில் இருப்பார்கள்.
இதைத்தான் பெண்களுக்கு சமமாக ஆண்களும் மலட்டுத்தன்மையால் பீடிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது...’’ என்று சொல்லும் நீலகண்டனிடம் ஆண் மலட்டுத்தன்மை இந்தியாவில் எப்போது அதிகரித்தது எனக் கேட்டோம்.
‘‘பொதுவாக மலட்டுத்தன்மை என்றாலே அது பெண்கள்தான் என்ற மனப்போக்கு நம்மிடம் இருக்கிறது. இதைக் குறிவைத்துத்தான் மருத்துவ சோதனைகளும் பலகாலமாக நடக்கின்றன.ஆனால், 2000ம் ஆண்டுகளில் செயற்கை கருத்தரிப்பு பயன்பாட்டுக்கு வந்ததும் இந்நிலை மாறத் தொடங்கியது.
பெண்களுக்கான செயற்கை கருத்தரிப்பு முறைக்கு ஆண்களின் விந்தணுக்களில் சில இருந்தாலே போதுமானது. இந்த சிகிச்சையின்போது ஆண்களின் விந்தணுக்கள் ‘செமன் அனாலிசிஸ்’ எனும் விந்தணு சோதனைக்கு உட்படுத்தப்படும்.
இந்தச் சோதனையின்போது பல ஆண்களுக்கு போதுமான அளவில் விந்தணுக்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதுதான் ஆண்களின் மலட்டுத்தன்மையைக் கண்டுபிடிக்க உதவியது’’ எனச் சொல்லும் நீலகண்டன், ஆண்களின் விந்தணுக்களின் போதாமைக்கு அல்லது மலட்டுத்தன்மைக்கான காரணங்களை விளக்கினார். ‘‘வாழ்க்கை நடைமுறைகள்தான் இதற்கான முதல் காரணம். உடற்பருமன், தீய பழக்கங்கள், போதை மருந்துகள், பக்க நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம், ஜங்க் ஃபுட்... என நீண்ட பட்டியலே உள்ளன. தூக்கமின்மையும், மன அழுத்தமும்கூட காரணங்களாக இருக்கலாம். இவை எல்லாம் சேர்ந்து ஓர் ஆணின் உடலை உஷ்ணப்படுத்துவதால் ஆரோக்கியமான விந்தணுக்கள் செயற்கையான கதிரியக்க செயற்பாட்டால் அழிக்கப்பட்டு திடகாத்திரமில்லாத அணுக்களாக மிஞ்சுகின்றன.
இதை ஓர் ஆணே மருத்துவ ஆசோசனையின் பேரிலோ அல்லது தானாக முன்வந்தோ சரிபண்ணினால் இயற்கையான முறையிலேயே குழந்தைப் பேறை அடையலாம்...’’ எனச் சொல்லும் நீலகண்டன், சில அதிசயமான வாழ்க்கை நடைமுறைகளையும் பரிந்துரைத்தார்.
‘‘டைட்டான உடைகளை அணிவது, புகைபிடித்தல், சத்தில்லாத உணவுகளை உண்பது, உடற்பயிற்சி இல்லாமை எல்லாமே திடமில்லாத விந்தணுக்களுக்குக் காரணமாகலாம். ஓர் ஆண் தனது விந்தணுக்களில் போதிய பலமில்லை என உணர்ந்துகொண்டாலே செயற்கை கருத்தரிப்புக்கு அவசியம் ஏற்படாது...’’ என்கிறார் டாக்டர் நீலகண்டன்.
டி.ரஞ்சித்
|