War & Dark Tourism!
சுற்றுலா என்பதே கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பதற்காகச் செல்வதுதான். இதில் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக இருப்பார்கள். சிலர் ஆன்மீகச் சுற்றுலா எனக் கோயில்களாக வலம் வருவார்கள். சிலரோ வரலாற்று இடங்களைச் சுற்றிப் பார்ப்பார்கள்.  இன்னும் சிலர் மலைப் பிரதேசங்கள், கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களுக்குப் போய் வருவார்கள்.ஆனால், போரில் பாதித்தபகுதிகளைச் சுற்றிப் பார்ப்பது, ஒருகாலத்தில் ராணுவ படுகொலைகள் நடந்த இடங்களுக்குச் சென்று ரசிப்பது, பேரழிவுகள் நிகழ்ந்த இடங்களுக்குச் செல்வது எல்லாம் செய்வோமா என்ன?  சமீபமாக உலக அளவில் இது டிரெண்டாகி இருப்பதாகச் சொல்கின்றன தகவல்கள். இதனையே வார் டூரிசம் அதாவது போர் சுற்றுலா என்றும், டார்க் டூரிசம் அதாவது இருண்ட சுற்றுலா என்றும் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் இப்படியான இடங்களுக்குச் சென்று ரசிக்கும் மனநிலையும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
 டார்க் டூரிசம்
டார்க் டூரிசம் என்பது மரணம், சோகம் அல்லது கொடூரமான நிகழ்வுகளுடன் தொடர்புடைய இடங்களைப் பார்வையிடுவது என்கின்றனர் நிபுணர்கள். இதில் வார் டூரிசம் என்பது போரின் எச்சங்களையும், வடுக்களையும் பார்வையிடுவது. இதனால் டார்க் டூரிசமும், வார் டூரிசமும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது.வரலாறு மற்றும் மனித அனுபவங்கள் குறித்த இருண்ட பார்வையை வழங்கும் இடங்களைத் தேடும் பயணிகளால் டார்க் டூரிசம் பிரபலமடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
 இவர்கள் முன்னாள் போர்க்களங்கள் முதல் கைவிடப்பட்ட புகலிடங்கள் வரை இருண்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தாக்கத்தை அறிந்துகொள்வதற்கு இந்தச் சுற்றுலா வாய்ப்பளிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இதனால், ஆர்வமுள்ள பயணிகள் இப்படியான இடங்களைத் தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர். அதனால், இந்தச் சுற்றுலாவின் சந்தையும் உயர்ந்து வருகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, 2025ம் ஆண்டு வார் அல்லது டார்க் டூரிசத்தின் சந்தை 4,500 கோடி ரூபாய் மதிப்புடையது என்கிறது.
 அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2035ம் ஆண்டில் இது 8,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறது அந்த ஆய்வு. இந்நிலையில்தான் இந்த டார்க் டூரிசத்தின் சமீபத்திய போக்கை பலரும் பரவலாகப் பேசி வருகின்றனர்.டார்க் டூரிசம் என இணையத்தில் தட்டினாலே பல இடங்கள் கொட்டுகின்றன. அவற்றில் சில முக்கியமான இடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
 சோயுங் ஏக்
இதில் கம்போடியா தலைநகரான நாம் பென் அருகே சோயுங் ஏக்கில் உள்ள புத்த ஸ்தூபி முக்கியமானதாக இருக்கிறது. 1975 - 1979க்கு இடையில் போல் போட் என்பவரின் கெமர் ரூஜ் ஆட்சியின் போது கம்போடியாவில் இனப்படுகொலை அரங்கேறியது. இதில் சோயுங் ஏக் என்ற இந்தப் பகுதிதான் கொலைக் களமாக இருந்தது. கெமர் ரூஜ் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கிருந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கே 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்டைஓடுகள் இருக்கின்றன.
 இந்த புத்த ஸ்தூபியின் அக்ரிலிக் கண்ணாடியில் இந்த மண்டை ஓடுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பகல்பொழுதில் நேரடியாகப் பார்க்கலாம். இதனைப் பார்ப்பதற்காகவே நாளொன்றுக்கு ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்துசெல்கின்றனர்.இந்தாண்டு கம்போடியாவின் நினைவுத் தளங்களின் ஒரு பகுதியாக இந்த சோயுங் ஏக் இடத்தை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
 ஆஷ்விட்ஸ் - பிர்கெனாவ்
இது ஜெர்மன் நாஜிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்து நாட்டில் உருவாக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட வதை மற்றும் அழிப்பு முகாம்களின் வளாகங்களின் பெயர்கள். இது ஆஷ்விட்ஸ் I, ஆஷ்விட்ஸ் II-பிர்கெனாவ், ஆஷ்விட்ஸ் III-மோனோவிட்ஸ் உள்ளிட்ட முகாம்களை உள்ளடக்கியது. 1939ம் ஆண்டு ஜெர்மனி, போலந்தை ஆக்கிரமித்த பிறகு இரண்டாம் உலகப் போரைத் தொடங்கியது.
அப்போது ஆஷ்விட்ஸ் I போர்க் கைதிகளின் முகாமாக மாறியது. இதில் முதலிரண்டு ஆண்டுகள் பெரும்பாலான கைதிகள் போலந்து மக்களாக இருந்தனர்.கைதிகள் அற்பமான காரணங்களுக்காக அடித்து, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். பின்னர் அடுத்த முகாம்கள் உருவாக்கப்பட்டன.
இந்த ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் முகாமிற்கு அனுப்பப்பட்ட 1.3 மில்லியன் அதாவது 13 லட்சம் மக்களில் 11 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதில் முக்கால்வாசிப் பேர் யூதர்கள். இந்த இடம் பின்னர் அருங்காட்சியகமாகவும், நினைவுச் சின்னமாகவும் மாற்றப்பட்டது. இதனைப் பார்வையிட டூர் பேக்கேஜ்களும் இருக்கின்றன. கடந்த 2023ம் ஆண்டு மட்டும் 16 லட்சம் பேர் இந்த வதை முகாம்களைப் பார்வையிட்டுள்ளனர். இது 2022ம் ஆண்டைவிட 41 சதவீதம் அதிகம் என்கின்றன தரவுகள். தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மற்றவை...
இதேபோல் சோவியத் யூனியனில் இருந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்துநடந்த இடமும் டார்க் டூரிசத்தில் ஒன்றாக உள்ளது. தற்போது உக்ரைனில் உள்ள இந்தப் பகுதி உக்ரைன் - ரஷ்யா போர்களுக்குப் பிறகு மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமாவில் உள்ள அமைதிப் பூங்கா, ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் வந்துசெல்லும் இடமாக உள்ளது.
சமீபத்திய இஸ்ரேல் போருக்கு காசா அருகே உள்ள ரெய்ம் கிப்புட்ஸில் நடந்த இசைவிழாதான் காரணமாக இருந்தது. இந்த இசைவிழாவில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது இந்த இடம் ஒரு நினைவுச்சின்னமாகி தினமும் 7 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துசெல்லும் இடமாக உள்ளதாகச் சொல்கின்றன தகவல்கள். இறந்தவர்களின் வீடுகள், குண்டு துளைத்தகற்கள் போன்றவற்றைப் பார்க்க மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோல ஏராளமான இடங்கள் உள்ளன. உக்ரைன் போர் சுற்றுலா...
ரஷ்யா உடனான போருக்கு முன்பு உக்ரைன் நாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலர் சுற்றுலா வந்தனர். இதன்வழியாக நல்ல வருவாய் ஈட்டியது. குறிப்பாக செர்னோபில் அணுசக்தி பேரழிவைப் பார்க்கவே பலர் வந்துசென்றனர்.இந்நிலையில் போருக்குப்பின் அதன் சுற்றுலா பாதிக்கப்பட்டது. இதனால், போருக்கு நடுவே போர் அழிவையே சுற்றுலாவாக மாற்றியுள்ளது உக்ரைன்.
‘வார் டூர்ஸ் இன் உக்ரைன்’ என இணையதளங்களும் உள்ளன. இதன் முகப்பில் ‘உங்கள் கண்களால் ரஷ்ய ஆக்கிரமிப்புகளைப் பார்க்கலாம்’ என்கின்றன தகவல்கள்.இதில் சேதமடைந்த மற்றும் அழிக்கப்பட்ட வீடுகள், எதிரிகளின் ராணுவ உபகரணங்கள், தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களின் எச்சங்கள் ஆகியவற்றை பார்வையிடலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இதில் சுற்றுலாப் பயணிகள் சென்று வந்துள்ள சில தகவல்களும் உள்ளன. கடந்த ஆண்டு உக்ரைனில், ரஷ்யப் படையினரால் அழிக்கப்பட்ட இர்பின் பாலத்தை, ஸ்பானிஷ் பயணி ஆல்பர்டோ சுற்றிப் பார்த்துவிட்டு அதனை தன்னுடைய யூடியூப்பில் வெளியிட்டார்.
இது பலரை கவனிக்கச் செய்தது. சிலிர்ப்பைத் தேடும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு முக்கியமான இடம் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்படியாக இந்தப் போர் சுற்றுலாவிற்குப் பலரும் சென்று வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய துயரங்களையும், அதன் கொடூரங்களையும் புரிந்துகொள்ள விரும்புவதால் பேரழிவு மற்றும் இழப்பு ஏற்பட்ட இடங்களுக்குச் செல்ல மக்கள் விரும்புகின்றனர். சரிதான். ஆனால், இவற்றிலிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள் என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. பேர்ல் ஹார்பர் மற்றும் 9/11...
பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவில் உள்ள பேர்ல் ஹார்பர் மீது 1941ம் ஆண்டு ஜப்பான் குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் ஏராளமான வீரர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உயிரிழந்தனர்.தற்போது இந்த இடம் ஒரு நினைவுத் தளமாக செயல்படுகிறது.
ஹவாய் தீவிற்கு சுற்றுலா வருபவர்கள் பலரின் முதல் சாய்ஸில் இந்த இடம் இருக்கிறது. இதேபோல் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களான உலக வர்த்தக மைய காம்ப்ளக்ஸில் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் இந்த இடம் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது. இதனையும் பலர் பார்வையிட்டு வருகின்றனர்.
ஹரிகுகன்
|