2025 லதான் அறிமுகமானேன்... அதுக்குள்ள 3 படங்கள்!
‘‘இந்த வருஷமே சினிமாவில் அறிமுகம் கிடைச்சு, மூணு படங்கள் வெளியாகிடுச்சு. ஒருபக்கம் சந்தோஷமா இருக்கு. இன்னொரு பக்கம் கொஞ்சம் பயமாகவும் இருக்கு. இனிமே பார்த்து பொறுப்பா கதைகள் தேர்வு செய்யணும்.  நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும்...’’ தெளிவாகப் பேசுகிறார் டாக்டர் + ஆக்டரான பாடினி குமார்.சுருள் முடி, முகம் நிறைய புன்னகை, கண்களில் கனவுகள் என இதயத்தைத் திருடும் அழகி. படித்ததோ இதய அறுவை சிகிச்சை மருத்துவம். இப்போது சினிமாவில் ஹார்ட் பீட் எகிற வைக்க தயாராக இருக்கிறார்.  பாடினி குமார்..?
அப்பாவுக்கு தமிழ் ஆர்வம் அதிகம். காக்கைப் பாடினியார் புலவர் பெயரில் இருக்குமே பாடினி... அதுதான் என் பெயர். பாடல் பாடக்கூடிய திறமைசாலி, பாடி, நடனம் ஆடுறவங்கள பாடினி அப்படின்னு சங்க இலக்கியத்தில் சொல்வாங்க. நானும் அப்படியிருக்கணும்னு அப்பா ஆசைப்பட்டு இந்தப் பெயரை வைச்சார்.
 ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் சினிமாவில் நுழைந்தது எப்படி?
எம். பி.பி.எஸ் ( கார்டியா டெக்னாலஜி) முடிச்சிருக்கேன். பூர்வீகம் திருநெல்வேலி. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். அப்பா சந்தன குமார், அம்மா சரஸ்வதி. எனக்கு சினிமா மேலே சின்ன வயதில் இருந்தே ஆசை.  லாக்டவுன் நாட்களில் டிக்டாக் செய்தேன். ஆனால், அதிலே நடிக்கவே ரொம்பத் தயக்கமா இருக்கும். அதுக்காக அப்படியே விட்டுட முடியாதே! ஆசை இருக்கே!அதனால பயிற்சி எடுக்கும்விதமா டிக்டாக் செய்ய ஆரம்பிச்சேன். ஓரளவு கான்ஃபிடன்ஸ் வந்ததும் சினிமாவுக்கு போக முடிவு செய்தேன்.  ஆனா, சினிமா, நடிப்பு அப்படின்னு சொன்னதும் வீட்டிலே கிட்டத்தட்ட அடிக்காத குறை. கிளம்பி மாமா வீட்டில் போய் உட்கார்ந்துகிட்டேன். எப்படியாவது மாமா சப்போர்ட்டில் அப்பா, அம்மா கிட்ட சம்மதம் வாங்கணும் என்பதுதான் பிளான். ஒருவழியாக வீட்ல சம்மதிச்சாங்க. அதுக்குப் பிறகு வந்த வாய்ப்புதான் ‘ஹார்ட் பீட்’ சீரிஸ். என்னவோ ஒரு பந்தம் எடுத்த எடுப்பிலேயே டாக்டர் கதைக்களம். ஆடிஷனில் தேர்வாகிதான் அந்த சீரிஸ்ல நடிச்சேன்.
இதய அறுவை சிகிச்சை மருத்துவர்... அந்த அடையாளத்தை மிஸ் செய்கிறீர்களா ?
நமக்கு பிடிச்சதை செய்யும்பொழுது அதற்காக சில விஷயங்களை நாம விட்டுக்கொடுத்துதான் ஆகணும். அதிலும் மருத்துவர் தொழிலைப் பொருத்தவரை முழுமையா அதிலேயே இருக்கணும். அங்கே ஒரு கால் இங்கே ஒரு கால் என திட்டமிட்டா ரெண்டுமே சொதப்பலாகிடும். அதிலும் மருத்துவர் தொழில் உயிர் விஷயம். அதிலே விளையாட்டு கூடாது. கொஞ்சம் நாட்கள் டாக்டரா வேலையும் செய்தேன். ஆனால், சினிமாதான் அப்படின்னு முடிவாகிடுச்சு. அதனால் வேலையை விட்டுட்டேன்.
சாய் பல்லவி, லீலா... இவர்கள் வரிசையில் நீங்களும் டாக்டர் + ஆக்டரா ?
ஓ மை காட்! இந்த கேள்விக்கு நான் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்! ரொம்பப் பெரிய வார்த்தைகள். தேங்க்ஸ். ரெண்டு பேரும் இந்திய சினிமாவின் ஐகானிக் கேர்ள்ஸ். நான் அப்படியெல்லாம் யோசிக்கவே இல்லை. ஆனால், நல்ல நடிகை என்கிற பெயர் கொடுக்கும் கேரக்டர்களில் நடிக்கணும். அதுதான் என் ஆசை. இருந்தாலும் இது பெரிய காம்ப்ளிமென்ட். மறுபடியும் தேங்க்ஸ்.
ஒரே வருடத்தில் மூன்று படங்கள்... அடுத்து என்ன?
இனிமேதான் எனக்கு மிகப்பெரிய டாஸ்க் இருக்கு. ஒரே வருஷத்தில் மூணு படங்கள் நடிச்சு மூணுமே ரிலீசாகிடுச்சு. ‘சீசா’, ‘திருக்குறள்’... இதோ இப்போ ‘சரண்டர்’ திரைப்படம். ‘சரண்டர்’ படம் ரொம்ப நல்லா இருக்கும். பக்கா திரில்லர் போலீஸ் கதை. ஆரம்பத்திலிருந்து முடியற வரைக்கும் பரபரப்பா போகும். பட டீம் கூட ஃபிரண்ட்லி. இயக்குநர் அறிவழகன் சாருடைய அசிஸ்டென்ட் கௌதமன் கணபதி சார்தான் இயக்கம். பார்த்திட்டு சொல்லுங்க.
அப்புறம் ‘ஹார்ட் பிட்’ சீசன் 2 முடிஞ்சு தயாராக இருக்கு. தொடர்ந்து இன்னொரு வெப் சீரிஸ்... ‘ஹார்ட் பீட்’ டீம் கூடவே செய்து அதுவும் முடிச்சிட்டேன்.
சினிமா கதைகள் கேட்டுக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு படம் நடிச்சு ரிலீஸ் ஆகறதே பெரிய கனவுதான். நான் நடிச்சது நாலு ப்ராஜெக்ட்கள். நாலுமே ரிலீஸ் ஆகிடுச்சு. இப்போ வீட்டிலும் ஹேப்பி. நடிக்க வாய்ப்பு நிறைய இருக்கும் கேரக்டர்னா உடனே ஓகே சொல்லிடுவேன்.
ஷாலினி நியூட்டன்
|