தன் குழுவினருடன் 1300... இந்தி நடிகை ஹேமமாலினியுடன் 850
‘மாயா பஜார்’படத்தில் வரும் ‘கல்யாண சமையல் சாதம்...’ பாடலை தெலுங்கில் எஸ்.வி.ரங்காராவ் சாருக்குப் பாடியவர் என் அப்பாதான்...
 இந்தியாவின் பாரம்பரியமான நடன வடிவங்களில் ஒன்று குச்சிப்புடி. எப்படி தமிழ்நாட்டின் நடனமாக பரதநாட்டியம் திகழ்கிறதோ அதேபோல் ஆந்திராவின் பாரம்பரிய நடனம் இது. இதில் ஆண் நடனக் கலைஞர்களில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் அறியப்பட்ட ஒரு முகம் சென்னையைச் சேர்ந்த எம்.வி.என்.மூர்த்தி.
 சுமார் 45 ஆண்டுகளாக குச்சிப்புடியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஓர் அபூர்வ கலைஞர் இவர். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றவர். இந்தி நடிகை ஹேமமாலினியுடன் 850க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் இணைந்து ஆடிப் பாராட்டுகளைக் குவித்தவர். இதுதவிர, தன் குழுவினருடன் இணைந்து 1300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல, இவர் குச்சிப்புடி நடன வடிவத்தின் பிதாமகரான பத்மபூஷண் வேம்பட்டி சின்ன சத்யத்தின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘‘ஒன்பது வயதில் குச்சிப்புடியைக் கற்க ஆரம்பித்தேன். இப்ப 62 வயதாகிறது. இன்னும் இதில் கற்றுக் கொண்டேதான் இருக்கிறேன். குச்சிப்புடியில் கற்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன...’’ என ஆத்மார்த்தமாகப் பேசும் எம்.வி.என்.மூர்த்தி, இசைப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
 ‘‘எங்களுக்குப் பூர்வீகம் ஆந்திரா. அங்கே குண்டூர் பக்கத்தில் பிராமணகொடுரு என்ற கிராமம். அப்பா மாதவபெத்தி சத்யம், 1947ம் ஆண்டு சென்னைக்கு வந்து சினிமாவில் பாட ஆரம்பித்தார். நடிகை லட்சுமியின் அப்பாவான ஒய்.வி.ராவ், அந்தக் காலத்தில் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்தார். அவர், ‘ராமதாஸ்’ என்றொரு படம் எடுத்தார். அதில் அப்பா முதல்தடவையாக மூன்று பாடல்கள் பாடினார். அத்துடன் அந்தப் படத்தில் கபீர் என்ற கேரக்டரிலும் நடித்தார்.
இதனால், அப்பா சென்னையிலேயே செட்டிலாகி தமிழ், தெலுங்கு படங்களில் பாடி வந்தார். ‘மனோகரா’ படத்தில் பாடியதுடன் மந்திரவாதியாகவும் நடித்தார். ஆனால், அப்பாவின் ஃபேவரைட் என்றால் அது, ‘மாயா பஜார்’ படத்தில் வரும் ‘கல்யாண சமையல் சாதம்...’ பாடல்தான்.
இந்தப் பாடலை தெலுங்கில் எஸ்.வி.ரங்காராவ் சாருக்குப் பாடியவர் அப்பா. சிவாஜி சார், என்.டி.ராமாராவ் சார், நாகேஸ்வர ராவ் சார் எனப் பலருக்கும் பாடியிருக்கிறார். பெரும்பாலும் எஸ்.வி.ரங்காராவ், ஜக்கையா என வில்லன்களாக நடித்தவர்களுக்குத்தான் அவர் குரல் சரியாகப் பொருந்தியது.
இதேபோல் என் பெரியப்பா கோகலே, பெரிய ஆர்ட் டைரக்டர். ‘மாயா பஜார்’, ‘பாதாள பைரவி’, ‘மிஸ்ஸியம்மா’, ‘அரசகட்டளை’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக இருந்தவர்.
என் பெரியப்பாவின் பையன்கள் ரமேஷ் இளையராஜா சாரிடம் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.
இவர் தம்பி சுரேஷ் மியூசிக் டைரக்டர். தெலுங்கில் 80 படங்கள் வரை செய்திருக்கிறார். இப்படி எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இசை பக்கம்தான் இருந்தார்கள். நடனத்தில் யாருமே இல்லை. எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவரும்கூட டான்ஸ் பக்கம் போகவில்லை.
நான்தான் முதல்முறையாக நடனத்திற்குள் வந்தேன். அப்போது எங்கள் வீட்டருகே குச்சிப்புடி நடனம் ஆடும் பெண் ஒருவர் இருந்தார். அவர் ஆடுவதைப் பார்த்து எனக்கும் அதுபோல் ஆடவேண்டுமென தோன்றியது.
பிறகு 1972ம் ஆண்டு 9 வயதில் என் குருநாதர் பத்மபூஷண் டாக்டர் வேம்பட்டி சின்ன சத்யத்திடம் குச்சிப்புடி கற்க சேர்த்துவிடப்பட்டேன். அப்போது அவர் ‘குச்சிப்புடி ஆர்ட் அகடமி’ என்ற நடனப்பள்ளியை பனகல் பார்க் அருகே வைத்திருந்தார். இப்போது இந்த அகடமி ராஜா அண்ணாமலைபுரத்தில் தொல்காப்பியப் பூங்கா அருகே இருக்கிறது.
நடிகைகள் வைஜெயந்தி மாலா, சாவித்திரி அம்மா, புரட்சித் தலைவி ஜெயலலிதா, ஹேம மாலினி, வாணிஸ்ரீ எல்லோரும் என் குருநாதரிடம் கற்றுக் கொண்டவர்கள்தான்.
பிறகு அடுத்த தலைமுறை நடிகைகள் விஜயசாந்தி, மகேஸ்வரி, மீனாட்சி சேஷாத்ரி, பானுப்ரியா, ரம்யா கிருஷ்ணன் என பலர் வந்து படித்தனர். அப்பா வீட்டில் எனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.
பிறகு அகடமியிலேயே சங்கீதம் படித்தேன். கண்டசாலா மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த சங்கீத்ராவ் எங்களுக்கு சங்கீதம் சொல்லித் தருவார். அது முடிந்த பிறகு டான்ஸ் கிளாஸ் இருக்கும். அப்படியாக 45 ஆண்டுகளாக முழுநேர குச்சிப்புடி நடனக் கலைஞராக இருக்கிறேன்.
என் முதல் கமர்ஷியல் புரோகிராம் என்பது ‘ரத்னபாப்பா’. இதனை நடனக் கலைஞர் ரத்ன குமார் பண்ணினார். அவர் அமெரிக்காவில் ஹூஸ்டனில் அஞ்சலி என்கிற நடனப்பள்ளி வைத்திருக்கிறார்.
அவருடன் நான் முதல் முறையாக 1978ம் ஆண்டு மேடையில் கமர்ஷியல் புரோகிராம் பண்ணினேன். அப்புறம், என் மாஸ்டருடன் போக ஆரம்பித்தேன். வித்தியாசமான கேரக்டர்கள் பண்ணுவது, ஐந்தாறு பையன்களுடன் நானும் ஒன்று இரண்டு ஐட்டங்கள் செய்வது என்றிருந்தேன். அடுத்து, ‘சங்கராபரணம்’ படத்தின் நடிகை மஞ்சுபார்கவி என் வீடு அருகே இருந்தார். அவர், ‘சங்கராபரணம்’ வெளியான பிறகு நிறைய நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பித்தார். அவருடன் கோ-ஆர்ட்டிஸ்ட்டாக ஆட ஆரம்பித்தேன். 1986ம் ஆண்டு அரங்கேற்றம் மாதிரி முழுநீள புரோகிராம் தனிநபராக செய்தேன். இதில் நட்டுவாங்கத்திற்கு அமர்ந்தவர் என் குருநாதர்.
இதுக்கிடையில் நான் பி.எஸ்சி வேதியியல் பச்சையப்பா கல்லூரியில் முடித்தேன். ஜெர்மன் மொழியை இரண்டு ஆண்டுகள் கற்றுக்கொண்டேன். அடுத்து ஏர்லைன்ஸ் கோர்ஸ் படித்தேன். தொடர்ந்து 1987ல் இருந்து ஆறு ஆண்டுகள் வாயுதூத் என்கிற ஏர்லைன்ஸில் கமர்ஷியல் பிரிவில் வேலை செய்தேன்.
ஒருகட்டத்தில் அப்பாதான், ‘ஏன்டா கஷ்டப்படுற. உனக்கு நன்றாக நடனம் தெரியும். அதை முழுசா பண்ணிக்கோ’னு ஊக்கப்படுத்தினார். இதன்பிறகே முழுநேரக் கலைஞனாக மாறினேன்...’’ என்கிறவர், ஹேம மாலினியுடன் இணைந்த தருணத்தைப் பகிர்ந்தார்.
‘‘இந்த நடனக் கலையில் பெண்கள்தான் அதிகம். ஆண்களும் அழகாக ஆட ஆரம்பித்தபிறகு, பெண்களுக்கு ஓர் ஆண் துணை மேடையில் தேவைப்பட்டது. ஆண், பெண் சிவசக்தி வடிவத்தில் நடனமாடி ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்.
அப்படியாக நான் சிவசக்தி நடனத்தில் சிவனாக மேடையேறினேன். இதேபோல் விஷ்ணுவாக, சிசுபாலானாக, ராவணனாக, நாரதராக எனப் பல வேடங்களில் ஆடியிருக்கிறேன். இந்நேரம் ஹேமமாலினி மேடம் ‘நூபுர்’ என்ற சீரியல் தயாரித்தார். நூபுர் என்றால் சலங்கை என்று அர்த்தம். இதில் கபீர்பேடி, ஹேம மாலினி, ஜே.வி.சோமயாஜுலு உள்ளிட்ட பலரும் நடித்தனர். இதன் டைட்டில் டான்ஸிற்கு ஆடச்சொல்லி என்னைக் கேட்டனர். இது 1989ம் ஆண்டில் நடந்தது.
ஹேமமாலினி மேடம் எங்கள் அகடமியில் படித்தவர். 1980களின் மத்தியில் நான் சிவபெருமானாக ஆடியதை அவர் அண்ணனும், அண்ணியும் வந்து பார்த்தனர். அவர்கள் ஹேம மாலினியிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கின்றனர்.அப்படியாக இந்த சீரியல் ஆரம்பிக்கும்போது வேம்பட்டி மாஸ்டரிடம், ‘நூபுரு’க்கு என்னை ஆடச் சொல்லி கேட்டார். இதன்மூலமாக எனக்கு ஹேமமாலினி மேடம் அறிமுகமானார்.
‘நூபுர்’ பெரிய ஹிட்டடித்தது. பிறகு அவர் அண்ணா ஒருநாள் வீட்டுக்கு வந்து, ‘ஹேமா, ‘துர்கா’ என்ற நாட்டிய நாடகம் பண்ணுகிறார். அதில் நீங்கள் ஆடமுடியுமா என ஹேமா கேட்கச் சொன்னார்’ என்றார். உடனடியாகஓகேசொன்னேன்.
அப்படியாக அவர்கூட 33 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன். கிட்டத்தட்ட850க்கும்மேற்பட்ட நிகழ்ச்சிகள் அமெரிக்கா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உஸ்பெக்கிஸ்தான், ரஷ்யா, துபாய் என உலகம் முழுவதும் நிறைய நாடுகளுக்கு அவருடன் போய் ஆடியிருக்கிறேன்.
‘துர்கா’ என்ற நாட்டிய நாடகம். அதில் சதி, பார்வதி, மகிஷாசுரமர்த்தினி என மூன்று பகுதிகள் இருக்கும். நாம் தாட்சாயிணி என்பதை அவர்கள் சதி என்பார்கள். இந்த முழு பாலே நடனத்திற்கும் நான்தான் சிவன். அவர் தாட்சாயிணி, பார்வதி, மகிஷாசுரமர்த்தினி என ஒவ்வொரு வேடமாக மாறுவார்.
எனக்கு குச்சிப்புடி மட்டும்தான் தெரியும். ஆனால் அவரோ பரதம், குச்சிப்புடி, கதக் எனப் பல நடனங்கள் தெரிந்தவர். அந்த பாலேக்கு எல்லாம் அவர்தான் கோரியோகிராபர். இதன்மூலம் பல்வேறு பாராட்டுகள் கிடைத்தன.
இதுதவிர, நான் 1995ம் ஆண்டு ‘சிவா ஃபவுண்டேஷன்’ என்ற நடனப் பள்ளியைத் தொடங்கினேன். இதன் வழியாக என் குழுவினருடன் இணைந்து டான்ஸ் செய்கிறேன். அப்படியாக 1300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கிறேன். இப்போது முப்பது ஆண்டுகளாகிவிட்டன...’’ என்கிறவர், தொடர்ந்தார்.
‘‘நாங்கள் இந்தியாவின் பெரிய நகரங்களில் எல்லாம் ஆடியிருக்கிறோம். முக்கியமான திருவிழாக்களில் பங்கெடுத்திருக்கிறோம். வடஇந்தியா போனால் இந்தி ஐட்டங்கள் சேர்த்து செய்வோம். அது அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். இப்படி அந்தந்த இடங்களுக்குத் தகுந்தாற்போல் நடனம் அமைப்போம்.
பொதுவாக குச்சிப்புடியில் எல்லா இசைக்கும் நடனம் பண்ணமுடியும். நான் யானி இசைக்கும் ஆடியிருக்கிறேன். மேற்கத்திய இசைக்கும், சிம்பொனிக்கும்கூட பண்ணியிருக்கிறேன். இந்தோனேஷியா போனபோது அவர்களின் கேம்லான் இசைக்கு நடனம் பண்ணினோம். ரஷ்யா போனபோது அவர்களின் இசைக்கு ஆடினோம். என்னிடம் நிரந்தரமாக கற்றுக் கொண்டவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். இதுதவிர, உலகம் முழுவதும் பத்து நாட்கள், ஐந்து நாட்கள் வொர்க்ஷாப் மாதிரி பண்ணியிருக்கிறேன். அதையெல்லாம் கணக்கிட்டால் என்னிடம் ஆயிரக்கணக்கானவர்கள் பயின்றிருப்பார்கள். இதில் பலருக்கும் நான் இலவசமாகவும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
இருந்தும் சென்னையில் குச்சிப்புடி படிக்க ஆர்வம் குறைவுதான். ஆனால், இங்கே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நிறைய மரியாதை உண்டு. 2006ம் ஆண்டு தமிழக அரசு எனக்குக் கலைமாமணி கொடுத்து பாராட்டியது. பிறகு இயல், இசை, நாடக மன்றத்தில் என்னை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது...’’ என்கிறவருக்கு மனைவியும், மகளும் உறுதுணையாக இருக்கின்றனர்.
‘‘என் மனைவி சுப்புலட்சுமி. எம்.காம், எம்.எஸ்சி யோகா, அக்குபங்க்ச்சர் படித்தவர். இப்போது சிறுதானிய உணவில் சிறுதொழில் ஒன்று தொடங்கியிருக்கிறார். மகள் பிரதீபா குச்சிப்புடி கற்றுள்ளார். என்னுடன் நிகழ்ச்சிகளில் ஆடுகிறார். சமீபத்தில் அவருக்குத் திருமணமாகி பெங்களூரில் வசிக்கிறார்.
இதுதவிர ஐந்தாண்டுகளுக்கு முன்பு சிவகுமார் என்ற என் நண்பருடன் இணைந்து ‘ஸ்டாம்ப் ஆல்பம்’ என்ற குறும்படத்தைத் தயாரித்தேன். அது எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கதை. அது எங்களுக்கு மூன்று சர்வதேச திரைப்படத் திருவிழா விருதுகளைப் பெற்றுத் தந்தது.
இந்தப் படத்தை ஹேம மாலினி மேடம், இயக்குநர் கே.விஸ்வநாத் சார், சிங்கீதம் சீனிவாசராவ் சார் உள்ளிட்டவர்களுக்குப் போட்டுக் காட்டினேன். எல்லோரும் பாராட்டினார்கள்.தற்போது புதுப்புது விஷயங்களை நாடகம் பக்கமும், நடனம் பக்கமும் செய்து வருகிறேன். கலைஞர்களுக்கு எந்த எல்லையும் கிடையாது இல்லையா?’’ எனச் சிரிக்கிறார் எம்.வி.என்.மூர்த்தி.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|