கடவுள் தேசத்தின் ஹவுஸ்மேட்!



மலையாளத்தில் அர்ஷா பைஜுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மம்மூட்டி, மோகன்லால், நிவின் பாலி, பிருத்விராஜ் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்கள் செய்தவர்.
இப்பொழுது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் வழியாக தமிழ் பேச வந்துள்ளார். படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால் அர்ஷா முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்ததைப் பார்க்க முடிந்தது. ஒரு மாலைப்பொழுதில் அவரிடம் பேசினோம்.

நடிகையாக வேண்டும் என்பதுதான் உங்கள் லட்சியமாக இருந்ததா?

சொந்த ஊர் ஆலப்புழை. படிச்சது எம்ஏ ஆங்கில இலக்கியம். அப்பா பைஜு. அம்மா சாந்தினி. இருவரும் டீச்சர்ஸ். சின்ன வயசுலேயே மியூசிக், டான்ஸ் மீது ஆர்வம் என்பதோடு அதை முறையாக கத்துக்கிட்டேன். வாரத்துக்கு ஒரு முறையாவது புதுசா வெளியாகும் தமிழ் படத்தை குடும்பமாக பார்த்துவிடுவோம். 
அப்பா, அம்மாவுக்கு சினிமா பிடிக்கும் என்பதால் சினிமாவில் நடிக்க சீக்கிரத்துல க்ரீன் சிக்னல் காட்டினார்கள்.சொல்லப்போனால் அப்பா ஸ்கூல், காலேஜ் டைம்ல நிறைய கல்ச்சுரல் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். அவரும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் அவரால் சினிமாவைத் தொடர முடியவில்லை.

அப்பா விட்டதை இப்போது நான் தொடர்வதாக நினைக்கிறேன். சினிமா நிச்சயம் இல்லாத துறை என்பதால் படிக்கும் விஷயத்தில் காம்ப்ரமைஸ் பண்ணாமல் ஒண்ணுக்கு இரண்டு டிகிரி முடிச்சேன்.

முதல் சினிமா?

‘பதினெட்டாம் படி’. அதுதான் என்னுடைய முதல் படம். ஆடிஷன்ல கிடைச்ச வாய்ப்பு அது. நிவின்பாலி அந்தப் படத்துக்கான காஸ்ட்டிங் கால் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்து நானே பெர்ஃபாம் பண்ணி, நானே வீடியோ எடுத்து அனுப்பி வெச்சேன். அப்ப நான் ப்ளஸ் டூ ஸ்டூடண்ட். ஆர்யா, பிருத்விராஜ், மம்மூட்டி உட்பட ஏராளமான ஆர்ட்டிஸ்ட்ஸ் நடித்த படம் அது. முதல் படமே பெரிய வெற்றி என்பதால் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தன.

படிப்பு, சினிமா என இரண்டையும் எப்படி சமாளிக்க முடிஞ்சது?

உண்மையை சொல்வதாக இருந்தால் அது ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு. காலேஜ் சைட்ல சப்போர்ட் பண்ணியதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிஞ்சது. என்னுடைய துறைத் தலைவர்கள் நான் லீவு எடுத்தாலும் எனக்காக பாடம் எடுப்பது, அட்டண்டன்ஸ் பிரச்னை இல்லாமல் தேர்வெழுத வெச்சது என கொஞ்சம் கருணை காட்டியதால் இரண்டு டிகிரி வாங்க முடிஞ்சது.

‘துடரும்’ படத்துல மோகன்லாலுடன் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?

சினிமாவை எந்தளவுக்குப் பிடிக்குமோ அந்தளவுக்கு மோகன்லால் சாரைப் பிடிக்கும். சின்ன வயசுலேர்ந்து அவருக்கு நான் பெரிய ரசிகை. அவருடன் நடிக்கும்போது உற்சாகமாக இருந்துச்சு. பெரிய நடிகர் என்ற மனப்பான்மை இல்லாதவர். எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவார். செட்ல நிறைய விஷயங்களை பேசுவோம். ஆக்‌ஷன் காட்சிகளுக்காக நிறைய ரிஸ்க் எடுப்பார். ஒரு ஃபைட் சீன்ல நடிக்கும்போது பயமாக இருந்துச்சு. ஆனால், அவர் முகத்துல டென்ஷனைப் பார்க்க முடியாது. அந்த அசாதாரண சூழ்நிலையிலும் குட் மூட்ல இருப்பார்.

அவரிடம் நெகடிவ்வாக எந்த ஒரு விஷயத்தையும் பார்த்ததில்லை. அதேமாதிரி சோர்வாக இருந்தும் பார்த்ததில்லை.ஷோபனா மேடம் லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட். டான்ஸ் பத்தி நிறைய பேசுவோம். டான்ஸ் நுணுக்கங்கள் பற்றி அவர் கொடுத்த டிப்ஸ் யூஸ்ஃபுல்லா இருந்துச்சு. 

செட்ல அவரும் ஜாலியாக இருப்பார். பெரிய நடிகையாக இருந்தாலும் ஒவ்வொரு சீனையும் எப்படி பன்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணுவார். அது அவருடைய உயர்ந்த மனதைக் காட்டியது.

தமிழ் சினிமா அனுபவம் எப்படி..?

‘ஹவுஸ் மேட்’ என்னுடைய முதல் வாய்ப்பாக அமைஞ்சதுல பெரிய சந்தோஷம். நல்ல கேரக்டர், பெர்ஃபாமுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல், யூனிக் கன்டன்ட். புது இடத்துல வந்து வேலை செய்கிறோம் என்ற ஃபீல் எந்த இடத்திலும் வரவில்லை. காளி வெங்கட், வினோதினி என டீம்ல உள்ள எல்லோரும் ஃப்ரெண்ட்லியா பழகினார்கள். 

மலையாளத்தில் வேலை செய்வதுபோல் இருந்துச்சு. மலையாளத்தில் செலக்டிவ்வான படங்கள் செய்து வருகிறேன். புது இண்டஸ்ட்ரிக்கு வரும்போது வித்தியாசமான படம் செய்யணும்னு இருந்தபோதுதான் ‘ஹவுஸ்மேட்’ வாய்ப்பு வந்துச்சு. அதுதான் படம் செலக்ட் பண்ண காரணம்.

படம் பார்த்தவர்கள் அனைவரும் ஜாலியா என்ஜாய் பண்ணினோம்னு சொன்னாங்க. இயக்குநர் ராஜவேல் டைட்டில் கார்டு தொடங்கி படம் முடியும் வரை கதையை மிக அழகாக சொல்லியிருந்தார். ஷூட் பண்ணும்போதே ஒரு காட்சி எப்படி வரணும், எப்படி வரும் என்ற புரிதலுடன் வேலை செய்தார். 

சிவகார்த்திகேயன் சார் ப்ரொடக்‌ஷனில் என்னுடைய முதல் தமிழ் படம் வெளியாகியிருப்பதில் பெரிய சந்தோஷம். படம் வெளியாகும் முன் ஆடியன்ஸ் எப்படி பார்க்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருந்துச்சு. படத்தோட எமோஷன், க்ளைமாக்ஸ் எல்லாம் ரசிகர்களுடன் கனெக்ட்டாகி பெரியளவில் ஒர்க் அவுட்டாகி படம் வெற்றியடைந்துள்ளது.

வாரம் ஒரு நடிகை அறிமுகம் ஆகும் சீசன் இது... போட்டியை எப்படி பார்க்கிறீங்க?

சினிமாவில் முதல் வாய்ப்பு என்பது அவ்வளவு ஈஸி கிடையாது. அதை தக்க வைப்பது இன்னும் கஷ்டம். கதை, கேரக்டர், இயக்குநர், நடிகர், தயாரிப்பு நிறுவனம் என படங்களை முறையாக தேர்வு செய்வது அவசியம். 

இப்போதுள்ள நிலையில் யார் வேண்டுமானாலும் சினிமா செய்யலாம். ஆனால், பட ரிலீஸ் என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் தயாரிக்கும்போது அல்லது வெளியிடும்போதுதான் முழுமையாக ஆடியன்ஸிடம் போய்ச் சேரும்.

அந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பாலிஸியாக வைத்துள்ளேன். வாய்ப்பு  வருகிறது என்று உடனே கமிட் பண்ண முடியாது. அதற்கு நிறைய முன்
தயாரிப்பு தேவை. என்னைப் பொறுத் தவரை படங்களை தேர்வு செய்வது எப்போதும் சவாலாக இருக்கும். தேடி வரும் வாய்ப்பை தட்டி விடுவதா அல்லது ஓகே சொல்வதா என்று பல யோசனைகள் வரும். அதையெல்லாம் கடந்துதான் படங்களை செலக்ட் பண்ணுகிறேன்.  

எந்த மாதிரி வேடம் செய்வதில் ஆர்வமாக இருக்கீங்க?

மணிரத்னம் சார் படங்கள் பிடிக்கும். அவர் படங்கள் எல்லாமே கேரளாவில் ரிலீஸ் ஆகும். பலமுறை அவர் படத்தில் நாயகியாக வரணும்னு கனவு கண்டிருக்கிறேன். அவருடைய படங்களில் கதாநாயகிகளை மிக அழகாக காண்பித்திருப்பார். நெல்சன் சார் டைரக்‌ஷனும் பிடிக்கும். ‘கோலமாவு கோகிலா’, ‘ஜெயிலர்’ என்னுடைய ஃபேவரைட்.

உங்களை மாதிரி 2கே கிட்ஸ்களுக்கு ஆலோசனை சொல்வதாக இருந்தால் என்ன சொல்வீங்க?

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சொந்தக் காலில் நிற்க பழகிக் கொள்ள வேண்டும். நம்மிடம் கொஞ்சம் பணம் இருந்தால்தான் நம்முடைய தேவைகளை பூர்த்தி செஞ்சுக்க முடியும். சின்னச் சின்ன தேவைகளுக்காக அடுத்தவர்களை எதிர்பார்ப்பது நம்ம சுயத்தை அழிச்சுடும்.

எஸ்.ராஜா