மீம் கன்டென்டாக மாறியிருக்கும் சீனாவின் உவ்வே ஆன்லைன் ஊழல்!
சமூக வலைத்தளங்களிலும், ஆன்லைன் டேட்டிங் appகளிலும் உஷாராக இருக்க வேண்டும் என்று எவ்வளவோ விழிப்புணர்வுகள் செய்யப்பட்டாலும் மக்கள் ஏமாறுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.  இதற்கு சமீபத்திய உதாரணம் இந்தச் சம்பவம். சீனாவையே உலுக்கியிருக்கிறது இந்த ஆன்லைன் ஊழல். சீனாவின் முக்கியமான நகரங்களில் ஒன்று, நாஞ்சிங். அங்கே 38 வயதான ஜியோவா என்ற பெண் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களிலும், டேட்டிங் ஆப்களிலும் ‘சிஸ்டர் ஹாங்’ என்ற பெயரில் தனது பக்கத்தை உருவாக்கினார். 
டேட்டிங் ஆப்பின் ப்ரொஃபைலில் திருமணமான பெண் என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அடுத்தவர்களின் மனைவி அல்லது காதலியுடன் பாலியல் உறவு கொள்ளும் வேட்கையுடன் இருப்பவர்களை நோக்கி தனது வலையை வீச ஆரம்பித்தார் ஜியோவா. இதற்காகவே பிரத்யேகமான டேட்டிங் ஆப்கள் நிறைய இருக்கின்றன. அதை குறி வைத்து மட்டுமே இயங்கினார்.
‘‘என்னிடம் நீங்கள் உங்களின் விருப்பப்படி பாலியல் உறவு கொள்ளலாம்; இதற்காக எந்தப் பணமும் கொடுக்கத் தேவையில்லை. பணத்துக்குப் பதிலாக சின்னச் சின்ன வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது கடலை எண்ணெய், பால், பழம் போன்ற மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால் போதும்...’’ என்று வித்தியாசமான சலுகையை அறிவித்து, தன்னுடைய வலையில் விழும் ஆண்களை ரகசியமாக ஓர் இடத்துக்கு அழைப்பார்.
ஜியோவா வாடகைக்கு குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புதான் அந்த ரகசிய இடம். தனது இடத்துக்கு வரும் ஆண்களுடன் பாலியல் உறவு கொள்வதை, ரகசிய கேமராக்களைக் கொண்டு வீடியோவாக்கிவிடுவது ஜியோவாவின் தந்திரம். ஜியோவாவைத் தேடி வரும் ஆண்களோ, கேமராவைப் பற்றிய எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் அவர் கேட்டதை விட அதிகமாக வழங்கிவிட்டுச் செல்வார்கள்.
தான் வீடியோவாக்கியதை ஆபாசப்படத் தளங்களுக்கு விற்பனை செய்தும், டெலகிராம் போன்ற பிளாட்பார்ம்களில் வெளியிட்டும் பணம் பார்க்க ஆரம்பித்தார் ஜியோவா.
இதுபோக ஆன்லைனில் தனியாக ஒரு குழுவை ஆரம்பித்து, அதில், தான் எடுத்த ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்தார்.
இந்த வீடியோக்களை உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும். உறுப்பினர் கட்டணம், 1750 ரூபாய்.கடந்த ஜூலை மாதம் ஜியோவா விற்பனை செய்த ஒரு வீடியோ ஒன்று சீனாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலானது. பத்து லட்சம் பார்வைகளுக்கு மேல் பார்வைகளை அள்ளிய அந்த வீடியோ வெளியான பிறகே, ஜியோவாவின் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.
அதற்குப் பிறகு ஜியோவா வெளியிட்ட மற்ற ஆபாச வீடியோக்களும் வைரலாகத் தொடங்கின. அந்த வீடியோக்களில் தங்களுக்குத் தெரிந்தவர்கள், கணவர்கள், காதலர்கள் இருப்பதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
தவிர, அந்த ஆபாச வீடியோக்களில் இருந்தவர்கள் அவமானத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போன சம்பவமும் நிகழ்ந்தன. இதையடுத்து சீனாவின் சமூக வலைத்தளங்களில் ‘சிஸ்டர் ஹாங்’ என்ற பெயர் முக்கிய பேசுபொருளாக மாறியது. ஆரம்பத்தில் ஜியோவாவிடம் 1,600 ஆண்களுக்கு மேல் சென்றிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் சீன சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. ஆனால், காவல்துறை இது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்று மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஜியோவாவிடம் சென்ற ஆண்களின் எண்ணிக்கை மற்றும் அவர் சம்பாதித்தது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், ஜிம்முக்குச் செல்பவர்கள், வெளிநாட்டினர்தான் அதிகமாக ஜியோவாவின் வலையில் வீழ்ந்திருக்கின்றனர். இவர்களில் சிலர் திரும்பத் திரும்ப ஜியோவாவிடம் சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 6ம் தேதியன்று ஜியோவாவைக் கைது செய்தது நாஞ்சிங் காவல்துறை. தனி நபர்களின் அந்தரங்கத்தைச் சுரண்டி, சட்டத்துக்குப் புறம்பாக ஆபாச வீடியோக்களை உருவாக்கி விநியோகம் செய்தவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடுக்கப்பட்டது. இரண்டு முதல் 7 வருடங்கள் வரை ஜியோவாவுக்குச் சிறைத் தண்டனை கிடைக்கலாம் அல்லது 10 ஆண்டுகள் வரைகூட நீடிக்கலாம் என்கின்றனர்.
ஜியோவாவின் வலையில் வீழ்ந்தவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். அந்த ஆபாசப் படங்கள் மூலமாக ஜியோவாவிடம் சென்றவர்களின் அடையாளம் வெளிப்பட்டுவிட்டது. தங்களின் கணவர்களைப் பற்றிய உண்மையை அறிந்த பெண்கள், விவாகரத்து வழக்குத் தொடுத்துள்ளனர். காதலிகள் பிரேக் - அப் செய்துள்ளனர். சிலரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்.
இதுபோக ஜியோவாவிடம் சென்ற அனைத்து ஆண்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூன்று பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியிருப்பதும், பலருக்குப் பாலியல் சார்ந்த நோய்கள் தொற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது. இத்தனைக்கும் ஜியோவா ஒரு ஆண் என்பதுதான் இதில் ஹைலைட்!ஆம்; உடலிலும், தோற்றத்திலும் தன்னை ஒரு பெண் போல வெளிப்படுத்தி இந்த ஊழலைச் செய்திருக்கிறார் ஜியோவா. பெண் போல வெளியில் காட்டுவதற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் ஜியோவா.
யெஸ்; வெளித்தோற்றத்தை பெண் போல காட்டுவதற்காக நவீன உடை, உயர் ரக மேக் அப், விக் என எல்லாவற்றையும் பிரத்யேகமாக டிசைன் செய்து பயன்படுத்தியிருக்கிறார். உடலையும் பெண் போல காட்டுவதற்காக சிலிக்கான் பிராஸ்தடிக்ஸைப் பயன்படுத்தியிருக்கிறார். முக்கியமாக ஆன்லைனில் வீடியோ சாட் செய்யும்போது தனது குரல் பெண்ணைப் போல இருக்க வாய்ஸ் ஃபில்டர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அதனால்தான் நிறைய ஆண்கள் ஜியோவா ஒரு பெண் என்று ஏமாந்துவிட்டார்கள். ஜியோவா ஒரு ஆண் என்று தெரிந்தபிறகு, அவரிடம் சென்ற பல ஆண்கள் பெரும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.இன்று ஜியோவாவின் ஊழல் ஒரு நகைச்சுவை மீமாக சீனாவில் மாறிவிட்டது. வியட்நாமில் ‘சிஸ்டர் ஹாங்’கை மையமாக வைத்து மேடை நாடகத்தை உருவாக்கியிருக்கின்றனர். விரைவில் ஜியோவாவின் கதை திரைப்படமாக மாறலாம்.
த.சக்திவேல்
|