AI + Robotics = 2050
அடுத்த ஐந்து வருடங்களில் AI + Robotics இணை, மனிதர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதில் கிட்டத்தட்ட 30% வேலைகளை மனிதர்களுக்கு நிகராகவே செய்யும் திறன் பெற்றுவிடும்.
அதிகமான ஊதியம் கொடுக்க வேண்டியிருக்கும் முன்னேறிய நாடுகளில் தெரிய ஆரம்பிக்கும் இந்த மாற்றம் மெல்ல வளரும் நாடுகளுக்கும் பரவும். இந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் மூன்று வருடங்களிலேயே இந்த மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.

இதெல்லாம் நிகழ முழுமுற்றான செய்யறிவு (General AI ) வேண்டும் என்பது கூட இல்லை. இப்போது உள்ள AI தொழில் நுட்பம் அதே வேகத்தில் தொடர்ந்தாலே கூட இந்த மாற்றம் சாத்தியமே.
2040 எனும்போது இந்த 30% என்பது 50% என்ற அளவை எட்டிவிடும். வளர்ந்த நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தும் சூழல் போய் எல்லோருக்குமே ‘கட்டுப்படியாகும்’ அளவுக்கு இந்த தொழில்நுட்பங்கள் cost effective ஆகிவிடும்.
 AI என்பது ஒரு நாவல்டி என்ற நிலை மாறி, இயல்பான அன்றாடமாகிவிடும். இன்று செல்ஃபோன் எப்படி எல்லோருக்கும் பழகிய மிக இயல்பான விஷயமாகிவிட்டதோ... அதுபோல.
இந்தப் புள்ளியில் AI vs Humans என்ற சமன்பாடு மிகத்தெளிவாக AI பக்கம் சாய ஆரம்பிக்கும்.  AI மனிதர்கள் செய்யும் வேலையை செய்வது மட்டுமல்லாமல் அதைவிட சிறப்பாகவும், தொடர்ந்து அதே தரத்துடனும் செய்யும். AI மீது நாம் அதிகம் சார்ந்திருக்கும் சூழல் உருவாகிவிடும். மிகவும் தனித்தன்மை வாய்ந்த வேலைகளைவிட பிற வேலைகளை மனிதர்களிடம் கொடுப்பது பிற்போக்கான அணுகுமுறையாக பார்க்கப்படும் .  2050 வாக்கில் உழைக்கும் வயதில் உள்ள கணிசமான மக்கள் செய்ய வேலை ஏதும் இல்லாத நிலை உண்டாகும். இன்று அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளில் பாதிப்பேருக்கு மேல் வேலைக்குப் போய் சம்பளம் வாங்குவது என்பதே அன்னியமான விஷயமாகிவிடும். உழைக்கும் வயதில் உள்ளோரில் 20%க்கும் குறைவானோர் மட்டுமே ஏதாவது வேலைகளில் இருப்பார்கள். வாரத்தில் நான்கு நாள் வேலை, மூன்று நாள் வேலை என்று மெல்ல வேலையின் இயல்பே மாற ஆரம்பிக்கும்.
 ஒரு கட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்பது வெறும் பரிசோதனை முயற்சி என்பதாக இல்லாமல் மருத்துவக் காப்பீடு போல அத்தியாவசியமான திட்டம் என்றாகிவிடும். இது தவிர்க்க முடியாது. வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் நுகர்வு இல்லாமல் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும். இன்று 100 நாள் வேலைத்திட்டம் போல அரசுகள் ஒரு நபர் / குடும்பத்துக்கு மாதம் இவ்வளவு என்று ஊதியம் அளிக்கும். அதற்கு பதிலாக சில எளிய வேலைகளைச் செய்ய வேண்டியது வரலாம்.
சமூகக் கட்டமைப்பும் மாற ஆரம்பிக்கும். தனி மனித உழைப்பு, செல்வம் என்பது பொருளற்றதாக மாற ஆரம்பிக்கும். அரசு வழங்கும் உதவித்தொகை அடிப்படை வாழ்வாதாரத்துக்கு மட்டுமே சரியாக இருக்கும்.எனவே குடும்பமாக, சமூகமாக மக்கள் சேர்ந்து வாழ்வது என்பது நடைமுறை வசதியின் பொருட்டு மீண்டும் பரவலாகும்.பொருளாதார அமைப்பே அடிப்படை மாற்றத்துக்கு உள்ளாகும். இன்றுபோல வேலைகள் இல்லை என்றால் அரசுக்கு வருமானம் என்பதில் பெரும் ஓட்டை விழும்.
மாறாக AI சேவைகளின் மேல் வரி அல்லது AI மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரி என்ற நிலை உருவாகும். வருமானம் குறைய நுகர்வும் குறையும், லாபம் என்பது குறையும். செல்வம் என்பது பணம் என்றில்லாமல் பொருட்கள் என்றாகும். உளவியல் ரீதியாகவும் இது பெரும் மாற்றங்களை உருவாக்கும்.
வேலை என்பது பணம் சம்பாதிக்க மட்டுமில்லை; அது வாழ்க்கையை ஒவ்வொருவரும் பொருள்படுத்திக் கொள்ள எவ்வளவு அவசியமான செயல்பாடு என்று புரியவரும். ஒன்றை உருவாக்கினேன், செய்துமுடித்தேன் என்ற மனநிறைவை மனிதர்கள் வேறு வகைகளில் ஈட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.
பணிச்சுமை அழுத்தம், மேலும் மேலும் செல்வம் ஈட்ட வேண்டிய அழுத்தம் இல்லை எனும் போது ஆண் - பெண் உட்பட மனித உறவுகள் இலகுவாகும், மேம்படும். வேலை என்பது நாம் விழித்திருக்கும் நேரத்தில் பாதியை எடுத்துக்கொள்ளவில்லை எனும் போது வாழ்வின் வேகமே நிதானமாகும்.
இதுவரை மனிதர்கள் சொல்லி வைத்தபடி செயல்பட்டு வந்த தொழில்நுட்பம் நம்மைவிட பலமடங்கு புத்திசாலித்தனமாக செயல்பட ஆரம்பிக்கும். AI மனித நன்மை கருதி செயல்பட்டாலும் கூட மனிதர்கள் உளவியல் ரீதியாக இரண்டாம்தர பிரஜைகளாக உணர ஆரம்பிப்பார்கள். AI மீது காலப்போக்கில் ஒரு மதிப்பு உருவாக ஆரம்பிக்கும்.
அரசியல், கருத்தியல் போன்றவை மாற வேண்டிய கட்டாயம் உருவாகும். புதிய வகையான கருத்தியல் மோதல்கள் உருவாகும். Resource sharing அடிப்படையில் AI ஒவ்வொரு நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருத்தமான tailored அரசியல் சட்டகத்தை பரிந்துரைக்கும். ஆனால், பழைய அச்சங்களும் வெறுப்புகளும் இல்லாமல் போய்விடாது கனன்று கொண்டேதான் இருக்கும்.
யாரைவிடவும் அரசுகள் மிகுந்த பொறுப்புடனும் தொலை நோக்குடனும் செயல்பட வேண்டியிருக்கும்.
அடுத்த 25 ஆண்டுகளில் உயரும் மக்கள்தொகை, காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, அதிகரிக்கும் நோய் தொற்றுகள், வேலையின்மை, சமூக மாற்றங்கள் போன்றவற்றையெல்லாம் மனதில் கொண்டு நீண்ட கால திட்டங்களை இப்போதே உருவாக்க ஆரம்பிக்க வேண்டும். மேலும் இந்த திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும். அளவான அரசு ( small government) என்ற வலதுசாரி பார்வை நடைமுறையில் சாத்தியமான ஒன்று அல்ல என்பது உணரப்படும். குறிப்பாக எதிர்காலத்தில். அரசுகள் மேலும் பொறுப்பும், கவனமும் எடுத்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சவால்களை மனித சமூகம் எதிர்கொள்ள முடியும்.
உணர்ச்சிகளை உணரமுடிவது, அதை வெளிப்படுத்த முடிவது, அதை புரிந்துகொள்ள முடிவது போன்றவை AI-யினால் செய்ய முடியாத பிரத்தியேகமான விஷயமாக கவனம் பெறும். Feelings & consciousness என்பதை AI நுட்பமாக பிரதிஎடுக்க முடியும், நடிக்க முடியும்; ஆனால், அதை அவை மெய்யாகவே உணர முடியாது.
மனிதர்களை AI-யிடம் இருந்து தனித்துவப்படுத்திக் காட்டும் இந்த விஷயத்தை மனிதர்கள் பெருமையுடன் இன்னுமே இறுகப் பற்றிக்கொள்வார்கள். அந்த தனித்துவத்தின் வெளிப்பாடாக ஒவ்வொரு மனிதனும் தன் தனித்துவத்தை வெளிப்படுத்த முடிவதை ஒரு வெற்றியாக , தன் முக்கிய கடமையாகப் பார்ப்பான். கலை, இலக்கியம், ஃபேஷன், பாட்டு, நடனம் என்று எல்லா வகைகளிலும் தன் தனித்துவத்தைக் காட்ட முனைவான். மதம் சற்று பின்னுக்குப் போய்விட்டாலும் வெறுமையை நிரப்ப பலவிதமான புதிய நம்பிக்கைகள், கல்ட்டுகள் உருவாகும்.AI மனிதர்களை விட சிறப்பான கலை, இலக்கிய படைப்புகளை உருவாக்கும். மனிதர்களிடமிருந்தே அதை கற்றுக்கொள்ளும். ஆனால், மனிதர்கள் அதை எப்போதும் ஒரு படி கீழாகவே நினைப்பார்கள்.
மனிதர்கள் உருவாக்கும் படைப்புகள் சுமாராக இருந்தால் கூட அரிய கலையாக்கமாக (human-made ) பார்க்கப்படும். கைத்தறி புடவையைப் போல, அச்சுக்கோர்த்த புத்தகம் போல. இதெல்லாம் best case scenarios. ஆனால், காலம் காலமாக மனிதர்களுடன் பொதிந்து வந்திருக்கும் சிறுமையையும் கீழ்மையையும் நாம் அவ்வளவு சீக்கிரம் உதறிவிட முடியாது.AI என்பதை எப்படி தனக்கு சாதகமாக, தான் அதிகாரம் பெற, தான் செல்வம் பெற பயன்படுத்தலாம் என்று முனைவார்கள். நாடுகளும் அதையே முயலும்.
New world order என்பதை AI மூலம் நிறுவ முயல்வார்கள். எதிரியை அழிக்கும்படி ஆணைகள் பொதிந்த AIகள் உருவாக்க முடியும். AI led warfare என்பது இயல்பான ஒன்றாக மாறும் வாய்ப்புள்ளது. மனிதர்களாகிய நாம் இந்த பூமியை தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கடினமான பாடங்கள் மூலம் இயற்கை நமக்கு புரிய வைக்கும். பூமியில் நாம் அனைவரும் எப்படி sustainable ஆன ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்பதில் மனித குலத்தின் ஒட்டு மொத்த கவனமும் குவியும்.
செவ்வாய் கிரகத்துக்கு போய் செட்டில் ஆவது எவ்வளவு அபத்தமான ஐடியா என்பது புரிந்துகொள்ளப்படும்.AI என்பது அதனளவில் நல்லதோ தீயதோ அல்ல. மனிதன் அதை எப்படி கையாள்கிறான் என்பதில்தான் அதன் பயன் உள்ளது, ஒரு கத்தியை நாம் எப்படியும் பயன்படுத்தலாம் என்பது போல.
கார்த்திக் வேலு
|