DOG WALKER சம்பளம் மாதம் ரூ.4.50 லட்சம்!



மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மாதம் 4.50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் செய்திதான் இன்ஸ்டாகிராமில் செம வைரல். அவர் ஐடி துறையிலோ அல்லது வேறு ஏதாவது உயர்ந்த பதவியிலோ இல்லை, சொந்தமாக பிசினஸும் செய்யவில்லை.  மாறாக காலையிலும், மாலையிலும் வெளிநாட்டு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதன் மூலம் இந்த வருமானத்தை ஈட்டுகிறார் என்பதுதான் இதில் ஹைலைட்.

இந்தியாவில் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்று லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் ஒரே நபர் இந்த இளைஞராகத்தான் இருக்க வேண்டும்.
அவரைப் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. வெளிநாடுகளில் குழந்தைகளைப் பாரமரிப்பதைப் போல செல்லப்பிராணிகளைப் பராமரித்து, அவற்றை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் வேலையைச் செய்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

இங்கே இப்போதுதான் இந்த தொழில் அறிமுகமாகி, அந்த இளைஞரால் நடைமுறைக்கு வந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் வசிக்கின்ற பெரும் பணக்காரர்களின் வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த வெளிநாட்டு நாய்கள் இருக்கின்றன. 

இந்த நாய்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், காலைக்கடன்களைக் கழிப்பதற்கும் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்; கொஞ்ச தூரம் அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

ஆனால், வீட்டுக்கு வருவதற்கே நேரம் கிடைக்காத அந்தப் பணக்காரர்களால் இதைச் செய்ய முடியாது. தங்களின் நாய்களை காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றால், கேட்கிற பணத்தைக் கொடுக்கக்கூட அந்தப் பணக்காரர்கள் தயாராக இருந்தனர். எல்லோராலும் அந்த வெளிநாட்டு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடியாது. அந்த வெளிநாட்டு நாய்களைப் பற்றியும், அவற்றை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

இப்படியான சூழலில்தான் வெளிநாட்டு நாய்களைப் பற்றி நன்கு அறிந்த அந்த இளைஞர், ‘‘நான் உங்கள் வீட்டு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறேன்...’’ என்று ஒரு பணக்காரரை அணுகியிருக்கிறார். அந்தப் பணக்காரர் உடனே, ‘சரி’ என்று சொல்லிவிட்டார். மாதம் 15 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் பணக்காரரின் நாயை காலையிலும், மாலையிலும் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் அந்த இளைஞர்.

இதைக் கேள்விப்பட்ட மற்ற பணக்காரர்களும் தங்களின் நாய்களையும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல அந்த இளைஞரை அணுகினார்கள். இப்போது தினமும் 38 நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார் அந்த இளைஞர். அதிகபட்சமாக ஒரு நாய்க்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மாதக் கட்டணம் வாங்குகிறார்.

இப்போது அவருக்கு மாத வருமானமாக 4.5 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இன்னும் சில மாதங்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகமாகும்; அவரது வருமானமும் உயரும்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று, செல்லப்பிராணிகளின் பராமரிப்புத் துறை. 2026ல் 7500 கோடி ரூபாய் மதிப்பீட்டை இந்தத் துறை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மும்பை, தில்லி, பெங்களூர், புனே, ஹைதராபாத், சென்னை போன்ற  நகரங்களில் செல்லப் பிராணிகள் சார்ந்த அனைத்து தொழில்களும் நன்கு வளர்ச்சியடையும். நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும், ‘டாக் வாக்கர்’ போன்ற வேலைகளைச் செய்ய அதிகமான ஆட்கள் தேவைப்படுவார்கள் என்கின்றனர்.

த.சக்திவேல்