அமெரிக்காவால் இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பார்கள்..!



இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிப்புக்குள்ளான 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் களங்கத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்வதாக ஐநாவின் எய்ட்ஸ் தொடர்பான கூட்டுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கை மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. 
குறிப்பாக ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கிறது. அவர்களின் உடல்நலனில் குடும்பத்தினர் சிறிதளவே அக்கறை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் UNAIDS எனும் ஐநாவின் எய்ட்ஸ் தொடர்பான கூட்டுத் திட்டம், ‘எய்ட்ஸ், நெருக்கடி மற்றும் மாற்றத்திற்கான சக்தி’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியாவில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட திருமணமான பெண்கள் தங்கள் துணையால் வன்முறைக்கு ஆளாவது 24 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இது உலகளவில் அதிக சதவீதத்தைக் கொண்ட லைபீரியாவை விட 10 சதவீதமே குறைவு. இந்த அறிக்கை 2020 முதல் 2024 வரையிலான தரவுகளைக் கொண்டது. இதில்தான் மேற்சொன்ன விஷயங்கள் தெரிய வந்துள்ளன.

இதுதவிர, அவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குக் கருத்தடை பயன்பாடு பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்கிறது இந்த அறிக்கை. இதுமட்டுமல்ல. சர்வதேச நன்கொடையாளர்கள் எய்ட்ஸ் திட்டத்திற்கான நிதியை நிறுத்தியதால் ஹெச்ஐவியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏற்படும் தாக்கத்தையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 

 UNAIDS நிர்வாக இயக்குனர் வின்னி பையானிமாவின் கூற்றுப்படி, உலகளவில் 2010ம் ஆண்டு முதல் புதிதாக ஹெச்ஐவியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதமும், இறப்புகள் 56 சதவீதமும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

ஆனால், உலகளவில் எய்ட்ஸிற்கு பெரிதாக நிதியுதவி அளிக்கும் அமெரிக்கா, அதன் நிவாரணத் திட்டத்தை திரும்பப் பெற்றதால் 2029ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் எனச் சொல்கிறது.அதாவது கூடுதலாக 6 மில்லியன், அதாவது 60 லட்சம் பேர்கள் ஹெச்ஐவியால் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும், 40 லட்சம் இறப்புகள் ஏற்படக்கூடும் ன்றும் எச்சரிக்கிறது.

அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றபிறகு வெளிநாட்டு நிதியுதவிகள் அனைத்தையும் நிறுத்தினார். இதில் ஹெச்ஐவிக்கான 4 பில்லியன் டாலர்களும் அடங்கும். இந்திய மதிப்பில் இது 34 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்கிறது ஐநாவின் அறிக்கை.   

அத்துடன் இந்த அறிக்கை ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 2024ம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 37 சதவீத புதிய ஹெச்ஐவி தொற்றுகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இதில் மிகக் குறைந்த அளவாக கரீபியனில் ஒரு சதவீதமாக உள்ளது. ஆசியா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் இந்த எண்ணிக்கை 23 சதவீதமாகக் காணப்படுகிறது.

2024ம் ஆண்டில் ஹெச்ஐவி உடன் வாழும் மக்களைப் பொறுத்தவரை, ஆப்பிரிக்காவின், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அதிகபட்சமாக 2 கோடியே 10 லட்சம் பேராகவும், மிகக் குறைவாக கரீபியனில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேராகவும் உள்ளனர். ஆசியா மற்றும் ஆசிய பசிபிக் பகுதியில் இந்த எண்ணிக்கை 69 லட்சமாக பதிவாகி உள்ளதாகக் குறிப்பிடுகிறது ஐநா அறிக்கை.  

பி.கே.