தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்க இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள்!
‘‘ஓலைச்சுவடிகள் பற்றி இங்கே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. சாதாரணமாக சுவடிதானேன்னு கடந்து போறாங்க. ஆனால், இதில் தமிழரின் வாழ்வியல், பண்பாடு, கலாசாரம் தொடங்கி கணிதம், மருத்துவம், வானியல், இலக்கணம், இலக்கியம்னு பல செய்திகள் பொதிந்து கிடக்கு.  மொத்தமே நாம் 10 சதவீத ஓலைச்சுவடிகளைத்தான் பதிப்பாக கொண்டு வந்திருக்கோம். இன்னும் 90 சதவீத சுவடிகள் படிக்கப்படவே இல்ல. அதுக்காகவே, இந்த ‘ஏடகம்’ அமைப்பு மூலம் சுவடிப் பயிற்சி கொடுத்து மாணவர்களை உருவாக்கிட்டு வருகிறேன்...’’ நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் தமிழ்ப் பண்டிதர், முனைவர் மணி. மாறன். 
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ் ஓலைச்சுவடித் துறையின் தலைவராக இருக்கும் இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக தஞ்சை தெற்கு வீதியில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் மாலை நேரத்தில் மாணவ - மாணவிகளுக்கும், ஆர்வம் உள்ளவர்களுக்கும் கட்டணமில்லாமல் சுவடி படித்தறியும் பயிற்சி அளித்து வருகிறார்.
இவரின் சிறப்பான முன்னெடுப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சில கல்வி நிறுவனங்கள், ‘ஏடகம்’ அமைப்புடன் கைகோர்த்துப் பட்டயச் சான்றிதழும் வழங்கி வருகின்றன. ‘‘சரசுவதி மகால் நூலகத்தில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணி செய்து வருகிறேன். இதில் 17 ஆண்டுகள் ஓலைச்சுவடிகளை நுண்படம் எடுக்கும் பணியில் இருந்தேன். அதாவது டிஜிட்டல் ஃபார்மேஷனுக்கு முன்னாடி சுவடிகளை நுண்படமாக எடுக்கும் பணி நடைபெற்றது.
இந்தப் பணிக்கு ஏடுகளின் நம்பர் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். அப்ப தமிழ் எண்கள் கத்துக்கணும். சில ஓலைச்சுவடிகள்ல திருக்குறள்னு தலைப்பு இருக்கும். ஆனா, உள்ளே படிக்கும்போது இன்னும் வேறு சில தலைப்புகள் இருக்கும். நாலடியார் போன்ற சுவடியின் ஏடுகள கலந்து வச்சு கட்டியிருப்பாங்க.
அப்புறம் ஒரு கட்டுல உள்ள இரண்டாம் நம்பர் ஏடு இன்னொரு கட்டுல இருக்கும். இன்னொரு கட்டுல உள்ள இரண்டாம் நம்பர் இந்தக் கட்டுக்குள்ள கலந்திருக்கும். அப்போ, ஒரு கட்டுல உள்ள தொடர்ச்சி விடுபட்டதும், இன்னொரு கட்டை தேடிப் படிக்கணும். இதனால் சுவடிகளைத் தொடர்ந்து படிக்கணும் என்கிற ஆர்வம் எனக்குள் வந்தது.
அப்படியாக தமிழ்ப் பண்டிதராக அங்கேயே வாய்ப்பு கிடைத்தது. இங்கு கொரோனாவுக்கு முன்னாடி ஒரு பத்தாண்டுகள் தொடர்ச்சியாக சுவடி பயிலரங்கம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. இதுவும் கட்டணம் இன்றித் தான் நடந்தது. கொரோனாவிற்குப் பிறகு தொடர்ந்து நடத்த வாய்ப்பில்லாமல் போனது.
இதுக்கு இடையில்தான் நான், ‘ஏடகம்’ அமைப்பை ஆரம்பிச்சேன்...’’ என்கிற மணி. மாறன், பழந்தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். ‘ஏடகம்’ தொடங்கியதற்கான காரணம் குறித்து தொடர்ந்தார். ‘‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்தப்ப இந்தியா முழுக்க உள்ள சுவடிகளைக் கணக்கெடுக்க அரசு ஒரு குழு போட்டது. அப்போ, 35 லட்சம் சுவடிகள் இருப்பதாக அடையாளம் கண்டாங்க. தொடர்ந்து ஆய்வு செய்யும்போது இங்கிலாந்து, ஜெர்மன், ரஷ்யா, பிரான்ஸ்னு முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட உலக நாடுகள்ல 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவடிகள் இருப்பது தெரிஞ்சது. இதனை சுதந்திரத்திற்கு முன்னாடியே கொண்டு போய்ட்டாங்க. அதனை அவங்க பாதுகாத்திட்டும் வர்றாங்க.
தொடர்ச்சியாக அந்த நாடுகள்ல இருந்து கணிதம், மருத்துவம், வானியல் சார்ந்த ஆய்வுக்காக இந்தியாவுக்கு வந்திட்டும் இருக்காங்க. பிரான்ஸ் அரசு பாண்டிச்சேரியில் ஒரு நிறுவனம் வச்சு நிதிகள் ஒதுக்கி ஆய்வு செய்றாங்க.
நம்மிடம் வானியல் சார்ந்த கருத்து அவ்வளவு துல்லியமாக இருக்கு. அதனை நம் முன்னோர்கள் சிறப்பாக வகுத்து வச்சிருக்காங்க. காலங்கள் சார்ந்து மழைப் பொழிவு எப்படி இருக்கும், எப்ப வெள்ளம் வரும், எப்ப பஞ்சம் வரும்னு எல்லாமே தெளிவாக சுவடிகளில் எழுதி வச்சிருக்காங்க. அதை வச்சுதான் விண்கோள் ஏவுதலை உலக நாடுகள் அருமையாக செய்றாங்க. நம்முடைய அறிவுதான் அங்கே பயன்படுது.
இதுதவிர நான் கேரளா பல்கலைக்கழகம், ஆந்திராவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் எல்லாம் போயிருக்கேன். அங்க தெலுங்கு மொழியில் தமிழ் ஓலைச்சுவடிகள் இருப்பதைப் பார்த்திருக்கேன். அதேபோல் கேரளா பல்கலைக்கழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவடிகள் மலையாள எழுத்தில் வச்சிருக்காங்க.
ஆனா, சுவடி உள்ளே செய்தி தமிழில் இருக்கும்.இப்படி உள்ள 35 லட்சம் சுவடிகளில், 25 லட்சம் சுவடிகள் தமிழ்ச் சுவடிகளாக இருக்குது. இதுதவிர, சென்னையில் உள்ள அரசினர் ஓலைச்சுவடி நிறுவனம் உள்ளிட்ட நூலகங்களிலும், தனியார் மடங்களிலும், நிறுவனங்களிலும் இருக்கிற சுவடிகள்னு பார்த்தால் ஐந்து லட்சம் தேறும். அப்புறம், தனிநபர்கள் கிட்ட பரந்துபட்டு நிறைய சுவடிகள் இருக்கு.
ஆனா, இதில் பதிப்புனு பார்த்தால் வெறும் 10 சதவீத சுவடிகள்தான் வந்திருக்கு. மற்ற சுவடிகளில் என்ன இருக்குனே யாருக்கும் தெரியாது. அது பெரிய கேள்விக்குறியாக இருக்கு.
இதெல்லாம் தெரிந்தபிறகுதான் சுவடிகளைப் பற்றிய புரிதலை மாணவர்களிடம் பரப்பணும்னு தோணுச்சு. பிறகு சுவடிகள் படிக்கவும், எழுதவும் மாணவர்களை உருவாக்கணும்னு இறங்கினேன்.
2017ம் ஆண்டு நண்பர்களை இணைத்துக் கொண்டு ‘ஏடகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். பிறகு 2018ம் ஆண்டில் இலவசமாக சுவடிப் பயிற்சியைத் தொடங்கினேன். இதுக்கு நிதியுதவினு பெரிசா கிடையாது. நான் பணியிலிருப்பதால் யார்கிட்டயும் நன்கொடை கேட்டுப் பெறுவதில்லை.
விரும்பி சின்னஞ்சிறு தொகை வழங்கும் ஒரு சிலரோடு, நானும் என் மாணவர்கள் சிலரும் தரக்கூடிய ஆயிரம், இரண்டாயிரம் தொகையினைக் கொண்டு இடத்தின் வாடகை உள்ளிட்ட செலவுகள் செய்து சுவடிப் பயிற்சி கொடுத்து வருகிறோம். நான் மட்டுமன்றி என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஓரிருவரும் பாடம் எடுத்து வருகின்றனர்.
இந்த இலவச பயிற்சி தவிர, மாதாந்திர இலக்கியக் கூட்டம் ஒண்ணு நடத்துகிறோம். இப்ப இங்க படித்த முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையப் பல்கலைக் கழகத்திலும், சித்த மருத்துவ நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் வேலை செய்றாங்க.
இந்து சமய அறநிலையத்துறையில் சுவடிகள் சேகரிப்புனு ஒரு பிரிவு இருக்கு. அதிலும் என் மாணவர்கள் பணி செய்றாங்க. ஆனா, என்னுடைய கணக்குப்படி இத்தனை லட்சம் சுவடிகளைப் படிக்கணும்னா இந்த எண்ணிக்கை பத்தாது. ஆயிரக்கணக்கான பேர்கள் இருந்தால்தான் ஓரளவு கொண்டுட்டு வரமுடியும். அதனால் தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்திட்டு இருக்கேன்.
இதுக்கிடையில் நல்லா நடத்துறதால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேசினாங்க. அவங்களுடன் டைஅப் செய்து ஓராண்டு டிப்ளமோ கோர்ஸ் நடத்தினேன். அப்புறம், செலவு நிறைய ஆனதால் தொடர்ந்து நடத்தமுடியல.இப்ப பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஒரு அனுமதி கிடைத்து அவர்களின் பட்டய சான்றிதழ் வகுப்பு நடந்திட்டு இருக்கு.
என்னுடைய மாணவர்கள் அனைவரும் சுவடி பார்த்து பிரதி செய்றது, கல்வெட்டு படிக்கிறதுனு எல்லா வேலைகளும் செய்வாங்க. வேலைக்கு நேரடியாக போனவங்க இல்லாமல், இங்க நேரடியாக படிச்சிட்டு இருக்கிற மாணவர்களுக்கும் வெளியிலிருந்து பணிகள் வரும். சிலபேர் ஆவணங்கள் கொடுப்பாங்க. சிலர் மருத்துவ சுவடிகள் இருக்கு, படிச்சு எழுதித் தரமுடியுமானு கேட்பாங்க. ஒருநாள் ஊதிய அடிப்படையில் சம்பளம் கொடுங்கனு பேசி பலருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கிறேன். இப்ப 12 பேர் படிச்சிட்டு இருக்காங்க...’’ என்கிற மணி. மாறனிடம் இதுவரை சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் சுவடிப் பயிற்சி பெற்று பயனடைந்து உள்ளனர். இதில் 70 பேர் சான்றிதழ் பெற்றவர்கள்.
‘‘முன்னாடியே சொன்னது மாதிரி இந்த எண்ணிக்கை போதாது. இன்னும் படிக்க வேண்டிய சுவடிகள் 90 சதவீதம் இருக்குது. இதுவரை படிச்ச சுவடிகளிலும் இன்னும் தேவாரப் பாடல்கள் சில கிடைக்கல.
சிற்றிலக்கியங்களில் பல பாடல்களும், பதிற்றுப்பத்து பாடல்கள்ல முன்னாடியும், பின்னாடியும் கிடைக்கல. இப்படி விடுபட்ட பகுதிகள் நிச்சயம் எங்காவது இருக்கும். இதைத் தேடிப் படிக்க நானோ, இப்போதைய என் மாணவர்களோ பத்தாது. இன்னும் நிறைய பேர் தேவை.
குறிப்பா, மொத்த சுவடிகளில் 60 சதவீதம் சித்த மருத்துவம் சார்ந்தது. மற்றவை வானியல், இலக்கணம், ஜோதிடம்னு இருக்குது. இவை எல்லாம் தமிழ்தான். பழைய எழுத்துக்கள்ல இருக்கும்.
அதனால் முதல்ல பயிற்சிக்குச் சேர்ந்ததும் நாங்க பழைய ஸ்கிரிப்ட் படிப்பதற்கான அடிப்படை விஷயங்களைக் கத்துக்கொடுப்போம். அப்புறம், சுவடியில் ஒவ்வொருத்தர் கையெழுத்தும் மாறுபடும். அதனைப் படிக்க நிறைய இடர்ப்பாடுகள் வரும். அதை எப்படி படிக்கணும்னு சொல்லித் தருவோம். அப்புறம் வட்டாரம் சார்ந்த வழக்குச் சொற்கள் நிறைய இருக்கும்.
உதாரணத்திற்கு பால்சோறு சாப்பிடுறது என்றால் சோற்றில் பால் ஊற்றி சாப்பிடுறதுனு நினைப்போம். தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம் பகுதிகளில் கிடைக்கும் சுவடியில் இந்த அர்த்தம்தான்.
ஆனா, நாஞ்சில் நாட்டு சுவடி கிடைத்து அதில் பால்சோறுனு இருந்தால் இந்த அர்த்தம் தவறானது. அங்க பால்சோறுனு வடிச்ச கஞ்சி சாதத்தைத்தான் குறிப்பிடுவாங்க. இன்னைக்கும் அங்க அன்னப்பால்னு சொல்வாங்க. அப்ப ஒரே சொல்லுக்கு நாஞ்சில் நாட்டில் ஒருபொருளும். தஞ்சைப் பகுதிகளில் ஒரு பொருளும் இருக்கு. அதேபோல் கோவைக்கு சமீபத்தில் போயிருந்தேன். அங்க ஒரு ஹோட்டல்ல உப்பு ஜவுளிக்கு அறை இலவசம்னு போட்டிருந்தது.
உப்பு ஜவுளி கைமாறுதல்னு ஒரு வழக்குச் சொல் உண்டு. இங்க நம் மாணவர்கள்கிட்ட கேட்டால் உப்பை வாங்கிட்டு ஜவுளி கொடுத்தாங்கனு சொல்வாங்க. ஆனா, கோவை பகுதியில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு உப்பு ஜவுளி கைமாறுதல்னு பெயர். அதனால் அந்தந்த ஊர்ல என்ன சொல்லியிருக்காங்கனு பார்த்து சுவடிகளைப் படிக்க சொல்வோம். அப்புறம் பழைய சுவடிகளில் அளவு முறைகள் நிறைய இருக்கும். குறிப்பாகப் பார்த்தால் சசிகன்னம்னு ஒரு சொல் இருக்கு. நாம் இதை என்னமோனு நினைப்போம்.
ஆனா, சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவுக்குப் பெயர்தான் சசிகன்னம். அப்புறம் மில்லியன், டிரில்லியன் எல்லாம் தாண்டிய அளவுகள் நம்மிடையே உண்டு. கற்பம், வெள்ளம்னு நிறைய இருக்கு.
இதையெல்லாம் மாணவர்களுக்குச் சொல்லித் தருவோம். ஆனா, இதைப்படிக்க ஆர்வம் முக்கியம். ஆர்வத்துடன் இருக்கிறவங்க ஆறு மாத காலத்தில் படிச்சிடுவாங்க. சிலருக்கு ஓராண்டு வரை ஆகும். இங்க வேலைக்குனு இல்லாமல் ஆர்வத்தால் வர்றவங்களும் நிறைய இருக்காங்க.
முன்னாடி வாரத்திற்கு மூன்று நாட்கள் வகுப்புகள் எடுத்திட்டு இருந்தேன். இப்ப ஞாயிறு மட்டும் மாலையில் இரண்டரை மணி நேரம் வகுப்பெடுக்கிறேன். ஆனா, மாணவர்கள் வாரத்துல ரெண்டு மூன்று நாட்கள் வந்து பயிற்சி செய்றாங்க.
அதனால் நிறைய பேர்களுக்கு சுவடிப் பயிற்சி கொடுத்து உருவாக்கும் நோக்கில் பயணிக்கிறேன். எதிர்காலத்தில் அவர்கள் வழியாக தமிழின், தமிழரின் பல சிறப்புகள் வெளிவரும்னு நம்பிக்கை இருக்கு. ஏன்னா, ஓலைச்சுவடிகள்ல அவ்வளவு விஷயங்கள் பொதிந்து கிடக்கு...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் பண்டிதர் மணி. மாறன்.
பேராச்சி கண்ணன்
|