எல்லா காலங்களிலும் தமிழ்ச் சினிமாவில் இஸ்லாமியர்கள் நடிகர்களாக, டெக்னீஷியன்களாக, ஃபைனான்சியர்களாக, தயாரிப்பாளர்களாக இருந்துள்ளனர்...
தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குநர்களாக சிலர் மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் மீரா கதிரவன். இவருடைய ‘அவள் பெயர் தமிழரசி’ தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த படைப்பு.  இப்போது இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘ஹபீபி’ இயக்கியுள்ளார். இதன் போஸ்டர், பாடல்கள் எல்லாமே தனித்துவமாக இருப்பதோடு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் மீரா கதிரவனிடம் பேசினோம்.  3வது படம் செய்ய ஏன் இவ்வளவு தாமதம்?
சினிமாவில் கூட்டாகச் சேர்ந்து செய்வது பலம். பலவீனமும் அதுதான். ஒரு படம் எப்போது துவங்கி, எப்போது ரிலீஸாகவேண்டும் என்பதை இயக்குநர் ஒருவர் மட்டுமே முடிவு செய்யமுடியாது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என எல்லா தரப்பையும் சேர்ந்தது.என்னுடைய முதல் படமான ‘அவள் பெயர் தமிழரசி’ 2009ல் வெளியாச்சு. தாமதம் ஏன் என்று பார்த்தால் நான் தேர்ந்தெடுக்கும் கதைக்களம்.  அது பழகிய களமாக இல்லாமல் தனித்துவமாக இருக்கும். கதைக்குத் தேவையான உழைப்பு, உருவாக்கத்துக்கு காலம் தேவைப்படுகிறது.முதல் படத்துக்காக நலிவுற்ற தோல்பாவை கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்ததோடு, கலைஞர்கள் சந்திப்பு, பொம்மைகள் தேடல், புதுமுகங்களுக்கு நடிப்புப் பயிற்சி என நீண்ட பிராசஸ் இருந்துச்சு. 
‘விழித்திரு’ ஓர் இரவில் நடக்கும் கதை. பகலில் 10 ஷாட் எடுத்தால் இரவில் 3 ஷாட்தான் எடுக்க முடியும். அந்தப் படம் 2015ல் வெளியாச்சு. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தாமதத்தை தவிர்க்க முடியவில்லை.‘ஹபீபி’ 100 வருட தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத முஸ்லீம் களம்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் ஷூட்டிங், முஸ்லீம்களை நடிக்க வைப்பது, அவர்கள் மொழி பேசுவது என இதற்கும் பிராசஸ் இருந்துச்சு.சராசரி ஃபார்மூலா படம் என்றால் வேகமாக எடுக்கலாம். களம்தான் நேரத்தை எடுக்கிறது. படைப்பு தாமதமாகும்போது இயக்குநராக கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. ‘ஹபீபி’ - 20 ஆண்டுகளாக உங்க மனசுல பூட்டிவெச்ச கதைன்னு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீங்க?
1960, 70 காலகட்டத்தில் வெளிவந்த சினிமாக்களுக்கு இஸ்லாமியர்கள் ஃபைனான்ஸ் செய்துள்ளார்கள். எம்ஜிஆர் படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்த பி.எஸ்.அப்துர் ரஹ்மான், விஜயகாந்த்தை அறிமுகப்படுத்திய எம்.ஏ.காஜா, விஜயகாந்த் நண்பர் இப்ராஹீம் ராவுத்தர், 2 ஆஸ்கர் வாங்கி உலக மேடையில் ‘எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே’ என்று சொல்லும் ஏ. ஆர்.ரஹ்மான் என எல்லா காலங்களிலும் இஸ்லாமியர்கள் நடிகர்களாக, டெக்னீஷியன்களாக, ஃபைனான்சியர்களாக, தயாரிப்பாளர்களாக இருந்துள்ளனர். ஆனால், இஸ்லாமிய வாழ்க்கையை தமிழ் சினிமா பதிவு செய்துள்ளதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.
தலித் வாழ்க்கை, பழங்குடி வாழ்க்கை என பல சமூகங்களின் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. இஸ்லாமிய வாழ்க்கையை ரத்தமும், சதையுமாக என்று சொல்வதுபோல் ஈரானிய படங்கள் போலவோ, மலையாளப் படங்கள் போலவோ வராத நிலையில் அதை செய்யணும்னு தோணுச்சு. தோல்பாவைக் கலைஞர்கள்தான் முதன் முதலில் திரையில் கதை சொன்னவர்கள். உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் இயக்குநர்கள் இருக்கலாம்.
ஆனால், அவர்கள் எல்லோருமே திரையில் கதை சொன்னவர்கள். திரையில் முதன் முதலில் கதை சொன்ன தோல்பாவைக் கலைஞர்கள் பற்றி கதைகள் வரவில்லை. ‘அவள் பெயர் தமிழரசி’யில் அதை களமாக வெச்சு முதன் முதலில் எடுத்தேன்.
திரையில் கதை சொன்னவர்களை ஃபிலிம் மேக்கராக எப்படி அந்தப் படத்தை எடுத்தேனோ அதுமாதிரி தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்கள் வாழ்க்கையை சொல்லும் படம் எடுக்க திட்டமிட்டேன். தற்போது இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள், முரடர்கள், பலதார மணம் செய்பவர்கள், பெண் அடிமைத்தனத்தை கொண்டாடக்கூடியவர்கள் என பல தவறான தகவல்கள் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு பரப்பப்படக்கூடிய காலமாக உள்ளது. இப்படியொரு படத்தை பண்ணணும்னு நீண்டகாலமாக மனசுல ஐடியா இருந்துச்சு. அடிப்படையில் நானும் அந்த மார்க்கத்திலிருந்து வந்தவன் என்றாலும். புனைபெயரை வெச்சுகிட்டு பென்னி மார்க்ஸ் என்ற கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்த பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டாலும் அடிப்படையில் பொது ஆளாக பார்க்கப்பட்டேனா என்றால் இல்லை. இஸ்லாமிய அடையாளத்துடன்தான் பார்க்கப்படுகிறோம்.
கடந்த 15 வருடங்களாக நான் சந்தித்த மக்களிடையே இஸ்லாமிய வெறுப்பு ஒவ்வாமை உருவாக்கப்படுகிறது. அதை களைவதற்காகவும் இந்தமாதிரி படம் பண்ணணும்னு முடிவு எடுத்தேன். அதுவும் என் வாழ்க்கையிலிருந்து படம் பண்ணணும்னு நினைச்சேன்.
தென் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லீம்களின் வாழ்க்கைதான் படம். அவர்கள் வாழ்க்கையில் உள்ள அன்பு, நேசம், காதல் போன்ற உணர்வுகளை மென்மையாகச் சொல்லும் படம். முஸ்லீம் களமாக இருந்தாலும் எல்லோரும் கதையோடு பொருத்திப்பார்க்கக்கூடிய படமாக இருக்கும். படம் ஆரம்பிச்ச அரை மணி நேரத்தில் இஸ்லாமிய படம் பார்க்கிறோம் என்ற உணர்வு போய் தங்கள் வாழ்க்கையைப் பார்ப்பதுபோல் இருக்கும். போஸ்டரில் கஸ்தூரி ராஜாவைத் தவிர தெரிஞ்ச முகங்கள் யாரும் இல்லையே?
கஸ்தூரி ராஜா முக்கியமான ரோல் செய்துள்ளார். அவருக்கு தேசிய விருது எதிர்பார்க்கலாம். அவர் இயக்குநர் மட்டுமல்லாமல், தேர்ந்த நடிகர் என்பதை இந்தப் படம் காட்டும். மற்றபடி இந்தக் கதைக்கு இமேஜ் இல்லாதவங்க இருந்தா முஸ்லீம் ஆண்களாகவும், பெண்களாகவும் பார்க்கப்படுவாங்கன்னு நிறைய புதுமுகங்களை நடிக்க வெச்சிருக்கிறேன். அப்படி ஈஷா, ‘ஜோ’ மாளவிகா மனோஜ் மனசுல இடம் பிடிக்குமளவுக்கு பிரமாதமா நடித்தார்கள்.
நாகூர் ஹனீபாவின் குரலில் ‘வல்லோனே...’ பாடலை ஏ.ஐ.டெக்னாலஜியில் உருவாக்கும் ஐடியா எப்படி வந்துச்சு?
இதுல கடந்த 40 வருட இஸ்லாமிய வாழ்க்கையைத்தான் படமா பண்ணியிருக்கிறோம். அந்த வாழ்க்கையில் நாகூர் ஹனீபா குரலைத்தவிர்த்து பார்க்க முடியாது. தமிழ் முஸ்லீம்கள் மட்டுமல்லாம, முஸ்லீம் அல்லாத பிற மார்க்கத்தைச் சேர்ந்தவங்களுக்கும் ஹனீபாவின் குரல் பண்பாட்டுத் தளத்தில் முக்கியமா இருக்கு. அந்த அடையாளத்தைப் பதிவு பண்ணணும்னு நெனைச்சு பண்ணினோம்.
ஆரம்பத்துல ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக சினிமா வட்டாரங்களில் நியூஸ் வந்துச்சே?
தவறான தகவல். அவரிடம் போகுமளவுக்கு எங்களிடம் பட்ஜெட் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஆன்மிக தேடலில் சூஃபி பாடல்களால் சூரியன் மாதிரி பிரகாசிச்சுட்டு இருக்கிறார். அவரிடம் ‘ஹபீபி’ மாதிரி சின்ன விளக்கை காட்ட வேண்டிய அவசியமில்லை. சாம் சி. எஸ். மியூசிக் வித்தியாசமா இருக்கும். ஹாரர் படம் பண்ணுகிறவர்கள் மெலடி படத்தை சேலஞ்ச் எடுத்து பண்ணுவாங்க. அப்படி 5 பாடல்களை அழகா கொடுத்தார். பாடல்கள் யுகபாரதி.
மகேஷ் முத்துசுவாமி எனக்கு பிடிச்ச கேமராமேன். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘மெளனகுரு’ என அவர் ஒளிப்பதிவு செய்த படங்களுக்கு நான் பெரிய ரசிகன். இது கவித்துவம், அமைதி இருக்கக்கூடிய படம். அவருடன் வேலை செய்யவேண்டும்னு ஆசை என்பதோடு படத்துல இருக்கும் ஆன்மாவை அவரால் கேப்ச்சர் பண்ணமுடியும்னு நம்பினேன்.
சுரேஷ் காமாட்சி சாருக்கு பெரிய நன்றி சொல்லவேண்டும். இயக்குநர் ராம் படம் பார்த்துவிட்டு அவரிடம் சொல்லியிருக்கிறார். படம் பார்க்க முடியுமா என்று கேட்டபோது, டப்பிங் வெர்ஷன்தான் கொடுத்தேன். படம் பார்த்துவிட்டு நானே ரிலீஸ் பண்றேன்னு ரிலீஸ் வேலைகளை அதிக முனைப்போடு செய்து வருகிறார். பாலுமகேந்திரா, தங்கர்பச்சான் ஆகியோரிடம் என்ன கத்துக்கிட்டீங்க?
மலையாள இயக்குநர் லோகிததாஸ் சாரை விட்டுட்டீங்க! பாலு சாரிடம் தொழில் நேர்த்தி இருக்கும். அதை அவரிடம் கத்துக்கிடேன். தங்கர்பச்சான் சாரிடம் கடின உழைப்பு இருக்கும். 5 நாட்கள் தொடர்ந்து வேலை பார்க்க சொன்னாலும் தூங்காம வேலை பார்ப்பார்.
லோகிததாஸ் சாருக்கு கேரளாவில் ‘திரைக்கதை எம்புரான்’னு பேர். அவரிடம் ஸ்கிரிப்ட் கத்துக்கிட்டேன். மூவரின் இன்ஃபுளூயன்ஸ் என்னிடம் இருக்கு.உங்க முதல் படத்தை ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ செய்வதாக இருந்துச்சு.
அது ஞாபகம் இருக்கிறதா?
அது பெரிய இழப்பு. அந்த பேனரில் ‘அவள் பெயர் தமிழரசி’ பண்ணியிருந்தால் பெரியளவில் பேசப்பட்டிருக்கும். மணி சார் தம்பி ஜி.எஸ். பண்ணுவதாக இருந்தார். அந்தப் படத்துக்காக டிரைலர் காப்பி எடுக்க சொன்னார். அப்போது ஷார்ட் ஃபிலிம் கல்ச்சர் இல்லை.
அதுல பாபி சிம்ஹா, கேமராமேன் பி.ஜி. முத்தையா, மனோ சித்ராவை அறிமுகமாகக் கொண்டு வந்தேன். அந்த டிரைலர் வெளியாகும் முன் ஜி. எஸ். மரணமடைந்தார். அது பெரிய துயரம். பெரிய இழப்பு. அவர் இருந்திருந்தால் முழுமையான படமாக வந்திருக்கும். தமிழ் சினிமாவில் என்னுடைய இடமும் ஸ்ட்ராங்காக இருந்திருக்கும்.
எஸ்.ராஜா
|