செக்ஸ் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்
அமெரிக்காவை கலங்கடிக்கும் இரகசிய ஆவணத்தின் கதை
இப்போது அமெரிக்கர்கள் முணுமுணுக்கும் ஒரு பெயர் என்றால் அது ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’தான்.
அது என்ன ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’?
சுமார் 20 வருடங்களுக்கு முன் ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் எனும் ஒரு சாதாரண அமெரிக்க பள்ளி ஆசிரியர், 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் தீங்கு இழைத்ததாக ஒரு புகார் வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட எப்ஸ்டீனின் வீட்டில் நூற்றுக்கணக்கான சிறுமியர்களின் புகைப்படங்கள் இருந்ததாகபத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.  வழக்கு கோர்ட்டுக்கும் போனது. கோர்ட்டிலும் சுமார் 36 பெண்கள் வரை எப்ஸ்டீன் பாலியலுக்காகப் பயன்படுத்தியதாகவும் செய்திகள் கசிந்தன. பெண்களில் சிறுமிகளும் அடக்கம் என்பது அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்கர்களால் இதை ஏற்கவும் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. இந்த வழக்கு நீண்டுகொண்டே போய் இறுதியில் 2008ல் முடிவுக்கு வந்தது. அப்போது எப்ஸ்டீன் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் முதலில் வந்த புகாரின் அடிப்படையில் மட்டும் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது 36 பெண்களைச் சீரழித்தார் என்ற குற்றச்சாட்டு காணாமல்போனது. இதனைத் தொடர்ந்து 13 வருட சிறைவாசத்துக்குப் பிறகு எப்ஸ்டீன் விடுவிக்கப்பட்டார்.
 ஆனால், மீண்டும் 2019ல் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் பாலியல் குற்றம் இழைத்தார் என்ற புகார் மட்டும் எழவில்லை. சிறுமிகள் உட்பட பல பெண்களை பாலியலுக்காக பலபேருக்கு விருந்தாக்கினார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனை ஒட்டி அந்த ஆண்டில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வருடமே சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார் - தூக்கில் தொங்கினார். அப்படித்தான் அமெரிக்க காவல்துறை சொன்னது.

இதனைத் தொடர்ந்து எப்ஸ்டீனின் பாலியல் நெட்வொர்க்கில் யார் எல்லாம் விருந்தினர்களாக இருந்தார்கள் எனும் மில்லியன் டாலர் கேள்வி அமெரிக்க மக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த விருந்தினர் லிஸ்ட்டைத்தான் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என அமெரிக்கர்களும் சர்வதேச மீடியாக்களும் அழைக்கின்றன.
எப்ஸ்டீனுக்குச் சொந்தமான ஒரு தீவு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது. அத்தீவில்தான் ‘முக்கியமான’ பல தலைகளுக்கு பெண்களை - குறிப்பாக சிறுமிகளை எப்ஸ்டீன் விருந்தாக்கினார்... இவை அனைத்தும் கேமராவில் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கேமரா பதிவுகள் அனைத்தையும் அமெரிக்க காவல்துறை கைப்பற்றியிருக்கிறது என்பதுதான் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸி’ன் ரகசியம்.
இப்படி கேமராவில் பதிவான ‘முக்கிய’ தலைவர்களில் இன்றைய அமெரிக்க அதிபரான டிரம்பும் அடக்கம் என்ற ‘செய்தி’தான் சர்வதேச அளவில் கொழுந்துவிட்டு எரிகிறது. இன்னும் இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் எலான் மஸ்க்குக்கும் டிரம்புக்கும் பிரச்னை எழுந்தது. அப்பொழுது ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸி’ல் டிரம்பும் இருக்கிறார் என மஸ்க் அறிவித்தார்!
இதனைத் தொடர்ந்து இந்த விஷயம் அமெரிக்கா முழுக்க சூடுபிடித்திருக்கிறது. டிரம்பும் ஒரு குற்றவாளியாக இருக்கலாம் என அமெரிக்கர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர்.
காரணம், கடந்த அதிபர் தேர்தலுக்கு முன் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸை வெளியிடுவேன்’ என்று தேர்தல் அறிக்கையில் டிரம்ப் சொல்லியிருந்தார்.
ஆனால், பதவிக்கு வந்து இத்தனை மாதங்களுக்குப் பிறகும் அதுகுறித்து அவர் வாயே திறக்கவில்லை.எனவே பெரும் செல்வந்தர்கள், உயர்மட்டத்தில் இருப்பவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல்வாதிகள்... எனப் பலரும் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸி’ல் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. போதாதா? இந்த ஃபைல்ஸை விரைவில் வெளியிடவேண்டும் என அமெரிக்கர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். ஆனால், ‘பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி’ அதை வெளியிடமுடியாது என அமெரிக்க நீதிமன்றம் கைவிரித்துவிட்டது.இதனைத் தொடர்ந்து ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ வெளியாகாமல் இருக்க அதிலுள்ளவர்கள் சதி செய்கிறார்கள் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. யார் இந்த எப்ஸ்டீன்?
யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர், கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு பள்ளியில் ஆசிரியராக இணைந்தார். ஆனால், ஆசிரியராவதற்கான கல்லூரித் தகுதி அவரிடம் இல்லை என்பதாகவே ஆதாரங்கள் சொல்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.பிறகு நிதி சேவைக்கான ஒரு தனியார் நிறுவனத்தை எப்ஸ்டீன் நிறுவினார்.
பணம் இழந்தவர்களுக்கு அதை மீட்டுக் கொடுக்கும் நிறுவனமாக இது செயல்பட்டது. இந்த வேலை மூலம் பல செல்வந்தர்களின் தொடர்பும் எப்ஸ்டீனுக்குக் கிடைத்தது. இப்படித்தான் ரியல் எஸ்டேட் தொழிலில் கோலோச்சிய டிரம்ப் முதல் முன்னாள் அதிபரான கிளிண்டன் வரை எப்ஸ்டீனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ‘எப்ஸ்டீன் ஒரு பயங்கரமான ஆள்... மிகவும் ஜாலியான மனிதர். அதிலும் சிறுபெண்கள் புடைசூழ அவர் இருப்பது அவருக்கு ஒளிவட்டத்தை கொடுக்கிறது...’ என டிரம்ப் புகழ்ந்திருக்கிறார்! இவற்றுக்கான ஆதாரங்கள் இப்பொழுது மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.மட்டுமல்ல... எப்ஸ்டீன் சிறையில் தூக்குபோட்டு இறந்தது இப்பொழுது பேசுபொருளாகியிருக்கிறது. காரணம், தூக்குபோட்டு இறப்பதற்கான சூழலே அந்த சிறையில் இல்லை என பல நிபுணர்கள் அலசி ஆராய்ந்து சொல்லியிருப்பதுதான்.
உதாரணமாக, மிகவும் பாதுகாப்பான அந்த சிறையில் கண்காணிப்பு கேமரா இருக்கும். கைதிகள் ஏதாவது ஒரு சிறு துரும்பை வைத்துக்கூட தற்கொலைக்கு முயலக்கூடும் என்பதால் அந்த சிறையில் ஒரு துரும்பு கூட இருக்காது.
உத்தரத்தில் கயிற்றை மாட்ட கொக்கி கிடையாது. கொக்கியில் மாட்ட துணியும் கூட இருக்காது. கைதியும் நிர்வாணமாகத்தான் இருக்கவேண்டும். இப்படியிருக்கையில் எப்படி எப்ஸ்டீன் தூக்கில் தொங்க முடியும் என்ற வினா சூறாவளியாக அமெரிக்காவைச் சுழன்றடிக்கிறது.
இத்துடன் எப்ஸ்டீனுக்கு சிறுமிகளைப் ‘பிடித்துக் கொடுத்த’ பணிக்காக ஒரு பிரிட்டிஷ் பெண்ணும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த பாலியல் குற்றச்சாட்டில் முக்கிய சாட்சியாக இருக்கும் வேறொரு பெண்ணும் தொடர்ச்சியாக பூடகமாக பல ஆதாரங்களை அள்ளி வீசி வருகிறார்.
என்றாலும் எப்ஸ்டீனின் ‘தீவு பார்ட்டி’யில் கலந்துகொண்ட பெரிய மனிதர்களின் பெயர்ப் பட்டியல் மட்டும் இன்றுவரை வெளியாகாமல் இருக்கிறது.இந்த ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸை’ வெளியிட வேண்டும் என ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் போராடத் தொடங்கியுள்ளனர். இவர்களது போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா என்பது இனிவரும் காலங்களில் தெரியும்! ஊழலும் பாலியல் குற்றச்சாட்டுகளும் அமெரிக்காவுக்கு புதிதல்ல!
* 1776ம் ஆண்டு யுஎஸ்ஏ எனும் அமெரிக்க ஐக்கிய நாடு உருவானது. இதனைத் தொடர்ந்து இருபதே ஆண்டுகளில் - 1797ல் - முதல் செக்ஸ் ஸ்கேண்டல் எனப்படும் பாலியல் குற்றக் கறை படிந்துவிட்டது. அப்போதுதான் நிதிக் கருவூலம் எனும் ஒரு முக்கியமான துறை அமைக்கப்பட்டு அமெரிக்காவின் எதிர்காலம் திட்டமிடப்பட்டது. அந்தத் துறையின் தலைவராக இருந்தவர் அலெக்சாண்டர் ஹாமில்டன்.
இவர்தான் செக்ஸ் ஸ்கேண்டல் பட்டியலில் இடம்பிடித்த முதல் நபர். இந்த குற்றத்தை ‘ரெய்னால்ட் அஃபயர்’ (Reynold Affair) என்கிறது அமெரிக்க வரலாறு.
பண உதவிக்காக ஏழைப் பெண்ணான மரியா ரெய்னால்ட், ஹாமில்டனை சந்தித்திருக்கிறார். அவரது தேவையை மையப்படுத்தி ஹாமில்டன் அவரை ‘பயன்படுத்தி’க் கொண்டார்.
ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் ஹாமில்டன் இருந்தார் எனும் பிரச்னையைவிட அந்த கருவூலத்தில் இருந்த அமெரிக்கர்களின் பணத்தை ரெய்னால்டுக்கு வாரி வழங்கினார் என்பது அமெரிக்காவையே உறைய வைத்தது.
* 1828ல் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். இராணுவத்தில் இருந்த இவர், அதிபரானதும் ‘கல்லறை துண்டுப்பிரசுரம்’ எனும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது ஜாக்சன் மிலிட்டரியில் இருந்தபோது, பல இராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்று புதைத்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. ஆனால், இராணுவத்தில் இருந்து ரகசியமாக வெளியேறியவர்களைத்தான் தேடி சுட்டதாக ஜாக்சன் சொன்னார். ஆனால், பிரசாரகர்கள் தொடர்ச்சியாக பிரசாரம் செய்தார்கள். இதனை மீறி ஜாக்சன் அடுத்த தேர்தலில் மீண்டும் அதிபரானார்.
குற்றம்சாட்டினாலும் அது நிஜத்துக்கு அருகாமையில் இருக்கவேண்டும் என்ற உண்மை இதிலிருந்து தெரிவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். * மார்க் ட்வைன், அமெரிக்க நாவலாசிரியர்களில் முன்னோடி. ஒருமுறை இவர் யாரோ ஒருவருக்கு எழுதிய கடிதத்தை வைத்து, அதில் குற்றப் பின்னணிக்கான சாட்சியம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உடனே அந்தக் கடிதத்தை தன் பெயரிலேயே ஒரு பிரபலமான பத்திரிகையில் மார்க் ட்வைன் மீண்டும் பிரசுரிக்கச் செய்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு குற்றச்சாட்டை முளையிலேயே கிள்ளவேண்டும். இதற்கு அந்தக் குற்றத்தின் மர்மங்களை முதலிலேயே வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அது புஸ்வாணமாகும் என ஆராய்ச்சியாளர்கள் அனலைஸ் செய்தனர். இப்படி டிரம்ப் இப்பொழுது செய்திருந்தால் இந்தளவுக்கு ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ விஸ்வரூபம் எடுத்திருக்காது என்கிறார்கள்.
* அரசியலில் மட்டுமல்ல. பிசினசிலும் ஒருவரை சிக்க வைப்பதற்கான நூதன முயற்சிகள் அமெரிக்காவில் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. இதற்கான சாம்பிளாக ஜே.பி மார்கன் எனும் பிசினஸ் மேக்னட்டை உதாரணம் காட்டுகிறார்கள். தன் பிசினஸ் எதிரிகளின் குற்றச்செயல்களை கண்ணில் எண்ணெய் விட்டு மார்கன் தேடிக்கொண்டே இருப்பாராம். இதற்காகவே வேவு பார்க்கும் படையையே வைத்திருக்கிறாராம். இதன்மூலம் தன் பிசினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளாராம்.
* எட்கர் ஹூவர் - அமெரிக்காவின் நம்பர் ஒன் உளவு அமைப்பான எஃப்.பி.ஐ யின் இயக்குனராக சுமார் 48 வருடம் கோலோச்சியவர். இன்றைய எஃப்.பி.ஐ.யின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் இவர்தான்.அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், பிரபலங்கள் மற்றும் உயர்மட்டத்தில் இருப்பவர்களின் வண்டவாளங்களை பட்டியலிட்டு ஃபைல் தயாரித்து பீரோவில் ரகசியமாக வைக்கும் பழக்கத்தைக் கொண்டு வந்தவர் இவர்தான்.
இப்படி மார்ட்டின் லூதர் கிங் முதல் ஜான் எஃப்.கென்னடி வரை பலரது ரகசியங்களைச் சேகரித்து ரகசியமாக வைத்திருந்தார். எதற்காக? தான், எடுக்கும் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு யாராவது குறுக்கே வந்தால் சம்பந்தப்பட்டவர்களின் ‘ஃபைலை’ எதிரியிடம் கொடுத்துவிடுவார்! இதன்பிறகு ‘எதிரி’, ஹூவரின் வழியில் குறுக்கே நிற்கமாட்டார்.
* அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் குறித்து அறிமுகம் தேவையில்லை. ஹூவர் மாதிரியே நிக்சனும் பல அரசியல் எதிரிகளின் குற்றப்பட்டியலை தயாரித்து வைத்திருந்தார். ஆனால், அது பூமராங் ஆகிவிட்டது!ஆம். நிக்சன் எதிரிகளை மிரட்டுவதற்குப் பதிலாக எதிரிகள் அவரை மிரட்ட ஆரம்பித்தனர்! யெஸ். நிக்சன் தயாரித்த லிஸ்ட்டை கைப்பற்றிய எதிரிகள், அந்த லிஸ்ட்டையே காரணமாக வைத்து நிக்சன் மேல் அவதூறு வழக்கு கொண்டுவந்தனர். இதைத்தான் ‘வாட்டர்கேட் ஸ்கேண்டல்’ என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள். கடைசியில் நிக்சனின் ஆட்டமும் இந்த வாட்டர்கேட்டில் காணாமல்போனது.
* அமெரிக்க அதிபராக இருந்த கிளிண்டனுக்கும் வெள்ளை மாளிகையில் சாதாரண ஊழியராக இருந்த மோனிகா லெவின்கி என்ற இளம் பெண்ணுக்கும் இடையில் நிகழ்ந்த அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும்.
டி.ரஞ்சித்
|