விண்வெளியில் ஒரு நாள்!
நாசாவில் இருந்து ஸ்வர்ண ரம்யா
பஞ்சு போன்ற இருக்கையில் அமர்ந்தபின்தான் உணர்ந்தேன்... இருக்கையில் என் உடலின் கால் பங்கு மட்டுமே பொருந்தியது. வயிற்றின் குறுக்கே ‘சீட் பெல்ட்’ பொருத்துமாறு அறிவிப்பு வந்தது.
திடீரென என் இருக்கை செங்குத்தாக சாய்ந்தது. ‘டி மைனஸ் 10... 9... 8...’ என எண்கள் தலைகீழாக அறிவிக்கப்பட்டன. நான் இருந்த அந்த விண்கலம் மெதுவாக உறுமத் தொடங்கியது. என் முதுகுத்தண்டை மசாஜ் செய்து கொண்டிருந்த இருக்கை என்னை இறுக்கத் துவங்கியது.

‘7... 6... 5...’ சுற்றிலும் இருந்த காற்று வெப்ப முகமூடி அணிந்து சற்று பயமுறுத்தியது. இறுக்கமும் அதிகரித்தது. ‘4... 3...’ உறுமல் மேலும் அதிகரிக்க இருக்கைகள் அதிரத் துவங்கின. காதுகள் அடைப்பதைப் போன்ற சப்தம் எங்கிருந்தோ கீச்சிட்டது. ‘2... 1...’ இருக்கையின் அதிர்வுகளும், காற்றின் வெப்பமும், இறுக்கமும் உச்சத்தை அடைய, சீறி விண்வெளியில் பாய்ந்தது விண்கலம்.
சிறிது நேரத்தில் ஒரு நிசப்தம். என் தலையின் மேலிருந்த கண்ணாடி வழியே பூமி என்னை விட்டு மெதுமெதுவாக விலக... முதன்முதலில் நேரில் ஒரு உருண்டையான பூமி. தாயின் பிரமாண்ட, இருட்டு கருவறையில் ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் ஒரு நீலக் கருவாக.
 ‘நாசாவின் எஸ்.எல்.வி சிம்முலேட்டர் நிகழ்ச்சிக்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்...’ என ஒரு அயல்நாட்டுக் குயில் கூவினாலும் வெகு நேரத்திற்குப் பிறகே என் கால்கள் தரையில் இறங்கின. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரிலிருந்து, இரண்டு மணி நேர சாலைப் பயணத்திற்குப் பின் நம்மை 1,44,000 ஏக்கர் விஞ்ஞானத்தோடு வரவேற்கிறது கென்னடி விண்வெளி மையம்.
 டிஸ்னி உலகம் மற்றும் யுனிவர்சல் பொழுதுபோக்கு பூங்காக்களின் இருப்பிடமான ஓர்லாண்டோ நகரின் பரபரப்பு இங்கு துளியும் இல்லை. 1500 வகையான உயிரினங்கள் அறிவியலோடு கை குலுக்கி வாழும் இந்த மெரிட் தீவுதான் நாசாவின் உறைவிடம்.கென்னடி மையத்தின் வலைதளத்தில் நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தோம். ஓர்லாண்டோவிலிருந்து மையத்திற்கு பொதுப் போக்குவரத்தோ, கால் டாக்ஸி சேவையோ இல்லை. நுழைவுச்சீட்டுடன் தனியார் பேருந்தின் பிக்-அப் மற்றும் ட்ராப் வசதியைக் கோரலாம்.
உள்ளே நுழைந்ததும் நம் கண்களை ஈர்க்கிறது ராக்கெட் தோட்டம். விண்வெளியில் மனிதர்கள் செய்யும் தேடல் வேட்டைகளின் தூதுவர்களாக, கம்பீரமாக நின்று கொண்டிருந்தனர், பச்சைப் புல்வெளியின் மத்தியில் அசர வைக்கும் 200 ப்ளஸ் அடி உயர ராக்கெட்டுகள். நிமிர்ந்து பார்த்தால் நம் கழுத்துக்கு ஃபிசியோ தேவைப்படும் என்பதால் இதில் ஒருவர் மட்டும் அனந்த சயனத்தில். நாசாவின் மெர்க்குரி, ஜெமினி மற்றும் அப்பல்லோ மிஷன்களுக்கு உறுதுணையாக இருந்த உண்மையான ராக்கெட்டுகள் இவை.
‘செவ்வாய் கிரகத்தின் மேல் பறக்கலாம் வாங்க’ என நவீனமாக அழைத்தது ‘ஜர்னி டூ மார்ஸ்’ அரங்கம். 3-டி கண்ணாடிகள் அணிந்த ‘மினியன்’ பொம்மைகளாக நாம் அமர்ந்திருக்க... நம் கண்முன் முப்பது அடி உயர, 98 அடி அகல எல்.இ.டி திரை தன் அரைவட்ட வாய் திறந்து நிற்கிறது. ‘எவ்ளோ பெரிய திரை!’ என நாம் மிரள்வது நிச்சயம்.
நம் பாதுகாப்புக்கு சீட்பெல்ட்டும், ரோலர் கோஸ்டர் இயந்திரங்களில் காணப்படும் தடுப்புகளும் உள்ளன. நம் கால்களுக்கு கீழுள்ள தளம் முற்றிலும் விலகிச் சென்றுவிடுவதால், திரையில் தோன்றும் செவ்வாய் கிரகத்தின் மீது உண்மையாக பறப்பதைப் போன்ற பரவச உணர்வு ஏற்படுகிறது. இங்கிருந்து தனிப் பேருந்தில் நம்மை வி.ஏ.பி எனப்படும் ‘வெஹிக்கல் அஸெம்ப்ளி’ கட்டடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். பல ‘வசி’க்களும், வேலையுள்ள பட்டதாரிகளும் சேர்ந்து, ராக்கெட் பாகங்களை ஒரு முழு எந்திரனாக உருவாக்கும் இடம். 525 அடி உயரமுள்ள இந்த கட்டடம்தான் உலகின் மிக உயரமான ஒற்றை மாடி கட்டடம். இந்தக் கட்டடத்திற்குள் செல்ல அனுமதி இல்லை.
இவ்வளவு உயர கட்டடத்திற்குள் க்ராபிக்ஸ் இல்லாமலேயே சூடான காற்று மேலெழும்பி, மேகங்கள் உருவாகி, ஒரு முறை மழைகூட பெய்தது எனக் கூறினார் எங்கள் பேருந்தின் கைடு. ‘விண்ணிற்கு பத்து நொடிகளில் ஏவப்படும் ராக்கெட்டுகளை, ஏவுதளத்திற்கு கொண்டு செல்வதற்கு பத்து மணி நேரம் ஆகும்...’ என அவர் கூற வியப்பில் எங்கள் காதுகள் முயல் காதுகளாய் மாறின. ‘க்ராலர்’ எனப்படும் ராட்சத வண்டியின் மீது, ஒரு மணி நேரத்தில் ஒன்றரை கிமீ என்னும் (வி)வேகத்தில், ஊர்ந்து செல்கின்றன ஆஜானுபாகுவான ராக்கெட்டுகள்.
‘நிலவிற்கு மனிதன் முதன்முதலில் சென்றது இந்த ‘39ஏ’ ஏவுதளத்திலிருந்துதான். முதலாம் அப்பல்லோ மிஷன் தோல்வியடைந்து, ஏவுதல் ஒத்திகையின் போது மூன்று விஞ்ஞானிகள் இறந்ததும் இங்குதான்...’ என கைடு கூறியபோது, உண்மையாகவே மெய்சிலிர்த்தது.
விண்கலத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு விட்டால் உள்ளிருக்கும் விண்வெளி வீரர்கள் உடனடியாக வெளியேற, ‘ஜிப்லைன்’ எனப்படும் தொங்கியபடி இறங்குவதற்கான கயிறுகள் ஏவுதளத்தின் அருகே உள்ளன. வீரர்கள் விண்ணிற்கு செல்லும்முன் பத்து நாட்கள் மையத்தில் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கு இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமல் கூறிக் கொண்டே வந்தார் எங்கள் 70+ வயது கைடு. ‘இந்த வயதில் எப்படி உங்களுக்கு இவ்வளவு நினைவாற்றல்?’ என அவரிடம் கேட்டபோது, ‘புத்தகங்கள்’ என்றார் புன்சிரிப்புடன்.
ராக்கெட் ஏவுதலை நேரில் காண விரும்பும் பொதுமக்கள், முன்கட்டணம் செலுத்தி பார்வையாளர் அரங்கிலிருந்து காணலாம். இலவசமாக காண விரும்புபவர்கள் முதன்மை விஞ்ஞானியாக இருக்கலாம் அல்லது சுற்றியிருக்கும் குளங்களில் முதலைகளாக இருக்கலாம்.ஏவுதளங்களை பார்வையிட்டதும் பேருந்துகள் நம்மை அப்பல்லோ வளாகத்தில் இறக்கி விடுகின்றன.
விண்வெளி வீரர்கள் அணிந்த, நிலவின் தூசியைக் கொண்ட விண்வெளி உடைகள், நிலவுக் கற்கள், பத்து முறை வெற்றிகரமாக மனிதர்களை நிலவில் தரையிறக்கியபின், இப்போது தன் ஒய்யார ஓய்வுகாலத்தில் இருக்கும் சாட்டர்ன்5 விண்கலம் என பல்வேறு அப்பல்லோ கண்காட்சிப் பொருட்கள் இங்கு உள்ளன. நிலவில் தரையிறங்கியதும் ஆம்ஸ்ட்ராங் குதூகலமாக குதித்த காட்சியில் துவங்கி நிலவிற்கு சென்று வந்த அப்பல்லோ வீரர்களின் நெகிழ்வான அனுபவங்கள் வரை கொண்ட பதினைந்து நிமிட காணொளி நம் நெஞ்சை வருடுகிறது. 25 வருடங்களுக்கும் மேல் அயராது பறந்து இப்போது அறிவியல்கூட எலும்புக்கூடாக இருக்கும் அட்லாண்டிஸ் விண்கலம் மீது குழந்தைகள் உரிமையுடன் ஏறி விளையாடுகின்றனர்.
நிலவிற்கு விதைகளாக எடுத்துச் செல்லப்பட்டு, பின் பூமியில் விருட்சமாக முளைத்திருக்கும் மரங்களைக் கொண்ட நிலவுத் தோட்டத்திடம் நிலாப் பாட்டி தந்தது ஆமை வடையா, மசால் வடையா என விசாரித்தோம். ‘நாசா’ பெயர்கொண்ட சட்டைகள், தொப்பிகள், முதுகுப்பைகள், மினியேச்சர் ராக்கெட்டுகள், ஜிக்ஸா புதிர்கள் உள்பட பல விளையாட்டுப் பொருட்கள் என விதவிதமான நினைவுப் பொருட்களை விற்கும் ஒரு மினி மாலே இங்கு உள்ளது.
விண்வெளியில் வீரர்கள் உட்கொள்ளும் உறைந்து உலர்த்தப்பட்ட பழங்களும், குளுகுளு கூழ் ரொட்டிகளும் விற்கப்படுகின்றன. விலை விண்ணிற்குச் செல்லாமல் தரையிலேயே இருந்தது மனதிற்கும், மணிபர்சிற்கும் சற்று இதமாக இருந்தது.
நேரப் பற்றாக்குறையால் இங்கிருக்கும் ஐமேக்ஸ் திரையரங்கைப் பார்க்க இயலவில்லை. விஞ்ஞானியுடன் ஒரு கலந்துரையாடல், புவியீர்ப்பு விசை இல்லாமல் பறக்க பயிற்சி, செவ்வாய் கிரகத்தின் மேல் நடக்கும் சிம்முலேட்டர் என இன்னும் பல ‘வாவ்’ விஷயங்கள் உள்ளன. அதிக கட்டணத்திற்குதான். தடபுடலான ஒரு வாழையிலை விருந்தின் மகுடமாக திராட்சைகள் மிதக்கும் தயிர்சாதம் போல் ஒரு விண்கலத்திற்குள் இருக்கும் வீரர்கள் விண்ணிற்கு புறப்படும் முன், அனுபவிக்கும் கடுமையான சூழலை, பார்வையாளர்களும் உணர்வதற்காக ஒரு செயற்கையான ‘ஹைட்ராலிக் சிம்முலேட்டர்’ சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
நாம் உணரும் அதீத அதிர்வுகள் உண்மையான அதிர்வுகளில் அரைக்கால் பங்குதானாம். பூமியின் சராசரி வாழ்க்கையை விட்டுவிட்டு, விண்ணில் ‘தக்’ வாழ்க்கை வாழச் செல்லும் விண்வெளி நாயகர்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை, இந்த ஒரு நாள் நாசா பயணம் பன்மடங்கு உயர்த்திவிட்டது.
|