Must Watch
 மவுண்டைன்ஹெட்
‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கும் ஆங்கிலப்படம், ‘மவுண்டைன்ஹெட்’. உலகின் பெரும் பணக்காரராக வலம் வருபவர், வெனிஸ். ஏஐ நிறுவனத்தை நடத்தி வருகிறார், பெரும் கோடீஸ்வரரான ஜெஃப். சமீபத்தில்தான் புற்றுநோய் கண்டறியப்பட்ட பணக்காரர் ராண்டேல். வெனிஸ், ஜெஃப், ராண்டேலுடன் ஒப்பிடும்போது குறைவான சொத்து மதிப்பைக் கொண்டவர் ஹியூகோ. இவர்கள் நான்கு பேரும் நெருங்கிய நண்பர்கள்.
ஒரு மலைப்பகுதிக்குச் சென்று சமகாலத்தில் உலகிற்கு சவாலாக இருக்கும் ஒரு பிரச்னையைப் பற்றி உரையாடுகின்றனர். உலகளவில் பெரும் பொருளாதார சீர்குலைவு ஏற்படப் போகிறது, அதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோணத்தில் செல்கிறது உரையாடல். இந்த உலகத்தின் தலையெழுத்தே அந்த நால்வரின் கையில்தான் இருக்கிறது என்று உரையாடல் சூடுபிடிக்க, திரைக்கதையும் வேகமெடுக்கிறது. சமகாலத்தில் பல பிரச்னைகளைப் பகடி செய்வதாக இருக்கிறது இந்தப் படம். அதே நேரத்தில் உலகில் நடந்து கொண்டிருக்கும் பல ரகசிய நிகழ்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. படத்தை இயக்கியிருக்கிறார் ஜெஸ்ஸி ஆம்ஸ்ட்ராங்.
கே.ஓ.
‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பிரெஞ்ச் மொழிப்படம், ‘கே.ஓ.’ தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. திறமையான எம்எம்ஏ ஃபைட்டர் பாஸ்டியன். ஒரு முக்கியமான இறுதிப்போட்டியில் என்சோவுடன் சண்டையிடுகிறார் பாஸ்டியன்.
சண்டையின்போது பாஸ்டியனின் எதிர்பாராத தாக்குதலில் என்சோ இறந்துவிடுகிறார். என்சோவின் உயிரைப் பறித்த சண்டையை என்சோவின் மனைவியான எம்மாவும், மகன் லியோவும் பார்க்கின்றனர். குற்றவுணர்வுக்கு ஆளாகும் பாஸ்டியன், எம்எம்ஏ சண்டையிலிருந்து விலகுகிறார். மன அமைதிக்காக எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, ஒரு வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறார்.
அப்பாவின் மரணம் லியோவை மிகவும் பாதிக்கிறது. இந்நிலையில் லியோ காணாமல் போகிறான். உடைந்துபோகிறார் எம்மா. காவல்துறையினராலும் லியோவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு வழியின்றி மகனைக் கண்டுபிடிப்பதற்காக பாஸ்டியனின் உதவியை நாடுகிறார் எம்மா.
தனது குற்றவுணர்விலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழியாக லியோவைத் தேடும் பணியில் இறங்குகிறார் பாஸ்டியன். லியோவை பாஸ்டியன் கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை. ஓடிடி தளங்களில் ஆக்ஷன் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு நல்ல சாய்ஸ், இந்தப் படம். இதன் இயக்குநர் அந்தோன் பிளாசியர். Bhool Chuk Maaf
‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கும் இந்திப்படம், ‘Bhool Chuk Maaf’. ரஞ்சனும், டில்டியும் காதலர்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகின்றனர். ஆனால், டில்டியின் தந்தை ஒரு நிபந்தனை விதிக்கிறார். அரசாங்க வேலை கிடைத்தால் மட்டுமே ரஞ்சனுக்குத் தனது மகளைக் கட்டித் தருவேன் என்பது அந்த நிபந்தனை.
அரசாங்க வேலையைத் தேடுகிறார் ரஞ்சன். தனக்கு அரசாங்க வேலை கிடைத்தால் நல்ல செயல்களைச் செய்வேன் என்று சபதம் வேறு எடுக்கிறார்.
எப்படியோ திருட்டுத்தனங்கள் செய்து அரசாங்க வேலையைக் கைப்பற்றுகிறார். 30ம் தேதி திருமணம் என்று முடிவாகிறது. 29ம் தேதி ஹல்தி நிகழ்வுகளுடன் முடிகிறது. அடுத்த நாள் தனக்கு திருமணம் என்று மகிழ்ச்சியுடன் தூங்கப்போகிறார் ரஞ்சன்.
விடிந்தால்... 29ம் தேதியிலேயே காலம் நின்றுவிடுகிறது. நல்ல செயல் செய்வதாக சபதம் எடுத்த ரஞ்சன் அந்த சபதத்தை நிறைவேற்ற வில்லை என்பதே காலம் நிற்பதற்கு காரணம் என்று அறிகிறான் ரஞ்சன். அவன் என்ன நல்ல செயல் செய்து, திருமணம் செய்துகொண்டான் என்பதே மீதிக்கதை.படத்தின் இயக்குநர் கரண் சர்மா. ஸ்டோலன்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வரும் இந்திப் படம், ‘ஸ்டோலன்’. திரில்லர் படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது.
கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு ரயில் நிலையம். ஒரு கல்யாணத்துக்காக ஊருக்கு வந்து கொண்டிருக்கும் சகோதரன் ராமனை அழைத்து வருவதற்காக ரயில் நிலையத்துக்குச் செல்கிறார் கௌதம்.
அங்கே எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவம் அவர்களது திட்டத்தை மட்டுமல்லாமல், வாழ்க்கையையுமே தலைகீழாக மாற்றுகிறது. அது என்ன சம்பவம் என்று அறிந்துகொள்ள படத்தை ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து இறுதி வரை நம்மை அப்படியே இறுக்கமாக கட்டிப்போடுகிறது திரைக்கதை. சுவாரஸ்யமான படத்தை எடுப்பதற்கு பெரிய நட்சத்திரங்கள் தேவையில்லை, நல்ல திரைக்கதையுடன், கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள் இருந்தாலே போதும் என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது இந்தப் படம்.
அபிஷேக் பானர்ஜி, சப்னம் வர்தன், மியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 2018ம் வருடத்தில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் கரண் தேஜ்பால்.
தொகுப்பு: த.சக்திவேல்
|