ஹாலிவுட் மாதம்!
பொதுவாக ஒவ்வொரு மாதமும் மூன்று அல்லது நான்கு ஹாலிவுட் படங்கள்தான் இங்கே வெளியாகும். அதில் ஏதாவது ஒரு படத்துக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கும்.
இந்நிலையில் இந்த ஜூன் மாதத்தில் 9 ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வெளியாகின்றன. இதில் 6 படங்கள் முன்பே ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கின்றன. ஜூனில் வெளியாகும் ஹாலிவுட் படங்களின் விவரங்கள் இதோ...
 மேகன் 2.0
சில வருடங்களுக்கு முன்பு வசூலில் சக்கைப்போடு போட்டது ‘மேகன்’ எனும் ஆங்கிலப்படம். இதன் அடுத்த பாகம்தான் இது. முதல் பாகத்தில் கதை நிகழ்ந்த நாட்களிலிருந்து, இரண்டு வருடங்கள் கழித்து இரண்டாம் பாகத்தின் கதை ஆரம்பிக்கிறது. திகில் படங்களில் புது அனுபவத்தை இப்படம் தரும் என்கின்றனர். படத்தை இயக்கியிருக்கிறார் ஜெரார்டு ஜான்ஸ்டோன்.
 த ஃபீனிசியன் ஸ்கீம்
உலகப் புகழ்பெற்ற இயக்குநர் வெஸ் ஆண்டர்சனின் படம் என்பதால், சில மாதங்களுக்கு முன்பே இப்படத்துக்கான எதிர்பார்ப்புகள் கிளம்பிவிட்டன. ‘கான்’ திரைப்பட விழாவின் திரையிடப்பட்டு, பாராட்டுகளை அள்ளியிருப்பதால் இன்னமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டன.
இதுபோக பெனிசியோ டெல் டோரோ, டாம் ஹாங்க்ஸ், முர்ரே ஆப்ரஹாம், பில் முர்ரே, வில்லியம் டாபோ போன்ற நட்சத்திரங்களும் நடித்திருப்பது படத்துக்கு வலு சேர்க்கிறது. ஜூன் முதல் வாரத்திலேயே வெளியாக வேண்டிய இந்த ஆங்கிலப்படம், தள்ளிப்போய் ஜூன் 20ல் வெளியாகிறது. 28 இயர்ஸ் லேட்டர்
‘28 டேஸ் லேட்டர்’, ‘28 வீக்ஸ் லேட்டர்’ பட வரிசையில் வெளியாகவிருக்கும் மூன்றாவது படம் இது. மருத்துவ ஆய்வகத்திலிருந்து பெருங்கோபம் கொண்ட ஒரு வைரஸ் தப்பிக்கிறது. 28 வருடங்களுக்குப் பிறகு அந்த வைரஸ் ஏற்படுத்தும் விபரீதங்களும், அதிலிருந்து தப்பிப்பதற்கான போராட்டங்களும்தான் படத்தின் கதை. டானி பாயல் இயக்கியிருக்கும் இந்தப் படம், வரும் ஜூன் 20-ம் தேதி வெளியாகிறது.
மெட்டீரியலிஸ்ட்ஸ்
‘பாஸ்ட் லைவ்ஸ்’ என்ற படத்தின் மூலம் புகழடைந்த இயக்குநர், செலின் சாங். இவருடைய அடுத்த படம்தான், ‘மெட்டீரியலிஸ்ட்ஸ்’. தனக்குப் பொருத்தமான ஒருவருக்கும், பொருத்தமில்லாத முன்னாள் காதலனுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணின் கதையை நகைச்சுவையாக சித்தரிக்கிறது இந்த ஆங்கிலப்படம். டகோடா ஜான்சன், கிறிஸ் இவான்ஸ், பெட்ரோ பாஸ்கல் போன்ற முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜூன் 13ம் தேதி வெளியாகிறது.
த லைஃப் ஆஃப் சக்
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங் எழுதிய கதையைத் தழுவிய படம் இது. சக் என்பவரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை ஃபேன்டஸியாகச் சொல்கிறது இப்படத்தின் கதை. சில நாட்களுக்கு முன்பு ‘டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட்டு, பீப்பிள்’ஸ் சாய்ஸ் விருதை வென்றது இந்த ஆங்கிலப்படம்.
கடந்த ஜூன் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சக் என்ற கதாபாத்திரத்தில் டாம் ஹிடில்ஸ்டன் நடிக்க, படத்தை இயக்கியிருக்கிறார் மைக் ஃப்ளானகன்.வித்தியாசமான திரையனுபவம் வேண்டுபவர்கள் இப்படத்தை தவறவிடக்கூடாது. ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி, வசூலைக் குவித்த அனிமேஷன் படம், ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’. இதன் லைவ் - ஆக்ஷன் ரீமேக்தான் இந்தப் படம். ‘டிரீம்வொர்க்ஸ்’ நிறுவனத்தின் முதல் ரீமேக் மற்றும் முதல் லைவ் - ஆக்ஷன் படமும் இதுதான் என்பதால் படத்துக்கான எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது.
டிராகனை வேட்டையாடுவதற்காகச் செல்லும் வைக்கிங் இனத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், டிராகனுக்கும் இடையில் ஏற்படும் நட்புதான் படத்தின் மையம். ஜூன் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை டீன் டெப்லாயிஸ் இயக்கியிருக்கிறார். தமிழிலும் வெளியாகிறது இந்த ஆங்கிலப்படம். பாலேரினா
ஆக்ஷன் படப்பிரியர்களுக்கு நல்ல விருந்தைப் படைக்க வருகிறது, ‘பாலேரினா’. அப்பாவின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் ஆக்ரோஷமான ஒரு பெண்ணின் கதைதான் இந்தப் படம். ‘ஜான் விக்’ பட வரிசையில் வெளியாகவிருக்கும் ஐந்தாவது படம் இது. ஜான் விக் யுனிவர்ஸில்தான் படத்தின் கதையும் நிகழ்கிறது.
அனா டி அர்மாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, ஆக்ஷனில் அதிரடி காட்டியிருக்கிறார். ஜான் விக்கோட கேமியோ இருப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது. லென் வைஸ்மேன் இயக்கியிருக்கும் இந்த ஆங்கிலப்படம், ஜூன் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் டப்பிங்கும் இருக்கிறது. எலியோ
பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் அனிமேஷன் படம் இது. கற்பனை உலகில் வாழ்ந்து வரும் எலியோவுக்கு விண்வெளி மீது தீராத பற்று. அவன் விண்வெளிக்குச் சென்று ஏலியன்களுடன் ஏற்படும் தொடர்பை அட்வெஞ்சராக சொல்லியிருக்கிறது இப்படத்தின் கதை. பெரும் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று டிரெய்லரே சொல்கிறது. ஆட்ரியன் மொலினா, மெடலின் சாராபியன், டோமி சி இணைந்து இப்படத்தை இயக்கியிருக்கின்றனர். வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது.
எஃப் 1
முக்கியமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வகைமை திரைப்படமாக ‘எஃப் 1’ இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்துவிட்டனர். தொண்ணூறுகளில் பிரபலமான ஃபார்முலா ஒன் கார் ரேஸ் டிரைவர் சன்னி. ஒரு விபத்துக்குப் பிறகு சன்னியை வலுக்கட்டாயமாக ஃபார்முலா ஒன் ரேஸிலிருந்து ஓய்வு பெற வைக்கின்றனர்.
ஓய்விலிருந்து வெளிவந்து, இளம் வீரனுக்கு சன்னி வழிகாட்டியாக மாறுவதுதான் படத்தின் மையம். சன்னியாக பிராட் பிட் நடித்திருக்கிறார். ஹான்ஸ் ஷிம்மரின் இசையில் படத்தை இயக்குகிறார் ஜோசப் கோசின்ஸ்கி. உலகமெங்கும் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிறது.
த.சக்திவேல்
|