செல்போன் மூலம் மக்களை கண்காணிக்கும் அரசு!
ஒரேயொரு செல்போன்... அதுவும் கடத்திவரப்பட்ட செல்போன். அதுதான் சர்வதேச அளவில் பேசு பொருளாகியிருக்கிறது. வட கொரியா நாடு என்றாலே இரும்புத்திரை மூடப்பட்ட தேசம் என்ற பிம்பம் உலக நாடுகளுக்கு இருக்கிறது.  காரணம் மக்களை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசுகளில், உலக நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது வடகொரிய அரசு. அது எப்படி என்பதுதான் கடத்திவரப்பட்ட ஒரு செல்போன் மூலம் உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. 
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன். அவரது அரசின் கீழ், அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது உலகம் அறிந்ததுதான். தென் கொரிய தொலைக்காட்சி சீரியல்களுக்குத் தடை உட்பட ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இதனிடையே கடந்த ஆண்டு வட கொரியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு செல்போன் மூலம் அந்நாட்டின் கொடுங்கோல் தலைவர் போல கிம் ஜாங் உன் செயல்படுவதும், மக்களை சென்சார் தொழில்நுட்பங்களை வைத்து கடுமையாக கண்காணித்து வருவதும், தென்கொரிய கலாசாரம் எதுவும் வடகொரியாவுக்குள் நுழையாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது அந்நாட்டு மக்கள் தங்களது செல்போனில் பயன்படுத்தும் மொழியைக் கூடக் கட்டுப்படுத்தும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அந்த அரசு பயன்படுத்தியிருப்பதும் காவல்துறைக்கு நேரடியாக தொழில்நுட்பத்தின் தகவல்கள் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அது எப்படி ஒரு செல்போன் அனைத்தையும் அம்பலப்படுத்தும்?
சிம்பிள். வடகொரியாவில் பயன்படுத்தப்படும் செல்போன்களில் இன்டர்நெட் பயன்படுத்தவும் தென்கொரிய சீரியல்களைப் பார்க்கவும், கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் முடியாத வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தென் கொரியாவில் பொதுவாக பெண்கள் தங்களது ஆண் நண்பர்களை அல்லது அண்ணன்களைக் குறிக்கும் வார்த்தையான ஒப்பா (oppa) என்று வடகொரியாவில் உள்ள யாராவது தங்களது செல்போனில் டைப் செய்தாலே போதும், அது ஆட்டோ கரெக்ட் ஆகி காம்ராட் என மாறிவிடும்!அது மட்டுமல்ல, இந்த வார்த்தையை உங்களது சகோதர்களைப் பற்றி சொல்ல மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கைத் தகவலும் வந்துவிடுமாம். அது மட்டுமா?
தென் கொரியா என்று போனில் டைப் செய்தால் போதும்... அது தானாகவே பொம்மை அரசு என்று மாறிவிடும்!சரி போகட்டும் என்று பார்த்தால், கடத்தி வரப்பட்ட செல்போன் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை தானாகவே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கொண்டே இருக்கிறது!ஆனால், அது அதன் பயனருக்குத் தெரியாது! இந்த ஸ்க்ரீன்ஷாட் புகைப்படங்களும், பயனருக்குத் தெரியாமல் ‘அதிகாரபூர்வ நபர்கள்’ மட்டுமே பயன்படுத்தும் ஓரிடத்தில் சேமிக்கப்படுகிறது.
இது செல்போனை பயன்படுத்துபவரின் நடத்தையை மிகத் துல்லியமாகக் கண்டறியும் ஒரு சக்திவாய்ந்த கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவேளை இந்த ஸ்க்ரீன் ஷாட்களைக் கொண்டு ஒருவர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக நாடுகள் முழுக்க தொழில்நுட்பத்தால் மனிதன் சிக்கி, சீரழிந்துகொண்டிருக்கும் நிலையில், அதே தொழில்நுட்பத்தின் மூலம் மக்களைத் துல்லியமாகக் கண்காணித்து வரும் வடகொரிய அரசின் நடவடிக்கைகள் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
2011ம் ஆண்டு வடகொரிய ஆட்சியைக் கைப்பற்றிய கிம் ஜாங் உன், சின்னச் சின்ன குற்றங்களுக்குக்கூட கடுமையான தண்டனைகள் கொடுத்து, தனது நாட்டை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வருகிறார் என்பது ஏற்கனவே வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அதற்கு வலு சேர்த்திருக்கிறது இந்த கடத்திவரப்பட்ட செல்போன். என்னவோ போடா மாதவா!
என்.ஆனந்தி
|