ப்ரொமோஷன்ஸ் என்னும் கரகாட்டம்!
மொழிக்கு மூன்று திரைப்படங்கள் வீதம் சமீப காலமாக சுமார் 10க்கும் மேலான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகத் துவங்கிவிட்டன.
எனவே, படம் எப்படியோ, ஆனால் இத்தனைப் போட்டிகளுக்கு இடையே ஒரு படம் வெளியாகிறது என்கிற செய்தியைக் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதே பெரிய டாஸ்க்காக மாறியிருக்கிறது.  கிட்டத்தட்ட நடிகர்கள், நடிகைகள் தெருவில் இறங்கி கரகம் வைத்து மட்டும்தான் இன்னும் நடனம் ஆடவில்லை. அந்தளவுக்குப் ரொமோஷன்ஸ் வேலைகளில் வியர்வை சிந்துகிறார்கள்உலக சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் முதல் இந்திய அளவில் கமல்ஹாசன் + மணிரத்னம் காம்போக்கள் வரை இதற்கு விதிவிலக்கல்ல.  காரணம், அன்று சினிமா மட்டும்தான் பொழுதுபோக்கு. ஒரு டிரெய்லர், சாலையோர போஸ்டர்ஸ் போதும் ஒரு படம் வெளியாவதைத் தெரிந்துகொள்ள. இன்று பார்வையாளனின் கைகளில் உள்ள மொபைலுக்குள் நுழைந்து, கண்களுக்கு முன் கதகளி ஆடி ‘ஐயா ராசா படம் ரிலீஸ் பண்றேன், கொஞ்சம் பார்த்து பக்குவமா அடிங்க’ என கிட்டத்தட்ட கடிதம் அனுப்பவேண்டியுள்ளது. ஒரு காலத்தில் ‘மிஷன் இம்பாசிபிள்’ வெளியீட்டுத் தேதி எல்லாம் ரசிகர்களுக்கு திருவிழா.
 ஆனால், இன்று நிலை வேறு. அதே ‘மிஷன் இம்பாசிபிள்’ டாம் க்ரூஸ் தியேட்டரில் உள்ள ஊழியர்களுக்கு பாப்கார்ன் விநியோகம் செய்து ப்ரொமோஷன் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மட்டுமா? துபாய் புர்ஜ் கலிஃபா உச்சியில் அமர்ந்து கூட உயிரைப் பணயம் வைத்து தனது திரைப்படத்திற்கு விளம்பரம் செய்தார்.
நம்மூரில் மாநிலம் வாரியாகச் சென்று ப்ரொமோஷன்களை கையாண்டது முதன் முதலில் ‘பாகுபலி’ டீம்தான். ஆனால், இதெல்லாம் - ப்ரொமோஷன் ஆக்டிவிட்டிஸ் எல்லாம் துவங்கியது சமீபத்தில் அல்ல. 1895ம் ஆண்டே ‘லூமியர் பிரதர்ஸ்’ ( Lumiere Brothers) திரைப்படம் மூலம் தொடங்கிவிட்டது.
உலகின் முதல் பொதுப்பார்வைக்கான படமாக 1895ம் ஆண்டு வெளியான இப்படத்தின் ப்ரொமோஷனுக்காக முதன்முதலில் திரைப்பட பேனர்கள் அடிக்கப்பட்டு ஒட்டப்பட்டன. இதுதான் முதல் திரைப்படத்துக்கான ப்ரொமோஷன்.
தொடர்ந்து 1913ம் ஆண்டு ‘த பிளஷர் சீக்கர்ஸ்’ ( The Pleasure Seekers (Broadway musical-based movie)) மியூசிக்கல் படத்திற்காக அமெரிக்காவில், பிராட்வே நடிகர் நில்ஸ் கிராண்ட்லண்ட் இசை நாடகத்தின் சினிமா பதிப்புக்கு, அதை விளம்பரப்படுத்தும் வகையில் சிறிய வீடியோ குறுந்தொகுப்பு (short preview reel) தயாரித்தனர். இதுவே ‘டிரெய்லர்’ என்ற வார்த்தைக்கு அடிப்படை.
அன்று துவங்கிய இந்த சினிமா ப்ரொமோஷன் மார்க்கெட்டிங் இன்று குறளி வித்தையே காட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அப்படி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சில வித்யாசமான, கிறுக்குத்தனமான விளம்பரங்களின் டேட்டாக்கள் இதோ.
அப் (Up) - பறக்கும் வீடு
2009ல் வெளியான ‘Up’ படத்திற்கு ப்ரொமோஷனாக 300 ஹீலியம் பலூன்களுடன் ஒரு சிறிய வீடு உண்மையிலேயே பறக்கவிடப்பட்டது. இது பார்வையாளர்களிடையே வியப்பையும் பத்திரிகைகளில் ஹெட்லைன்களையும் உருவாக்கியது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பறக்கும் வீட்டை அடிப்படையாகக் கொண்டு தற்போது பல தனியார் ஹோட்டல்கள், உணவகங்கள் அதே பாணியில் அறைகளும், உணவகங்களும் கொடுக்கிறார்கள் என்பதுதான்.
டிராகுலா அன்டோல்ட் - ரத்த தானம்
படத்தின் கருப்பொருளுடன் இணைத்து ‘Donate Blood for Dracula’ என்ற டிக்கெட் கிஃப்ட் மற்றும் சமூக சேவையும் இணைக்கப்பட்டு பிரமாண்டமாக விளம்பரமாக செய்தனர். இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு Dracula untold பட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஆம். டிக்கெட்டுக்கு பணமாக இல்லாம ரத்தமாகவே வாங்கியிருக்கிறார்கள்!
த கான்ஜுரிங் 2 (The Conjuring 2) - தியேட்டர்களில் நன் பேய்
படத்தின் ரிலீஸை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் பேய் வீடு அனுபவம் கொடுக்க பல ஹாண்டட் வீடுகள் அமைக்கப்பட்டன. ரசிகர்கள் நேரில் கான்ஜுரிங் ‘பேயைப் பார்க்கும்’ அனுபவத்தை பத்திரிகையாளர்கள் உட்பட அனுபவித்தனர். மேலும் திரையரங்கங் களிலும் நன் பேய் நின்றது!
கேர்ரி (Carrie (2013)) - காபி ஷாப்பில் பிராங்க்
ஒரு காபி ஷாப்பில் சாதாரணமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் திடீரென சுற்றி இருந்த நபர்களைத் தூக்கி வீசும் வகையில் பிராங்க் செய்யப்பட்டது. அந்த வீடியோ பல மில்லியன்கள் பார்வையாளர்களுடன் டிரெண்டிங்கில் சுற்றி வர... பொதுமக்கள் அனைவரும் இது உண்மையான தீயசக்தியின் செயல் என நினைத்தனர்.
பிறகுதான் இது ‘கேர்ரி’ படத்துக்கான ப்ரொமோஷன் என படக்குழு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் கூடத் தொடரப்பட்டு நீதிமன்றம் படக்குழுவை கண்டித்து வழக்கை தள்ளுபடி செய்தது தனிக்கதை. டெவில்’ஸ் டியூ (Devil’s Due) - ரோபோ பேய் குழந்தை
நியூயார்க் நகரில் வாகனம் ஒன்றில் ஒரு பேய் குழந்தை ரோபோவை வைத்து மக்கள் மீது பாய்ந்து கத்திய பிராங்க் மிகவும் பயங்கரமானதாக கருதப்படுகிறது. ஆம். பயங்கரமாக வைரலானது!
வோர்ல்ட் வார் Z - மெட்ரோவில் ஜாம்பிகள்
ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஓடும் மெட்ரோவில் ஒருநாள் நள்ளிரவில் 200க்கும் மேற்பட்ட ஜோம்பி மேக்கப் செய்தவர்கள் பயணிகளை ஓட ஓட விரட்டி அலறவிட்டனர். படம் வெளியாகும் வரை அந்த அனுபவம் நிஜமா? விளம்பரமா என்ற குழப்பம் மக்களிடையே நீடித்தது. கடைசியில் அந்த மெட்ரோவில் பயணித்தவர்களும் படக்குழுவினர்தான், ஜோம்பிகளும் படக்குழுவினர்தான் என தெரிய வந்தது!
கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) - ஐஸ் பிளாக் பிரேக்
முகநூல் லைவ் மூலம் ஒரு பெரிய பனிக்கட்டியின் உட்பகுதியில் GOT சீசன் ரிலீஸ் தேதி பதிக்கப்பட்டது. ரசிகர்கள் கொடுக்கும் ஆர்வம் அதிகமாவதைப் பொறுத்து பனிக்கட்டி மெல்ல மெல்ல வெடிக்க ஆரம்பித்தது. இறுதியில் ரிலீஸ் தேதி மின்னியது.
ஸ்னேக் ஆன் பிளேன் (2006) - பாம்புகள் ஜாக்கிரதை!
விமான நிலையங்களில் சில இடங்களில், ‘WARNING: SNAKES IN THIS AREA’ என உண்மையாகவே பலகைகள் வைக்கப்பட்டன. இதைப் பார்த்தவர்கள், பாம்பா என அதிர்ந்தனர். பின்னர்தான் அது ப்ரொமோஷன் என தெரியவந்தது.
ஃபைட் கிளப் (Fight Club) - சோப்புக் கட்டிகள்
படத்தின் முக்கியமான சின்னம் - சோப். எனவே நகரம் முழுவதும் Fight Club லோகோவுடன் சோப்புகள் விற்பனைக்கு வந்தன. மக்கள் இந்த சோப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என படம் பார்த்து ஹிட் அடித்தது வேறு கதை.
பிளேர் விட்ச் புராஜெக்ட் (Blair Witch Project) - Missing Case
1999ல் இந்த படம் வெளிவரும் முன், படத்தில் நடித்தவர்கள் காணாமல் போனதாக இணையத்தில் விளம்பரங்கள் பரபரத்தன. மக்கள் உண்மையிலேயே அவர்கள் எங்கே... இருக்கிறார்களா இல்லை இறந்துவிட்டார்களா என பலவாறு உரையாடல்கள், விவாதங்கள் நடத்தி இணையத்தை ஹாட் மோடிலேயே வைத்திருந்தனர்.
மேகன் (M3GAN ) - பயமுறுத்தும் பொம்மைகளின் நடனம்
டைம்ஸ் ஸ்குயாரில் ‘மேகன்’ படக் கதாபாத்திரங்களைப் போலவே நடனம் ஆடும் பெண்கள் ஒன்றிணைந்து ஃபிளாஷ் மாப் நடனம் செய்தனர்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்
பிரபல ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ வெப் சீரிஸ் நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் லண்டனின் மிகப் பிரபலமான பகுதிகளில் அந்த சீரீஸில் இருக்கும் பேரலல் நிழல் உலகம் போலவே செட் அமைத்து வருகிறார்கள். குறிப்பாக நிழல் உலக கதவு போன்ற அமைப்பும், சிவப்பு, கருப்பு நிற லண்டன் பாலமும் தற்போது உலக பிரபலமாகியிருக்கிறது., இவை எல்லாம் சர்வதேச அளவில் எனில் நம் இந்திய அளவிலான சில வித்யாசமான சினிமா ப்ரொமோஷன்களும் அதிரிபுதிரிதான்.
ரோபோ பஜார் - ‘2.0’
‘2.0’ பட ப்ரொமோஷனில், ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடித்த ரோபோ கேரக்டர்கள் 100 அடி உயர 3D ஹொலோகிராம் உருவங்களாக பிரபல மால்களில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் வானத்தில் பறந்தபடி இசை வெளியீடு போஸ்டர், மெகா சைஸ் ஹீலியம் பலூன் என பல விதமான ப்ரொமோஷன்ஸ் அந்தப் படத்திற்காக நடந்தன.
ஜோம்பி வாக் - கோ கோவா கான் (Go Goa Gone (2013))
இந்தியாவின் முதல் ஜோம்பி படம் என்ற அடையாளத்துடன், மக்கள் நடமாடும் பொது இடங்களில் ஜோம்பிகள் போல் வேடமிட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நடமாடினர். இதனால் பலரும் பயந்து ஓடி பிராங்க் சம்பவங்கள் நிகழ்ந்தன. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டிலும் கூட ஜோம்பிகள் மயம்தான் எங்கும்.
கபாலி விமானம்
ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்துக்காக படக்குழுவினர் ஏர் ஏசியாவுடன் இணைந்து ஒரு விமானம் முழுக்க கபாலி விளம்பரம் கொடுத்தனர். இந்த விமான விளம்பரத்தை ‘பாகுபலி 2’ படக்குழுவும் அதே ஏர் ஏசியாவுடன் இணைந்து மேற்கொண்டது. கூடுதலாக ‘பாகுபலி’ கெட்டப்பிலேயே விமானப் பணிப்பெண்கள் நடமாடி விளம்பரம் கொடுத்தனர்.
தக் லைஃப் - கூகுள் பன்ச்
மொபைலில் கூகுள் தேடலில் ‘தக் லைஃப் 2025’ எனத் தேடிப் பாருங்கள்... ஒரு கை குறியீடு வரும். அதனை அழுத்த ஒவ்வொரு பன்ச்சாக அடி விழும் சப்தத்துடன் வர... உடன் அந்த தேடல் பக்கங்கள் பகுதி பகுதியாக காணாமல் போவது போல் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
ஷாலினி நியூட்டன்
|