‘வரி நாயகனால்’ அமெரிக்காவில் தமிழ்ப் படங்களுக்கு ஆபத்தா..?
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் வடிவேலுவுக்கு இரண்டு கேரக்டர்கள். அதில் ஒன்றான புலிகேசிக்கு அவ்வப்போது புதுப் பெயர்களை சூட்டிக்கொண்டே இருப்பார்கள்.  புலிகேசியும் இந்தப் பட்டப் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி யடைந்துகொண்டிருப்பார். அப்படித்தான் அமெரிக்காவின் ஒரு புலிகேசிக்கும் புதுப் பெயர்களை உலகம் சூட்டி எள்ளல் செய்துகொண்டிருக்கிறது. அந்த புலிகேசி அமெரிக்க அதிபர் டிரம்ப். 
அப்படி லேட்டஸ்ட் ஆக அவருக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர், ‘வரி நாயகன்’. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக டிரம்ப் வரி விதித்து வரும் நிலையில், அண்மையில் ஒரு குண்டை வீசி யிருக்கிறார்.  ‘வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீத வரி...’ என்பதுதான் அந்த ஏவுகணை. இதுதொடர்பான பேட்டியில் ட்ரம்ப், ஹாலிவுட் படங்கள் பல வெளிநாட்டில் தயாரிக்கப்படுவதாகவும், அப்படி தயாரிக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு அது பொருளாதார ரீதியாக பாதகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஹாலிவுட் படங்களின் வீழ்ச்சியை அடிப்படையாக வைத்து டிரம்ப் அப்படிச் சொன்னாலும் ஹாலிவுட் தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்படும் உலகப் படங்களுக்கும் இந்த 100 சதவிகித வரி விரிவாக்கப்படலாம் என்பதால் பல நாடுகள் இந்த வரிவிதிப்பால் கலக்கம் கொண்டிருக்கின்றன.
ஹாலிவுட் படங்கள் முன்பு மாதிரி வசூலிப்பதில்லை என்பது நிஜம். உண்மையில் ஹாலிவுட் படங்கள் என்றாலே மசாலா வணிகப் படங்களைத்தான் சொல்வார்கள். ஹாலிவுட் படங்கள் என்றாலே நிஜத்துக்கு தொடர்பில்லாத சினிமாக்கள் என்றே பிரபல திரைத்துறை விமர்சகர்கள் சொல்லி வந்தார்கள்.
உதாரணமாக அமெரிக்கா, வியட்நாமில் தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ‘ராம்போ’ சீரிஸ் படங்களை எடுத்துத் தள்ளியது பலருக்கு நினைவிருக்கலாம். இதுமாதிரி ஆயிரக்கணக்கான படங்களை பட்டியலிடலாம் என்கிறார்கள். ஹாலிவுட் போலவே ஐரோப்பிய திரைப்படங்கள் என ஒன்று இருந்தது. இதை கலைப் படங்கள் என்று சொல்வார்கள். அல்லது உலகப் படங்கள் என்று அழைப்பார்கள்.
ஒருகாலத்தில் உலகளவில் சக்கைப்போடுபோட்ட ஹாலிவுட் மசாலாப் படங்கள், ஐரோப்பிய நாடுகளில் போய் குட்டையைக் குழப்பியது.
வேறொன்றுமில்லை... ‘எங்கள் படத்துக்கு திரை நேரத்தை குறைக்கக்கூடாது. உங்கள் ஐரோப்பிய படத்துக்கு குறைந்த நேரத்தைத்தான் ஒதுக்கவேண்டும்...’ என ஐரோப்பிய நாடுகளில் போய் கலகம் செய்தார்கள் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள்.
இதை எதிர்த்து, சினிமாக் கலைஞர்கள் போராடவே, ஐரோப்பிய படங்களுக்கு கொஞ்சம் போதுமான திரை நேரத்தை ஒதுக்கினார்கள். ஆனாலும் ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கையில் - சுனாமியான தாக்குதலில் - ஐரோப்பிய நாடுகளின் ‘கலைப்’ படங்களின் தாக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டதுடன் ஒழித்தும் கட்டப்பட்டது. சரி... ஐரோப்பிய பாணிப் படங்கள் அழிக்கப்பட்டன. எனில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் படங்கள்..?
இந்தியா, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உருவான படங்கள், ஹாலிவுட் ‘பாணி’ கதையாடலில் இருந்து தப்பித்த கதைகளைத்தான் நம் பிரதேச சினிமாவும், தமிழ் போன்ற பிராந்தியப் படங்களின் தொடர்ச்சியான வெற்றிகளும் காண்பிக்கின்றன.
இந்திய சினிமாவும், தமிழ் சினிமாவும் எப்படி ஜெயிக்கின்றன?
இந்தியா மற்றும் தமிழ் சினிமாக்கள் ஹாலிவுட் போல் வெறும் வெகுஜனக் குப்பைகளை மட்டும் உற்பத்தி செய்வதில்லை. அதேநேரம் ஐரோப்பா போன்று வெறும் கலைப்படங்களை மட்டும் எடுப்பதில்லை. இது இரண்டும் இல்லாத இன்னொரு சினிமாவை உருவாக்குவதால்தான் இந்திய - தமிழ் உள்ளிட்ட பிராந்தியப் படங்கள் வணிகரீதியாக தாக்குப் பிடிக்கின்றன. எப்படித் தெரியுமா?
ஹாலிவுட் பாணியிலான சில மசாலா வணிக முயற்சிகள் ஒரு பக்கம் உருவாக்கப்பட... ஐரோப்பிய பாணியிலான ‘கலைப்’ பட முயற்சிகள் இன்னொரு பக்கம் எடுக்கப்பட... மற்றொரு பக்கம் இவை இரண்டும் கலந்த கலவையில் சினிமா தயாரிக்கப்பட... விளைவு-ஆசியப் படங்கள் தாக்குப் பிடித்து நிற்கின்றன.
ஒருவேளை அமெரிக்கா, இந்திய சினிமா மேல் 100 சதவீத வரி விதித்தால் என்ன நடக்கும்?
அமெரிக்காவில் வெளியாகும் இந்திய சினிமாக்கள் மூலம் - தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிப் படங்களையும் சேர்த்து - இந்திய மதிப்பில் ஆண்டுதோறும் சுமார் ரூ.800 முதல் ரூ.1000 கோடி வரை அந்நாட்டுக்கு வருமானம் வருவதாக சொல்கிறார்கள். இது உலகளவிலான வெளியீட்டு வருமானத்தில் 40 சதவீதம். ஆனால், மொத்த வருமானத்தில் ஓர் இந்தியப் படத்தின் உலகளாவிய வருமானம் வெறும் 5லிருந்து 7 சதவீதம்தான்.
அமெரிக்கா மட்டுமல்லாது பல வெளிநாடுகளில் இந்தியப் படங்கள் வெளியாகின்றன. ஆனால், அந்தந்த மொழியில் இருக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்தான் பெரும்பாலும் ரிலீஸ் ஆகின்றன. எனவே ‘வரி நாயகன்’ டிரம்பின் 100 சதவீத தடை இந்தியப் படத்தை பாதிக்காது என்றே தமிழ் சினிமாத் தயாரிப்பாளரான தனஞ்செயன் கூறுகிறார்.
‘‘இந்தியப் படங்களின் உலக வெளியீட்டு வருமானமே 5லிருந்து 7 சதவீதமாக இருந்தால் தமிழ் சினிமாவின் வருமானம் இதில் எத்தனை சதவிகிதம் இருக்கும் என யோசித்துப் பாருங்கள். தமிழ் சினிமாவின் ஒரு பெரிய ஹீரோவின் படம் வேண்டுமென்றால் அமெரிக்க மதிப்பில் 2 மில்லியன் டாலர் சம்பாதிக்கலாம். 2 மில்லியன் டாலர் என்றால் மொத்த வசூல் இந்திய மதிப்பில் ரூ.16 கோடி.
இதுமாதிரியான வசூல் இன்றைய தேதியில் அமெரிக்காவில் தெலுங்கு படங்களுக்குத்தான் கிடைக்கிறது. அல்லது தமிழின் பெரிய ஹீரோக்கள் படத்துக்குக் கிடைக்கிறது.
உதாரணமாக நானியின் ‘ஹிட்’ படம் ஒரு மில்லியன் டாலருக்கு - அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 ½ கோடியை சம்பாதித்திருக்கிறது.
ஒருவேளை டிரம்ப் அமெரிக்காவில் ரிலீசாகும் எல்லா வெளிநாட்டு படங்களுக்கும் 100 சதவீத வரி விதிப்பதாகச் சொன்னால் இதனால் இந்தியப் படங்களில் - குறிப்பாக தெலுங்குப் படங்களுக்குத்தான் பெரிய பாதிப்பு ஏற்படும்.
காரணம் இந்திப் படங்களின் வருமானம் இந்தி பெல்ட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பிராந்தியப் படமான தெலுங்கு போன்ற படங்கள் உள்ளூரிலும் அமெரிக்காவிலும் வசூலிக்கின்றன.
1990களில் இந்தியாவில் தாராளமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு காரணம் என்றால்... கணினி துறை இதே காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தது மற்றொரு காரணம். இதனால் இந்தியாவிலே ஆந்திரப் பகுதியில் இருந்துதான் எண்ணற்ற இளைஞர்கள் அமெரிக்காவுக்கு வேலை தேடிச் சென்றார்கள். அங்கேயே இன்று குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்கள்.
இவர்கள் தங்கள் மொழிப் படங்களை தேடித் தேடி அமெரிக்காவில் பார்க்கிறார்கள்; ரசிக்கிறார்கள். இதனால்தான் தெலுங்குப் படங்கள் அமெரிக்காவில் வசூலிக்கின்றன. அதுவும் இந்திய மொழிப் படங்களிலேயே அதிக அளவில்...’’ என்கிறார் தனஞ்செயன்.
இன்று ஹாலிவுட் காலிப் பெருங்காய டப்பாவாக இருக்கலாம். ஹாலிவுட்டால் அழிக்கப்பட்ட ஐரோப்பிய ‘பாணி’ கலைப் படங்களும் மறைந்திருக்கலாம்.ஆனாலும் உலகப் படங்கள் எனக் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ‘பாணி’ படங்கள் இன்றளவும் உலகளவில் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இத்தோடு உலகப்படம் என்பது உள்ளூர் படம்தான் எனும் மாற்றமும் உலகளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஹாலிவுட் படங்களின் அழிவு என்பது உள்ளூர் படங்கள் அல்லது உலகப்படங்களின் வாழ்வுக்கு கேரண்டி என்று கொண்டாடுகிறார்கள் உலகத் திரைக் கலைஞர்கள். பார்ப்போம், ‘அதிரடி நாயகன்’, ‘வரி நாயகன்’ என்ன செய்யப்போகிறார் என்று.
டி.ரஞ்சித்
|