சின்னப் படத்தில் பெரிய எழுத்தாளர்!
அறிமுகம் தேவைப்படாத எழுத்தாளர், ஜெயமோகன்! இலக்கிய உலகில் அளப்பரிய சாதனைகள் படைத்தவர். கனவு உலகமான சினிமாவிலும் இவருடைய எழுத்தாளுமைக்கு பெரிய வரவேற்பு உண்டு.

‘2.0’, ‘பொன்னியின் செல்வன்’, ‘இந்தியன் 2’ உட்பட ஏராளமான படங்களில் இவருடைய பங்களிப்பு அதிகம். பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே இவருடைய பெயரை அதிகம் பார்த்த நிலையில் நட்சத்திர பலம் அதிகம் இல்லாத ‘மையல்’ என்ற படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.  ‘மைனா’ சேது நடித்துள்ள இந்தப் படத்தை ஏழுமலை இயக்கியுள்ளார். இவர் பிரபு சாலமனிடம் சினிமா பயின்றவர். ரிலீஸ் வேலையில் பிசியாக இருந்த இயக்குநர் ஏழுமலையிடம் பேசினோம். மணிரத்னம், ஷங்கர் போன்ற பிரம்மாண்ட படங்களில் வேலை செய்தவர் ஜெயமோகன். அவர் எப்படி படத்துக்குள் வந்தார்?
ஜெயமோகன் சாருடன் ஒர்க் பண்ணப்போகிறோம் என்று நினைச்சபோது கொஞ்சம் தயக்கமாகவும், பதட்டமாகவும் இருந்துச்சு. ஆனால், ஜெயமோகன் சார் சினிமாவுக்கான சுதந்திரம் கொடுத்தார். பெரிய ரைட்டருடன் வேலை செய்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர்கள் வேணுகோபால், அனுபமா விக்ரம், சேது ஆகியோர் சேர்ந்து ஜெயமோகன் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
இந்தப் படத்தில்தான் சார் முதன் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அவர் லைன் சொல்லும்போது, திருடன் கேரக்டர், எளிமையான பின்புலத்தில் இருக்கும் ஹீரோயின், இவர்கள் எப்படி சந்திக்கிறார்கள், இவர்கள் வாழ்க்கையில் சமூகத்தின் திணிப்பு எப்படி பிரதிபலிக்கிறது... என்று சிம்பிளாக சொன்னார்.
கொஞ்ச நாளிலேயே முழு ஸ்கிரிப்ட் கொடுத்தார். சார் என்னிடம் சொன்னது, கமர்ஷியல் எலிமென்ட் அதிகமாக இருக்கக்கூடாது, யதார்த்தம் மாறாமல் சுவாரஸ்யமாக இருக்கணும் என்றார்.
ஜானர் என்று பார்த்தால் இது காதல் கலந்த த்ரில்லர் கதை. சட்டம் அனைவருக்கும் சமம் என்று அரசியல் சாசனம் சொல்கிறது. ஆனால், அந்தச் சட்டம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்துக்குத் தகுந்த மாதிரி மாறுகிறது.
தப்பு பண்ணினால் தப்பு பண்ணினவனுக்கு தண்டனை கொடுக்கணும். பின்புலம் உள்ளவர்களா, பின்புலம் இல்லாதவர்களா என்று தெரிஞ்ச பிறகுதான் சட்டம் செயல்படுகிறது என்பது கதையின் புரிதலாக இருக்கும்.மற்றபடி இது காதல் கதை என்றுதான் சொல்லவேண்டும்.
காதல் என்றால் சாதிய பிரச்னை, பொருளாதாரம் போன்ற நிலைகளில் எதிர்ப்பு வரும். இதில் கேட்க ஆளில்லாத இருவருடைய காதல் எந்தக் காரணத்தினால் பிரிவினை உண்டாச்சு, காதலர்களின் முடிவு என்ன என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியுள்ளோம்.
காதல், காமம் இரண்டுக்கும் நடுவே இருப்பதுதான் ‘மையல்’. பார்த்த நொடியில் காதல் மயக்கம் கொள்வது மையல். அது கொஞ்சம் தடம் மாறினாலும் காம மயக்கமாக மாறிடும். கதைக்கு பொருத்தமாக இருந்ததால் இந்த டைட்டில். ஹீரோ செலக்ஷன் எப்படி நடந்துச்சு?
‘மைனா’ படத்திலிருந்து சேது பழக்கம். அந்தப் படத்தில் நானும் ஒர்க் பண்ணினேன். சேது பிரமாதமான நடிகர். எப்போது சந்திச்சாலும் ‘என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றீங்களா’ன்னு கேட்பார்.
நானும் அவருக்காக ‘கைதி’ மாதிரி ஜெயில் பேக்ரவுண்ட்ல ஆக்ஷன் கதை எழுதினேன். சொல்லப்போனால் ‘கைதி’க்கு முன்பே ஜெயில் பின்னணியில் கதை எழுதி வெச்சிருந்தேன். ஆனால், அதன் கதை சில தயாரிப்பாளருக்கு பிடிச்சிருந்தாலும் சில காரணங்களால் தள்ளிப்போயிடுச்சு.
அதன் பிறகு மலையாளம், தெலுங்குல பிசியா இருந்தார் சேது. நான் ‘அகவன்’ என்ற படத்தை டைரக்ஷன் பண்ணினேன். சேர்ந்து படம் பண்ணணும் என்ற எங்கள் இருவரின் ஆசை பல வருடங்களுக்குப் பிறகு இதில் நிறைவேறியுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு சேது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்கக்கூடியளவுக்கு கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார்.
‘மைனா’வுல க்ளீன் ஷேவ் போலீஸாக வந்திருப்பார். இதில் முரட்டு ஆசாமியாக, அன்றாட வாழ்க்கைக்காக சில்லறைத் திருட்டு செய்பவராக வர்றார்.
தன்னுடைய கதாபாத்திரத்துக்காக நிறைய ரிஸ்க் எடுத்தார். கதைப்படி ஒரு காட்சியில் அவருக்கு கால் எலும்பு உடைஞ்சுடும். ஹீரோயின் அவரை வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும். எருமை மாடு மீது கை, கால் தொங்கிய நிலையில் வரணும்.
எருமை மாட்டின் முதுகுப் பகுதி இவர் விலாவுல குத்தி, குத்தி உடல் பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டுச்சு. சண்டைக் காட்சியில் நடிக்கும்போதும் நிறைய ரிஸ்க் எடுத்து நடித்தார்.
ஹீரோயின் அழகாக இருக்கிறார்..?சம்ரிதி தாரா. மலையாளத்துல சில படங்கள் செய்தவர்.
ஆடிஷனுக்காக ஹீரோயின்கள் சென்னைக்கு வந்த நிலையில் நாங்களே கேரளாவில் ஆடிஷன் நடத்தினோம். அதுல சம்ரிதியும் கலந்துக்கிட்டார். கேரக்டருக்கு ஏற்ப பக்கத்து வீட்டுப் பெண் லுக்ல இருந்தார். தமிழும் தெரியும் என்பதால் அங்கேயே ஓகே பண்ணிட்டு வந்தோம். அடுத்த சந்திப்பு ஷூட்டிங் ஸ்பாட்லதான் நடந்துச்சு.
ஒருசில நாளில் நம்முடைய ஸ்டைலுக்கு மாறினார். தமிழில் அவருக்கு இதுதான் முதல் படம். நாங்கள் நினைச்சதைவிட சிறப்பாகப் பண்ணினார்.முக்கிய வேடங்களில் பி.எல்.தேனப்பன், ரத்னகலா, சி.எம்.பாலா, சூப்பர்குட் சுப்பிரமணி ஆகியோருடன் சில கூத்துக் கலைஞர்களும் நடித்துள்ளார்கள். பாடல்கள் நன்றாக உள்ளன... இசையமைப்பாளர் யார்?
அமர்கீத். இசையமைப்பாளர் செளந்தர்யன் சாரின் மகன். இதில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். டியூன் நாலெட்ஜ் உள்ளவர். நான்கு பாடல்கள். எல்லாமே கதையை நகர்த்தும் விதமாக இருக்கும்.
பாடல்களை விவேகா, ஏகாதசி, கருணாகரன் எழுதியுள்ளனர். சின்மயி, அனன்யா பட், சத்ய பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர். பால பழனியப்பன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கேமராமேன் சுகுமார் சார் படங்களில் வேலை செய்தவர். என்னுடைய முதல் படத்துக்கும் அவர்தான் கேமரா என்பதால் என்னுடைய வேலை ஈசியாக இருந்துச்சு. பிரபு சாலமன் என்ன சொல்கிறார்?
சொந்த ஊர் திருவண்ணாமலை. உதவி இயக்குநர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எனக்கும் இருந்துச்சு. கே.பாலச்சந்தர் சாரிடம் ‘பொய்’, மாரிமுத்து சாரிடம் ‘கண்ணும் கண்ணும்’ படங்களில் வேலை செய்தபிறகு பிரபு சாலமன் சாரிடம் ‘லாடம்’, ‘மைனா’, ‘கும்கி’ என ரொம்ப வருஷம் வேலை பார்த்தேன்.
பிரபு சாலமன் சாரிடம் என்ன கத்துக்கிட்டீங்க என்றால், ‘மைனா’வுக்கு ஒன் லைன் கிடையாது. இது சார் அவருடைய பேட்டியில் சொன்னது. ப்ரீ ப்ளான்ல ஸ்கிரிப்ட் இருக்காது. சீக்வென்ஸ் பிரிச்சு வெச்சு இருப்போம். லொகேஷன் போனதும் கேரக்டருக்கான ஷாட் டிவிஷன், டயலாக் பொறுத்து ஷூட்டிங் நடக்கும். இந்த ஸ்டைல் ஆஃப் ஒர்க் யதார்த்தமாக கதை சொல்ல உதவியாக இருக்கும். ஏனெனில், கதையை முன்கூட்டியே எழுதி வைக்கும்போது அதை நோக்கியே படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இந்த ஸ்டைல் அரங்கு அமைத்து செய்யக்கூடிய கதைகளுக்கு பொருத்தமாக இருக்கும். கேரக்டர்களின் சிச்சுவேஷனுக்கு ஏற்ப ஷூட்டிங் பண்ணுவது இன்னொரு வகை. அந்த யதார்த்தத்தை ‘மையல்’ படத்தில் பார்க்கலாம்.
எஸ்.ராஜா
|