ஆகாஷ்தீர்



காலரை உயர்த்தும் இந்தியாவின் வான் கவசம்!

ஆம். உலக நாடுகள் அனைத்தும் மிரட்சியுடன் பார்ப்பதாக செய்திகள் கசிகின்றன. காரணம், ‘ஆகாஷ்தீர்’!யெஸ். இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசத்துக்கு இணையான தொழில்நுட்பம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் கூட இல்லை. 
இந்த மே மாதம் 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்தப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் துருக்கியும் நேரடியாக களம் இறங்கின. துருக்கியின் சார்பில் அதிநவீன பைகார் யிஹா3 ரக ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து லடாக், காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான துருக்கி ட்ரோன்கள் அலை, அலையாக வந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. ஒரே நேரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வானில் பறந்தன.

அனைத்து ட்ரோன்களையும் இந்திய ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது என்பதுதான் ஹைலைட்.இதேபோல சீனாவின் சார்பில் அதிநவீன பிஎல்15 எல்ஆர் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. இந்திய விமானப் படைத் தளங்களை குறிவைத்து சீன ஏவுகணைகள் அடுத்தடுத்து வீசப்பட்டன.

 இந்த ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் நடுவானில் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது என்பது கெத்தான விஷயம்.கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசினர். இதனால் இஸ்ரேல் ராணுவத்தின் ‘அயர்ன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு கவசம் செயலிழந்து அந்த நாட்டில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதேபாணியில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மீது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏராளமான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ என்ற வான் பாதுகாப்பு கவசம் அனைத்து ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் நடுவானில் துவம்சம் செய்தது. 

இதுதான்... இதுவேதான் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி உள்ளன.

ரேடார்கள், செயற்கைக்கோள்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசம் கண்டறிகிறது. அடுத்த சில நொடிகளில் ‘ஆகாஷ்தீரின்’ உத்தரவின்படி எஸ்400, பரக் 8, ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணைகள் சீறிப் பாய்ந்து எதிரிகளின் ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கின்றன.

இப்படித்தான் கடந்த சில நாட்கள் நடைபெற்ற போரின்போது பாகிஸ்தானின் ட்ரோன்களை ஆகாஷ் ஏவுகணைகளும், அந்த நாட்டின் போர் விமானங்கள், ஏவுகணைகளை எஸ்400, பரக் 8 ரக ஏவுகணைகளும் நடுவானில் இடைமறித்து அழித்தன.

இத்தனைக்கும் சீனாவின் அதிநவீன எச்கியூ9 என்ற வான் பாதுகாப்பு கவசத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. ஆனால், இந்த பாதுகாப்பு கவசத்தால் இந்திய ட்ரோன்கள், ஏவுகணைகளை கண்டறிய முடியவில்லை என்பதும் இடைமறித்து அழிக்க முடியவில்லை என்பதும் சாதாரண விஷயமில்லை. 

9 தீவிரவாத முகாம்கள் மற்றும் 11 விமான படைத் தளங்களை இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் மிகத் துல்லியமாக தாக்கி அழித்ததை புள்ளி பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று (.001) சதவிகிதம் கூட பாகிஸ்தானால் ஊகிக்கவோ கண்டறியவோ முடியவில்லை. அந்தளவுக்கு இந்திய வான் தாக்குதல் கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு வீரியத்துடன் இருந்தது; இருக்கிறது.

இந்த பலத்துடன்தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராணுவ தலைமையகம் ராவல்பிண்டியில் இந்திய ட்ரோன்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன. இதற்கும் இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசம்தான் காரணம். இது 100 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. தற்போது ‘ஆகாஷ்தீர்’க்கு இணையான தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மட்டுமல்ல... சீனாவின் ஆயுத தயாரிப்பிலும் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் சீனாவின் ஜே10சி, ஜேஎப்17 ரக போர் விமானங்களையே பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்தி வருகிறது. இவ்விரு ரக போர் விமானங்களும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. அம்முயற்சியை இந்தியா சுக்கு நூறாக நொறுக்கியிருக்கிறது. எனவே உலக நாடுகளின் முன் சீன ஆயுத தயாரிப்புக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் மூலம் இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை. இந்திய ராணுவத்தை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானே சண்டை நிறுத்தத்துக்கு முன்வந்தது என்பது வெட்ட வெளிச்சமானது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பஞ்சாபின் ஆதம்பூர் விமான நிலையத்துக்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது எஸ்400 ஏவுகணை அமைப்பு, மிக் ரக போர் விமானங்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார். இதன்மூலம் ஆதம்பூர் விமானப் படைத் தளத்துக்கோ, எஸ்400 ஏவுகணைகள், மிக் ரக போர் விமானங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அதேநேரம் பாகிஸ்தானின் விமானப்படை தலைமையகமான நூர்கான் தளம் உட்பட 11 விமானப் படைத் தளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து சீனாவின் ஜே10சி, ஜேஎப்17 ரக போர் விமானங்களை தயாரிக்கும் அவிக் செங்டூ நிறுவனத்தின் பங்குகள் 9.31 சதவீதம் சரிந்தன.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ முன்னாள் மூத்த தளபதியும், நவீன போர் கழகம் என்ற ராணுவ கல்வி நிறுவனத்தின் தலைவருமான ஜான் ஸ்பென்சர், “இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள், ராணுவ தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன...” என்று சொல்லி புன்னகைக்கிறார்.

என்.ஆனந்தி