78 வருடங்களில் முதல் முறையாக 10வது பாஸ் செய்தவர்!



உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமம், நிஜாம்பூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராம்கேவல் என்ற 15 வயது சிறுவன் படைத்திருக்கும் வரலாற்றுச் சாதனையைப் பற்றித்தான் கிராமம் முழுவதும் ஒரே பேச்சு. 
ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இப்படித் தேர்வு எழுதுபவர்களில் ஒருசிலரைத் தவிர்த்து மற்றவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். இதே மாதிரிதான் இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றிருக்கிறார் ராம்கேவல். இந்த தேர்ச்சிதான் அவர் படைத்த சாதனை.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது எப்படி வரலாற்றுச் சாதனையாகும்?

சுதந்திரத்துக்குப் பிறகு, அதாவது கடந்த 78 வருடங்களாக நிஜாம்பூரைச் நேர்ந்த ஒரு மாணவர் கூட பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ராம்தான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் நிஜாம்பூர் மாணவர். அதனால்தான் நிஜாம்பூர் முழுவதும் ராமைப் பற்றிய பேச்சாக இருக்கிறது.   சுமார் 300 பேர் வாழ்ந்து வரும் தொலைதூர கிராமம்தான், நிஜாம்பூர். இக்கிராமத்தில் உள்ள அனைவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்தில் வசித்து வரும் மிகுந்த ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்த மூத்த மகன்தான், ராம். இவருடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை, மூன்று. அப்பா கூலி வேலை செய்து வருகிறார். கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் சமையல் வேலை செய்து வருகிறார் அம்மா. 

ஐந்தாம் வகுப்பு வரைக்குமே படித்திருந்தாலும், தன்னுடைய குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது அம்மாவின் கனவு. பகுதி நேரமாக கிடைக்கின்ற வேலைகளைச் செய்துகொண்டே, படித்திருக்கிறார் ராம். வேலைகளை முடித்துவிட்டு, இரவில் வீட்டுக்கு எவ்வளவு தாமதமாக வந்த போதும் கூட, தெரு விளக்கு வெளிச்சத்தில் இரண்டு மணி நேரம் படிப்பதை அவரது தினசரி வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆம்; ராமின் வீட்டில் மின்சார வசதியில்லை. இரவில் ராம் படிப்பதைப் பார்த்து, அவரது ஊர்க்காரர்கள் கிண்டல் செய்வார்கள் “எங்கே பாஸ் பண்ணப் போறே..? வேலையைப் பாரு...” என்று ஏளனம் செய்வார்கள். 

“நான் பாஸாக மாட்டேன் என்கிற  ஊர்க்காரர்களின் நம்பிக்கையை உடைப்பேன் என்று நம்பினேன்...” என்கிற ராமின் வெற்றிக்கு மூலதனமே ஊர்க்காரர்கள் மூலம் கிடைத்த அவமதிப்புகள்தான்.  ஆனால், இன்று மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் எல்லோரும் ராமின் சாதனையைப் பாராட்டி வருகின்றனர். இதுபோக ராமின் உயர் படிப்புக்கு உதவுவதாகவும் வாக்கு கொடுத்திருக்கின்றனர்.

மட்டுமல்ல, பத்தாம் வகுப்பில் ராம் தேர்ச்சி பெற்றது அவரது ஊரைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு உந்துதலைக் கொடுத்துள்ளது. நிஜாம்பூரைச் சேர்ந்த லவ்லேஷ் மற்றும் முகேஷ் ஆகிய மாணவர்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்துவிட்டனர். ராமின் வெற்றி அவர்களைக் கடினமாகப் படிக்கத் தூண்டியிருக்கிறது.

அடுத்த வருடம் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று விடுவோம் என்று லவ்லேஷும், முகேஷும் சவால் விட்டிருக்கின்றனர். தவிர, கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படித்து, ராம் போல வெற்றி பெற எல்லா உதவிகளையும் செய்வோம் என்கின்றனர். ஊரில் ரோல் மாடலாகவே மாறிவிட்ட ராமின் கனவு, எஞ்சினியர் ஆகவேண்டும் என்பதுதான்.

த.சக்திவேல்