வீட்டு வேலைக்கு சம்பளம் ரூ.83 லட்சம்!
‘‘துபாயில் உள்ள வீடுகளுக்கு ஹவுஸ் மேனேஜர் தேவை. வருட வருமானம் 83 லட்ச ரூபாய்...’’ என்ற அறிவிப்பை ஒரு வேலைவாய்ப்பு ஏஜென்சி செய்திருந்தது பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக்.  துபாயில் இருக்கும் பல பில்லினியர்களின் வீடுகளை நிர்வகிப்பதற்கு ஆட்கள் இல்லை. வீட்டு உரிமையாளர்கள் தங்களது பிசினஸ்களில் மூழ்கி விடுவதாலும், ஏக்கர் கணக்கில் பெரிதாக வீடுகள் இருப்பதாலும் வீட்டைச் சரியாக அவர்களால் நிர்வகிக்க முடிவதில்லை.
ஓர் அலுவலகத்தை நிர்வகிப்பது போல வீட்டை நிர்ணயிப்பதற்கு ஆட்களைத் தேடுகின்றனர். வீட்டில் வேலை செய்யும் சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், துப்புரவுப்பணியாளர்கள், எலெக்ட்ரீசியன், வாட்ச்மேன், பிளம்பர் உட்பட அனைத்து வேலையாட்களையும் நிர்வாகம் செய்வது, வீட்டுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் வாங்குவது, மாத பட்ஜெட்டை வகுப்பது என பல வேலைகளை ஹவுஸ் மேனேஜர்கள் செய்ய வேண்டும்.
அதற்காகத்தான் இந்தச் சம்பளம் என்கின்றனர். இந்தியாவில் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்களுக்குத்தான் இந்தச் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|