ஐயோ சாரே... என்ட பேரு ஜோசப் குருவிலா..!
இண்டஸ்ட்ரியை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி சிறுவன்
தலைப்பிலுள்ள இந்த ஒற்றை வசனத்தில் இம்ப்ரஸ் ஆகி சிறுவன் கமலேஷை தனது முதல் படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குநரும் நடிகர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய். கியூட் சிரிப்பு, நாட்டி டயலாக் மற்றும் இயல்பான நடிப்பு, காமெடி என ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ சிறுவன் கமலேஷுக்கு ரசிகர்கள் ஏராளம். ‘ராட்சசி’ படத்தில் தலைமை ஆசிரியராக வரும் ஜோதிகாவிற்கு பணியாரம் கொடுக்கும் பச்சைக் குழந்தை இந்த கமலேஷ்தான். இப்போது கொஞ்சம் வளர்ந்திருக்கிறார். அதற்குள் 23 படங்கள் நடித்திருக்கிறார்.

‘‘இப்ப 7ம் வகுப்பிலிருந்து 8வது போறேன். அப்பா கூட சின்ன வயதில் இருந்தே கச்சேரிகளுக்கு போவேன். அப்படியே மேடை ஏறி பாட்டுப் பாட ஆரம்பிச்சேன். நிறைய பேர் பாராட்டுவாங்க. அதிலிருந்து மேடையில் ஏறி ஆடிப் பாட ஆசை வந்துடுச்சு...’’ என கமலேஷ் சிரிக்க, அவனை அணைத்தபடி பேசத் தொடங்கினார் ஜெகன்.  கமலேஷின் தந்தையான இவர், டான்சர் + பாடகர்.‘‘அப்போ எனக்கு 2000 ரூபாய், அவனுக்கு 200 ரூபாய் சம்பளம். அப்ப அவனுக்கு ரெண்டரை அல்லது மூணு வயசுதான் இருக்கும். ‘என் மைமா பேரு அஞ்சல...’ பாடல் பாடினான். அப்போ இருந்து தொடர்ந்து கச்சேரிகளுக்கு கூட்டிட்டு போக ஆரம்பிச்சேன்.
அவனுக்கு கிடைக்கிற வரவேற்பை பார்த்து ஏன் பாடல் பாடி பையனுடைய வீடியோக்களை ஃபேஸ்புக்கில் ஏற்றக்கூடாது அப்படின்னு தோணுச்சு. உடனே செயல்ல இறங்கினேன்.
அந்த வீடியோக்கள்தான் வைரலாகி தனியா சேனல் வரையிலும் ரீச் ஆனது.
சிங்கர் போட்டியில் கலந்துகிட்டான். போட்டிக்கு கூப்பிடும் பொழுது எனக்கு பெரிதா நம்பிக்கை இல்ல. காரணம் கர்நாடக இசை பின்னணி கிடையாது, முறைப்படி பாடல் பாடவும் தெரியாது. அதனால் பையன் மைண்ட்லயும் எதையும் ஏத்தி விடாமல் சும்மா கூப்பிட்டதுக்காக கலந்துக்க வச்சோம்.
பாடிட்டான். ஆனா, அவனுக்கு மொத்தமே இரண்டு பாடல்கள்தான் அப்போ தெரியும். அதனால் இதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது அப்படின்னு ஆடிஷன் முடிஞ்ச உடனே நானும் பையனும் கிளம்பிட்டோம். கொஞ்ச நேரத்தில் போன் செய்தாங்க.
‘உங்க பையன் செலக்ட் ஆயிட்டான்’ அப்படின்னு சொன்னாங்க. அங்கேதான் ஆரம்பிச்சது எல்லாமே.பிரபுதேவா மாஸ்டர், அனிருத் சார், வைரமுத்து சார், சிவகார்த்திகேயன் சார், ஜோதிகா மேடம்... இப்படி அத்தனை பேரும் கமலேஷை பாராட்டினாங்க.
அதன் மூலம்தான் ‘ராட்சசன்’ படத்திலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அவனுக்கு முதல் படம்...’’ என ஜெகன் புன்னகைக்க, ‘‘‘என்னடா... என் ஆளை சைட் அடிக்கிறியா’னு சூர்யா அங்கிள் ஜாலியா கலாய்ச்சுக் கேட்டார்...’’ என்றபடி இடையில் புகுந்தார் கமலேஷ். மகனை முத்தமிட்டபடி தொடர்ந்தார் ஜெகன். ‘‘‘பிஸ்கோத்’, ‘சபாபதி’, ‘டான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, மூணு வெப் சீரிஸ்... என மொத்தம் 23 படங்கள் நடிச்சிட்டான். வீட்லயும் பயங்கர குறும்புக்காரன்.
அவன் அம்மா பிருந்தா, அக்கா ஹன்சிதா கூட சேர்ந்து எந்நேரமும் ஏதாவது ரகளை செய்துகிட்டே இருப்பான். ஆனா, பயங்கர கெட்டிக்காரன். ஷூட்டிங், படிப்பு இரண்டையும் கச்சிதமா பேலன்ஸ் செய்வான்; இரண்டையும் ஒருகை பார்ப்பான். ஸ்கூலிலும் அவனுக்கு மிகப்பெரிய சப்போர்ட் கொடுக்குறாங்க. எப்பவுமே முதல் மூன்று ரேங்கில்தான் இருப்பான். எல்லா பாடங்களிலும் 80க்கு மேல்தான் மார்க்.
தினம் தினம் ஆடிப் பாடினால்தான் வருமானம். அதை நோக்கி போயிட்டு இருந்தது எங்க வாழ்க்கை. அதற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கான் என் மகன்...’’ பெருமையும் நெகிழ்ச்சியுமாகப் பேசிய அப்பாவை முத்தமிட்டு கொஞ்சிவிட்டு கமலேஷ் பேச ஆரம்பித்தார். ‘‘‘டூரிஸ்ட் ஃபேமிலி’ டீசர் பார்த்துட்டு சஞ்சய் சார் கூப்பிட்டுவிட்டார். என்னுடைய வீடியோக்கள் எல்லாம் அவர் பார்த்திருக்கார். ‘உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா... ரொம்ப நல்லா நடிக்கிற’ அப்படின்னு சொன்னார்.
இப்ப அவருடைய படத்தில் சந்தீப் கிஷன் சார் கூட சேர்ந்து நடிச்சுட்டு இருக்கேன். ஜேம்ஸ் வசந்த் சார் அவரே இயக்கி இசையமைக்கும் ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படத்தில் மூணு பாடல்கள் நானே பாடியிருக்கேன். லாரன்ஸ் மாஸ்டர் சார் கூட ‘காஞ்சனா 4’ நடிச்சிட்டு இருக்கேன். மாஸ்டர் செம ஜாலியா இருப்பார். இன்னும் சில படங்கள் இருக்கு. இப்ப சொல்ல முடியாது.
எனக்கு விஜய் சார், அஜித் சார், சூர்யா சார் மாதிரி பெரிய நடிகரா ஆகணும். நானே மியூசிக் செய்யணும், பாடணும்... இதெல்லாம் ஆம்பிஷன்...’’ மூச்சு விடாமல் முகம் நிறைய சிரிப்பும், கனவும் மின்ன சிரித்துக் கொண்டே சொல்கிறார் குட்டி நடிகர் கமலேஷ்.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|