முதல் முறையா யானையை வைச்சு ஒரு ஆக்‌ஷன் படம்!



விஜயகாந்த் கலைவாரிசாக சினிமாவுக்குள் நுழைந்தவர் சண்முகப் பாண்டியன். ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ படங்களுக்குப் பிறகு இவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘படைத்தலைவன்’. இதன் இயக்குநர் அன்பு. இவர் ‘வால்டர்’ படத்தை இயக்கியவர். ரிலீஸ் பிசியிலிருந்த இயக்குநரிடம் பேசினோம்.

யானையை வெச்சு படம் பண்ணனும் என்ற ஐடியா எப்படி வந்துச்சு?

இது என்னுடைய மூன்றாவது படம். ரெகுலர் கமர்ஷியல் படமாக இல்லாமல் புதுசா பண்ணலாம்னு யோசிச்சபோது இந்த லைன் கிடைச்சது. அதுமட்டுமல்ல, இது சமூகத்துக்கு அவசியமான படமாகவும் தோணுச்சு. ஏனெனில் உண்மையில் யானைகளுக்கு எதிராக நடந்த சம்பவத்தை படிக்கும்போது அதிர்ச்சியா இருந்துச்சு. 
மனிதனுடைய  நம்பிக்கை விலங்குகளுக்கு பெரிய அழிவை ஏற்படுத்துகிறது என்பதை நினைக்கும்போது இது மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டிய படம்னு முடிவு பண்ணினேன்.

கதை பற்றி சொல்வதாக இருந்தால் ஹீரோவுக்கும், யானைக்குமான எமோஷனல் கனெக்‌ஷன்தான் படம். மனித நேயத்துக்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவர்களை பார்த்திருப்போம். 

தன்னுடைய யானைக்கு கஷ்டம் என்று வரும்போது அதைப் பாதுகாக்க ஹீரோ எடுக்கும் ரிஸ்க்கை ஆக்‌ஷன் அட்வென்சர் ஜானரில் சொல்லியுள்ளேன்.தமிழில் யானைகளை மையமாக வெச்சு சில கதைகள் வந்துள்ளன. ஆனால், அந்தப் படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தம் இருக்காது.

முதல் முறையாக யானையை வெச்சு ஆக்‌ஷன் படம் பண்ணியிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் வந்த ‘கும்கி’ லவ் கலந்த படம். இது வேற ஜானர். இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வுக்கான படமாகவும் பார்க்கலாம். மனிதர்கள் எடுக்கும் முட்டாள்தனமான நம்பிக்கை யானைகளின் வாழ்க்கையில் எப்படி பேரழிவு ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியுள்ளேன்.

யானைகளுக்கு இது போன்ற அச்சுறுத்தல்கள் இந்தியா முழுவதும் உள்ளது. இந்தப் படத்துக்காக பல இடங்களுக்கு பயணித்து தகவலைச் சேர்த்தபிறகுதான் படத்துக்கான முழுக் கதையையும் ரெடி பண்ணினேன்.படத்தில் சொல்வதைப்போல் நிஜத்தில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வெச்சுதான் இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.

சண்முகப் பாண்டியனை எப்படி தேர்வு செய்தீங்க?

இது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதை என்பதால் ஃப்ரஷ் முகம் தேவைப்பட்டுச்சு. அதே சமயம் ஹீரோ பலம்கொண்டு எதிரிகளை தாக்குகிறவராக இருக்கணும். அதற்கு சண்முகபாண்டியன் மனசுல வந்து நின்றார்.கேப்டன் சார் இருக்கும்போதே இந்தக் கதையை அவரிடம் சொல்லி ஓகே வாங்கியிருந்தேன். முக்கியமான சண்டைக் காட்சிகளை அவருக்கு போட்டுக் காண்பிச்சேன். அவரும் பாராட்டினார்.

இந்தக் கதையைப் பொறுத்தவரை யானையுடன் இருக்கும்போது ஹீரோ முகத்துல பயம் தெரியக்கூடாது. பயம் தெரிந்தால் இந்த கேரக்டரை செய்ய முடியாது. ஏனெனில் யானை எப்போது என்ன மாதிரி ரியாக்ட் பண்ணும்னு சொல்ல முடியாது. 

பொதுவாக யானையை வெச்சு நான்கு மணி நேரம்தான் ஷூட் பண்ண முடியும். டாப் லைட் வந்துவிட்டால் ஷூட் பண்ண முடியாது. அந்த டைமுக்குள்ள ஹீரோ சொல்ற கட்டளையை யானையை செய்ய வைக்கணும்.அந்த வகையில் எந்த இடத்திலும் கேரக்டருக்காக சமரசம் இல்லாமல் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தார் சண்முகப்பாண்டியன்.

இந்தப் படத்தை 65 நாட்களில் எடுத்தேன். இவர் ஹீரோ என்பதால் அது சாத்தியமாச்சு. ஏனெனில் இடைவெளி சண்டைக் காட்சி மூன்று யானை கால்களுக்கு இடையே நுழைந்து வெளியே வரணும். ஒரு யானை காலை அசைத்தாலும் மற்ற யானைகள் ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சுடும். அது பெரிய ரிஸ்க். நாங்கள் சிஜி போயிடலாம்னு சொன்னோம். அவர் லைவ்வா பண்றேன்னு சொன்னார். கேப்டன் சார் ஃபைட் சீன்ல டூப் போடமாட்டார். அதுமாதிரி அவர் மகன் சண்முகப் பாண்டியனும் ஃபைட் சீன்ல டூப் இல்லாம நடிச்சார்.

யானைக்கும் அவருக்குமான புரிதலுக்காக 15 நாட்கள் யானையோடு தங்கி பயிற்சி எடுத்துக்கொண்டார். யானை மேல ஏறி உட்கார்வது, பிறகு இறங்குவது ஈஸி கிடையாது. யானை தும்பிக்கை கொடுத்து எறுவது சினிமாவுக்காக பண்ணிய பிம்பம். யானை மேல் ஏறணும் என்றால் யானை தன் காலை கொஞ்சம் தாழ்த்தும். அப்படித்தான் ஏறமுடியும். யானை மேல் ரொம்ப நேரமும் உட்கார முடியாது.

ஏனெனில் யானையின் ரோமம் ரொம்ப கடினமாக இருக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்ததால் சண்டைக் காட்சியில் ஹீரோவின் இடுப்பு சிவப்பு நிறமா மாறிடுச்சு. பாகன்கள் பெட்ஷீட், மெல்லிய மெத்தை மீது உட்கார்ந்து கொள்வார்கள். சினிமாவுக்கு அப்படி பண்ண முடியாது.

ஹீரோயின் யார்?

ஹீரோயின் என்று தனியாக யாரும் இல்லை. எல்லாருக்குமே மெயின் லீட் கேரக்டர். ஏ.சி.திருலோகசந்தர் சாரின் பேத்தி யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா ஆகிய இருவரும் மெயின் லீட் பண்ணியிருக்கிறார்கள். இவர்களுடன் முனீஸ்காந்த், தாஸ், கருடன் ராம் ஆகியோரும் இருக்கிறார்கள். ஏஐ விஜயகாந்த் சாரும் இருக்கிறார்.

பாடல்கள் எப்படி வந்துள்ளன?

இளையராஜா சார் பற்றி நான் புதுசா சொல்ல ஒண்ணுமில்லை. இந்தக் கதைக்கு ராஜா சார் வேணும்னு அவரிடம் போனேன். அவரிடம் போகும்போது சின்ன பயம் இருந்துச்சு. ராஜா சார் மியூசிக் பண்றார் என்றால் சிலர் பயமுறுத்தி அனுப்புவாங்க. அது முழுப் பொய்ன்னு அங்கு போனபிறகுதன தெரிஞ்சது.

இயக்குநர்களாக இருக்கிற எல்லோரும் ஒரு படமாவது ராஜா சாருடன் வேலை பார்க்கணும். இதை என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். டைரக்‌ஷன் நாலெட்ஜுக்கு எப்படி ஒரு படத்திலாவது உதவி இயக்குநராக வேலை பார்க்கணுமோ அதுமாதிரி மியூசிக் நாலெட்ஜ் வேணும்னா ராஜா சாருடன் ஒரு படத்திலாவது வேலை பார்க்கணும்.

வழக்கமாக ஒரு மியூசிக் டைரக்டரிடம் வேலை செய்யும்போது 5 நாட்கள் அல்லது ஒரு வாரம் டைம் எடுப்பார்கள். ராஜா சாரிடம் நான் போகும்போது ‘விடுதலை 2’, கன்னடப் படம் என நான்கைந்து படங்களில் பிசியாக இருந்தார். அவரிடம் டியூன் சொன்னால் போதும். அரை மணி நேரத்தில் டியூன் வந்துவிடும். அப்படி 7 மணிக்கு ஸ்டூடியோவுக்குப் போனால் 9 மணிக்குள் டியூன் வந்துவிடும். 

மதியம் மொத்தப் பாடலும் வந்துவிடும். அவருடைய பின்னணி இசை பற்றி பேச எனக்கு வயசு இல்லை. எஸ்.ஆர்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் உழைப்பு அதிகம். தயாரிப்பு பரமசிவம், தாஸ்.இந்தப் படம் பார்க்கும்போது எந்தச் சூழ்நிலையிலும் அனிமலை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், முட்டாள்தனமாக ஒரு விஷயத்தை பண்ணிடக்கூடாது என்ற விழிப்புணர்வும் உண்டாகும்.

எஸ்.ராஜா