ருக்கு மணி... ருக்கு மணி...



தமிழ்நாட்டில் தற்போது ரெண்டு ருக்குகள் மாஸ் டிரெண்டிங். ஒன்று ‘ரெட்ரோ’ படத்தின் ருக்மணி (பூஜா ஹெக்டே), அடுத்து நடிகை ருக்மணி வசந்த். தமிழில் இன்னும் அறிமுகமாகவே இல்லை. அதற்குள் இணையத்தின் தாரக மந்திரமாக மாறி இருக்கிறார் ருக்மணி வசந்த். இன்ஸ்டா ரீல்ஸ், ஷார்ட்ஸ் என அத்தனையிலும் இந்தப் பொண்ணுதான் வைரல். 
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஏஸ்’. இப்படத்தின் நாயகி ருக்மணிதான். அந்தப் படத்தின் ‘உருகுது உருகுது...’ பாடல் காட்சிகள்தான் தற்போது விதவிதமான எடிட்டிங் உடன் இளையராஜா பாடல்கள், ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் மிக்சிங்கில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்தப் பாடலின் இயல்பான காட்சி அமைப்பு பலரையும் கவர்ந்த நிலையில் யார் இந்தப் பெண் என தேடத் துவங்கியிருக்கிறார்கள் இணைய இளசுகள்.விஜய் சேதுபதிக்கு மட்டுமல்ல... சிவகார்த்திகேயனுக்கும் இவர்தான் ஜோடி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ திரைப்படத்தின் நாயகி ருக்மணி வசந்த்தான். 
மேலும் ஏற்கனவே இவர் கன்னடத்தின் ‘சப்த சாகரதாச்சே இல்லோ’ - சைட் ஏ மற்றும் சைட் பி படங்களின் நாயகியாக சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.ருக்மணி வசந்த் என கூகுளில் தட்டினால் அவருக்கு முன் வந்து விழுகிறது அவருடைய அப்பா அம்மாவின் வரலாறு.

மறைந்த ராணுவ அதிகாரி வசந்த் வேணுகோபாலின் ஒரே மகள். ஒன்பதாவது படாலியன், மராத்தா லைட் இன்ஃபான்ட்ரியின் கமாண்டிங் ஆபீசர். 2007ம் ஆண்டு உரி மற்றும் ஜம்மு காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரில் உயிரை விட்டவர். அவரின் தியாகத்திற்கு மரியாதையாக அசோக சக்ரா விருதும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவின் முதல் அசோக சக்ரா விருதைப் பெற்ற ராணுவ அதிகாரி ருக்மணி வசந்த் அப்பா வசந்த் வேணுகோபால்தான்.

ருக்மணி வசந்த் அம்மா சுபாஷினி வசந்த், பரதநாட்டிய டான்சர். மட்டுமல்ல சொந்தமாக பரதநாட்டிய அகாடமி அமைத்திருக்கிறார். மேலும் மறைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளின் வாழ்வாதாரத்திற்காக தொண்டு நிறுவனம் அமைத்து நடத்தி வருகிறார். 1996ம் ஆண்டு பிறந்த ருக்மணி வசந்த் ராணுவ பள்ளியில் படிப்பு, ராணுவ குவாட்டர்சில் வாழ்க்கை என சுற்றிலும்
ராணுவ சூழலில் வளர்ந்தவர்.

தொடர்ந்து தனது உயர்நிலைப்பள்ளி படிப்பை ஏர்ஃபோர்ஸ் பள்ளியில் படித்திருக்கிறார். சிறுவயதில் இருந்து நடிப்பு மேல் ஆசை. அதனால் லண்டன், ப்ளூம்ஸ்பரியில் உள்ள ராயல் அகாடமி ஆப் ரொமான்டிக் ஆர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் முறைப்படி நடிப்பு கற்று பட்டம் பெற்றிருக்கிறார்.2019ம் ஆண்டு வெளியான ‘அப்ஸ்டேர்ஸ்’ இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ருக்மணி வசந்த். தொடர்ந்து கன்னடத்தில் ‘பீர்பால் ட்ரையாலஜி’, ‘சப்த சாகரதாச்சே எல்லோ ஏ & பி’ உட்பட ஏழு திரைப்படங்களில் நடித்தார்.

சென்ற வருடம் ‘அப்புடோ இப்புடோ எப்புடோ’ படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிவிட்டார். இப்போது தமிழில் அறிமுகமாவதுதான் பேலன்ஸ். ஒரே நேரத்தில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் என இருவருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார்; அந்தப் படங்களும் விரைவில் வெளியாக இருக்கின்றன.

மிக முக்கிய தகவல்- ‘கே.ஜி.எஃப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 31வது படத்தின் நாயகி இவர்தான். கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்டம்’ படத்தின் இன்னொரு நாயகியும் ருக்மணிதான்.

கதை மற்றும் திரைக்கதை இதுதான்... உங்களின் வசனம் இதுதான் என கொடுத்தாலும் அதற்கு தன் கைப்பட ஒரு ஸ்கிரிப்ட் எழுதி பயிற்சி எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறார் ருக்மணி வசந்த். இது லண்டனில், தான் கற்றுக் கொண்ட நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுத்த பாடம் என்கிறார். அதனால்தான் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் ஆழம் புரிந்து நடிக்க முடிந்தது என்கிறார்.

நாய்கள் என்றால் அவ்வளவு விருப்பம். ஒயின் விரும்பி. அப்பாவைப் போலவே ஃபிட்னஸ் விரும்பி. எப்போதும் ஜிம்மில் கிடக்கும் கறார் பொண்ணு. படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முன்பு ஸ்பாட்டில் இருப்பார் என்கிறார்கள் இவரை வைத்து படம் எடுக்கும் அத்தனை படக் குழுவும்.வெல்கம் ருக்மணி வசந்த்!

ஷாலினி நியூட்டன்