ரத்த மகுடம்-101



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

நகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் மிகுதி.
நிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். அதனால்தான் காலங்கள் உருண்டோடினாலும் நகரமே அழிந்தாலும் நகர நினைவுகள் மட்டும் தலைமுறைதோறும் தொடர்கிறது. நினைவுகளின் தொகுப்புதானே தொன்மங்களின் அடித்தளம்?

இல்லாத நகரத்துக்கே இது பொருந்தும் என்னும்போது மூத்த குடியின் மூத்த நகரான மதுரைக்கு இது உச்சமாக அல்லவா பொருந்தும்? அதுவும் காலங்களைக் கடந்தும் தன் கம்பீரத்தையும் ஜொலிப்பையும் இருப்பையும் நடமாட்டத்தையும் இழக்காமல் இருக்கும் நகரமல்லவா மதுரை..?

அதனால்தானே மதுரை குறித்த நினைவுகளின் தொகுப்பு பரிபாடல்களுக்கு முன்பே தோன்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக் காஞ்சியில் நிலைபெற்று அரிகேசரி மாறவர்மரின் ஆட்சிக் காலத்திலும் தன் தடங்களைப் பதித்து வருகிறது...

இதனால்தானே ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் இமயத்தை விட உயர்ந்ததாக மதுரை நினைவுகள் வீற்றிருக்கின்றன?!
இதை மெய்ப்பிப்பது போலவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதைக் கடத்தவும் தங்கள் பங்களிப்பைச் செய்வது போல்
அன்றைய இரவுக் காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட பாண்டிய வீரர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இமயம் கொலுவீற்றிருந்தது! அது அவர்களது நடை உடை பாவனைகளிலும் பிரதிபலித்தது! உறங்கா நகரத்தை உறங்க வைக்க அவர்கள் முயற்சிக்கவேயில்லை. மாறாக, உறங்காதவர்களுக்கும் உறங்குபவர்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தார்கள்!

குறிப்பாக, மதுரைக்கே அழகு சேர்க்கும் வைகை நதிக்கரையில்!இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமம் தொடங்கப் போவதற்கான அறிகுறிகளை நட்சத்திரங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல் நதிக்கரையில் இருந்த சுங்கச் சாவடி பகலைப் போலவே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

ஆங்காங்கே தூண்களில் பொருத்தப்பட்ட வளையங்களில் செருகப்பட்ட தீப்பந்தங்களின் ஒளி, இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. கணக்கர்கள் ஓய்வில்லாமல் சுவடிகளில் சரக்குப் போக்குவரத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே எடை போடும் கருவி இருக்க... எடைக்குத் தகுந்தபடி நாணயங்களின் எண்ணிக்கையை அளவிட்டு வசூலிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார் வருவாய் அலுவலர்.

உள்நாட்டுச் சந்தைகளுக்கான பொருட்கள் கொற்கை துறைமுகத்தில் இருந்து சிறு படகுகள், தோணிகள் வழியே வைகை
நதியில் பயணித்து மதுரைக்கு வந்தன. அப்படி வந்த படகுகளும் தோணிகளும் சுங்கச் சாவடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைய வரிசைகட்டி நின்றன.
மற்ற தேசங்களுக்கு ஏற்றுமதியாக வேண்டிய பொருட்கள் மாட்டு வண்டியில் சுங்கச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்டு சாவடியின் மறுபுறத்தில் இறக்கப்பட்டன.

இறங்கிய பொருட்கள் அடங்கிய மூட்டையைப் பிரித்துப் பார்த்து சோதனையிட்ட அரசாங்க ஊழியர்கள் பின்பு அவற்றை எடை போட்டனர். எந்த தேசத்துக்கு அப்பொருட்கள் செல்லப் போகிறதோ அதற்கேற்ப சுங்கத் தொகையை கணக்கர் கணக்கிட்டு அறிவித்துக் கொண்டிருந்தார்.  

அதற்கேற்ப உரிய நாணயங்களைப் பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர், தன் உதவியாளர்களால் எழுதப்பட்டு தயார் நிலையில் இருந்த அத்தாட்சி ஓலையை ஒருமுறைக்கு இருமுறை படித்து சரிபார்த்துவிட்டு அரசாங்க முத்திரையைப் பொறித்துக் கொண்டிருந்தார்.

எடைபோடப்பட்டு அத்தாட்சி ஓலை வழங்கப்பட்ட சரக்கு மூட்டைகளை அந்தந்த வணிகர்களின் பணியாளர்கள் பாண்டிய வீரர்களின் மேற்பார்வையில் படகுகளிலும் தோணிகளிலும் வரிசையாக அடுக்கினர். ஒவ்வொரு மூட்டையிலும் அரக்கினால் முத்திரை பதிக்கும் பணியை இருவர் சளைக்காமல் செய்தனர்.

மொத்தத்தில் படகுகளும் தோணிகளும் வைகைக் கரையை விட்டு நகர்வதும் கரைக்கு வருவதுமாக இருந்தன. பகலிலாவது உச்சிப் பொழுதில் சில நாழிகைகள் ஓய்வு கிடைக்கும். இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட நகர முடியாதபடிக்கு பணிச்சுமை அழுத்தும். அதுவும் துறைமுகங்களில் நங்கூரமிட்ட பிற தேசத்து பெரும் மரக்கலங்கள் கருக்கல் சமயத்தில் தம் பயணத்தைத் தொடர தயாராகும் என்பதால் அதற்குள் சரக்குகளைச் சேர்க்கவேண்டுமே என வணிகர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டு தங்கள் பணியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தனர்.

இப்படி அனைவருமே தத்தம் பணிகளில் மும்முரமாக இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் எழுந்த நானாவித ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்த வைகை, ‘பார்த்தாயா எனது முக்கியத்துவத்தை’ என இரு கரைகளிடமும் மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தது!
‘நாங்கள் மட்டும் சளைத்தவர்களா... எங்களை மிதித்துவிட்டுத்தானே பொருட்களை உன் மீது ஏற்றுகிறார்கள்...’ என இரு கரைகளும் தங்கள் மீது மோதிய வினாக்களுக்கு விடையளித்துக் கொண்டிருந்தன.

இவற்றையெல்லாம் கேட்டபடி தனக்குள் சிரித்துக் கொண்டான் அந்த சீனன். யார் கண்ணிலும் படாதவாறு சுங்கச் சாவடிக்கு ஒரு காத தொலைவில் இருந்த புதருக்குள் அமர்ந்திருந்த அவன், வைகையில் தன் கால்களை நனைத்தபடி வானத்தை ஏறிட்டான். தனக்குள் நேரத்தைக் கணக்கிட்டான்.
பிறகு சுங்கச் சாவடி பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். இமைக்காமல் அங்குள்ள நடமாட்டத்தையே ஆராய ஆரம்பித்தான்.
‘‘யார் அந்த 15 பேர்..?’’ கர்ஜித்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..?’’ குரலை உயர்த்தாமல், அதே நேரம் அழுத்தத்தைக் குறைக்காமல் வினவினான் விநயாதித்தன்.அலட்சியமாக அவர்கள் இருவரையும் நோக்கினான் கடிகை பாலகன்.

‘‘நாங்கள் இருவரும் கேட்டது காதில் விழவில்லையா..?’’ அவன் சிகையைப் பிடித்து உலுக்கினார் ராமபுண்ய வல்லபர்.
‘‘விழுந்தது...’’ கண்களால் சிரித்தான் கடிகை பாலகன்.விநயாதித்தன் அவனை உற்றுப் பார்த்தான். ‘‘பிறகு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறாய்..?’’
‘‘கேள்வி தவறாக இருப்பதால்..!’’‘‘என்ன தவறைக் கண்டுவிட்டாய்..?’’
‘‘15 என்றார் சாளுக்கிய போர் அமைச்சர்...’’‘‘ம்...’’

‘‘ஆனால், 16 அல்லவா இளவரசே..? சிவகாமி வழியாக உங்களிடம் வந்து சேர்ந்ததையும் கணக்கில் சேர்க்க வேண்டுமல்லவா..?’’
ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘சிவகாமிக்கு..?’’

‘‘அனுப்பியது நான்தான் ராமபுண்ய வல்லபரே...’’ அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி சொன்னான் கடிகை பாலகன்.
‘‘அவளுக்கு ஏன் அனுப்பினாய்..?’’ விநயாதித்தன் படபடத்தான்.‘‘சாளுக்கிய மன்னர்தான் அனுப்பச் சொன்னார்...’’
‘‘என் தந்தையேதான் அதே செய்தியை அதேபோல் 15 பட்டுத் துணிகளில் தனித்தனியாக எழுதச் சொன்னாரா..?’’
‘‘ஆம் இளவரசே! அவரது கட்டளைப்படிதான் நடக்கிறேன்!’’

‘‘எதற்காக ஒரே செய்தியை 16 துணிகளில் எழுதச் சொன்னார்..?’’
‘‘பாண்டியர்களையும் கரிகாலனையும் ஏமாற்றி திசைதிருப்ப...’’

‘‘இதை நாங்கள் நம்புவோம் என நினைக்கிறாயா..?’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் தீயைக் கக்கின.
‘‘நம்பாவிட்டால் இதைக் காண்பிக்கச் சொன்னார்...’’ என்றபடி வராக உருவம் பொறித்த மோதிரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக்கொண்டு, எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகில் சென்றவர், எண்ணெய்க்கசடை எடுத்து மோதிரத்தின் மீது தடவினார். பின்னர் தன் அங்கவஸ்திரத்தால் அதை பளபளவென்று தேய்த்தார். அவர் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘மன்னரின் அந்தரங்க முத்திரைதான்... குழப்பமாக இருக்கிறது...’’ முணுமுணுத்தபடி விநயாதித்தனிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்தார்.

தன் சிகையைச் சரிசெய்தபடி இமையோரம் புன்னகைத்தான் கடிகை பாலகன்.அதைக் கவனித்த விநயாதித்தனின் புருவங்கள் முடிச்சிட்டன. ராமபுண்ய வல்லபரிடம் இருந்து பெற்ற மோதிரத்தை தீப்பந்தத்தின் அருகில் உயர்த்திப் பிடித்து ஆராய்ந்தான்.
பின்னர் நிதானமாக நடந்து கடிகை பாலகனின் அருகில் வந்தான்.

இமைக்கும் பொழுதில் ஓங்கி அவனை அறைந்தான்.
வலி தாங்காமல் சுருண்டு விழுந்தான் கடிகை பாலகன்.
‘‘இவனை நிற்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளியுங்கள்...’’
தங்கள் இளவரசரின் கட்டளையை அங்கிருந்த வீரர்கள் கணத்தில் நிறைவேற்றினார்கள்.

உதட்டோரம் குருதி வழிய மயக்கம் முழுமையாகத் தெளியாத நிலையில் விநயாதித்தனை ஏறிட்டான் கடிகை பாலகன்.
‘‘உண்மையைச் சொல்...’’ அடிக்குரலில் சீறிய விநயாதித்தன், கடிகை பாலகன் சுதாரிப்பதற்குள் அவன் நாசியில் ஒரு குத்துவிட்டான்.
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அரிகேசரி மாறவர்மர், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தார்.  

அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாண்டிமாதேவியைக் கண்டதும் தனக்குள் புன்னகைத்தார். ‘கொடுத்து வைத்தவள்... கட்டியவனை நம்பி நிம்மதியாக உறங்குகிறாள்...’ஓசை எழுப்பாமல் கட்டிலை விட்டு இறங்கியவர் சாளரத்தின் அருகில் வந்தார். வானத்தை ஏறிட்டார். மதுரை மாநகரத்தை ஆராய்ந்தார். ‘மக்களில் பலர் உறங்குகிறார்கள்... சிலர் இரவிலும் தங்கள் தொழிலை கவனிக்கிறார்கள். எல்லோர் மனதிலும், நம் நலத்தை கவனிக்க மன்னன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்கிறது... அந்த நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவன்தானா..? நம்பிக்கையைக் காப்பாற்றும் சக்தி எனக்கு இருக்கிறதா..?’ பெருமூச்சுடன் மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்தார்.

‘அன்னையே... உன் மகனின் நிலையைப் பார்த்தாயா..? இக்கணம் வரை பாண்டியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... ஆனால், அடுத்த கணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே..? பல்லவ சாளுக்கிய பிரச்னையில் இதுவரை பாண்டியர்கள் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள். ஆனால், விதி தொடர்புபடுத்திவிடும் போல் இருக்கிறதே..?

விருந்தினராக வந்திருக்கும் சாளுக்கிய இளவரசனும் நிம்மதியாக உறங்குகிறான்... தன் அத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பல்லவ உபசேனாதிபதியான சோழ இளவரசனும் எவ்வித கவலையும் இன்றி நித்திரையில் இருக்கிறான். ஆனால், அவ்விருவர் பிரச்னையிலும் சம்பந்தப்படாத பாண்டிய மன்னனான நான் மட்டும் உறக்கம் வராமல் தவிக்கிறேன்... இதென்ன சோதனை..? இன்றிரவு ஏதோ நடக்கப் போகிறது என உள்ளுணர்வு சொல்கிறது... அப்படி நடப்பது பாண்டி யர்களின் எதிர்காலத்துக்கு நன்மையைச் செய்யுமா, அல்லது...’

நினைத்துப் பார்க்க முடியாமல் அரிகேசரி மாறவர்மர் ஆலய கோபுரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். ‘அன்னையே... இந்த தேசத்தைக் காப்பாற்று...’சில கணங்கள் வரை இமைகளை மூடி தியானத்தில் ஆழ்ந்தவர் ஏதோ முடிவுடன் கண்களைத் திறந்தார். திரும்பி அடிமேல் அடியெடுத்து வைத்து அறைக்கதவின் அருகில் வந்தார். ஓசை எழுப்பாமல் தாழ்ப்பாளை அகற்றி வெளியே வந்தார்.சட்டென காவலுக்கு நின்றிருந்த வீரன் வணங்கினான்.

கண்களால் அவனை எச்சரித்துவிட்டு விடுவிடுவென பாதாளச் சிறையை நோக்கி நடந்தார்.‘‘சும்மா இருங்கள்...’’ சிணுங்கியபடி, தன் கொங்கைகளை நோக்கி நகர்ந்த கரிகாலனின் கைகளைப் பிடித்து தடுத்தாள் சிவகாமி.‘‘சும்மா இருந்தால் சுதந்திரம் எப்படி கிடைக்கும்..?’’ கேட்டபடி அவளது நாபிக்கமலத்தில் முத்தமிட்டான்.பாதாளச் சிறையின் கல்தரையும் பட்டு மெத்தையாக சிவகாமிக்கு இனித்தது!

(தொடரும்)

செய்தி: கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்