ரத்த மகுடம்-69பிரமாண்டமான சரித்திரத் தொடர்

மூன்று சாளுக்கிய வீரர்களும் சொல்லி வைத்தது போல் குனிந்து தங்கள் புரவிகளின் செவியில் எதையோ முணுமுணுத்தார்கள். கையோடு குதிரைகளின் பிடரியைத் தடவினார்கள். அதன் நெற்றி உச்சியில் முத்தமிட்டார்கள்.

புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக மூன்று புரவிகளும் ஒரே நேரத்தில் தலையைச் சிலுப்பின.முதலில் இருந்த வீரன் அண்ணாந்து பார்த்தான்.ஐந்து புறாக்கள் அந்த அடர் வனத்தின் மேல் பறந்தன.

பின்னால் திரும்பி இரு வீரர்களையும் பார்த்து புன்னகைத்தான்.பதிலுக்கு அவர்களும் தங்கள் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகளைப்படரவிட்டார்கள்.ஐந்து புறாக்கள் பறப்பதைப் பார்த்து வனத்தில் இருந்த மற்ற பறவைகள் தத்தம் கிளைகளில் இருந்து விடுபட்டுப் பறந்தன. கீச்சிட்டன.அதைக் கண்ட மூவரின் உள்ளத்திலும் இனம் புரியாத திருப்தி நிரம்பியது.

ஒருவேளை பல்லவ வீரர்கள் அந்த வனம் முழுக்க பரவியிருக்கலாம். லாம் என்ன லாம்... பரவி இருக்கிறார்கள். ‘ஒற்றர் படைத் தலைவி’ அப்படித்தான் செய்தி அனுப்பியிருக்கிறாள். அவர்களைக் கடந்துதான் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. மாற்றுப் பாதை எனில் பல காத தூரம் சுற்ற வேண்டும். இதனால் குறித்த காலத்துக்குள் செய்தியை உரியவரிடம் சேர்ப்பிக்க முடியாது. எனவேதான் உயிரைப் பணயம் வைத்து இந்த வனத்தைக் கடக்க முடிவு செய்தார்கள்.

மூவரிடமும் ஒரே செய்தி அடங்கிய மூன்று ஓலைக் குழல்கள் இருந்தன. ஒருவர் அல்ல இருவர் பிடிபட்டாலும் எஞ்சி இருக்கும் ஒருவரால் தங்களிடம் இருக்கும் ஓலைக் குழலை உரியவரிடம் சேர்ப்பிக்க முடியும்.மாறாக மூவரும் பிடிபட்டால்..?

‘‘அப்படியொரு நிலை ஏற்படவே கூடாது. அதனால்தான் வாள் வீச்சிலும் புரவி ஏற்றத்திலும் சிறந்த உங்கள் மூவரையும் தேர்ந்தெடுத்து இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறோம். நீங்கள் சுமந்து செல்வது வெறும் குழலல்ல... சாதாரண செய்தியும் அல்ல. சாளுக்கியர்களின் எதிர்காலம். நம் குலத்தின் ஒரே மாமன்னரான இரண்டாம் புலிகேசியின் கனவை நனவாக்கத் துடிக்கும் நம் மன்னர் விக்கிரமாதித்தரின் கண்துஞ்சா நடவடிக்கையின் ஒரு வடிவம். எனவே கவனம்...’’

விடைபெறுவதற்கு முன் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் இதைத்தான் மூவரிடமும் அழுத்தம்திருத்தமாகச் சொல்லி அனுப்பினார்.எனவேதான் மூவரும் உண்பதற்காக மட்டுமல்ல... சிறு ஓய்வு எடுக்கவும் எங்கும் நிற்கவில்லை. இந்த வனத்தைக் கடந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என ஒரே மூச்சில் பயணம் செய்து காட்டை அடைந்திருக்கிறார்கள்.

‘‘பல்லவர்கள் சூழ்ந்திருக்கும் அந்த வனத்தை எப்படிக் கடப்பீர்கள்..?’’

கேட்ட ராமபுண்ய வல்லபரிடம் முதலில் நின்ற வீரன் சொன்னான். ‘‘நம் மன்னாதி மன்னரான இரண்டாம் புலிகேசி உதவுவார்!’’‘‘எப்படி?’’ வாயைத் திறந்து கேட்காமல் தன் புருவத்தை சுருக்கி ராமபுண்ய வல்லபர் வினவினார்.‘‘ஐந்து புறாக்கள்!’’ என்று மட்டுமே அந்த வீரன் பதிலளித்தான்.

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக சாளுக்கிய போர் அமைச்சரும் தலையசைத்து புன்னகைத்தார்.மரியாதை காரணமாக அப்போது பதிலுக்குப் புன்னகைக்காத மூன்று வீரர்களும் இப்போது வனத்துக்குள் நுழைவதற்கு முன் புன்னகைத்தார்கள்.ஏனெனில் என்ன செய்வதாக  ராமபுண்ய வல்லபரிடம் சங்கேத மொழியில் குறிப்பிட்டார்களோ... அதை இப்போது அரங்கேற்றத் தொடங்கியிருந்தார்கள்.

ஐந்து புறாக்கள் என்பது சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசி கண்டறிந்த போர் வியூகம். வீரர்களின் அணிவகுப்பை ஐந்து புறாக்களாகப் பிரித்து எதிரிப் படைக்குள் ஊடுருவினார்... வெற்றி வாகை சூடினார்.இந்த வியூகத்தை இரண்டாம் புலிகேசிக்குப்பின் சாளுக்கிய அரியணையில் ஏறிய விக்கிரமாதித்தரும் பின்பற்றத் தொடங்கினார். போரில் மட்டுமல்ல... போருக்கான ஏற்பாடுகளிலும். இதனால் ‘ஐந்து புறாக்கள்’ என்பது குறியீடாக மட்டுமல்லாமல் நிஜமான புறாக்களாலும் செயல் வடிவம் பெறத் தொடங்கியது.

அதன் ஒரு பகுதிதான் இந்த வனத்துக்கு மேல் ஐந்து புறாக்களை அந்த மூன்று சாளுக்கிய வீரர்களும் பறக்கவிட்டது.ஆம். பொதுவாக காலடி ஓசை கேட்டால் மரத்தில் இருக்கும் பறவைகள் பறக்கும்.

இதனால் பதுங்கி இருப்பவர்கள், ‘யாரோ வருகிறார்கள்’ என எச்சரிக்கை அடைவார்கள்.  இதைத் தவிர்க்க நிஜமாகவே பறவைகளைப் பறக்க விட்டார்கள்.இதனால் மற்ற பறவைகள், ‘தங்களைப் போன்றே சில பறவைகள் பறக்கின்றன...’ என்று நினைத்து கிளைகளிலேயே இருக்கும் அல்லது ‘யார் நீ’ என விசாரிக்க பறக்கும் பறவைகளை நோக்கிச் செல்லும்.

இந்த நடவடிக்கைகள் பதுங்கி இருக்கும் வீரர்களை வெளிப்படுத்தாது. மாறாக, ‘இது ஏதோ பறவைகளுக்குள் நடக்கும் அரசியல் போல...’ என அமைதி காப்பார்கள்.இப்படிப்பட்ட அமைதியை அந்த வனத்தில் ஏற்படுத்தவே காட்டுக்குள் நுழைவதற்கு முன் ஐந்து புறாக்களை மூவரும் பறக்க விட்டார்கள்.

நினைத்தது போலவே சில பறவைகள் கிளைகளை விட்டுப் பறந்து புறாக்களைச் சுற்றிச் சுற்றி வந்தன. ‘ஒன்றும் பிரச்னையில்லை... நம் இடத்தில் தங்க இவை வரவில்லை... வேறு இடத்துக்குச் செல்ல இப்பாதையைப் பயன்படுத்துகின்றன...’ என்பதை உணர்ந்து விலகின.

மற்ற பறவைகள் அமர்ந்த இடத்திலேயே இதை ஊகித்து புறாக்களைப் பொருட்படுத்தாமல் தத்தம் காரியங்களில் இறங்கின.திரும்பி கண்களால் இரு வீரர்களுக்கும் செய்தி சொல்லிவிட்டு மெல்ல தன் வலது காலால், தான் அமர்ந்திருந்த குதிரையின் வயிற்றை முதல் வீரன் உதைத்தான்.

மூன்று குதிரைகளும் காட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தன.குதிரைகளின் குளம்பொலிகளும் புறாக்களின் கத்தலும் சிறகடிப்பும் ஒரே தாள வரிசையில் இருந்ததால் நிம்மதியுடன் அந்த மூன்று சாளுக்கிய வீரர்களும் வனத்துக்குள் நுழைந்தார்கள்.

ஒரு நாழிகைப் பயணம் வரை எந்த இடையூறும் ஏற்படவில்லை. சருகுகள் மறைந்து புற்கள் சூழ ஆரம்பித்ததால் நிதானமாகவே புரவிகள் சென்றன. அவ்வப்போது மூவரும் குதிரைகளுடன் மறைந்து நிற்பதற்கு தகுந்தபடி மரங்களும் பருமனாக வளர்ந்திருந்தன.இப்படியே இன்னும் சில நாழிகைகள் பயணப்பட்டால் வனத்தைக் கடந்து விடலாம்... அதன்பிறகு பிரச்னை ஏதும் இல்லை...

வேகமாகத் துடிப்பதை மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு சீரான வேகத்தில் எப்பொழுதும்போல் மூன்று வீரர்களின் இதயங்களும் துடிக்கத் தொடங்கிய நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது.முதலில் சென்ற வீரன்தான் முதலில் அந்த விபரீதத்தை உணர்ந்தான்.

உணர்ந்து அவன் சமாளிப்பதற்குள் பின்னால் வந்த இரண்டாவது வீரன் நிலைகுலைந்தான். தொடர்ந்து மூன்றாவதாக வந்தவன் தரையில் உருண்டான்.
மூவருக்கும் சுயநினைவு வந்து என்ன நடந்தது என ஊகிக்கும்போது அவர்களது தாடைகள் வீக்கமடைந்து எரிந்தன!வலியுடன் துடித்த கணத்தில் மூவருக்கும் என்ன நடந்தது எனப் புரிந்தது. புரிய வைத்தபடி இளைஞன் ஒருவன் மூவருக்கும் நடுவில் நின்றுகொண்டிருந்தான்!

ஒலியை எழுப்பாமல் கிளையைப் பற்றியபடி காற்றில் பறந்து வந்து முதலாவதாக வந்த வீரனின் முகத்தை தன் காலால் எட்டி உதைத்துவிட்டு, பிடித்திருந்த கிளையை விடுவித்து அந்தரத்தில் பறந்தபடி இரண்டாவதாக வந்தவனின் நெஞ்சில் உதைத்து அவனது புரவியின் மீதே தன் காலை ஊன்றி எக்கி மூன்றாவதாக வந்தவனின் கீழ்த் தாடையைக் குறி பார்த்து உதைத்து...

யார் இந்த இளைஞன்... புலியின் பாய்ச்சலும் காளையின் ரவுத்திரமும் சிங்கத்தின் அறையும் ஒருசேரக் கொண்டவனாக அல்லவா இருக்கிறான்..?

மூன்று சாளுக்கிய வீரர்களுக்கும் யோசிக்க நேரமில்லை. அவர்களது இடுப்பில் இருந்த ஓலைக் குழல்கள் அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தின.உடனே திசைக்கு ஒருவராக மூவரும் ஓடத் தொடங்கினார்கள்.

அவர்களை உதைத்து நிலைகுலையச் செய்து தரையில் உருள வைத்த இளைஞன் மூவரையும் பிடிக்க முற்பட்டான்.சாளுக்கிய வீரர்கள் மூவரையும் ஏற்றி வந்த குதிரைகள் அந்த இளைஞனின் முயற்சியைத் தடுத்தன. குறுக்கும் நெடுக்குமாகப் புகுந்தன.புரவிகளை அந்த இளைஞன் பொருட்படுத்தவில்லை. மாறாக தன் நடவடிக்கைகளுக்கு ஏற்றபடி அவற்றைப் பழக்கப்படுத்தினான்!பாய்ந்து முதலில் வந்த குதிரையின் மீது ஏறியவன் அதை ஓடவிட்டபடியே குனிந்து அதன் செவியில் எதையோ முணுமுணுத்தான்.

பின்னர் அதன் கடிவாளத்தை இழுத்து அதை இரண்டாவது குதிரையின் அருகில் அழைத்துச் சென்றான். முதல் புரவியில் இருந்து இரண்டாவதற்குத் தாவி அதை தட்டிக் கொடுத்து அதன் செவியில் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு எதிர்ப்பட்ட கிளையைப் பிடித்தபடி அந்தரத்தில் பறந்து மூன்றாவது குதிரையின் முன்னால் குதித்து காளையை அடக்குவது போல் அப்புரவியின் கழுத்தைச் சுற்றி அணைத்து அதை அமைதிப்படுத்தி...

மூன்று குதிரைகளும் அந்த இளைஞனின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகே திசைக்கு ஒருவராக ஓடிய மூன்று சாளுக்கிய வீரர்களையும் சுற்றி வளைத்தான்.மூன்று வீரர்களுக்கும் மூச்சு வாங்கியது. தாங்கள் பழக்கப்படுத்திய, தங்கள் நண்பனாக தங்களுடன் வந்த புரவிகளே தங்களைச் சுற்றி வளைத்து நிற்பதை எண்ணி அதிர்ந்தார்கள்.

அப்படியானால் அவைகளை வசியப்படுத்திய இளைஞன் கைதேர்ந்த அசுவ சாஸ்திரியாக இருக்க வேண்டும். பல்லவர்களிலேயே சிறந்த புரவிக் கலைஞன் கரிகாலன்தான். ஆனால், எதிரே நிற்கும் இளைஞன் கரிகாலன் அல்ல... என்றாலும் கரிகாலனை விட சிறந்த அசுவ மேதையாக இருக்கிறான்...

பார்வையால் தங்களுக்குள் பேசியபடி மூன்று சாளுக்கிய வீரர்களும் நகர முற்பட்டபோது -சுற்றிலும் இருந்த புதர்களில் இருந்து எண்ணற்ற பல்லவ வீரர்கள் வெளியே வந்தார்கள்.

அப்பொழுதுதான் நடந்தவை அனைத்தும் முழுமையாக அந்த மூன்று சாளுக்கிய வீரர்களுக்கும் புரிந்தது.இளைஞனின் வீர சாகசத்தை ஏதோ மல்யுத்தத்தை ரசிப்பது போல் பல்லவ வீரர்கள் மறைந்திருந்து ரசித்திருக்கிறார்கள். உதவிக்கு அவர்கள் வரவில்லை என்பதில் இருந்தே அந்த இளைஞனின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஸ்படிகமாகப் புலப்பட்டது.அடுத்து என்ன என்பதுபோல் அந்த மூன்று வீரர்களும் அந்த இளைஞனைப் பார்த்தார்கள்.

அவன் அலட்சியமாக நடந்து வந்து அவர்கள் முன்னால் நின்றான். ‘‘கொடுங்கள்...’’‘‘எ...தை..?’’ வீரர்களுள் ஒருவன் திக்கித் திணறினான்.‘‘உங்கள் இடுப்பில் இருக்கும் ஓலைக் குழலை!’’மறுப்பதில் பயனில்லை என்பது மூன்று சாளுக்கிய வீரர்களுக்கும் புரிந்தது. தங்கள் இடுப்பில் இருந்து ஓலைக் குழலை எடுத்துக் கொடுத்தார்கள்.

மூன்றையும் அந்த இளைஞன் பிரித்தான். மூன்றிலும் சொல்லி வைத்தது போல் ஒரே வாசகங்கள்தான் எழுதப்பட்டிருந்தன.‘யானைகளைத் தரம் பிரித்து பல்லவப் படைக்கு பலம் சேர்க்கும் கஜ சாஸ்திரியே... கரிகாலனின் நண்பனே... நலமா?!’படிப்பதை நிறுத்திவிட்டு இறுதியாக கையெழுத்திட்டது யார் என்று பார்த்தான்.
‘சிவகாமி!’   

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்