தலபுராணம்-முதல் சட்டமன்றப் பேரவை…



அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் முதல் முதல்வராக நீதிக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார் ஆனதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.இந்த முதல்வர் பதவி முதலில் நீதிக்கட்சியின் மூத்ததலைவரான சர்.பி.தியாகராய செட்டியாரிடமே சென்றது. ஆனால், அவர் பதவி வேண்டாமென மறுத்துவிட்டார். இதனால், நீதிக்கட்சியின் முக்கிய பிரமுகரான சுப்பராயலு ரெட்டியார் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அன்று முதலமைச்சர் பதவியை, ‘பிரைம் மினிஸ்டர்’ என்றும் ‘பிரீமியர்’ என்றும் அழைத்தனர். இப்படி முதல் பிரீமியரான சுப்பராயலு ரெட்டியாரின் சட்டமன்ற காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களும், சட்டங்களும் இயற்றப்பட்டன. முதல் தேர்தலில் பெண்கள் வாக்களிக்க உரிமையளிக்கப்படவில்லை. இதனால், வாக்காளர் பட்டியலில் பெண்களும் இடம்பெறச் செய்யும் தீர்மானம் 1921ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி இயற்றப்பட்டது.  

மட்டுமல்ல. இந்தியாவில் முதல்முறையாக இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் Communal G.O கொண்டு வரப்பட்டது. இதனால், அரசுத் துறைகளில் நியமனங்கள் எல்லாம் கட்டாய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும் நிலை உருவானது.இதற்கிடையே, உடல்நலக் குறைவு காரணமாக ரெட்டியார் 1921ம் வருடம் ஜூலை 11ம் தேதி தனது பிரீமியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிகிச்சைக்காகச் சென்றுவிட்டார். அதேவருடம் நவம்பர் 25ம் தேதி காலமானார்.

தொடர்ந்து, பனகெண்டி ராமராய நிங்கார் என்கிற பனகல் ராஜா பிரீமியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மார்ச் 6ம் தேதி 1922ம் வருடம் அன்றைய மாகாண கவர்னராக இருந்த லார்டு வெலிங்டனும், அவரது மனைவியும் சட்டமன்றக் கூட்டத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது மன்றக் கூட்டங்கள் கோட்டையிலுள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெற்றன. அவர்கள் இருவரும் சேர்ந்து சட்டமன்றத் தலைவரின் இருக்கையை பரிசாக அளித்தனர்.

‘‘எட்டு அடி உயரம் கொண்ட இந்தப் பீடுமிகு இருக்கை, சிறந்த தேக்கு மரத்தால் ஆனது. கலைநுணுக்கம் மிக்க இந்த இருக்கையில் மன்றத் தலைவர் சில இரகசியமான தாள்களை வைத்துக் கொள்ளலாம். எழுதவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த இருக்கையே புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரின் இருக்கையாக இன்றும் அமைந்துள்ளது...’’ என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த இருக்கையைப் பற்றி பெருமிதமாகக் குறிப்பிடுகிறது, 1997ல் வெளியிடப்பட்ட ‘தமிழ்நாடு சட்டமன்ற பவள விழா மற்றும் சட்டமன்றப் பேரவை வைர விழா’ மலர்.
பின்னர், 1923ம் வருடம் நடந்ததேர்தலிலும் நீதிக்கட்சியே வென்றது. மீண்டும் பனகல் ராஜா பிரீமியரானார். பிறகு, 1926ல் வந்த தேர்தலில் நீதிக்கட்சிக்கும் சுயராஜ்ய கட்சிக்கும் குறைந்த இடங்களே கிடைத்தன.

பெரும்பான்மை இல்லாததால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் சுயேட்சையாக வெற்றி பெற்றிருந்த பி.சுப்பராயன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்பே பெண்களுக்கு வாக்குரிமை தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் 1926ம் வருடம்தான் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இப்படியாக சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பெற்ற முதல் பெண்மணியாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆனார். பிறகு, இவர் சட்டமன்றத் துணைத் தலைவரானார்.

இதனையடுத்து 1929ம் வருடம் சட்டமன்றத்திற்கு நடக்க வேண்டிய தேர்தல் ஒரு வருடம் தள்ளிப்போனது. இதற்கிடையே நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பனகல் ராஜா காலமானார். பின்னர், பொல்லினி முனுசாமி நாயுடு நீதிக்கட்சியின் தலைவரானார். 1930ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெரும் வெற்றி பெற்றது. முனுசாமி நாயுடு பிரீமியராகவும், இவருக்குத் துணையாக பி.டி.ராஜனும், என்.குமாரசாமி ரெட்டியாரும் பதவியேற்றனர்.

ஆனால், உள்கட்சிப் பூசலால் இரண்டு வருடங்களில் பொல்லினி முனுசாமி நாயுடு ராஜினாமா செய்தார். பிறகு, பொப்பிலி ராஜா பிரீமியரானார்.
இவர் திடீெரன உடல்நலக் குறைவால் 1936ல் சிகிச்சைக்காக செல்ல பி.டி.ராஜன் தற்காலிக பிரீமியரானார். இதற்கிடையே 1935ம் வருடம் இந்திய அரசுச் சட்டம் இயற்றப்பட்டது.

இதன்படி மெட்ராஸ் உள்ளிட்ட சில மாகாணங்களில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை சட்டமன்றப் பேரவை என்றும், சட்டமன்ற மேலவை என்றும் அழைக்கப்பட்டன.இப்போது, சட்டமன்றங்களுக்கு முன்பு இருந்ததைவிட அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. மத்திய அரசுக்கும், மாகாணங்களுக்கும் உள்ள அதிகாரங்கள் பிரிக்கப்பட்டன.

மத்திய பட்டியல், மாகாணப் பட்டியல், பொதுப் பட்டியல் எனதுறைகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. மாகாணப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் வரும் பொருட்கள் குறித்து மாகாண சட்டமன்றம் சட்டம் இயற்றலாம். ஆனால், இதே பொருள் குறித்து மத்திய சட்டமன்றம் சட்டம் இயற்றினால் அச்சட்டமே மேலாண்மை பெறும். தவிர, மாகாண சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வடிவிற்கு அனுமதி மறுக்கவும், கவர்னர் ஜெனரல் பார்வைக்கு அனுப்பவும் அல்லது மீண்டும் சில திருத்தங்களைச் செய்வதற்காகச் சட்டமன்றத்தின் மறு ஆய்வுக்கு அனுப்பவும் கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இச்சட்டம் 1937ம் வருடம் ஏப்ரல் முதல் தேதியே அமலுக்கு வந்தது. இப்படியாக, முதல் சட்டமன்றப் பேரவை (Legislative Assembly) உருவானது. ஆரம்பத்தில் இருந்த சட்டமன்றம் (Legislative Council) இப்போது மேலவையானது. இச்சட்டத்தின்கீழ் சட்டமன்றப் பேரவைக்கு 215 இடங்களும், மேலவைக்கு 56க்கு மிகாத இடங்களும் அனுமதிக்கப் பெற்றிருந்தன. மேலவைக்கு பத்து பேருக்கு மிகாமல் கவர்னர் நியமிக்கலாம்.

வரி செலுத்துதல், சொத்துக்கள் வைத்திருத்தல், குறிப்பிட்ட கல்வித் தகுதி பெற்றிருத்தல், ராணுவப் பணியில் ஈடுபட்ட அனுபவம் எனப் பல்வேறு தகுதிகள் வாக்காளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இதனால், பேரவைக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கான தகுதிகள் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபட்டன.

சட்டமன்றப் பேரவைக்கான முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 215 இடங்களில் 159 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு முன்னர் இடைக்கால அமைச்சரவை அமைந்தது. பிரீமியராக நீதிக்கட்சியின் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு வந்தார்.

தொடர்ந்து 1937ம் வருடம் ஜூலை 14ம் தேதி ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது. அப்போது சட்டமன்றப் பேரவைக் கூட்டம் சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்திலும், சட்டமன்ற மேலவைக் கூட்டம் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்திலும் நடந்தன.

வில்லியம் ரைட் என்பவர் தற்காலிகத் தலைவராக இருந்து பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்வித்தார். பின்னர், புலுசு சாம்பமூர்த்தி பேரவையின் தலைவராகவும், துணைத் தலைவராக ருக்மணி லட்சுமிபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிறகு, செனட் மண்டபத்தில் நடந்த முதல் கூட்டுக் கூட்டத்தில் இருஅவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலவைத் தலைவர் யு.ராமாராவுடன் பேரவைத் தலைவர் புலுசு சாம்பமூர்த்தியும் அமர்ந்திருக்க லார்டு எர்ஸ்கின் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, 27-1-1938 முதல் 26-10-1939 வரை சுமார் இரண்டு வருட காலம் சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்றைய ராஜாஜி மண்டபத்தில் நடந்து வந்தது. அப்போது இந்த மண்டபம் Banquet Hall என அழைக்கப்பட்டது. அதாவது, அரசினர்விருந்து மாளிகையாக இருந்தது.   

பின்னர், 1939ல் இரண்டாவது உலகப் போர் தொடங்கிய போது பிரிட்டன் ெகாள்கையை எதிர்த்து காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனால், 1946ம் வருடம் வரை கவர்னர் ஆட்சியே நடந்தது. இதனையடுத்து, 1946ல் இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி 166 இடங்களைக் கைப்பற்றியது. டி.பிரகாசம் பிரீமியராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரின் அமைச்சரவையில் பங்குபெற்ற ருக்மணி லட்சுமிபதி மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சரானார். இந்நேரம் மாகாண கவர்னராக சர்.ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை என்பவர் வந்து சேர்ந்தார். இவருக்கும் டி.பிரகாசத்திற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.இதனால், 1947ல் டி.பிரகாசம் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டது.

பின்னர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிரீமியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 15ம் தேதி நாடு சுதந்திரம் அடைந்த போது ஓமந்தூராரே பிரீமியராக இருந்தார். இவரின் ஆட்சியில் தேவதாசி ஒழிப்புச் சட்டம், ஆலயங்கள் நுழைவுச் சட்டம், பொது நூலகங்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களும், தீர்மானங்களும் இயற்றப்பட்டன. 1949ம் வருடம் ஓமந்தூரார் தனது பதவியில் இருந்து விலக அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. பிறகு, ராஜபாளையம் ராஜா எனப்படும் பி.எஸ்.குமாரசாமி ராஜா முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இதனையடுத்து, 1950ம் வருடம் ஜனவரி 26ம் தேதி இந்தியா குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. பின்னர், 1952ம் வருடம் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.இதில் எந்தக் கட்சி வென்றது? இதேவருடத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றப் பேரவை இப்போது எப்படி இருக்கிறது? ஊட்டியில் நடந்த சட்டப் பேரவைக் கூட்டம் எல்லாம் அடுத்த வாரம்…          

பேராச்சி கண்ணன்

ராஜா