இந்த வாழைப்பழ விவசாயியின் ஒரு வருட வருமானம் ரூ.1.5 கோடி!விவசாயிகள் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்வது ‘நடைமுறை’யாகி விட்ட நிலையில், ஒரு விவசாயி மட்டும் கோடியில் சம்பாதிப்பது வியப்பாகத்தான் இருக்கும். உத்திரப் பிரதேச மாநில பாராபங்கி மாவட்டத்திலுள்ள தவுலத்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ராம் சரண் வர்மா. இருபது விருதுகளுக்கும், பெரிய பங்களா வீட்டுக்கும் இன்று சொந்தக்காரராக இருக்கும் இவர், ஒரு காலத்தில், பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்!

2019ல் பத்மஸ்ரீ விருதும், விவசாயத்தில் உயர்ந்த விருதான ஜக்ஜீவன்ராம் கிசான் புருஸ்கர் என்ற மகத்தான விருதையும் அரசாங்கம் இவருக்கு அளித்துள்ளது. ‘‘என் அப்பாவை எல்லோரும் ஹை-டெக் விவசாயி என்றுதான் அழைப்பார்கள்...’’ என பெருமையுடன் பேசத் தொடங்குகிறார் ராம் சரணின் மகன் ராகுல் வர்மா‘‘நாங்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம்தான் செய்து வருகிறோம். வறுமை தாண்டவமாடியது. ஆனாலும் தொடர்ந்து விவசாயமே செய்து வந்தோம்.

அப்பாவுக்கு படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே 10வது முடித்ததும் தாத்தாவுடன் சேர்ந்து அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றை விவசாயம் செய்தார்...’’ என சுருக்கமாக தன் குடும்பத்து ப்ளாஷ்பேக்கை சொன்ன ராகுல் வர்மா, இதற்குப் பின் தன் தந்தைக்கு பரம்பரை சொத்தாக நான்கு ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது என்கிறார்.

‘‘முதலில் அதில் பாரம்பரிய விவசாயம்தான் செய்தார். எந்த லாபமும் கிடைக்கவில்லை. எனவே அதிக லாபம் ஈட்டக்கூடிய தொழில்நுட்ப முறைகள் பற்றிய விவரங்களை அப்பா சேகரிக்க ஆரம்பித்தார். அப்போதுதான், கர்நாடகாவிலும், மகாராஷ்டிராவிலும் வாழைப்பழ சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பது பற்றி அவருக்குத் தெரிந்தது. உடனே அந்த இடங்களுக்குச் சென்றார்.
 
விவசாயத் தொழில்நுட்பங்களை எல்லாம் கசடற கற்றுக் கொண்டு எங்கள் கிராமத்துக்கு இரண்டு வருடங்களுக்குப் பின் திரும்பினார். உற்சாகத்துடன் ஒரு ஏக்கர் நிலத்தில் வாழைப்பழ சாகுபடியை திசு வளர்ச்சி (Tissue culture) மூலம் செய்தார். அது அவருக்கு லாபம் தரவே, ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டாக்கி அதில் திசு வளர்ச்சி மூலம் சாகுபடி செய்தார். கூடவே பயிர் சுழற்சி முறைகளை பயன்படுத்தி, வாழை, உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற வகைகளை சாகுபடி செய்தார்.

இதன் மூலம் எங்கள் மாநிலத்திலேயே திசு வளர்ச்சி மூலம் விவசாயம் செய்யும் முதல் விவசாயி என்ற பெருமையை என் தந்தை பெற்றார்!’’ நெஞ்சை நிமிர்த்தியபடி அறிவிக்கும் ராகுல் வர்மா, இதன் பிறகு தென் இந்தியாவில் பிரபலமான செவ்வாழையை உத்திரப் பிரதேசத்தில் தன் தந்தை ராம் சரண் வர்மா பயிரிடத் தொடங்கினார் என்கிறார்.

‘‘சிவப்பு நிறத்தில் நல்ல மணமும் சுவையும் கொண்டு உடலுக்கும் ஆரோக்கியமானதாக செவ்வாழை இருக்கும். போதாதா..? செவ்வாழைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாரம்பரியமான மஞ்சள் நிற வாழைப்பழங்களை 14 மாதங்களில் அறுவடை செய்து கிலோ ஒன்றை ரூ.15க்கு விற்போம். ஆனால் செவ்வாழையை 18 மாதங்களில் அறுவடை செய்கிறோம். இது கிலோ 80 - 100 ரூபாய் வரை விற்பனையாகும்...’’ என்ற ராகுல் வர்மா, தன் தந்தை கடைப்பிடிக்கும் திசு வளர்ச்சி விவசாய முறை குறித்து விவரித்தார்.

‘‘இது லேப்களில் செய்யப்படும் ஒரு செயல்முறை. நல்ல வளமான பயிர்களை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் திசுக்களை க்ளோனிங் (Cloning) மூலம் விருத்தி அடையச் செய்து, அதிகமான உற்பத்தியை ஈட்ட முடியும். இந்த முறை மூலம் குறைந்த நேரத்தில் அதிக அளவில்
தரமான பயிர்கள் கிடைக்கும்.

இவை ஒரே அளவில், வளமாக, தோற்றத்திலும் ஒரே மாதிரி இருக்கும். முதலில் திசு வளர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்படும் பயிரை தாய் மரம் (Mother Plant) என்பார்கள். இந்த தாய் மரத்தை, என் அப்பாதான் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுப்பார். நல்ல தாய் மரம் மூலம்தான் வளமான விளைச்சல் கிடைக்கும். எனவே தாய் மரம், ஆரோக்கியமாக நோய், பூச்சிகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவை சரியான உயரத்தில் நன்றாக பராமரிக்கப்பட்ட பயிர்களாக இருக்க வேண்டும்...’’ என்று சொல்லும் ராகுல் வர்மா, பயிர் சுழற்சி முறையையும் விவரித்தார்.

‘‘என் தந்தையின் வெற்றிக்கு பயிர் சுழற்சி (Crop Rotation) முறையும் ஒரு காரணம். இதன் மூலம் பல வகை பயிர்களை ஒரே நிலத்தில் பருவநிலைக்கு தகுந்தபடி பயிரிட்டு அறுவடை செய்யலாம். இதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்படும். மண்வளம் அதிகரிக்கும். அமோக விளைச்சல் கிட்டும். வாழையை அடுத்து, 90 நாட்கள் உருளையும், அடுத்த 120 நாட்களுக்கு தக்காளியும், கடைசியாக 90 நாட்கள் புதினாவும் அப்பா பயிரிடுவார். புதினாவிலிருந்து புதினா எண்ணெய் தயாரிக்கிறோம்.

பல வகை பயிர்களை அறுவடை செய்வதால் ஒன்றில் நஷ்டம் ஏற்பட்டாலும் மற்றவை அதை ஈடுகட்டிவிடும்...’’ புன்னகைக்கும் ராகுல் வர்மா, தன் அப்பாவின் நான்கு ஏக்கர் நிலம், 100 ஏக்கர் ஆனது என்கிறார்! ‘‘நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு அப்பா விவசாயம் செய்து அதிக விளைச்சலை காண்பித்தார். இதை அறிந்த சுற்றுப்புற மாவட்ட விவசாயிகள் அப்பாவைத் தேடி வந்தனர். தங்கள் நிலங்களை அப்பாவிடம் குத்தகைக்கு கொடுத்தனர். நான்கு ஏக்கர், நூறு ஏக்கரானது இப்படித்தான்!

இன்று வருடத்துக்கு 30 லட்சம் வரை வருமான வரியை செலுத்துகிறோம்! அப்பாவின் பெருமையை அறிந்து உலக நாடுகளில் இருந்தெல்லாம் விவசாயிகள் வரத் தொடங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும், தான் அறிந்ததை கற்றுக் கொடுத்தார்; கற்றுக் கொடுக்கவும் செய்கிறார்.இதுவரை அப்பா 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று விவசாயம் சார்ந்த நிகழ்வுகளிலும், முகாம்களிலும் பங்கேற்று அங்குள்ளவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்...’’ என்ற ராகுல் வர்மா, இப்போது 2 லட்சம் விவசாயிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

‘‘எங்கள் நிலங்களில் 20 ஆயிரம் ஆண்களும் பெண்களும் வேலை செய்கின்றனர். நாங்கள் எப்படி விவசாயம் செய்கிறோம் என்பதை பார்வையிடவே பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ளனர். ஒன்று தெரியுமா? எங்கள் ஊரைவிட்டு பிழைப்புத் தேடி யாருமே நகரத்துக்கு செல்லவில்லை! இதுவே என் அப்பாவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகக் கருதுகிறேன்!

விவசாயத்தில் எப்போதுமே லாபம் கிடைக்கும். என்ன... காலத்துக்கு ஏற்றபடி தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் விவசாயத்தில் புகுத்தி புது முயற்சிகளை மேற்கொண்டபடியே இருக்க வேண்டும். என் தந்தை மூலம் பலர் விவசாயத்திற்கு திரும்பியுள்ளனர். விவசாயத்தை லாபம் அளிக்கும் சிறந்த தொழிலாகவும் பார்க்கின்றனர்!” என்கிறார் ராகுல்.

ராம் சரண் வர்மாவை http://www.vermaagri.com/ என்ற இணையதளத்தின் மூலமாகவும், இவரது மகன் ராகுல் வர்மாவை www.growfarm.in என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்வேதா கண்ணன்