நான்... மழை ரமணன்நான் எஸ்.ஆர்.ரமணன். ‘மழை’ ரமணன் என்றால் உங்கள் எல்லோருக்கும் தெரியும்.நான் அரசியல் தலைவர் இல்லை. கிரிக்கெட் வீரரோ சினிமா நடிகரோ இல்லை. ஆனாலும் தமிழகம் முழுக்க 31 மார்ச், 2016 அன்று ‘#மிஸ்யூ’ டிரெண்ட் ஆனது. நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குநரான நான் ஓய்வு பெற்ற தினம் அது.

தொலைக்காட்சியில் என்னைப் பார்ப்பதற்காகவே தமிழக இல்லங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குட்டீஸும் தவம் கிடந்தார்கள். நான் சொல்வதை வைத்து அவர்களுக்குப் பள்ளி விடுமுறையா இல்லையா என்பதைத் தீர்மானித்தார்கள்.இதுதான் என்னை எல்லாரிடமும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதுவும் 2015ம் ஆண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை என் வாழ்வில் மறக்கவே முடியாது.

அடிப்படையில் நான் சாதாரண மனிதன். ஓர் அரசுப் பணியாளர். இதைத் தாண்டி என்னிடம் வேறு சிறப்புகள் இல்லை.ஆனால், நான் சொல்லித்தான் மழை வருவதாக மக்கள் நம்பினார்கள். இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்வது என்றே தெரியாமல் திகைத்து நின்றேன்; நிற்கிறேன்.

எனக்கு தமிழ் பிடிக்கும். அந்தத் தமிழ்தான் என்னை பாமரர்கள் மத்தியிலும் கொண்டு போய்ச் சேர்த்தது. மிதமான மழை, கனமழை, அதிக கனமழை, வெப்பசலனம், காற்றழுத்த தாழ்வு நிலை... ஆகியவற்றை எல்லாம் சாதாரண மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பொறுமையாக தமிழில் விளக்க ஆரம்பித்தேன்.

தவிர தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குநராக நான் பணியில் அமர்ந்த நேரத்தில்தான் தமிழகத்தில் நியூஸ் சேனல்களும், ஆண்ட்ராய்டு போன்களும், சமூக வலைத்தளங்களும் பிரபலமாகத் தொடங்கின. இந்த தொழில்நுட்ப மாற்றங்கள் சாதாரணமாக இருந்த என்னை பிரபலப்படுத்தின. நான் பிறந்தது புதுக்கோட்டையில். அப்பா பெயர் எஸ்.ஆர்.சிவகுமார். அம்மா பெயர் சுலக்‌ஷனா. அப்பா ரிசர்வ் வங்கியில் வேலை பார்த்தார்.

எறையூர் கிராமத்தில் இருந்த அருணா மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலையும் வேளாண் க்ளைமேட்டாலஜியில் முனைவர் பட்டமும் பெற்றேன்.இந்தத் தகுதியுடன் 1980ல் இந்திய மெட்டீரியலாஜி டிபார்ட்மென்டில் டேட்டா சேகரிப்பாளராக வேலைக்குச் சேர்ந்தேன்.இதற்கிடையில் எனக்குத் திருமணமானது. மனைவி பெயர் மதுமதி. வங்கி மேலாளராக இருந்து இப்போது ஓய்வு பெற்றிருக்கிறார்.

1987ல் மகள் நிவேதிதா பிறந்தாள். 1991ல் மகன் அரவிந்தாக்‌ஷன் ஜனித்தான். சந்தோஷமான குடும்பம். இனிமையான வாழ்க்கை.இவை எல்லாம் நடைபெறுகையில் தில்லியிலுள்ள வடக்கு அரைகோள பகுப்பாய்வு மையத்தில் (Northern Hemisphere Analysis centre) கணிப்பாளராக இருந்தேன். பிறகு சென்னை ஏவியேஷனில் அதே வேலை. இப்போதுதான் இணையம் வளர்ந்திருக்கிறது.

அன்று இன்டர்நெட் என்பதே கிடையாது. விமானம் கிளம்புவதற்கு முன்னால் என்னிடம் வந்துதான் வானிலை அறிக்கை, வானிலை குறித்த குறிப்பேடுகளை எல்லாம் விமானி வாங்கிச் செல்வார். என் ரிப்போர்ட்டில் வானிலை மாற்றம் குறித்து சின்னதாக சிக்கலை நான் குறிப்பிட்டிருந்தாலும் அன்றைய தினம் தன் பயணத்தை அந்த விமானி ரத்து செய்தாக வேண்டும்!

எனவே, என் பணியின் தீவிரத்தை உணர்ந்து கவனமாகப் பணியாற்றினேன்.என்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு வேறு வேறு மாநிலங்களுக்கு போஸ்டிங் கிடைத்தன. என்ன காரணமோ தெரியவில்லை... எனக்கு மட்டும் சென்னையிலேயே வேலை. ஜப்பான் பசுமை வீடு கேஸ் கண்டுபிடிப்பில் இந்தியா சார்பாக இச்சமயத்தில்தான் கலந்து கொண்டேன்.

2002ம் ஆண்டு வானிலை ஆய்வு மைய இயக்குநராக புரொமோஷன் கிடைத்தது. இப்பதவியில் நான் அமர்ந்த இரண்டே வருடங்களில் தமிழகத்தை சுனாமி தாக்கியது.இதை மக்கள் வானிலை மையத்துடன் இணைத்தே அப்போது புரிந்து கொண்டார்கள். வானிலை மையத்துக்கு கடல் மட்டத்துக்கு மேல்தான் வேலை. கடலில் நடக்கும் மாற்றங்களுக்கு தனி ஆய்வு மையம் இருக்கிறது.

எங்கள் வேலை காற்றை மையப்படுத்தித்தான். காற்று எந்த திசையில் எந்த அழுத்தத்தில் வீசுகிறதோ அதைக் கொண்டுதான் மழை, புயலை எல்லாம் கணிப்போம். ஒன்று தெரியுமா... ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் வானிலை மையம் வழியாகத்தான் மிகப்பெரிய தகவல் பரிமாற்றங்கள் நடக்கும். எந்த ரிப்போர்ட் வந்தாலும் உடனே அதை நாங்கள் அறிவிக்கக் கூடாது. வரும் ரிப்போர்ட்டை தில்லிக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வரும் ரிப்போர்ட்டுகளை வைத்து முழுமையான ரிப்போர்ட்டை தயாரிப்பார்கள்.

ஒருவேளை புயல் என்றால் அதற்கு என்ன பெயர்... என்பது உட்பட அனைத்தையும் அவர்கள் முடிவு செய்து எங்களுக்கு அதை அனுப்புவார்கள். அதைத்தான் நாங்கள் செய்தியாளர்களுக்குக் கொடுப்போம். உண்மையிலேயே செய்தியாளர்களை இந்த இடத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். மழை, புயல் காரணமாக உயிர்ச்சேதங்களே ஏற்பட்டதில்லை என்றால் அதற்குக் காரணம் செய்தியாளர்கள்தான்.
நாங்கள் தரும் செய்தியை அப்படியே மாற்றாமல் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பவர்கள் அவர்கள்தான்.

‘சார்... தமிழக முதல்வருக்கு அடுத்தபடியா குறைந்தது ஒரு நிமிஷமாவது நாங்க ஒதுக்கறது உங்களுக்குத்தான்...’ என விளையாட்டாக செய்தியாளர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். வானிலை ஆய்வு மைய இயக்குநருக்கு சில வரம்புகள் இருக்கின்றன. எங்களுக்கு விடுமுறை விடும் அதிகாரம் இல்லை! பல்கலைக்கழகங்களும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் தரும் அறிவிப்பை எங்கள் ரிப்போர்ட்டுடன் இணைப்போம்.

வானிலை மாற்றங்கள், புயல் ஆகியவற்றை அறிவிக்கும் தலையாய கடமை எங்களுக்கு உண்டு. அதேநேரம் கடலோரப்பகுதி மக்களுக்கும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு. நான் பணியில் இருந்த காலத்தில் செய்தியாளர்கள் முன்பு வந்த ரிப்போர்ட்டை படித்து அறிவிப்பேன். அவ்வளவுதான். மற்றபடி அவை எந்த சேனலில் எப்படி ஒளிபரப்பாகிறது என்றெல்லாம் பார்த்ததில்லை.

வீட்டில் நானும் என் மனைவியும் எங்கள் வேலை குறித்து பேசிக்கொள்ள மாட்டோம். பொதுவான விஷயங்களையும், உறவினர்கள், தெரிந்தவர்கள் குறித்தும்தான் உரையாடுவோம். ஓய்வு பெற்ற பிறகு வானிலை குறித்து நான் பேசுவதில்லை. அந்தந்த துறை சார்ந்தவர்கள் அதுகுறித்து பேசுவதே நல்லது என நினைக்கிறேன்.

நமது இஸ்ரோ எப்படி வானிலை அறிக்கைகள் குறித்து எதுவும் பேசுவதில்லையோ அப்படி நாசாவும் வானிலை குறித்து எதுவும் சொல்லாது. இஸ்ரோவும் நாசாவும் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள். அவை வானிலை மையங்கள் அல்ல!எனவே, நாசா வானிலை குறித்து சொன்னதாக வரும் தகவல்களை நம்பாதீர்கள்!

இன்று டெக்னாலஜி பெறுமளவு முன்னேறி இருக்கிறது. அரசுக்கே வானிலை மைய தளங்கள் இருக்கின்றன. அதில் யார் வேண்டுமானாலும் சென்று வானிலை மாற்றங்களைத் தெரிந்துகொள்ளலாம். அதையும் மீறி சந்தேகம் என்றால் வானிலை இயக்குநர் என்ன சொல்கிறார் என டிவியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரேயொரு வேண்டுகோள். பருவநிலை, தட்பவெப்ப நிலை மாற்றங்கள் என்பது மக்களின் உயிர் சார்ந்த பிரச்னை. இதில் வதந்திகளைப் புகுத்தாதீர்கள்.  மகளுக்கும் மகனுக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் தத்தம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். மகன் சோலார் ஆய்வுப்பணியில இருக்கிறார். மகள் ஜெர்மனியில் வசிக்கிறார்!

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்