இந்த அறையின் வாடகை ரூ.62 ஆயிரம்!
சமூக வலைத்தளங்களைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, துபாயில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்று. வானுயர்ந்த கட்டடத்துக்கு மட்டுமல்லாமல், விண்ணைத் தொடும் வாடகைக்கும் பெயர் போயிருக்கிறது துபாய்.  ஆம்; அங்குள்ள ஒரு சிறிய அறையைப் பற்றித்தான் வீடியோ வெளியிட்டிருந்தது அந்த நிறுவனம். எங்கேயும் நகராமல் ஒரே மாதிரி படுத்து, உறங்கும் அளவுக்கான ஒரு பெட், ஒரு சிறிய அலமாரி, பெட்டிலிருந்து எழுந்து நிற்கும் அளவுக்கு மிகச்சிறிய காலி இடம் என தீப்பெட்டி போல ஓர் அறை அது. இதை பெண்களுக்காக மட்டுமே வாடகைக்கு விடப்போவதாக அந்த நிறுவனம் வீடியோவில் அறிவித்திருக்கிறது. இந்த குட்டி அறைக்கு மாத வாடகை இந்திய மதிப்பில் சுமார் 62 ஆயிரம் ரூபாய். இதுபோக முன் தொகையாக ரூ.11 ஆயிரம் கொடுக்க வேண்டும். இவ்வளவு சிறிய அறைக்கு இத்தனை வாடகையா என்று நெட்டிசன்கள் விழிபிதுங்கிப் போயிருக்கின்றனர்.
த.சக்திவேல்
|