வரியை குறைக்கும் சீனா!
இதென்ன கலாட்டா என்கிறீர்களா? உள்ளே வெளியே ஆட்டமேதான். சீனாவும், அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் பதிலடியாக வரியை விதித்திருக்கின்றனர். இதனால் இரு நாடுகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக வரியைக் குறைக்க சீனா முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதிக வரி காரணமாக சில முக்கிய துறைகளில் சீனா இழப்பை சந்தித்திருப்பதாகவும், எனவே இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர சீனா முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.அதன்படி சில பொருட்கள் மீதான வரிகள் அதிரடியாக குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள், ஈத்தேன் போன்ற ரசாயனங்கள், விமான வாடகை, சிப் தயாரிப்பு பொருட்கள்... ஆகியவற்றுக்குத்தான் வரி குறைக்கப்படுகிறதாம்.
இதில் மருத்துவ உபகரணங்களை எடுத்துக்கொண்டால், சீன மருத்துவமனைகள் எம்.ஆர்.ஐ, அல்ட்ராசவுண்ட் மாதிரியான அமெரிக்க உற்பத்தி மருத்துவ இயந்திரங்களை அதிக அளவில் நம்பியிருக்கின்றன. எனவே புதிய இயந்திரங்களை வாங்க முடியாமல் சீன மருத்துவத்துறை சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.
இரண்டாவதாக ஈத்தேன் போன்ற ரசாயனங்களை அமெரிக்காவிலிருந்துதான் சீனா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.ஈத்தேன் போன்ற ரசாயனங்கள் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியில் சீனாதான் டாப். அப்படி இருக்கும்போது மூலப் பொருட்களின் விலை ஏற்றப்பட்டதால் சீன பிளாஸ்டிக் தயாரிப்பு துறை நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. மூன்றாவதாக விமான வாடகை. சீனாவில் பெரும்பாலும் அமெரிக்காவின் விமானங்கள் வாடகையாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. வரி காரணமாக விமான வாடகையும் அதிகரித்திருக்கிறது. இது விமான டிக்கெட் விலையில் எதிரொலித்திருக்கிறது. கட்டண உயர்வு, சீன மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
நான்காவதாக இருக்கும் சிப் தயாரிப்பு பற்றி உலகத்திற்கே தெரியும். அமெரிக்காவில்தான் சக்தி வாய்ந்த சிப்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று வரை இதில் அமெரிக்கா கில்லியாக இருக்கிறது. இப்படி இருக்கையில், வரி, சிப் விலையை அதிகரித்திருக்கிறது.
இந்த நான்கும் அடிவாங்கினால் சீனாவின் பொருளாதாரம் அடிவாங்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, இவற்றுக்கான பதிலடி வரியைக் குறைக்க சீனா முயன்று வருகிறது என்கிறார்கள்.
ஆனால், இது மட்டுமே வரி குறைப்புக்கான காரணம் இல்லை.
சீனாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை சமீபத்தில் அமெரிக்கா ரத்து செய்தது. இது ஆப்பிள் மற்றும் என்விஐடிஐஏ போன்ற நிறுவனங்களுக்கு மிகுந்த பலன் கொடுத்தது. இதனையடுத்துதான் சீனாவும் இறங்கி வர யோசித்திருக்கிறது!
என்.ஆனந்தி
|