வெல்கம் ஏலியன்ஸ்... பூமிக்கு எப்ப வர்றீங்க?!



அடுத்த வீட்டில் யார் உள்ளார்கள் என்பது கூட தெரியாமல் நகர்ப்புற அடுக்ககங்களில் வாழ்பவர்கள், பூமியைத் தவிர வேறு கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காண்பிப்பார்கள். 
ஏலியன்ஸ் எனப்படும் அயலான்கள் குறித்து தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வமும் பரபரப்பும் எல்லோருக்கும் உள்ளது. இந்த ஆர்வம் உலகில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகளையும் விட்டு வைப்பதில்லை.

சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களில் ஏதேனும் உயிரினம் உள்ளதா என்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றன. பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவரும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி  (JWST) K2-18b என்ற வெளிக்கோளில் (Exoplanet) டைமெத்தில் சல்பைடு (DMS) என்ற மூலக்கூறு இருப்பதை கண்டறிந்துள்ளது.  

இது அந்தக் கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காண்பிக்கிறது. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வானியிற்பியல் விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த ஆதாரம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

K2-18b - வெளிக்கோள்

K2-18b என்பது பூமிக்கு சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சூப்பர் - பூமி போன்ற கோளாகும். இது, லியோ விண்மீன் (Leo constellation) கூட்டத்தில் உள்ளது. சிவப்பு நிறமுள்ள சிறு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. 

இது பூமியின் அளவை விட சுமார் 2.6 மடங்கு பெரியது; 8.6 மடங்கு எடை கொண்டது. இந்த கோளில் திரவ நீர் அதன் மேற்பரப்பில் இருக்கக் கூடும் என்று தெரிகிறது. இந்த வெளிக்கோள் முதன்முறையாக 2015ம் ஆண்டில் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கோளை முழுமையாக ஆய்வு செய்யும் பணிகள் சமீபத்தில்தான் தொடங்கின. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் புதிய ஆய்வுகள் அதிகரித்துள்ளன.

டைமெத்தில் சல்பைடு (DMS)

டைமெத்தில் சல்பைடு (DMS) என்பது பூமியில் பெரும்பாலும் கடல்வாழ் நுண்ணுயிரிகளான பிளாங்க்டன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு மூலக்கூறு. இது பூமியின் பெரும்பாலான கடல்களில் பரவலாக உள்ளது. DMS மூலக்கூறு மேக - க்ளவுட்ஸ் - உருவாக்கத்திலும் பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்ல, பூமியின் காலநிலைமீதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த வேதிப்பொருட்கள் இருந்தால், அந்த இடத்தில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது பொருள். இவை (Biosignatures) ‘உயிரி அடையாளங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.  

K2 18b’ கோளின் வளிமண்டலத்தில், ‘டைமெத்தில் சல்ஃபைடு’ (DMS) மற்றும் ‘டைமெத்தில் டைசல்ஃபைடு’ (DMDS) ஆகிய இரண்டு வேதிப்பொருட்களின் அடையாளங்கள்  கண்டறியப்பட்டுள்ளன.இவை எல்லாம் உயிரினங்கள் அங்கு வாழலாம் என்பதற்கான சாத்தியங்கள். எனில் எவ்வகையான உயிரினங்கள் அங்கு வசிக்கின்றன என்பது போகப் போகத் தெரியும்.

வெல்கம் ஏலியன்ஸ்!

பூமியின் உயிர்வேதியியல் சுழற்சிகளில், குறிப்பாக கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கந்தக சுழற்சிகளில் கடல் நுண்ணுயிரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அவை கடல் உணவுச் சங்கிலியின் அடித்தளத்தையும் உருவாக்குகின்றன, ஊட்டச்சத்துக்கள் மற்றும் கரிமப் பொருட்களை மறுசுழற்சியும் செய்கின்றன. மேலும் உயர்ந்த உயிரினங்கள் வளரவும் உயிர்வாழவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் துணை காரணிகளை உற்பத்தி செய்கின்றன.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது தனது சக்திவாய்ந்த கருவிகளை பயன்படுத்தி, குறிப்பாக NIRSpec (நியர் இன்ஃபிராரெட் ஸ்பெக்ட்ரோகிராஃபி) மற்றும் MIRI (மிட்-இன்ஃபிராரெட் கருவி) ஆகியவற்றின் வழியாக தொடர்ந்து K2-18bஐ ஆய்வு செய்து வந்தது. இந்த தொலைநோக்கி நட்சத்திரத்தின் ஒளி கோளின் வளி மண்டலத்தில் ஊடுருவிய வழியை கவனித்துப்பார்த்து, அங்குள்ள குறிப்பிட்ட மூலக்கூறுகளைக் கண்டுபிடிக்க உதவியது.

டைமெத்தில் சல்பைடு தவிர, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது நீராவி, கார்பன் டைஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றையும் 2019 மற்றும் 2023ம் ஆண்டுகளில் கண்டறிந்தது. 

இந்த கண்டுபிடிப்புகள், புவிக்கோளின் வளி மண்டலத்தை ஒட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.பூமியில் உயிரோடு தொடர்புடைய DMS போன்ற மூலக்கூறு கண்டறியப்பட்டதால், K2-18bயில் உயிர் இருக்க வாய்ப்பு அல்லது அதற்கான அனுகூலமான சூழ்நிலைகள் இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சூரியக் குடும்பத்திற்கு வெளியே இந்த வகை மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.இந்த கண்டுபிடிப்பு முதன்மையான தொடக்கம் மட்டுமே. எதிர்காலத்தில் இந்தக் கோளை மேலும் ஆராய்ந்து, நேரடியாக உயிரின் சின்னங்களைத் தேடும் முயற்சிகள் நடைபெறலாம்.

பா.ஸ்ரீகுமார்