சிறுகதை - அந்தரங்கன்
சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன், அனிதாதான். திருவாதிரைக்கு கிளறும் களி வண்ணத்தில், ப்ரவுனும் அல்லாமல், சாக்லேட் வண்ணம் என்று அடித்துக் கூறவும் முடியாத டஞ்சன் நிறத்தில் ஒரு குர்தி, அதற்கு துளியும் பொருத்தமில்லாத லெகின்ஸும் அணிந்து இருந்தாள்.சரியத் தொடங்கிய தசைகள் அவள் வயதை கணிக்க கை கொடுத்தது.  இது அவளைப்பற்றி அறியாதவர்களுக்கு. ஆனால், என்னைப் போல் முப்பத்தி சொச்ச வருசமாய் அவளை அறிந்தவர்களுக்கு வயதுக்கான ஆராய்ச்சி எல்லாம் அவசியமேயில்லை.என்னை நோக்கி வந்தவள், லேசாய் முறைத்துப் பார்த்தாள். ‘‘என்ன பரணி, உட்காந்துட்டே தூக்கமா..?’’ ‘‘நேத்து எங்கே ஆளைக் காணோம்?’’
‘‘தீப்தி காலேஜ் விசயமாக எஸ்.ஆர்.எம். போக வேண்டி இருந்தது. உன்கிட்டே சொல்லலாம்னு நினைச்சேன். அவசரத்திலே மறந்து போயிடுச்சு...’’என்றாள்.‘‘நினைச்சேன்...’’ என்று நான் சொன்னபோது என் முகத்தில் தொடங்கி, அனிதாவின் முகத்தில் அந்தப் புன்னகை முடிந்திருந்தது.‘‘அப்படியும் வச்சுக்கலாம் பரணி.  நான் சொல்லாமலே உன்னால யூகிக்க முடியும்னு நான் மறந்து போனமாதிரி போயிட்டேன்...’’நாங்கள் இருவரும் சிரிப்பதை எங்களைக் கடந்து போன ரவி ஒருவித எரிச்சலுடன் பார்ப்பது போல் தோன்றியது. ஆனால், அவன் எரிச்சலுக்கெல்லாம் எங்களால் ஜெலுசில் ஆக முடியாது.
கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவில் இருவரும் ஒருசேர தேர்வாகி, ஒரே கிளையில் ஆறு மாதங்கள் பணி புரிந்து, கால ஓட்டத்தில் இடம்மாறி, மறுபடியும் இருபது வருடங்களுக்குப் பிறகு ஒரே அலுவலகத்தில்.
மீண்டும் அனிதா இங்கு வந்தபோது மனம் குதூகலம் கொண்டது. அது ஒருமாதிரியான விசித்திர உணர்வு. நம்மை இளமையில் அறிந்தவர்கள் அருகில் இருக்கின்றபோது, நாம் அவர்கள் பார்வையில் வயதுறாமலேயே இருப்பது போன்ற பிரமை. பரஸ்பரம் அன்றைய நாள்களிலேயே நின்று கொண்டு, நிகழ்காலத்தை கைகழுவி விட்டது போன்ற போலி கானல்நீர் திட்டு.
அத்தனை பேரும் நமக்கு மரியாதை கொடுத்து சிறப்பிடம் தந்து நடுத்தர வயதில் ஒதுக்கி வைக்கும்போது, நம்மை ஒருமையில் அழைத்து, தோளில் கை போட்டு, நாமும் களத்தில் இருக்கிறோம் என்று நமக்கே இனம்காட்டுவது போன்ற வருடல்.
இருபது வருடங்களுக்கு பிறகான அனிதாவை முதல் பார்வையில் எனக்கு சட்டென்று அடையாளம் தெரியவில்லை. அடுத்தமுறை பேசும்போது இதை நான் சொல்ல, தனக்கும் அதுவே நேர்ந்ததாக அவள் சொன்னபோதுதான் எங்களுக்குள்ளான விசித்திர மனப் பொருத்தம் தொடங்கியது.
தயங்கித் தயங்கி பேசும் அனிதா இப்போது நிறைய மாறி இருந்தாள். அதை நான் யோசித்துக் கொண்டே அவள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ஒருநொடி என் கண்களைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்,‘‘நிறைய பேசுறேன்னு நினைக்கிறியா பரணி..? காலேஜ்ல அமைதியா இருப்பேன்.
இப்போ அப்படி இருந்தால் எதுவும் வேலைக்கு ஆகாதுல...’’ நூடுல்சை மட்டுமல்ல, என்னையும் ஒரு குத்து குத்தி சுழற்றி அடித்தது போல் உணர்ந்தேன்.சொல்லிப் புரிய வைக்க மெனக்கெட்டு ஓய்ந்து போகும் மனிதர்கள் மத்தியில் சொல்லாமல் மனதை அறிவது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், நானுமே அந்த சுவாரஸ்யத்தை அனிதாவுக்கு தந்த போதுதான், திரிசங்கின் சொர்க்கத்தில் இருவருமே இடம் வாங்கி இருப்பது புரிந்தது.நாற்பத்தி எட்டு வயது ஆண், தன் வயதொத்த பருவகால தோழியுடனான மனப்பொருத்தத்தை சிலாகித்துச் சொன்னால் அதை ரசிக்கும் குடும்பம் எல்லாம் அண்டார்டிகாவில் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. அதனாலேயே அனிதாவுடைய எண்ணை ப்ரைவேட்டில் போட்டு வைத்தேன்.
எனக்குத் தெரியும் அவள் அவசியத்துக்கு கூட அழைக்கமாட்டாள் என்று. பிறகு எதற்கு என்ற கேள்வி எங்களுக்கு வந்ததேயில்லை. உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்த புளி உருண்டைபோல, கேட்பாரற்று அந்த எண் அலைபேசிக்குள் கிடந்தது.
செல்போன் சேவை ஒருநாள் மக்கர் செய்ய, அலுவலகத்தில் இருந்தபோது அனிதாவின் மொபைலை வாங்கி என்னுடைய எண்ணிற்கு அழைத்துப் பார்க்க, அவளுடைய மொபைலில் ‘ப்ரைவேட்’ என்று காட்டியது. நிமிர்ந்து பார்த்துச் சிரித்தேன். அவளிடம் அதே பதில் சிரிப்பு.அதைப்பற்றி விசாரிக்க மாட்டாள் என்ற என்னுடைய எதிர்பார்ப்பும் பொய்க்காமல் நிறைவேறியது.
அலுவலகம் எனக்கு சுவாரசியத்தைக் கூட்டி இருந்தது. அரசல் புரசலாய் எங்களைப் பற்றிய புனைவுகள் அங்கே உருவாகிக் கொண்டிருப்பதை இருவருமே அறிவோம். அதைப்பற்றி அலட்டிக் கொள்ள மாட்டோம் என்பது, இருவருக்குமே தெரியும்.‘‘ரவி என்கிட்டே வந்து, துருவித் துருவி விசாரிக்கிறான் பரணி.
உன்னை முன்னாடியே தெரியுமானு...’’ ஸ்பூனால் ஐஸ்க்ரீமை அளந்துகொண்டபடி ஒருநாள் சொன்னாள்.‘‘சொல்ல வேண்டியது தானே..! எங்களுக்கு நடுவில விகாரமா எதுவுமே இல்லைனு...’’இதைச்சொல்லி நிரூபிக்க முற்படும் போதுதான் அவர்கள் கற்பனை இன்னுமே விகாரப்படும் என்பதும் தெரியும். அவரவர் சிந்தனைகளை அப்படியே விட்டுவிட வேண்டும். அடுத்தவர் சிந்தனையில் நம் மீதான புல், புதராய் வளர்வதைப் பற்றி கவலை கொள்வது ஆரோக்கியத்துக்கு கேடு.
இந்த நட்பை பேணி பாதுகாக்க நாங்கள் மெனக்கெடவில்லை. மீசைக்கு மை தடவி நான் என்னை அவதாரமாக்கிக் கொள்ளவில்லை. காதோரம் நரைத்த முடியை நிறமேற்றி அனிதாவும் தன்னை இளமையாக்கி கண்ணாடியை ஏமாற்ற முற்படவுமில்லை.
இன்னும் சொல்லப் போனால், அவள் கண்களைத் தாண்டி ஆராய எனக்கு ஆர்வமேயில்லை. அங்கங்களில் சுவாரஸ்யமற்று எண்ணங்களில் சுவாரஸ்யமாக இருப்பது மத்திம வயதில் அவ்வளவு எளிதாய் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இதில் கள்ளம் இருப்பதாய் உலகம் சொன்னால், அதற்கு ஆதாரம் உடலோ, உணர்ச்சியோ இல்லை... மொத்தமாய் உணர்வு மட்டும்தான். அவளைப் பொறுத்தவரை அவளுக்கு நானொரு நம்பத்தகுந்த, உற்ற நண்பனான அந்தரங்கன். எனக்கு அதன் பெண்பால் அவள்.அது ஒரு வெள்ளிக் கிழமை. அனிதா அலுவலகத்திற்கு தாமதமாக வந்தாள். கண்கள் சிவந்திருந்தன. அழுதிருக்கிறாள் என்று யூகிக்க அரைநொடி கூட அவசியப்படவில்லை.
லன்ச் அவரில் அமைதியாக அவள் முகம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். ரவி அவளுடைய கணவரை எங்கோ வழியில் சந்தித்து பேசி இருக்கிறான் என்று மட்டும் சொன்னாள்.
என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது.‘‘அடிச்சாரா..?’’ என்றேன். என் கண்களை பார்க்காமல் எங்கோ பார்த்தாள்.‘‘சந்தேகம் ஆண்களுடைய பலகீனம். அதிகாரம் செய்றதா நினைச்சிட்டு சிலநேரம் ஆதிக்கம் செலுத்திடுவாங்க. ரவிகிட்டே பேசிப் பார்க்கட்டுமா..?’’ என்றேன்.
அவசரமாய் திரும்பி என்னை முறைத்தாள்.‘‘உனக்கு புரியலயா பரணி? இங்கே நிஜம் தோத்துட்டு, கற்பனை ஜெயிச்சு இருக்கு. நாம மறுக்க மறுக்க அந்த கற்பனைக்கு சிறகு முளைக்குமே தவிர, செத்துப் போகாது.பதினெட்டு வருசமாச்சு கல்யாணம் ஆகி. இரண்டு டீன் ஏஜ் பெண் குழந்தைகளோட அம்மா.
சேர்ந்து வாழ்ந்து இருக்கிறோம். அவரோட கற்பனையிலேயே நான் சரியாக உருவாகலைனா, எட்டு மாசம் கூட வேலை செய்றவன், என்னை தவறா கற்பனை செய்றதுல அதிகப்படி எதுவுமில்லை பரணி...’’ முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து எழுந்து போனாள்.
அடுத்து வந்த நாள்களில் இயற்கையாகவோ, அல்லது இருவரும் விரும்பியோ ஒரு இடைவெளி தன்னால் உண்டானது.
அண்ணன் மகள் திருமணத்திற்காக பதினைந்து நாள் விடுப்பில் சென்றிருந்தேன். அலுவலகம் தவிர இருவரும் அலைபேசியில் பேசிக் கொண்டது கூட கிடையாது. காலை வணக்கமும், இனிப்பான உறக்கத்திற்கும் தினந்தோறும் வாழ்த்தும் சம்பிரதாயமும் எங்களிடம் இல்லை. எங்கு விட்டுவிட்டு செல்கிறோமோ, அங்கேயே இருக்கும் அந்த நட்பு.
அடுத்து சில நாள்கள் இருவருக்குமே வேறு வேறு பிரான்சு களில் கூடுதல் பொறுப்பு தரப்பட்டிருக்க, அந்த வேலைகளில் மும்முரமானோம். என்னைக் கடந்து என் மனதை படிக்கும் ஒரு தோழியை, அந்த நாளில் நான் தவறவிட்டு இருந்தேன்.
அன்று வேலை முடித்து வீட்டுக்குச் சென்றபோது சாவித்திரி இளைய மகனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்தேன். ‘‘பெரியவனோட மொபைலை அவன் இல்லாத நேரத்திலே எடுத்து நோண்டி இருக்கான். எதுக்குன்னு கேட்டால் கேம்ஸ் விளையாடனு சொல்றான். அதான் ரெண்டு தட்டு தட்டினேன்...’’ என்றாள் சாவதானமாய்.
‘‘எடுத்து பார்த்தால் என்ன தப்பு? அண்ணன் தம்பி தானே..? அவன் விருப்பு, வெறுப்பு, ரசனைகளை புரிஞ்சுக்கறதுல ஒரு சுவாரஸ்யம். இதுக்கெல்லாம் கை நீட்டுறது ரொம்ப அதிகம்...’’ என்றேன் உடை மாற்றிக் கொண்டே.‘‘எல்லாத்துக்கும் எல்லை இருக்கு. மனசு நினைக்கிறதை உதடு மறைக்கிறது கூட ஒருவகையான இங்கிதம்தான். நம்ம சிந்தனைக்கு கள்ளச்சாவி போட்டு நாம இன்னொருத்தர் கையில குடுக்கறது நமக்கே தெரியாம நம்ம சுதந்திரத்தை அவங்களுக்கு எழுதித் தர்ற மாதிரி.
உடல் ஈர்ப்பு மட்டுமில்லை, மன ஈர்ப்பும் எல்லை மீறினா தப்புத்தான்...’’எங்கே பார்த்துச் சொல்லி விட்டுப் போனாள். எனக்குத்தான் ஜோட்டால் அடித்தது போல் இருந்தது. அதன்பிறகு இதுபற்றி அவள் பேசவே இல்லை. கண்களையும், செயல்களையும் கூர்ந்து கூர்ந்து பார்த்த எனக்கு, அவள் மனதை வாசிக்கவே இயலவில்லை.
எனக்கு அவமானமாக இருந்தது என்னை நினைத்து. சாவித்திரியின் கண்களைப் பார்த்து, மனதைத் தொட முடியாமல் தடுமாறினேன். இன்னும் சொல்லப் போனால், கள்ளச்சாவிகளுக்கு மனம் திறக்காமல் அவள் காட்டிய திடமுகம் என்னை பயமுறுத்தியது.ஒரே கேள்வியை நூறு முறையில், மனது கேட்டு கேட்டு, அழித்தது.
அலுவலகம் வந்தேன். பிரான்ச் ஆபீசில் இருந்து அனிதா அலுவலகத்திற்கு திரும்பி இருந்தாள். என்னைப் பார்த்துவிட்டு முகமலர்வோடு எதிர்கொண்டு வந்தாள். என் சிரிப்பில் தெரிந்த வறட்சியை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள்.‘‘பரணி, ஏதாவது பிரச்சனையா?’’ என்றாள். திறப்பை எடுக்கும் முன்னே, பூட்டை மாற்றினேன்.‘‘நத்திங் அனிதா. லேசா தலைவலி இரண்டு நாளா...’’ அவசரமாகக் கடந்தேன் இடத்தையும், அவளைச் சிந்திப்பதையும்.
உள்ளூர இனம்புரியாத வலி ஒன்று உண்டானது.பிணைத்திருந்த முடிச்சை விடுவித்த நிமிசம் எதையோ காப்பாற்றியது போலவும், எதையோ இழந்தது போலவும் ஒருசேரத் தோன்றியது.‘‘குட் லக் பரணி. நான் பிரான்ச் மாறப் போறேன். அதை சொல்லத்தான் வந்தேன்...’’ என்று என் முதுகிற்கு பின்னால் அனிதா பேசினாள்.அதையும் கூட நான் யூகித்திருந்தேன் என்பதை எப்படி அவளிடம் சொல்ல..?
- எஸ்.பர்வின் பானு
|