10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓநாய் மீண்டும் பூமியில்!



‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமான ஒரு விலங்கு இனமாக கருதப்படும் டையர் ஓநாய், பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உயிரித்தொழில்நுட்ப நிறுவனம் கோலோசல் பயோசயின்சஸ் அறிவித்துள்ளது. 
பில்லியனர் பென் லாம் மற்றும் மரபியல் நிபுணர் ஜார்ஜ் சர்ச் ஆகியோரால் நிறுவப்பட்ட கோலோசல் பயோசயின்சஸ், மனிதகுல வரலாற்றில்அழிந்து போன உயிரினம் முதல் முறையாக, 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருகிறது.

டையர் ஓநாய்?

டையர் ஓநாய்கள் (Aenocyon dirus) சுமார் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போவதற்கு முன்னர் தெற்கு கனடா மற்றும் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்திய  ஓநாய் இனமாகும். இதன் கற்படியுருவங்கள் (fossils) வட அமெரிக்காவில் கண்டறியப்பட்டன. இந்த இனமானது சுமார் 57 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இனம். இவை, இன்றைய சாம்பல் ஓநாய்களை ஒத்திருக்கின்றன. ஆனால், அவை பெரியதாக, வெள்ளை நிற வெளிப்புற கோட்டுகளுடன் இருந்தன.

இந்த ஓநாய் 3.5 அடி உயரமும், 6 அடிக்கு மேல் நீளமும், 68 கிலோ வரை எடையும் இருக்கும். டையர் ஓநாய்கள் குதிரைகள், காட்டெருமைகளை வேட்டையாடி உண்ணக் கூடியவை.உயிரித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோமுலஸ், ரேமுஸ் என்ற இரண்டு ஆண் டையர் ஓநாய்கள் கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி பிறந்தன. இந்த இரண்டும் தற்போது 4 அடி நீளமும் 36 கிலோ எடையுடன் உள்ளன.

‘கேம் ஆப் த்ரோன்’ஸில் ஒரு கதாபாத்திரத்தின் பெயரால் பெயரிடப்பட்ட கலீசி என்ற பெண் டையர் ஓநாய், இந்தாண்டு ஜனவரி 30ம் தேதி பிறந்தது. மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் இதன் வளர்ச்சியும் சீராக உள்ளது என்று கோலோசல் பயோசயின்சஸ் அறிவித்துள்ளது. இதுவரை அறியப்பட்ட ஓநாய் இனங்களில் பயங்கரமான ஓநாய் என்பது ஹவுஸ் ஸ்டார்க்கின் சிகில் அல்லது மாஸ்-கட்தான்.

சரி... டையர் ஓநாய் எப்படி அழிந்தது?

இந்த இனம் தனது உணவிற்காக உண்ணக்கூடிய இரை இனங்கள் அழிந்த பின் ஒருவேளை அழிந்து போய் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் மனிதர்கள் இதனை வேட்டையாடியும் இந்த இனத்தை அழித்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். 

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ஜார்ஜ் ஆர்ஆர் மார்ட்டினின் ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ தொடர்கள் - ஃபேண்டஸி நாவல்களின் காரணமாக, இந்த இனங்கள் குறித்து  விவரங்களை பலர் தெரிந்து வைத்துள்ளனர். இந்த ஓநாய்களை தற்போது வட அமெரிக்காவில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட இடத்தில் கோலோசல் வைத்துள்ளது. அங்கு இந்த ஓநாய்கள் நன்கு கவனிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

எப்படி உருவாக்கினார்கள்?

கோலோசலில் உள்ள விஞ்ஞானிகள் இந்த ஓநாய்களின் மாதிரிகளுக்காக அருங்காட்சியகங்கள் மற்றும் ஆய்வகங்களைத் தொடர்புகொண்டு, சுமார் 13,000 ஆண்டுகள் பழமையான பல் மற்றும் 72,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு ஆகியவற்றை வாங்கினார்கள்.‘‘மண்டை ஓட்டின் உள்ளே பெட்ரஸ் அல்லது உள் காது எலும்புகள் உள்ளன. இது நன்கு பாதுகாக்கப்பட்ட டிஎன்ஏ...’’ என்று கோலோசலின் தலைமை அறிவியல் அதிகாரி பெத் ஷாபிரோ தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு மாதிரிகளிலிருந்து, ஷாபிரோ மற்றும் அவரது குழுவினர் இந்த ஓநாய் மரபணுக்களை உருவாக்க போதுமான டிஎன்ஏவை மீட்டெடுக்க முடிந்தது - அதன் முழுமையான மரபணு தகவல்களின் தொகுப்பு கண்டறியப்பட்டது. பின்னர் அவர்கள் இந்த மரபணுக்களை ஓநாய்கள் உள்ளிட்ட பிற கேனிட் இனங்களுடன் ஒப்பிட்டனர்.

மரபணுத் தரவைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் டையர் ஓநாய்களின் நெருங்கிய உறவினர்தான் சாம்பல் ஓநாய் என்பதை உறுதிப்படுத்தினர். ஆம். டிஎன்ஏ குறியீட்டில் 99.5% சாம்பல் நிற ஓநாய்களுடன் டையர் ஓநாய் ஒத்துப் போகிறது.

விஞ்ஞானிகள் மரபணு எடிட்டிங் மூலம் சாம்பல் ஓநாயின் 14 மரபணுக்களில் 20 தனிப்பட்ட திருத்தங்களைச் செய்தனர். அவற்றில், 15 அழிந்துபோன டையர் ஓநாய் மரபணு மாறுபாடுகளான வெளிர் நிற கோட், நீளமான முடி, உடல் அளவு மற்றும் தசைகள் போன்றவற்றை கண்டறிந்தனர்.

மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவைக் கொண்டு குளோனிங் செய்ய இயலவில்லை. 500 டிகிரி ஓவனில் டிஎன்ஏ-வானது சிதைந்து போனது. எனவே அதற்குப் பதிலாக செயற்கை உயிரியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர்.

சாம்பல் ஓநாய்களின் மரபணுவில் 20 மாற்றங்கள் செய்து, தோற்றத்தில் டையர் ஓநாய் போலவே இருக்கும் சில குட்டிகளை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஓநாய்கள் சாம்பல் ஓநாய்களை விட பெரிதாக, வெள்ளையாக இருக்கின்றன. அவ்வளவுதான்.

டையர் ஓநாயின் மரபணுவுக்கும் சாம்பல் ஓநாய் மரபணுவுக்கும் உள்ள வேறுபாடு 0.5 விழுக்காடு. அரை சதவிகிதம் என்பது சிறியதாகத் தெரியலாம். ஆனால், தனித்தனி மரபணுக்கள் என்று வரும்போது ஒட்டுமொத்தமாக 1,22,35,000 டி.ன்.ஏ கூறுகள் மாறுபடும்!

அதாவது சாம்பல் ஓநாய்கள் மற்றும் டையர் ஓநாய்கள் டிஎன்ஏக்கள்  கட்டமைப்பு 99.5% ஒரே போல உள்ளது. ஆனால், டையர் ஓநாயானது 25 லட்சம் முதல் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக சாம்பல் ஓநாய்களிலிருந்து வேறுபட்டு வேறொரு பேரினத்தில் இருந்து உருவானது என்கிறார் கோலோசல் உயிரி அறிவியலின் விஞ்ஞானி டாக்டர் பெத் ஷாபிரோ.

கோலோசலின் ஓநாய் குட்டிகள் உண்மையில் பயங்கரமான ஓநாய்களாக இருந்தாலும், ரோமுலஸ், ரேமுஸ் மற்றும் கலீசிக்கு பெற்றோர் இல்லை! அவர்கள் வேறு எந்த ஓநாய்களையும் இதுவரை சந்தித்ததில்லை, வேட்டையாடவும் தெரியாது. அவை இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த ‘பயங்கரமான ஓநாய்கள்’ இறந்து அழிந்து மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் இரண்டாவது இனமாக இருக்கும். முதலாவது, ஐரோப்பாவின் பைரனீஸ் பகுதியில் இருந்து வந்த புகார்டோ என்ற மலை ஆடு உயிரித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. உயிரித் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அழிந்து போன இனங்கள் மீண்டும் மீட்டெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும், இது தற்போதைய சூழலில் பல சிக்கல்களையும் உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

இன்றைய சூழலில் தற்போதுள்ள உயிரினங்கள் பலவும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றம், மனிதர்களின் அதீத பயன்பாடு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக அவைகளின் அழிவு அதிகரித்து வருகிறது. இவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம்.  

இதை விட்டுவிட்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களை மீட்டெடுப்பது என்பது சரிதானா என்ற கேள்வியும் எழுகிறது. அறிவியல் தொழில்நுட்பங்களை தற்போதுள்ள சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகால உயிரினங்கள் மீட்டெடுக்கப்படுவது, தற்போதுள்ள புவியின் உயிரினங்களை கேள்விக்குறியாக்கலாம். இதன் காரணமாக மீட்டெடுப்பு தொழில்நுட்பம் என்பது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

பா.ஸ்ரீகுமார்