ஜில் ஜில் ஜிங்கிச்சா!



Fearless Actress... இப்படித்தான் இந்திய சினிமா சானியா மல்ஹோத்ராவை அடையாளப்படுத்துகிறது. மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் படம் ‘தக் லைஃப்’. தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்தின் திருமண பாடலான ‘ஜிங்கிச்சா...’ ரிலீசாகி எங்கும் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

மணிரத்னத்தின் திருமண பாடல்கள் எப்போதும் கவித்துவமாகவும் தனித்துவமாகவும் இருக்கும். அந்த வகையில் இந்தப் பாடலும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதில் நடனமாடிய கமலஹாசன் மற்றும் சிம்பு ஒரு ட்ரெண்ட் எனில் மற்றும் ஒரு ட்ரெண்ட் அந்த பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய சானியாதான்.
உண்மையில் தமிழுக்கு வருவார் என எதிர்பார்த்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஏனெனில் இவர் வசூல் வரலாறு அப்படி. இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸை உலுக்கி இப்போதும் டாப் இரண்டில் இடம் பிடித்திருக்கும் அமீர்கானின் ‘தங்கல்’ மற்றும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படங்களிலும் சானியா நடித்திருக்கிறார்.

‘தங்கல்’ படத்தில் அமீர்கானின் நான்கு மகள்களில் இரண்டாவது மகளாக மாஸ் காட்டி இருப்பார். ‘ஜவான்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் முத்திரை பதித்திருப்பார்.
கொரோனா நாட்களில் ஓடிடி தளங்களே கதியென கிடந்த பலருக்கும் சானியா வரலாறு சர்வ சாதாரணமாக தெரியும். முதல் படம்  துவங்கி அடுத்தடுத்து இவர் நடித்த அத்தனை  கதாபாத்திரங்களும் தனித்துவமானவை. 
‘போட்டோகிராப்’, ‘பதாய் ஹோ’ - தமிழில் ஆர்ஜேபாலாஜி நடிப்பில் இப்படமே ‘வீட்ல விசேஷம்’ என ரீமேக் செய்யப்பட்டது - ‘சகுந்தலா தேவி’, ‘லுடோ’... இப்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘Mrs’ வரையிலும் தொடர் பாராட்டுகளுடன் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் சானியா. யார் இந்த சானியா? பலருக்கும் ஓரளவு வரலாறு தெரிந்திருந்தாலும் கொஞ்சம் விபரமாக அலசுவோம்.

1992ம் ஆண்டு தில்லியில் பிறந்த பஞ்சாபி பொண்ணு. தில்லி கார்கி கல்லூரியில் பட்டப்படிப்பு முடிந்தவுடன் முறைப்படி பாலே நடனம் கற்றுக் கொண்டார். தொடர்ந்து இந்தி தனியார் தொலைக்காட்சியின் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் டாப் ஆக வந்தார். பிறகு மும்பைக்கு குடிபெயர்ந்த சானியா மல்ஹோத்ரா, அங்கு டிவி சீரியல்களில் அசிஸ்டென்ட் கேமரா வுமனாக சில காலங்கள் வேலை செய்தார்.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த போதுதான் இந்தியாவின் ஃபேமஸ் காஸ்டிங் இயக்குநர் முகேஷ் சப்ராவிடமிருந்து அழைப்பு வந்தது. முதல் படம் ‘தங்கல்’.குத்துச்சண்டையில் எதுவுமே தெரியாத சானியாவுக்கு அந்த அழைப்பு வினோதமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அந்தப் படத்திற்கு தேர்வான நாள் முதல் குத்துச்சண்டை வீடியோக்கள் அத்தனையும் பார்த்து தன்னை தயார்படுத்திக் கொண்டே இருந்தார். 

மேலும் அமீர்கானுடன் இணைந்து உண்மையான குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் மாஸ்டர்களுடன் பயிற்சியும் எடுத்துக்கொண்டார் சானியா.
இந்த முதல் படத்தில் இருந்தே அவர் எடுத்துக் கொண்ட கதாபாத்திரங்கள் அடிப்படையில் ‘பயமில்லாத நடிகை’ என்னும் பட்டப் பெயருக்கு சொந்தக்காரரானார்.

ஏனைய பாலிவுட் நடிகைகள் போல் கலர்ஃபுல் ரொமான்ஸ், டூயட் என கதைகளை தேர்வு செய்யாமல் தனக்கு கதையில் எவ்வளவு முக்கியத்துவம் என ஆராய்ந்து கேரக்டர்களை தேர்வு செய்வதில் இவர் திறமைசாலி. 

இந்தியில் சினிமா சார்ந்த விருதுகள் அறிவிப்பு என்றாலே நிச்சயம் அதில் சானியாவின் பெயரை எதிர்பார்க்கலாம். சானியா படத்தில் நடித்தாலே அந்தப் படம் ஒன்று பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகும் அல்லது விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று விருதுகளை அள்ளும். இதனாலேயே சானியா மல்ஹோத்ரா லக்கி ஸ்டார் நடிகையாகவும் வலம் வருகிறார்.

சானியாவின் இன்னொரு ஸ்பெஷல் எந்த வாரிசு நடிகர் நடிகைகள் கூட்டத்திலும் இல்லாமல் தனித்து ஜொலிப்பது. சிறுவயதிலிருந்தே சினிமா ஆர்வத்தில் தன்னைத் தானே வளர்த்துக்கொண்டு இந்த இடத்தில் நிற்கிறார். அப்பா சுனில் மல்கோத்ரா இன்ஜினியர், அம்மா ரேணு மல்ஹோத்ரா ஃபேஷன் டிசைனர். இப்பொழுது சானியாவின் அத்தனை உடைகளையும் அவர்தான் டிசைன் செய்கிறார்.  

எங்கு யார் எப்படி கேள்வி கேட்டாலும் அதற்குத் தயங்காமல் பதில் சொல்லும் நடிகை. காதல் மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்து நடிகர்களிடம் கேள்வி கேட்டாலே எஸ்கேப் ஆகி
விடும் நிலையில் இவர் தனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது... ஆனால், அது வெறும் சிச்சுவேஷன்ஷிப், டேட்டிங் உடன் முடிந்து விட்டது என போல்ட் ஆக பதில் கொடுக்கிறார்.
இப்படிப்பட்ட சானியாவிற்குக் கூட அமைதியாக இருக்க வேண்டிய ஓர் ஆபத்தான தருணமும் இருந்திருக்கிறது.

ஒருமுறை தில்லி மெட்ரோ ரயிலில் இவர் பயணிக்கும் பொழுது ஆண்கள் குழுவால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார். உதவிக்குக்கூட யாரும் இல்லை. அந்த இடத்தில் அமைதி காத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வீடு வந்து சேர வேண்டும் என்பதே அவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கிறது. போராடுவதை விட முதலில் உயிர் பிழைப்பது முக்கியம் என்பதே சானியாவின் தாரக மந்திரம்.

ஃபில்டர் காபி பிரியை. எந்த ஊர், எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கிருக்கும் காபியை ஒருமுறையாவது சுவைக்காமல் நாடு திரும்ப மாட்டார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த சானியா மல்கோத்ரா தன் சொந்த உழைப்பில் தனக்குத்தானே ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்! அதுவும் மும்பையின் காஸ்ட்லியான கடற்கரை சாலையில். இதோ தற்போது மணிரத்தினம் படம் மூலமாக தமிழுக்கு நல்வரவு. தொடர்ந்து அனுராக் கஷ்யப்பின் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

இவை மட்டுமின்றி சுமார் அரை டஜன் படங்களுக்குமேல் நடித்துக் கொண்டிருக்கிறார். அனைத்துக்கும் சிகரமாக ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ரீமேக்கான ‘Mrs’ பட க்காட்சிகள், ‘ஜிங்கிச்சா...’ பாடல் கிளிப்பிங்ஸ் என சமூக வலைத்தள ட்ரெண்டிங்கில் கொடிகட்டிப் பறக்கிறார்!  

ஷாலினி நியூட்டன்