Must Watch



ஃப்ளோ

இந்த வருடம் சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டிய படம், ‘ஃப்ளோ’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளைக் குவித்து வருகிறது. ஓர் அடர்ந்த காட்டுப்பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கம் ஏற்படுகிறது.

எல்லா இடங்களும் மூழ்கி வருகின்றன. அந்தக் காட்டில் வசிக்கும் பூனை உட்பட மற்ற விலங்குகளும், பறவைகளும் எப்படி தப்பிக்கின்றன என்பதை சாகசம் கலந்து, நெகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

வெள்ளப்பெருக்கம் எனும் இயற்கைச் சீற்றத்துக்குப் பின்னணியில் இருக்கும் மனிதனின் செயல்களை மறைமுகமாகச் சித்தரித்திருப்பது இப்படத்தின் சிறப்பு. மட்டுமல்ல, பெரும் நிறுவனங்கள் மற்றும் ஸ்டூடியோக்களைச் சார்ந்திருக்காமல், சுயாதீனமாக எடுக்கப்பட்ட இப்படம், அனிமேஷன் துறையில் பெரும் புரட்சியை செய்திருக்கிறது.

ஆம்; ஹாலிவுட்டில் அனிமேஷனுக்காக பிரத்யேகமாக புதிய மென்பொருளையே வடிவமைப்பார்கள். அதை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு உரிமையில்லை. அந்த மென்பொருளை வடிவமைக்கவே பல கோடிகளைச் செலவழிப்பார்கள். 

ஆனால், ‘ஃப்ளோ’வை ‘பிளண்டர்’ எனும் இலவசமாகக் கிடைக்கும் அனிமேஷன் மென்பொருளைப் பயன்படுத்தி, ஐந்தரை வருடங்களில் உருவாக்கியிருக்கின்றனர். ஆஸ்கர், கோல்டன் குளோப் உட்பட  ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியிருக்கும் இப்படத்தின் இயக்குநர், கின்ட்ஸ் ஜில்பாலோடிஸ்.

எம்புரான்

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி, வசூலைக் குவித்த மலையாளப் படம், ‘லூசிபர்’. இதன் இரண்டாம் பாகம்தான் இது. ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் குஜராத்தில் இந்து, முஸ்லீம்களுக்கு இடையிலான கலவரத்துக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் தங்களது ஊரைவிட்டு, அடைக்கலம் தேடி வேறொரு ஊருக்குச் செல்கின்றனர்.

இப்படி அடைக்கலம் தேடிச் செல்லும் குடும்பங்களில் சிறுவன் சயித் மசூத்தின் குடும்பமும் ஒன்று. பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த சுபத்ரா பென் என்பவர் இஸ்லாமியக் குடும்பங்களுக்கு அடைக்கலம் தருகிறார். பென்னின் உறவினரான முன்னாவுக்கு இது பிடிக்கவில்லை. இஸ்லாமியர்கள் மீது வெறுப்புடன் இருக்கிறான் முன்னா. இஸ்லாமியர்கள் தங்கியிருக்கும் இடம் குறித்து பால்ராஜுக்குத் தகவல் தருகிறான்.

கும்பலுடன் வரும் பால்ராஜ், அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரையும் கொடூரமாக கொலை செய்கிறான். சயித் மட்டும் தப்பிக்கிறான். சொந்தங்களை இழந்த சயித், குரேஷிஅப்ராமிடம் சேர்கிறான். 

குரேஷி அப்ராம் யார்? பால்ராஜும், முன்னாவும் என்னவாகின்றனர்? சயித் எப்படி பழி தீர்த்துக்கொள்கிறான் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.  இப்படத்தின் இயக்குநர் பிருத்விராஜ்.

மேட் ஸ்கொயர்

இரு வருடங்களுக்கு முன்பு வெளியாகி, வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘மேட்’. இதனுடைய அடுத்த பாகம்தான், ‘மேட் ஸ்கொயர்’. ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்தப் படம். முதல் பாகத்தின் கதை முடிந்த பிறகு, நான்கு வருடங்கள் கழித்து இரண்டாம் பாகத்தின் கதை ஆரம்பிக்கிறது. 

லட்டு என்றழைக்கப்படும் கணேஷ் சிறையில் இருக்கிறான். ஆறு மாணவர்கள் கணேஷை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்கின்றனர். எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருந்தால் சிறையில் இருப்பான் என்று கணேஷிடம் சிறைக்குச் சென்றதற்கான காரணத்தைக் கேட்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். கணேஷ் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான். அவனைத் தடுத்து கோவாவுக்குப் பயணம் செல்ல திட்டமிடுகிறான் நண்பன் அசோக். கணேஷ் ஏன் தற்கொலை செய்துகொள்ளப் போனான்? அவன் சிறை சென்றதற்கான காரணம் என்ன என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

வழக்கமான நண்பர்களின் கதைதான் என்றாலும் எங்கேயும் நின்றுவிடாமல் வேகமாகச் செல்கிறது திரைக்கதை. ஜாலியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண் சங்கர்.

ஜுவல் தீஃப் த ஹெய்ஸ்ட் பிகின்ஸ்

கடந்த வாரம் ‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘ஜுவல் தீஃப் : த ஹெய்ஸ்ட் பிகின்ஸ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. உலகம் முழுவதும் பயணம் செய்து தங்கம், வைரம் என்று விலையுயர்ந்த பொருட்களைத் திருடுவதில் கைதேர்ந்தவன், ரேஹன் ராய். யாருக்குமே தெரியாத இடத்தில் பதுங்கியிருப்பதாலும், அடிக்கடி தனது இடத்தை அவன் மாற்றிக்கொண்டே இருப்பதாலும் காவல்துறையினரால் ரேஹனைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.

ஹங்கேரியிலிருந்து இந்தியாவுக்கு வருகிறான் ரேஹன். கலைப்பொருட்களைச் சேகரித்து வரும் ராஜன் என்பவர் ரேஹனுக்கு அறிமுகமாகிறார். பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த ஓர் அரிய கல்லைத் திருடி தரும்படி ரேஹனிடம் கோரிக்கை வைக்கிறார் ராஜன். ரேஹனுக்கு ராஜனின் மனைவியும் அறிமுகமாகிறார். 

ராஜனைக் கண்டாலே பயந்து நடுங்கும் அவரது மனைவிக்கும், ரேஹனுக்கும் இடையில் நட்பு உருவாகிறது. ராஜனிடமிருந்து உன்னைக் காப்பாற்றுகிறேன் என்று உறுதிகொடுக்கிறான் ரேஹன். சூடுபிடிக்கிறது திரைக்கதை.விறுவிறுப்பாகச் செல்லும் இப்படத்தை கூகி குலாட்டியும், ராபி க்ரூவலும் சேர்ந்து இயக்கியிருக்கின்றனர்.

தொகுப்பு: த.சக்திவேல்