Must Watch



டியூன் 2

தலைசிறந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களைப் பட்டியலிட்டால் ‘டியூனு’க்கு நிச்சயமாக ஓர் இடம் இருக்கும். அதன் இரண்டாம் பாகம்தான் இது. இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்த ஆங்கிலப்படம் , ‘ ஜியோ ஹாட்ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. 

ராட்சத புழுக்கள், விநோத உயிரினங்களுடன் மனிதர்களும் வாழும் ஒரு பாலைவன கிரகம். இப்பிரபஞ்சத்திலேயே வியக்கத்தக்க ஒரு பொருளான ஸ்பைஸ் அந்தப் பாலைவனத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த ஸ்பைஸை அபகரிக்க திட்டமிடும் ஒரு கூட்டம் நாயகன் பாலின் குடும்பத்தையும் அழிக்கிறது. மட்டுமல்ல, அந்தக் கூட்டம் பாலைவனத்தில் வாழ்ந்து வருபவர்களையும் அழித்து வருகிறது.

பாலைவனத்தையும், அங்கே வசிக்கும் மக்களைக் காபாற்றுவதற்காகவும், தன்னுடைய குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்கவும் பால் எடுக்கும் விஸ்வரூபம்தான் திரைக்கதை.  
ஃப்ராங்க் ஹெர்பெர்ட் எழுதிய உலகப்புகழ் பெற்ற நாவலான ‘டியூனை’ அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகத்திலிருந்து ஒரு அதிசய பாலைவன உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது இப்படம். படத்தின் இயக்குநர் டெனிஸ் வில்னவ்.

ஸ்கை ஃபோர்ஸ்

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான ஏதோவொரு பிரச்னையை மையமாக வைத்து, மாதத்துக்கு ஒரு படமாவது பாலிவுட்டிலிருந்து வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் புது வரவு ‘ஸ்கை ஃபோர்ஸ்’. இந்த இந்திப்படம் ‘அமேசான் ஃப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. 

எழுபதுகளின் ஆரம்பத்தில் காஷ்மீர் பிரச்னை காரணமாக, எதிர்பாராத ஒரு நாளில் இந்திய விமான தளத்தின் மீது பாகிஸ்தானின் விமானப்படை தாக்குதலை நடத்துகிறது. இதற்கு பதில் தரும் விதமாக பாகிஸ்தானின் விமானியான அகமதுவைப் பிடித்து வைக்கிறது இந்திய விமானப்படை.

1965ல் நடந்த போரில் இந்திய அதிகாரியைக் கொன்றதற்காக பாகிஸ்தானிய விமானப்படையினால் விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவன்தான் இந்த அகமது என்பதை அறிகிறார் இந்திய விமானப்படையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான அகுஜா. 

அகமதை மீட்பதற்காக பாகிஸ்தான் ஏதாவது முயற்சி செய்ததா? 1965 போருக்கும், அகுஜாவுக்கும் என்ன தொடர்பு போன்ற பல கேள்விகளுக்கு ஆக்‌ஷனில் பதில் தருகிறது திரைக்கதை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, வழக்கமான பாலிவுட் மசாலாவைத் தூவித் தந்திருக்கின்றனர். அகுஜாவாக அக்‌ஷய் குமார் நடிக்க, சந்தீப் கேவ்லானியும், அபிஷேக் அனில் கபூரும் இணைந்து படத்தை இயக்கியிருக்கின்றனர்.

ஃப்யூரியோஸா: எ மேட் மேக்ஸ் சாகா

ஆக்‌ஷன், அட்வெஞ்சரில் புதுமைகளைப் புகுத்தி, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஆங்கிலப் படம், ‘மேட் மேக்ஸ்’. 1979ல் வெளியான இப்படத்தை இயக்கினார் ஜார்ஜ் மில்லர். இப்படத்தில் இடம்பிடித்த ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட்டுக்கே புதியது.  1981ல் ‘மேட்மேக்ஸ் 2’வை வெளியிட்டு அசத்தினார் ஜார்ஜ் மில்லர். 

ஆனால், 1985ல் வந்த 3ம் பாகம் படுதோல்வி. இந்நிலையில் முப்பது வருடங்களுக்குப் பிறகு, 2015ல் ‘மேட்மேக்ஸ் : ஃப்யூரி ரோட்’ என்ற படத்துடன் கம்பீரமாக இயக்கி திரும்பி வந்தார் ஜார்ஜ். 6 ஆஸ்கர் விருதுகள் உட்பட 245 விருதுகளை அள்ளியது இத்திரைப்படம்.

இதற்குப் பிறகு வெளியாகியிருக்கும் படம்தான் ,‘ஃப்யூரியோஸா: ஏ மேட் மேக்ஸ் சாகா’. இப்போது தமிழ் டப்பிங்கில் ‘ஜியோஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது.

மேட்மேக்ஸ் பட வரிசைகளைப் பார்த்து வருபவர்களுக்கு ஃப்யூரியோஸா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி நன்றாகவே தெரியும். அவளது ஆரம்ப கால கதைதான் இந்தப் படம்.
கதையைத் தாண்டி ஆக்‌ஷனில் திரைக்கதையைத் தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குநர் ஜார்ஜ் மில்லர்.

ஆபீசர் ஆன் டியூட்டி

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி, வசூலை அள்ளிய மலையாளப் படம், ‘ஆபீசர் ஆன் டியூட்டி’. இப்போது தமிழ் டப்பிங்கில் ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது.

பெங்களூருவில் வசித்து வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். கேரளாவைச் சேர்ந்த காவல் துறை அதிகரியான ஹரி ரொம்பவே கோபக்காரர். அதனால் ஸ்டேஷனில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. உயர் பதவியிருந்து பதவி இறக்கம் செய்யப்படுகிறார்.

அவரிடம் நகை மோசடி சம்பந்தமான ஒரு வழக்கு வருகிறது. அந்த வழக்கை விசாரிக்கப் போகும்போது அது சங்கிலித் தொடர் போல பல இடங்களுக்குச் செல்கிறது. இந்த சங்கிலித் தொடரில் என்ன மாதிரியான குற்றங்கள் நிகழ்கின்றன? 

அந்தக் குற்றங்களுக்குப் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? ஆரம்பத்தில் தற்கொலை செய்த இன்ஸ்பெக்டருக்கும் இந்தக் கூட்டத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா... என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். 

ஆரம்பம் முதல் இறுதிவரை எங்கேயும் தடைபடாமல் வேகமாகச் செல்கிறது திரைக்கதை. ஹரி கதாபாத்திரத்தில் சிறப்பான ஒரு நடிப்பைத் தந்திருக்கிறார் குஞ்சாக்கோ போபன். படத்தின் இயக்குநர் ஜித்து அஷ்ரப்.

தொகுப்பு: த.சக்திவேல்