மிரளும் டி.ராஜேந்தர்...ஒரே படத்தில் 32 பணிகளை செய்த பெண்!



ஆம். அஷ்டாவதானி என கொண்டாடப்படும் டி.ராஜேந்தரையே மிரள வைத்துள்ளார் எஸ்.லாவண்யா. சமீபத்தில் வெளியான ‘பேய் கொட்டு’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்ததுடன், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், ஸ்டண்ட், கோரியோகிராஃபி, விஷுவல் எஃபெக்ட்ஸ், டப்பிங், எடிட்டிங், கலர் கிரேடிங்... என மொத்தம் 32 பணிகளை இவர் ஒருவரே மேற்கொண்டுள்ளார்!

‘‘பின்னணிப் பாடகியாக வரவேண்டும் என்பது என்னுடைய லட்சியம். அந்த முயற்சியை எட்டிப் பிடிக்க நானே சொந்தமாக படம் எடுத்தேன்...’’ என புன்னகைக்கிறார் லாவண்யா.
யார் இந்த லாவண்யா? எனக்கு சொந்த ஊர் சென்னை. சின்ன வயசுலேர்ந்து மியூசிக் மீது தீராத காதல். சுசீலா அம்மா, ஜானகி அம்மா, லதா மங்கேஷ்கர் அம்மா போன்றவர்களின் பாடல்களை கேட்டதால் பின்னணிப் பாடகியாக வரணும் என்ற லட்சியத்தை வளர்த்துக் கொண்டேன்.

அதுக்கேத்த மாதிரி ஸ்கூல் மேட்ஸ், அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லோரும் ‘நீ நல்லா பாடுற’ன்னு என்கரேஜ் பண்ணினாங்க. அந்தப் பாராட்டை எனக்கான அங்கீகாரமா நெனைச்சு கர்நாடக சங்கீதத்துல பிஏ முடிச்சேன். பஞ்சாப்ல இந்துஸ்தானி கிளாசிக்கல்ல பிஜி முடிச்சேன். பின்னணிப் பாடகியாக வரணும் என்பது லட்சியம் என்பதைவிட வெறித்தனமா இருந்தேன்னு சொல்லலாம்.

சினிமாவுல உங்கள் முதல் வாய்ப்பு?

காலேஜ் முடிச்சதும் நாளைக்கு ரிக்கார்டிங் இருக்கிற மாதிரியே தினமும் அதிகாலையில் ப்ராக்டீஸ் பண்ணுவேன். டாக்டருக்கு படிச்சா டாக்டர் வேலை கிடைக்கும், டீச்சருக்கு படிச்சா டீச்சர் வேலை கிடைக்கும் என்பதுபோல் மியூசிக் படிச்சதால பாட சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சினிமாவுல வாய்ப்பு தேடினேன்.
ஒருத்தர் விடாம எல்லோரும் தப்பான கண்ணோட்டத்தோடு அப்ரோச் பண்ணினாங்க. ‘ஆண்களாக இருந்தா இன்வெஸ்ட்மென்ட் கேட்போம், பெண்களா இருந்தா அட்ஜஸ்ட்மென்ட் கேட்போம்’ன்னு வெளிப்படையாவே சொன்னாங்க.

எனக்கு அது அதிர்ச்சியா இருந்துச்சு. முறைப்படி படிச்ச எனக்கு சான்ஸ் கிடைக்கும் என்றுதான் நெனைச்சேன். என்னிடம் தப்பான டிமாண்ட் வெச்ச கோணத்தை எதிர்பார்க்கல.

நகரத்தில் வசிக்கும் படிச்ச எனக்கே இது மாதிரி நிலைமை என்றால் கிராமங்களிலிருந்து வரும் பெண்களுக்கு என்ன மாதிரி பிரச்னைகள் இருக்கும் என்று நினைக்கும்போது கலக்கமா இருந்துச்சு.எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்குப் பிறகு சினிமாவே வேண்டாம் என்ற முடிவுல இருந்தேன். வீட்டிலேயே மியூசிக் சொல்லிக் கொடுப்பது, ஆன்லைன் கிளாஸ் எடுப்பது என அதுல பிசியா இருந்தேன்.

ஒரு கட்டத்துல டிவியில் சிங்கர்ஸுக்கான காம்பிடிஷனைப்  பார்க்கும்போதெல்லாம், ‘மியூசிக் தெரிஞ்ச நீ ஏன் சும்மா இருக்கிற’ என்று என்னுடைய உள்மனசு சொல்லிக்கொண்டே இருக்கும். ஒரு பக்கம் கசப்பான அனுபவம் ஞாபகத்துக்கு வந்து போகும்.இனிமேலும் தயங்கினா எதுவும் பண்ணமுடியாது என்ற முடிவோடு ‘பேய் கொட்டு’ படத்தை எடுத்தேன். பாடணும் என்பது என் ஆசை. அதேசமயம் நான் பட்ட கஷ்டம் வேறு யாரும் படக்கூடாது என்று துணிந்து இந்தப் படத்தை எடுத்தேன்.

அந்த வகையில் என் லட்சியமும் நிறைவேறிடுச்சு. புதியவர்களுக்கு விழிப்புணர்வையும், இன்ஸ்பிரேஷனையும் ஏற்படுத்த முடிஞ்சது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்ச திருப்தி இருக்கு.

என் அனுபவத்திலிருந்து சொல்வதா இருந்தால் பெண்கள் துணிச்சலாக இத்துறைக்கு வரணும். ஆண்கள் கோலோச்சும் இத்துறையில் பெண்களின்  பங்களிப்பு அதிகமாகும்போதுதான் சினிமா மீதான பார்வை மாறும். பாலியல் சுரண்டல்களும் தடுக்கப்படும்.

32 துறைகளைக் கையாண்ட அனுபவம் எப்படி இருந்துச்சு?

என்னுடைய அனுபவத்தைத்தான் படமாக எடுத்தேன். சினிமாவுல பாட சான்ஸ் தேடும் பெண் என்ன மாதிரி பிரச்னைகளை சந்திக்கிறார், தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் கதை.

ஆரம்பத்துல 24 கிராப்ட்டை பண்ணலாம்ன்னு முடிவு பண்ணினேன். பிறகு சப் டிவிஷனையும் சேர்த்து 32 கிராப்ட் பண்ணலாம்னு விவரங்களை கூகுளில் தேட ஆரம்பிச்சேன்.தயாரிப்பு, டைரக்‌ஷன், கதை, கேமரா, மியூசிக் பற்றி பல தகவல் இருந்துச்சு. என் சொந்த அனுபவம்தான் கதை என்பதால் கதை ரெடியாவே இருந்துச்சு. படம் பண்ணி சாதிச்சுக் காட்டணும் என்பதற்காகவே பணம் சேமிச்சு வெச்சிருந்ததால நானே தயாரித்தேன்.

பியூட்டீஷியன் கோர்ஸ் முடிச்சதால மேக்கப், ஹேர் டிரஸ்ஸிங்கை நானே பார்த்துக்கொண்டேன். ஆர்ட்டிஸ்ட்டுகளை வழிநடத்த வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிச்சு பிக்கப், டிராப் என டிராவல்ஸை கவனித்துக்கொண்டேன்.

சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரை காலை டிபனை லொகேஷனுக்கு போகும்போதே பார்சல் வாங்கிக்கொண்டு போய்விடுவேன். அருகில் உள்ள ஹோட்டலில் லஞ்ச் ஏற்பாடு செய்துவிடுவேன். காஸ்டியூம், ஆர்ட் டைரக்‌ஷனுக்கான மெட்டீரியல் என எல்லாவற்றையும் நானே கடை கடையா ஏறி இறங்கி அரேஞ்ச் பண்ணினேன்.

போஸ்ட் ப்ரொடக்‌ஷனைப் பொறுத்தவரை மியூசிக் படிச்சதால சாங் கம்போஸிங், பேக்ரவுண்ட் எல்லாமே நானே பண்ணினேன். படத்துல மூணு பாடல்கள். எல்லா பாடல்களையும் நானே பாடி என் ஆசையை நிறைவேற்றிக்கொண்டேன் என்பதை இந்த இடத்துல அழுத்தமா சொல்லணும்.

எஸ்.லாவண்யா என்ற யூ-டியூப் சேனலை நடத்துவதால் கேமரா, எடிட்டிங் எப்படி ஹேண்டில் பண்ணணும் என்று தெரிஞ்சு வெச்சிருந்தேன். யூ-டியூப்  பார்த்து சிஜியையும் கத்துக்கிட்டேன். என் பெட்ரூமையே டப்பிங் ஸ்டூயோவா மாத்தினேன். தீபா சங்கர், சாந்தி ஆனந்தராஜ் என படத்தில் நடிச்ச ஆர்ட்டிஸ்ட்டை வரவழைச்சு ஒரே நாளில் டப்பிங் முடிச்சேன்.

அப்படி என் லட்சியத்தை அடைவதற்காக தூங்காம வேலை பார்த்தேன். தினமும் ஒரு மணி நேரம் தூங்கியிருந்தால் அது பெரிய விஷயம். டைரக்‌ஷனையும் சொல்லித் தரணும், நானும் நடிக்கணும் என ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்தது பெரிய சவால் என்றே சொல்லலாம்.படம் பார்த்துவிட்டு பல தரப்புகளிலிருந்து பாராட்டுகிறார்கள். இயக்குநர்கள் பாக்யராஜ் சார், பேரரசு சார், ‘ஒயிட் ரோஸ்’ ராஜசேகர், ஜாக்குவார் தங்கம் சார் என பலர் பாராட்டினார்கள்.   

பல்துறை வித்தகியான நீங்கள் இனிமேல் எதற்கு முக்கியத்துவம் தரலாம்னு இருக்கிறீங்க?

பாடுவதுதான் என்னுடைய ஆல்டைம் பேஷன். இளையராஜா சார் மியூசிக்ல ஒரு பாடலையாவது பாடணும் என்பது வாழ்நாள் லட்சியம். மற்றபடி இப்போதுள்ள அனைத்து இசையமைப்பாளர்களும் வாய்ப்பு கொடுத்தால் பாடுவேன். ‘பேய் கொட்டு’ இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியாவும் இருக்கு.

எஸ்.ராஜா