13 பாலியல் வன்கொடுமைகள் 6 போதைப் பொருள் வழங்கிய குற்றச்சாட்டுகள் 17 ஆபாச வீடியோக்கள் 3 அநாகரிக தாக்குதல்கள்...
ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்தியர்!
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைத் தலைகுனிய வைத்ததுடன் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது பாலேஷ் தன்கரின் கைது. ஏனெனில் பாலேஷ் தன்கர் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் அல்ல...  ஆஸ்திரேலியாவில். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல... 13 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், 6 போதைப் பொருள் வழங்கிய குற்றச்சாட்டுகள், 17 ஆபாச வீடியோக்களை அனுமதியின்றி பதிவு செய்த குற்றச்சாட்டுகள் மற்றும் 3 அநாகரிக தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்காக.அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா..? உலகமும் அதனால்தான் உறைந்திருக்கிறது. 
குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பாலேஷ் தன்கர், பாஜகவைச் சேர்ந்தவர்... என காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. பாஜகவோ பாலேஷ் தன்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டதுமே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்கிறது.
விஷயம் இதுவல்ல. ஆஸ்திரேலியா முழுக்கவும்... உலக நாடுகள் அனைத்திலும் ஓர் இந்தியர் பாலியல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என நியூஸ் ஃப்ளாஷ் ஆகிறதே... அதுதான் மேட்டர். இந்தியா தலைகுனிந்து நிற்கவும் இதுவே காரணம்.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய மீடியாக்களில் வெளியான செய்திகளைத் தொகுத்துக் காணலாம். பாஜக தொடர்பான விஷயங்கள் அனைத்தும் ஆஸ்திரேலிய மீடியாக்களில் வெளியானவை என்பதை நினைவில் கொள்க...பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ஆதரவுக் குழுவான ‘ஓவர்சீஸ் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் பிஜேபி’யின் ஆஸ்திரேலிய பிரிவின் நிறுவனர் பாலேஷ் தன்கர்.
அவர் மீதுதான் 13 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், 6 போதைப் பொருள் வழங்கிய குற்றச்சாட்டுகள், 17 நெருக்கமான வீடியோக்களை அனுமதியின்றி பதிவு செய்த குற்றச்சாட்டுகள் மற்றும் 3 அநாகரிகமான தாக்குதல் குற்றச்சாட்டுகள் உட்பட 39 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மட்டுமல்ல; ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நடுவர் மன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தன்கர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாலேஷ் தன்கர் இந்தியப் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி சோஷியல் மீடியாவில் வெளியிட்டது.
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்கர்குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் கொரிய பெண்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது வழக்கும் பதியப்பட்டது.அந்த வீடியோக்கள் பெண்களின் பெயர்களுடன் தனித்தனி ஃபோல்டர்களில் (Folder) வரிசைப்படுத்தப்பட்டு இருந்ததாம். ஆஸ்திரேலிய அரசு என்ன சொல்கிறது?
2017ம் ஆண்டு கொரிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான போலி வேலை விளம்பரத்தை பாலேஷ் தன்கர் வெளியிட்டார். பின்னர் அவரது அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ள ஹில்டன் ஹோட்டல் பாரில் பெண்களை சந்தித்தார் என்றும் விசாரணை அறிக்கை கூறுகிறது.
இச்சந்திப்புக்குப் பின்னர் தனது குடியிருப்புக்கு பெண்களை அழைத்து வந்து அவர்களுக்கு மயக்க மருந்து கலந்த மது அல்லது ஐஸ்கிரீமைக் கொடுத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என ஆஸ்திரேலிய அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.
தான், பெண்களுடன் இணைவதை கேமராவில் பாலேஷ் படம் பிடிப்பாராம். இதற்காகவே தனது தொலைபேசியிலும் படுக்கை அறையில் இருந்த அலாரம் கடிகாரத்திலும் கேமராவை மறைத்து வைத்திருந்தாராம்.
2006ம் ஆண்டு மாணவராக ஆஸ்திரேலியா சென்ற தன்கர், இந்திய ஆஸ்திரேலிய சமூகத்தில் ஒரு முக்கிய நபராக மாறினார். ஆஸ்திரேலியாவின் இந்து கவுன்சிலின் செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டுள்ளார். தவிர ஏபிசி, பிரிட்டிஷ் அமெரிக்கன், டொபாகோ, டொயோட்டா மற்றும் சிட்னி ரயில் உள்ளிட்ட அமைப்புகளுடன் பணியாற்றியுள்ளார். தன்கர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் அவரது தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 2014ம் ஆண்டு சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடியின் வரவேற்பு விழா ஏற்பாட்டில், பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பு பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் முக்கியப் பங்கு வகித்த தன்கர், 2018ம் ஆண்டு - அதாவது தன்கர் கைது செய்யப்பட்ட ஆண்டிலேயே தன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்கிறது பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் குழு.
இந்த வழக்கு பற்றி, தன்கருக்கு தண்டனை அளித்த நீதிபதி மைக்கேல் கிங், ‘‘நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதற்கு இணையான வழக்கை கண்டுபிடிக்க முடியவில்லை...’’ என்கிறார். ‘‘இது குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்பில்லாத ஐந்து இளம் பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூரமான கொள்ளையடிக்கும் நடத்தை’’ என்கிறார்.
தன்கர் இந்த குற்றத்தை சரியான திட்டமிடலுடன் நிகழ்த்தியுள்ளார் என்கிறது விசாரணை அறிக்கை. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட விவரங்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மதிப்பீடு செய்து பராமரித்து வந்துள்ளாராம்.
இவை அனைத்தும் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியே என்கிறது ஆஸ்திரேலிய அரசுத் தரப்பு.தன்கருக்கு வழங்கப்பட்ட தண்டனையின் அடிப்படையில் பார்த்தால் பரோல் இல்லாத தண்டனைக் காலம் 2053ல் முடிவடைகிறது. முழுத் தண்டனை முடிவடையும் போது அவருக்கு 83 வயதாகியிருக்கும்...
இப்படியெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய ஊடகங்கள், இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் என்றும் புள்ளிவிபரங்களுடன் பெட்டிச் செய்தியாக வெளியிட்டுள்ளன.
தேசிய மகளிர் ஆணையத்தின் தகவல்படி கடந்த 2024ம் ஆண்டு பதிவான 12,648 புகார்களில் 6492 புகார்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்தவை. அடுத்த இடத்தில் உள்ள தில்லியில் 1,119 புகார்கள் வந்துள்ளன.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நிகழ்ந்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது... என ஆஸ்திரேலிய மீடியாக்கள் பதிவு செய்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் இருந்து கபிலன்
|