அண்ணன் இயக்குநர்... கணவர் தயாரிப்பாளர்... மனைவி கதையின் நாயகி!
‘‘நான் மலையாளி. தமிழ்ப் படம் செய்வதற்காகவே தமிழ்நாட்டில் தங்கி தமிழ், தமிழர்களின் வாழ்க்கையை கத்துக்கிட்டேன்...’’ என்கிறார் இயக்குநர் ஜெய்தேவ். பாவனா நடித்த ‘த டோர்’ படத்தின் இயக்குநர்.  இன்னொரு ஆச்சர்ய தகவல்-இவர் பாவனாவின் உடன் பிறந்த அண்ணன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், பாவனாவின் கணவர் என்பது மற்றொரு ஆச்சர்யம். ‘‘நாங்கள் ஃபேமிலியா சேர்ந்து படம் எடுத்தோம்...’’ என்று பேச ஆரம்பித்தார் ஜெய்தேவ்.  டைரக்டராக வரவேண்டும் என்பதுதான் உங்களுடைய லட்சியமாக இருந்ததா?
என்னுடைய அப்பா ஜி.பாலசந்தர். ஸ்டில் ஃபோட்டோகிராபர். அது கேமராவுக்கு ஃபிலிம் ரோல் யூஸ் பண்ணிய காலகட்டம். அதில் சில ஃபிரேம் காலியா இருக்கும்போது என்னையும், தங்கச்சியையும் வெச்சு போட்டோ எடுப்பார்.  அந்த போட்டோஸ் சினிமா சர்க்கிளில் போனதும் மாடலிங் வாய்ப்பு கிடைச்சது. கேரளாவில் புகழ்பெற்ற குடை கம்பெனி விளம்பரத்துல நானும் தங்கச்சியும் இருக்கிற போட்டோ வந்துச்சு. அதிலிருந்து பல விளம்பரங்கள் நடிச்சேன். ‘உன்னிட அம்மா’ என்ற தொடரில் பாவனா ஹீரோயினா நடிச்சார். நான் ஹீரோவா நடிச்சேன். அது பெரிய புகழ் கொடுத்துச்சு. அதிலிருந்து பாவனா நடிகையாகணும்னு முடிவு எடுத்தார். நான் டைரக்டர் ஆகணும்னு முடிவு எடுத்தேன். அப்படி சின்ன வயசுலேர்ந்து சினிமா பிடிக்கும். தமிழ் சினிமா ரொம்ப பிடிக்கும். முதன் முதலா நான் பார்த்த படம் ‘அபூர்வ சகோதர்கள்’. ஆனால், தமிழ் சினிமாவுக்கு எப்படி வரணும்னு தெரியாமல் இருந்தேன்.
பாவனா தமிழில் நடிக்க ஆரம்பிச்ச பிறகு தமிழில் எனக்கு கொஞ்சம் அறிமுகம் கிடைச்சது. இயக்குநர்கள் லிங்குசாமி, கண்ணன், மிஷ்கின் ஆகியோரின் அறிமுகம் கிடைச்சது.
இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் வேலை பார்த்திருக்கிறேன்.
ஆனால், எல்லா படத்திலும் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன் என்று சொல்ல முடியாது. ஒரு படத்தில் உதவி இயக்குநர், ஒரு படத்தில் டிரைவர் என கிடைச்ச வேலை பார்த்தேன். மலையாளப் படங்களிலும் வேலை பார்த்திருக்கிறேன். புகழ் பெற்ற நடிகையான உங்க தங்கச்சியை வெச்சு படம் எடுக்க இவ்வளவு தாமதம் ஏன்?
என்னதான் சொந்தமா இருந்தாலும் இயக்குநருக்கான திறமை எனக்கு இருக்குன்னு முடிவு பண்ணி படம் பண்ணினால்தான் அது பேசப்படும். எனக்கும் அதுதான் பிடிக்கும்.
எனக்கு வாய்ப்பு கொடு என்று தங்கச்சியிடம் கேட்டதில்லை. என் திறமைக்கு வேலை கொடுத்தால் போதும் என்ற மனநிலையில்தான் இருந்தேன்.
சொல்லப்போனால் நான் உதவி இயக்குநரா சேருவதற்கு அப்பா, தங்கச்சி என யாரிடமிருந்தும் சப்போர்ட் எதிர்பார்த்ததில்லை. எனக்கும் அதில் உடன்பாடு கிடையாது. நானே தெருத் தெருவா அலைஞ்சுதான் வாய்ப்பு தேடினேன்.
வீட்டிலிருந்தும் பணம் வாங்கவில்லை. உதவி இயக்குநரா பதினாறு வருஷமா வேலை பார்த்திருப்பேன். முப்பதாயிரம்தான் சம்பாதிச்சேன்.
சென்னையில் நான் நடக்காத தெரு இல்லை. நடந்து நடந்து தலையில் சொட்டை விழுந்ததுதான் மிச்சம். ஒரு கட்டத்தில் வேலை இல்லாமல் இருந்தபோதுதான் பாவனாவிடம் வேலை கேட்டேன். மிஷ்கின்கிட்ட ஏன் சேரக்கூடாதுன்னு கேட்டு ‘மூகமுடி’யில் வேலை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நாங்கள் சேர்ந்து படம் பண்ணுவதற்கு இப்போதுதான் காலம் கனிந்தது. கலையரசன் நடிச்ச ‘பட்டினம்பாக்கம்’ என்னுடைய முதல் படம்.
படப்பிடிப்பில் நீங்கள் அண்ணனா, டைரக்டரா?
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஹீரோயின்; நான் டைரக்டர். ஒரு நாளும் அவர் இருக்கும் கேரவன் பக்கம் போனதில்லை. பாவனா எப்போதும் ப்ரொஃபஷனலா இருப்பார். டைம் மெயிண்டெயின் பண்ணுவார். அவரால் எந்த இடத்திலும் பிரச்னைகள் வந்தது கிடையாது. என்னுடைய ஸ்டைல், ஆர்ட்டிஸ்ட்டை நடிக்கச் சொல்லி எக்ஸ்பிரஷன் வாங்குவது.
அப்படி பாவனா, கணேஷ் வெங்கட்ராம் என எல்லோரும் சிறப்பா பண்ணினாங்க. ஒரு பேட்டியில் அண்ணன் படம் பண்ணுவதில் நிறைய ஸ்பேஸ் கிடைச்சதா சொல்லியிருந்தார். மத்த ஆர்ட்டிஸ்ட்டை எப்படி டீல் பண்ணினேனோ அதேமாதிரிதான் பாவனாவிடமும் நடந்துகொண்டேன். தங்கச்சி என்பதற்காக எதுவும் கூடவோ குறையவோ இல்லை.
சின்ன வயசுல நீங்க இருவரும் எப்படி?
அப்போது நாங்கள் பத்து, பதினைஞ்சு முறையாவது வாடகை வீடு மாறியிருப்போம். வீடு மாறும்போது என்ன நடக்கும் என்றால் ஸ்கூல், நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி சமயத்துல எனக்கு பாவனாதான் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவருக்கு நான் ஃப்ரெண்ட். அந்த ஏஜ்ல எங்களுக்குள் நிறைய சண்டை வந்திருக்கு. நான் சைலண்ட் டைப். பாவனா சகஜமா பழகக் கூடியவர். வீடுகளில் இரண்டாவது பிள்ளை கொஞ்சம் வாலுன்னு சொல்வாங்க.
அது மாதிரிதான் பாவனா. புது இடம் மாறும்போது அங்குள்ளவர்களிடம் நான் ஒட்டிப் பழக நாளாகும். பாவனா அப்படி அல்ல. டக்... டக்னு ஃப்ரெண்ட்ஸ் பிடிச்சுடுவார். இன்னொரு விஷயம்-நான் ஏற்கனவே சொன்னமாதிரி நாங்கள் இருவரும் மாடல் பண்ணிட்டிருந்தோம். பாவனாவுக்கு பரதநாட்டியம் தெரியும். ஸ்கூல் நிகழ்ச்சியில் டான்ஸ் என்றால் பாவனாவைத்தான் கூப்பிடுவாங்க. அது அவருக்கு புகழ் கொடுத்துச்சு.
பாவனாவின் ஒரிஜினல் பேர் கார்த்திகா. பசங்க எல்லோரும் என்னை ‘கார்த்திகாவின் அண்ணன் போறான் பார்’ன்னுதான் அடையாளம் வெச்சிருப்பாங்க.உண்மையா பழகுபவர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் எனக்கு பாவனாவும், அவருக்கு நானும் ஃப்ரெண்ட்ஸா இருந்தோம்.
பாவனாவிடம் வியந்து பார்க்கும் விஷயம் என்ன?
என் தங்கச்சி என்பதால் சொல்லவில்லை. பாவனா ஆகச் சிறந்த நடிகை. அவருக்கு என்று தனித்துவமான திறமை உண்டு. எங்கள் வீட்டில் எல்லோரும் நேர்மையா விமர்சனம் பண்ணுவாங்க. மலையாளத்தில் சில படங்களில் பிச்சு உதறியிருப்பார்.
இது வருத்தமான விஷயம்ன்னு சொல்ல முடியாது. அவர் சின்ன வயசுலேயே, அதாவது பதினைஞ்சு வயசுல நடிக்க வந்தவர். அதனாலேயே இளம் வயதுக்குரிய ஃப்ரீடம், பிரைவசி இல்லாமல் போச்சு. மற்றபடி மன தைரியம் உள்ளவர். சொசைட்டியைப் பார்த்து பயப்படாதவர். அவர் நடிச்சதில் பிடிச்சது?
அதிகமான படங்களில் துறுதுறு பொண்ணாதான் நடிச்சிருக்காங்க. வித்தியாசம் என்று பார்க்கும்போது ‘ஒழிமுறி’ என்ற படம். சமீபத்துல ‘எண்ட இக்காக்க ஒரு பிரேமம்’ பண்ணினார். அது த்ரிஷா மேடம் நடிச்ச ‘96’ மாதிரி அருமையான படம். ‘தெய்வநாமத்தில்’ படத்திலும் அசத்தியிருப்பார். அது மாதிரி படம்தான் ‘த டோர்‘.
உங்கள் குடும்பத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?
குடும்பமா ஃபேஸ் பண்ணினோம். வெளியே இருக்கிறவர்களுக்கு அது செலிபிரிட்டிக்கு நடந்த நிகழ்வு. உள்ளுக்குள் நாங்கள் நார்மலான பீப்பிள். பாவனா மன தைரியம் உள்ளவர். என்னுடைய அம்மாவும் தைரியசாலி. தைரியம் இருந்ததால் எங்களால் பிரச்னையை ஃபேஸ் பண்ண முடிஞ்சது. இல்லையென்றால் நிலை குலைஞ்சு போயிருப்போம்.
எல்லோர் வாழ்விலும் ஏற்றம், இறக்கம் இருக்கும். அது எங்களுக்கும் நடந்துச்சு. இந்த இடத்துல பாவனாவின் கணவர் நவீன் ராஜன் பற்றி சொல்ல வேண்டும். இது அவர் தயாரிக்கும் ஐந்தாவது படம். அவரும் சில படங்களில் ஹீரோவா நடிச்சிருக்கிறார். ‘நாயகா’ நவீன் என்றால் கன்னட சினிமாவுல எல்லோருக்கும் தெரியும். குடும்பமா சேர்ந்து ‘த டோர்’ உருவாக்கியிருக்கோம். வெற்றிப் படங்களில் நடித்தவர் பாவனா. அவருக்கு தமிழில் அதிக முக்கியத்துவம் இல்லாமல் போனதாக நினைக்கிறீர்களா?
ஆடியன்ஸாக அல்லது தனிப்பட்ட முறையில் சொல்வதாக இருந்தால், காலத்துக்கு முன்பே ஒரு படம் வந்தால் அது ஃப்ளாப் ஆகிவிடும். ‘ஆரண்ய காண்டம்‘ இப்போது வெளிவந்திருந்தால் பெரிய ஹிட்டாகியிருக்கும். ‘குணா’ படமும் அதே மாதிரிதான். அதுமாதிரி சினிமாவின் ஆரம்பத்திலேயே அவருக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைச்சது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் அவருக்கான அங்கீகாரம் கிடைச்சிருப்பதாகவே கருதுகிறேன்.
எஸ்.ராஜா
|